அந்தரங்கப் பகுதிக ள்ல செலோடேப் ஒட்டி அதன் மேல புடவை அணிய வைச்சோம்...
தங்கலான் காஸ்டியூம் சீக்ரெட்ஸ்!
இடுப்பில் கட்டிய கோவணம், ரவிக்கையில்லா புடவைகள், மரத்தாலான நகைகள் என ‘தங்கலான்’ படத்தின் ஆடைகள் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன. ‘ராட்சசி’ படத்திலே ஜோதிகா புடவைகள், ‘என்.ஜி.கே’ படத்தில் சூர்யா லுக், ‘சார்பட்டா பரம்பரை’, ‘நட்சத்திரம் நகர்கிறது’... இப்படி பல படங்களில் தனது இயற்கையான டையிங் முறைகளில் காஸ்டியூம் உருவாக்கியவர் ஆடை வடிவமைப்பாளர் ஏகன் (எ) ஏகாம்பரம். இவரேதான் ‘தங்கலான்’ காஸ்ட்யூம் டிசைனர்.
‘‘‘சார்பட்டா பரம்பரை’ ஆரம்பிப்பதற்கு இரண்டு வருடங்கள் முன்னாடிதான் ரஞ்சித் அண்ணனை சந்தித்தேன். அன்னைக்கு ஆரம்பிச்ச சந்திப்பு இப்ப வரைக்கும் தொடர்ந்திட்டு இருக்கு...’’ சந்தோஷமாக பேசத் துவங்கினார் ஏகன். ‘‘நிஜமாகவே ‘தங்கலான்’ மிகப்பெரிய டாஸ்க்தான். ‘சார்பட்டா பரம்பரை’க்கு 1960 - 70களின் புகைப்படங்கள், வீடியோக்கள் கிடைச்சது. அப்ப சினிமாவும் வந்துடுச்சு. அக்காலக்கட்ட உடைகளை கோடிங் செய்வதும் சுலபம்.
ஆனா, ‘தங்கலான்’ அப்படியல்ல. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிகழும் பிரச்னை. மன்னர் காலமும் முடிவாகாத நேரம். 18ம் நூற்றாண்டு. அதனால நிறைய தேடல்களும் நிறைய ஆய்வறிக்கைகளையும் படிக்க வேண்டி இருந்தது. மொத்த படக்குழுவும் இதற்கான தேடல்ல இறங்கினோம். நிறைய லைப்ரரி, பழைய புத்தகங்கள், ஆதிகால மக்களின் வாழ்க்கை குறிப்பேடு, ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட பழங்குடி மக்களின் புகைப்படங்கள்... இப்படி அத்தனையையும் அடிப்படையாக வைத்துதான் படத்தின் உடைகளை உருவாக்கினேன்.
அதேபோல் பதினெட்டாம் நூற்றாண்டைப் பொருத்தவரை இப்போது இருக்கும் கெமிக்கல் டை முறைகள் எல்லாம் கிடையாது. எல்லாமே இயற்கை அல்லது தாவரம் சார்ந்த கலரிங் முறையைத்தான் பயன்படுத்தினாங்க. அதனால துணிகளை மார்க்கெட்டில் வாங்கி அதன்பிறகு ப்ளீச் செய்து, அதிலே இயற்கை முறையில் பழுப்பு நிறம் ஏத்தி பிறகு திரும்பவும், அழுக்குக் கலருக்கு ஏற்றினோம்.
இதைத்தான் ஆர்ட்டிஸ்ட் எல்லாம் பயன்படுத்தியிருப்பாங்க...’’ என்னும் ஏகன், படத்தின் முன்னணி நடிகர்களான விக்ரம், பார்வதி, மாளவிகா மோகன் உள்ளிட்டோரின் உடைகள் குறித்து விளக்கத்துவங்கினார்.
‘‘உடைகள் அப்படின்னு சொல்றதுக்கு பதிலா இதை கச்சைத் துணி அப்படின்னு சொல்லலாம். அந்தக் காலத்தில் கச்சைத் துணியைத்தான் இடுப்பில், மார்பில் எல்லாம் பெண்கள் கட்டிக்குவாங்க. பிறகுதான் புடவை கட்டுகிற முறை வந்தது.
அதேபோல அந்தக் காலத்துல ஒவ்வொரு குழுவிலும் யாராவது இரண்டு பேர் அல்லது மூணு பேர் வீட்டில்தான் நெசவு செய்வாங்க. அந்த மக்கள் குழுவுக்கு உடைகள் கொடுப்பது அவங்கதான். அப்படித்தான் படத்தில் ஒரு காட்சியில் ஒருவர் வீட்டுக்குள் உட்கார்ந்து நெசவு செய்கிறது போல் காட்டியிருப்பாங்க. அவங்க என்ன செய்து கொடுக்குறாங்களோ அதுதான் அந்தப் பகுதி மக்களுடைய உடை. அவங்க சொல்றதுதான் புது டிசைன். பொதுவா சாதாரண நாட்களுக்கு வெள்ளைத் துணி. அதில் இயற்கை சாயம் முக்கிய நிறங்கள். விசேஷ நாட்களில் வழக்கம்போல் பட்டுப்புடவைகள். ஜார்ஜெட், பூனம், செயற்கை ஜரிகை, பாலிஸ்டர் இதெல்லாம் 19ம் நூற்றாண்டு காலத்து உடைகள்.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை நான் தாவர நிறங்களைத் தான் அதிகம் பயன்படுத்தியிருப்பேன். அதேபோல் வாழை நாரில் துணிகள் நெய்திருப்போம். விக்ரம் சாருக்கு உடைகள் கொடுத்தபோது ‘என்னப்பா... ஏதோ ஒரு வாசனை வருது...’ அப்படின்னு கேட்டார். அப்புறம்தான் காஸ்டியூம் மேக்கிங் பற்றி அவருக்கும் சொன்னேன்.
ரொம்ப ஆச்சரியப்பட்டார்.அதேபோல் விக்ரம் சார் மற்றும் மாளவிகா மேம் அவங்களுடைய இன்னொரு காலத்துக்கான உடைகள் அத்தனையும் ஆதிவாசி முறையில் விலங்குத் தோல் ஸ்டைலில் இருக்கும். இதற்கும் கூட சில ஆவணங்களை ஆராய்ந்துதான் உருவாக்கினேன்.
அதேபோல் முதன் முதலில் ஜாக்கெட்டுகள் போடும் காட்சி படத்தில் இருக்கும் அந்த ஜாக்கெட்டுகளும் அந்தக்கால முறைப்படி கைகளாலேயே வெட்டித் தைத்துதான் உருவாக்கினோம். அப்போது மெஷின் இருந்தது; ஆனால், அதெல்லாம் பணக்கார மக்களுக்கு மட்டுமே இருக்கும். இன்னும் சொல்லப் போனால் மன்னர்கள், ஆங்கிலேயர்கள், அவர்களுக்குக் கீழ் வேலை செய்வோருக்கு மட்டுமே.
அதனாலேயே மெஷின் கொண்டு தைத்தால் அதன் உண்மை கிடைக்காது என்கிறதாலேயே சரியான அளவுகள் இல்லாம கிட்டத்தட்ட சட்டை போல் ஜாக்கெட்டுகளை கைகளால் தைத்துக் கொடுத்தோம்...’’ என்ற ஏகன், படத்தின் நகைகள், உடைகள் உடுத்தும்போது சில சிக்கல்கள் இருந்ததாகச் சொல்கிறார்.
‘‘அப்ப தங்கம், வெள்ளி, பித்தளை, மற்றும் காப்பர்தான். இந்த உலோக நகைகளை வாங்க முடியாத மக்கள் மரக்கட்டையால் செதுக்கிய நகைகளைத்தான் பயன்படுத்துவாங்க. இதற்கு மர வேலைப்பாடுகள் செய்கிறவங்க கிட்ட சொல்லி, உதாரணங்கள் காண்பிச்சுதான் செதுக்கி உருவாக்கினோம்.
இந்த நகைகள்லயும் மெஷின் கட் கிடையாது, எல்லாமே கை வேலைதான். ஒவ்வொரு நகையும் பார்த்துப் பார்த்து உருவாக்கினோம். இப்போ வருகிற மர நகைகள் எல்லாம் பாலீஷ் செய்திருக்கும். அப்போ அதெல்லாம் கிடையாது.
எல்லோரும் ஜாக்கெட் இல்லாம புடவை அணிய ஒத்துக்க மாட்டாங்க. ஒரு சிலர் நடிப்புக்காக டெடிகேஷனா புடவை கட்டத் தயாரா இருந்தாங்க. ஆனாலும் நான் என்ன செய்தாலும் ஆர்ட்டிஸ்ட் உடல் பாகங்கள் அசையவோ அல்லது அவங்களுக்கு சங்கடத்தை உண்டாக்கவோ கூடாது என்பதில் கறாரா இருந்தேன்.
ஜாக்கெட் இல்லைன்னாலும் எல்லா பெண்களுக்கும் செலோ டேப் கொண்டு மார்புப் பகுதிகள், அந்தரங்கப் பகுதிகள்லாம் அசையாம ஒட்டிதான் அதுக்கு மேலே புடவைகள் கொடுத்தோம். சில பாகங்கள்ல புடவையையும் சேர்த்து உள்பக்கமா ஒட்டியிருப்போம். அதனால்தான் அவங்க டான்ஸ் ஆடும்போது கூட தயக்கமில்லாம ஆட முடிஞ்சது...’’ என்றவர் தனது அடுத்தடுத்த படங்கள் குறித்து சொன்னார். ‘‘துருவ் விக்ரம் நடிப்பில் ‘பைசன்’ படம், கார்த்தி சார் கூட ‘வா வாத்தியார்’, ராம் சரண் நடிப்பில் அவரது 16வது படம் உள்ளிட்ட படங்களுக்கான காஸ்டியூம் வேலைகள் போயிட்டிருக்கு. இது இல்லாம இயற்கை டையிங் முறைகள் குறித்த ஆய்வுகள், அதற்கான தேடல்கள் ஒரு பக்கம் செய்யறேன்...’’ புன்னகைக்கிறார் ஏகன்.
ஷாலினி நியூட்டன்
|