சென்னையில் ஒரு அமேசான்!



புதிதாக கட்டப்பட்டிருக்கும் ஒரு வீட்டு முற்றத்தை அடைத்துக் கொண்டிருக்கிறது ஒரு பெரிய மகிழம் பூ மரம். அதே தெருவில் இருக்கும் ஒரு மருத்துவரின் பெரிய வீடு, அங்கே இருக்கும் பல மரங்களின் கிளைகளை அகற்றாமல் கட்டப்பட்டிருக்கிறது. 
பொதுவாக காலுக்கு ஏற்ற செருப்பைத்தான் நாம் எல்லோருமே வாங்குவோம். ஆனால், இந்தத் தெருவில் இருக்கும் பல வீடுகள் மரத்துக்கு ஏற்ப வழிவிட்டு கட்டப்பட்டிருக்கின்றன. இத்தோடு அந்தத் தெருவில் நுழையும்போதே ஒரு மரக் குகைக்குள் நுழைவதுபோல ஒரு உணர்வு.

இந்தத் தெருவில் மட்டுமே சுமார் 300  மரங்களுக்கு மேல் இருக்கும் என்று சொல்கிறார்கள் அந்த தெருவாசிகள். தெருவைத் தவிர வீடுகள் தோறும் பலவித மரங்கள், செடிகள். இதுதவிர அங்குள்ள ஓர் அரசு பூங்காவிலும் விண்ணைத் தொடும் ஆலமரம், அரசமரம் என்று ஏகப்பட்ட மரம், செடிகள். தெருவில் நுழைந்து நடந்தால் வெப்பத்தின் சாயலே அங்கில்லை. ஸ்விட்ச் போடாத ஜில் ஜில் ஏசி. ஒவ்வொரு பத்தடி தூரத்துக்கும் ஒரு வாசனை வந்து மூக்கைத் துளைக்கிறது.

அந்தத் தெருவாசிகளைக் கேட்டால் இந்த ‘குட்டி அமேசான்’ காட்டுக்கு காரணகர்த்தாவாக ஸ்ரீதரைக் கைகாட்டுகிறார்கள். சென்னை குரோம்பேட்டையிலுள்ள நேரு நகரில் இருக்கும் நல்லப்ப தெருவில்தான் இந்த அதிசயம் இருக்கிறது. சென்னையின் தகிக்க முடியாத வெப்பத்திலிருந்து தப்பிக்க நினைக்கும் அன்றாடங்காய்ச்சிகளுக்கு இந்தத் தெருதான் பார்க்கிங் தெருவாகவும் இளைப்பாறும் தெருவாகவும் இருக்கிறது.

ஸ்ரீதரின் வீடும் அதே தெருவில் இருக்க அவரைப் போய் சந்தித்தோம். ‘‘யாரு சார் நீங்க... எப்படி இது சாத்தியமானது, எப்படி தெருவாசிகள் உணர்கிறார்கள்...’’ என்று கேள்விகளை வைத்தோம்.
‘‘எனக்கு திருச்சிதான் சொந்த ஊர். நான் படிக்கிறதுக்காகத்தான் என் குடும்பமே 78ல் சென்னைக்கு குடிபெயர்ந்தது. 

இங்கே மெக்கானிக்கல் என்சினியரிங் படிச்சேன். 80ல் இந்த வீட்டை வாங்கினோம். படிச்சது மெக்கானிக்கல் என்சினியரிங் என்றாலும் காலப்போக்கில் சாஃப்ட்வேர் தொழிலுக்கு மாறினேன். 85 முதல் 2007 வரை ஐடி கம்பெனிகளில்தான் வேலை செய்தேன். இடையில் சவுதி, ஐரோப்பிய கம்பெனிகளில் எல்லாம் வேலை செய்தேன்.

அப்பா சொந்த ஊரில் விவசாயியாக இருந்ததால் சென்னை வந்ததும் அதை விடக்கூடாது என்பதற்காக செங்கல்பட்டு ஆத்தூரில் 1994 அளவில் ஒரு விவசாய நிலத்தை அப்பாவுக்காக வாங்கி விவசாயமும் செய்தோம். 

ஆனால், இப்போது அங்கேயும் விவசாயம் படுத்துவிட்டதால் அதிலிருந்து விலகிவிட்டோம்...’’ என்று சொல்லும் ஸ்ரீதரிடம் நல்லப்ப தெருவிலிருந்த ஒரு மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் அந்தத் தெருவே ஒரு குட்டி அமேசான் காடுகளுக்கு இணையாக இருப்பதன் மகத்துவத்தைப் பற்றிக் கேட்டோம்.

‘‘நான் என்சினியரிங், ஐடி என்று இருந்தாலும் அப்பாவின் விவசாய வேலை ஒரு கட்டத்தில் பிடிபட ஆரம்பித்தது. 2008ம் ஆண்டில் இந்தத் தெருவில் இருந்த வெல்ஃபேர் அசோசியேஷன் என்னை செக்ரட்டரியாக தேர்வு செய்தது. 

அப்போது இந்தத் தெருவோ குப்பையும், கூளமுமாகத்தான் இருந்தது. அத்தோடு தெருவில் மரங்களின் எண்ணிக்கையும் மிக சொற்பம்.இதை உணர்ந்த நான் இந்த அமைப்பின் உதவியுடன் இந்தத் தெருவில் இருந்த பார்வதி மருத்துவமனையின் நிறுவனரான முத்துக்குமாரிடம் இந்தப் பிரச்னைபற்றிப் பேசினேன்.

அவரும் இந்தத் தெருவில் முதற்கட்டமாக சுமார் 25 நாட்டு மரங்களை நட பண ரீதியாக உதவினார். மரம் நட்டால் மட்டும் போதாது. அதைக் கண்ணும் கருத்துமாக தண்ணீர் ஊற்றி யார் வளர்ப்பது என்ற சிந்தனையில் அந்த வேலைகளை எல்லாம் தனிப்பட்ட ரீதியில் நான் பார்த்துக்கொண்டேன்...’’ என்று சொல்லும் ஸ்ரீதர் இவ்வளவு மரம் எப்படி வந்தது என்பது பற்றியும் பேசினார்.

‘‘முதலில் வைத்த மரங்களுக்கு என்னிடம் இருந்த ஒரு சிறிய காரின் மேற்கூரையில் ஒரு நீர்த் தொட்டியைக் கட்டி நீர் ஊற்றினேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினேன். பிறகு மரங்கள் வளர்ந்ததைப் பார்த்தும் அதன் பயன்களை உணர்ந்துகொண்டதுமான தெருவாசிகள் இந்தத் தெருவில் மரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டார்கள்.

இப்போதைக்கு யாராவது மரங்களை வெட்ட முயற்சித்தாலோ அல்லது மரங்களுக்கு இடைஞ்சல் செய்தாலோ அவர்களே தெருவாசிகளை அலர்ட் செய்துவிடுவார்கள்...’’ என்று சொல்லும் ஸ்ரீதர் இந்தத் தெருவில் சுமார் 300 மரங்களாவது இருக்கும் என்றும் இது எல்லாமே நாட்டு மரங்கள் என்றும் சொல்கிறார்.‘‘உள்ளூர் மரங்கள் என்று சொல்லப்படும் நாட்டு மரங்களில் பல நன்மைகள் உள்ளன. உதாரணமாக உள்ளூர் மரங்களின் ஆணிவேர்கள் கீழ் நோக்கி வளரக் கூடியது. இதனால் மண் அரிப்பைத் தடுத்து வீடுகளில் வெடிப்பு உண்டாவது தடுக்கப்படும்.

மரம் இருந்தால் மழை என்பது மூதாதையரின் பழமொழி. இத்தோடு நாட்டு மரங்களில் பல நன்மைகள் உண்டு. நாட்டு மரங்களான புன்னை, பூவரசு, வேம்பு, மலைவேம்பு, புங்கன், ஆலமரம், அரசமரம், மகிழம்பூ மரம், செண்பகப் பூ மரம், வாதநாராயண மரம்... எல்லாம் ஏதோ ஒரு விதத்தில் மனிதனுக்கு பயன் தரக்கூடியது. உதாரணமாக வேப்ப மரக் காத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இதுபோல மகிழம்பூ மரம் மன அமைதியைக் கொடுக்கும் என்று உளவியல் நிபுணர்களே சொல்கிறார்கள்.

ஒருகாலத்தில் நம் சாலைகளில் இருந்த நீண்ட நீண்ட தெருக்களில் எல்லாம் நிறைய புளிய மரத்தைப் பலர் பார்த்திருக்கலாம். புளிய மரம் சத்தத்தை உள்வாங்கக் கூடியது. சவுண்ட் ப்ரூஃப் மரம் என்று இதைச் சொல்லலாம். பொதுவாகவே மரங்களும், செடிகளும் வீட்டைச் சுற்றி இருந்தால் சப்த தொல்லை நமக்கு இருக்காது. இது ஒரு மன அமைதியைக் கொடுக்கும்...’’ என்று சொல்லும் ஸ்ரீதர், மரம், மனிதன், ஆரோக்கியம் பற்றி மேலும் பேசினார்.

‘‘நாவல் மரம் இருந்தால் பறவைகள் வரும். பறவைகள் இருந்தால் வீட்டைச்சுற்றி பூச்சி புழுக்கள் இருக்காது. வீட்டில் மரம் இருந்தாலே தரை நீர்த்தன்மையுடன் இருக்கும். நீர்த்தன்மை இருந்தால் தவளை இருக்கும். தவளை இருந்தால் கொசு இருக்காது. 

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மரம் இருந்தால் வீட்டின் நிலத்தடி நீர் வற்றாமல் இருக்கும். ஒருகாலத்தில் 5 அடியில் நீர் இருந்த இந்தப் பகுதியில் இப்போது 80 அடியில் தோண்ட வேண்டிய சூழல். ஆனால், என் வீட்டில் பழைய மாதிரியே நீர் வற்றவில்லை.

பொதுவாக வேப்ப மரம் இருந்தால் ஒருவர் மருத்துவரை பார்க்கும் அவசியம் ஏற்படாது என்று சொல்வார்கள். வேப்ப மரத்தின் மருத்துவ குணத்தையும் தாண்டி வேப்ப மரத்திலிருந்து வருடத்துக்கு முன்னூறு நாளும் ஏதாவது ஒன்று கீழே விழுந்துகொண்டே இருக்கும். ஒருவர் தினமும் இதைக் கூட்டிப் பெருக்கினாலே உடல் நோய்கள் வராது. இதுமாதிரி மகிழம்பூ மரத்தை எடுத்துக் கொண்டால் இதன் இலை இருட்டு பச்சையில் இருக்கும். இலை சீக்கிரம் விழுவதும் குறைவு. அடிக்கடி கூட்டிப் பெருக்குவது தேவைப்படாது.

அத்தோடு இதன் பூ பட்டன் சைசில் இருக்கும். பூவும் வாசனையாக இருக்கும். இதனால் பூ கீழே விழுந்தாலும் யாரோ ஒருவர் பூவை எடுத்துச் செல்லப் போகிறார்கள்.
இதுபோல மொட்டை மாடியில் வெயில் விழுந்து வெக்கை வீட்டுக்குள்ளே வருகிறது என்றால் சிலவகை கொடிகளையும்  செடிகளையும் வளர்த்து வீட்டு மொட்டை மாடியில் படரவிடலாம். இதற்கு ஏற்ற செடி மனோரஞ்சிதம் செடி. இதன் பூவும் வாசனையானது.

பொதுவாக சென்னையில் இருக்கும் நிழற்சாலைகளில் தூங்குமூஞ்சி மரம்தான் பெரும்பான்மையாக வளர்ப்பார்கள். இது நாட்டு மரம் அல்ல. அதனால் ஒரு பயனும் இல்லை. வெளிநாட்டு மரம், செடி வகை கண்ணுக்கு குளிர்ச்சி, பூக்கள் பல வண்ணங்களில் இருக்கிறது என்று நினைத்து அதை பலர் வளர்க்கிறார்கள். ஆனால், இதன் மற்ற பயன்கள் நாட்டு மரம் செடிகளைப் போல இருக்காது.

ஒரு வீட்டுக்கு ஒன்று அல்லது இரண்டு மரங்களாவது வைத்தால் காலநிலை மாற்றத்தால் இன்று நிகழ்ந்துகொண்டிருக்கும் மிதமிஞ்சிய வெயிலின் வெக்கையில் இருந்து நாம் இலகுவாக தப்பித்துக்கொள்ளலாம்...’’ என்கிறார் ஸ்ரீதர்.உண்மைதான். சென்னை வெக்கையிலும் அவரது வீட்டின் இரண்டாம் மாடியிலிருந்து நாங்கள் கிளம்பும்போது அந்த அறையின் குளிர்ச்சி எங்களை விடுவதாயில்லை. ஆனாலும் அங்கு ஏசி இல்லை!

செய்தி: டி.ரஞ்சித்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்