ஹாலிவுட்டில் வேலை செய்யும் பல சவுண்ட் என்ஜினியர்ஸ் நம்மூர்க்காரர்கள்!
‘‘ஒலி நுட்பத்தில் ஹாலிவுட், கோலிவுட் என பிரித்துப் பார்த்த காலங்களை நாம் எப்போதோ கடந்துவிட்டோம். சொல்லப்போனால் ஹாலிவுட் படங்களில் வேலை செய்யும் பல சவுண்ட் என்ஜினியர்ஸ் நம்மூர்க்காரகள்...’’ என்கிறார் சவுண்ட் என்ஜினியர் சுரேன்.ஜி.ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற ‘காலா’, ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’, ‘ஜெயிலர்’ தொடங்கி சமீபத்தில் வெளியான ‘கொட்டுக்காளி’, ‘வாழை’ உட்பட ஏராளமான படங்களுக்கு இவர்தான் சவுண்ட் டிசைனர். சென்னை, ஐதராபாத் என பறந்துகொண்டிருந்த சுரேனிடம் பேசினோம்.
யார் இந்த சுரேன்?
சொந்த ஊர் பாண்டிச்சேரி. என்ஜினியரிங் முடிச்சுட்டு சினிமாவுக்கு வந்த இளைஞர்களில் நானும் ஒருவன். ஆரம்பத்துல சினிமாவுக்குப் போகணும்னு எந்த ஐடியாவும் இல்லை.
ஒருகட்டத்துல சென்னைக்கு ஷிப்ட்டானேன். சவுண்ட் என்ஜினியரிங் முடிச்சுட்டு சில ஸ்டூடியோக்களில் ஒர்க் பண்ண ஆரம்பிச்சேன். அப்போது எனக்கு கார்ப்பரேட் கம்பெனியில் வேலை.
பார்ட் டைம் ஜாப் மாதிரி வேலை முடிச்சுட்டு சவுண்ட் என்ஜினியரிங் வேலைக்குப் போவேன். ஏராளமான படங்களில் உதவியாளராக ஒர்க் பண்ணினேன்.
சவுண்ட் டிசைனராக ஒர்க் பண்ணிய முதல் படம் ‘வணக்கம் சென்னை’. தொடர்ந்து ‘காக்கிசட்டை’, ‘இறுதிச்சுற்று’, ‘சூரரைப் போற்று’, ‘காலா’, ‘96’, ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, தெலுங்கில் நானியின் ‘ஜெர்ஸி’, ‘ஹாய் நானா’, ‘தசரா’, ‘சரிப்போத்திந்தா சனிவாரம்’, சிரஞ்சீவி சார் படம் உட்பட சுமார் 150 படங்கள் பண்ணியிருப்பேன்.
சவுண்ட் என்ஜினியரிங் மீது ஆர்வம் எப்படி வந்துச்சு?
மியூசிக் ப்ரொடக்ஷன் பண்ணணும் என்ற ஐடியாவுலதான் சினிமாவுக்கு வந்தேன். காலேஜ் படிக்கும்போது பேண்ட்ல இருந்தேன். படிக்கும்போது ஒரு ஸ்டூடியோவில் இன்டர்ன்ஷிப் முடிச்சேன். அப்போது அந்த உலகம் பிடிச்சுப்போனது.சவுண்ட் டிசைனிங், மிக்ஸிங் என்பது தனி உலகம். கடந்த 10 ஆண்டுகளில் சவுண்ட் என்ஜியரிங் ஒர்க்கை தனித்துவமாகப் பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. இப்போது உள்ள இளம் இயக்குநர்கள் கதை எழுதும்போதே சவுண்ட் என்ஜினியரிங்கையும் மனசுல வெச்சுட்டுதான் படத்தை ஆரம்பிக்கிறாங்க.
திரைப்படத்தில் சவுண்ட் என்ஜினியரின் அடிப்படை வேலை என்ன?
இரண்டுவிதமாக பிரித்துச் சொல்லலாம். ஒரு படம் முடிஞ்சதும் அது சவுண்ட் என்ஜினியர் கையில வந்துவிடும். ‘தங்கலான்’, ‘கொட்டுக்காளி’ மாதிரியான படங்கள் சிங் சவுண்ட் முறையில் எடுக்கப்பட்டது.
அதை ப்ரொடக்ஷன் சவுண்ட்ன்னு சொல்லுவோம்.அந்தப் படத்துல சவுண்டாக எதுவுமே இருக்காது. அதற்கு உயிர் கொடுக்கும் வேலையை சவுண்ட் என்ஜினியர் செய்வார். சவுண்டைப் பொறுத்தவரை என்ன இருக்கலாம், என்ன இருக்கக்கூடாது என்பதை முடிவு செய்வது சவுண்ட் டிசைனர். நீங்கள் வேலை செய்தபடங்களில் சவாலாக அமைந்த படம் எது?
எனக்கு மனசுக்கு நெருக்கமான படம் என்றால் ‘காலா’. அதுல குறிப்பிட்ட பகுதி என்றில்லாமல் மொத்தப் படத்திலும் சவுண்டுக்கு அதிக முக்கியத்துவம் இருந்திருக்கும்.
‘ஜெயிலர்’ படத்தையும் சொல்லலாம். ரஜினி சாரின் ரசிகன் என்பதால் அந்தப் படத்தை ரொம்ப ரசிச்சுப் பண்ணினேன். டிரக் ஃபைட்ல எனக்கான சவால் இருந்துச்சு.
கிரியேட்டிவ் படம் என்று சொன்னால் ‘பரியேறும் பெருமாள்’, ‘கொட்டுக்காளி’, ‘வாழை’யைச் சொல்லலாம். ‘அந்தகாரம்’, ‘96’ படத்திலும் சவுண்ட் டிசைனரின் தனித்துவமான ஒர்க் இருந்திருப்பதை கவனிச்சிருக்க முடியும்.
எந்த மாதிரி கதைகள் சவுண்ட் என்ஜினியருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும்?
‘காலா’ மாதிரியான லைஃப் டிராமா படங்கள், மாரி செல்வராஜ் எடுக்கும் யதார்த்தமான படங்கள். அந்தப் படங்களில் எமோஷன், கேமரா எப்படி முக்கியமாக பார்க்கப்படுமோ அதேளவுக்கு சவுண்ட் முக்கியமான இடத்தைப் பிடிச்சிருக்கும்.இயக்குநர் மனசுல இருக்கிற உணர்வுகளை சவுண்ட் மூலம் சொல்ல நிறைய முயற்சி எடுத்திருப்பார். இயக்குநர்கள் பல லேயர்களில் கதை சொல்ல முயற்சி எடுத்திருப்பார்கள். அதேஅளவுக்கு சவுண்ட் என்ஜினியரும் கதை சொல்லக் கூடியவராக மாறி ஒர்க் பண்ண வேண்டும்.
‘வாழை’யில் மாடு காணாமல் போகும் காட்சி, குடுகுடுப்பைக்காரன் காட்சி, பறவைகள் பறக்கும் காட்சிகளில் சிறுவனின் இனம் புரியாத அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கும். அது எழுத்தில் இருக்கும்போது ‘ஒரு பையன் வெட்டவெளியில் கத்துவது’ என்று எழுதப்பட்டிருக்கும். அதை எப்படி அந்தப் பையனின் உள்ளுணர்வுடன் கலந்து சொல்லப்போகிறோம் என்ற ஆர்வத்துடன் வேலை செய்வது முக்கியம்.
ஆக்ஷன் படங்களில் எங்கள் வேலை அப்பட்டமாகத் தெரியும். எமோஷனல் கதைகளை எப்போதும் இயக்குநரின் பார்வையில் இருந்து பண்ணணும் என்ற ஆர்வத்தைக் கொடுக்கும். இசையமைப்பாளர், சவுண்ட் என்ஜினியர் ஆகிய இருவரும் ஒரு திரைப்படத்துக்கு இரண்டு கண்கள் மாதிரி. இசை இல்லாத ‘கொட்டுக்காளி’யில் பணிபுரிந்த அனுபவம் எப்படி? ரொம்ப ஆர்வமா இருந்துச்சு. இயக்குநர் வினோத் கதை கொடுத்துப் படிக்கச் சொன்னார். கதை படிக்கும்போதே ஆர்வத்தைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், வேற லெவல் படமா வரும்னு தோணுச்சு.
ஷூட்டிங் டைம்லதான் மியூசிக் இல்லைன்னு சொன்னார். அது மேலும் சவாலா இருந்துச்சு. ஏனெனில், அந்த மாதிரி படத்துல சவுண்ட் என்ஜினியராக நம் வேலையைக் காட்டுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கும். உதாரணத்துக்கு, காட்டில் சிறுவன் நடந்து போகும்போது மரங்களின் அசைவுகளை வைத்து அதிக ஒலியையும் தரமுடியும், மிதமான ஒலியையும் தரமுடியும். அந்த மாதிரி எதுவுமே பண்ணக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்.
லைவ் சவுண்ட் என்பது டப்பிங் பேசமாட்டாங்க. ஸ்பாட்ல எப்படி பேசினார்களோ அதுதான் தியேட்டரிலும் இருக்கும். அத்துடன் ஷூட்டிங் சமயத்துல பின்னணியில் நிஜமா என்ன சவுண்ட் இருக்குமோ அதை அப்படியே கொடுப்பது.
அதுக்காக நிஜமான சவுண்டை அந்த இடத்துக்குச் சென்று பதிவு செய்து, அதற்கு இறுதி வடிவம் கொடுப்போம்.‘கொட்டுக்காளி’க்காக 15 வெர்ஷன் சவுண்ட் பண்ணியிருப்போம். பெர்லின், அர்மேனியா என பல இடங்களில் படத்தைத் திரையிட்டபோது சிலாகிச்சுப் பேசினார்கள். ஹாலிவுட் படங்களுடன் ஓப்பிடும்போது நம்மூர் சினிமாவின் சவுண்ட் டெக்னாலஜியின் தரம் எப்படி உள்ளது?
ஹாலிவுட்டுடன் ஒப்பிட்டுப்பேசுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அங்கு ஒர்க் பண்ற பலர் இங்கிருந்து போனவர்கள். என் ஃப்ரெண்ட்ஸ் பலர் அங்கு இருக்கிறார்கள். சவுண்ட் என்ஜினியரிங்கைப் பொறுத்தவரை டைம் முக்கியம். ஹாலிவுட் படங்களில் போஸ்ட் ப்ரொடக்ஷனுக்கு ஏழெட்டு மாதங்கள் கொடுக்கிறார்கள். அது மாதிரி கண்டிப்பாக இங்கு பண்ணமுடியாது. குறைந்தபட்சம் முன்று மாதங்கள் கொடுத்தால் நல்லாயிருக்கும்.
அங்கு உள்ளவர்கள் நல்லா பண்றாங்க என்று கம்பேர் பண்ணிப் பேசும் டெக்னிக்கல் பேரியர் எப்பவோ முடிஞ்சுடுச்சு.தமிழ் சினிமாவுல அதற்கான முக்கியத்துவம் அதிகமாகியிருக்கு. ஆடியன்ஸும் சவுண்ட், விஷுவல் எஃபெக்ட் நல்லாயிருக்குன்னு ஒவ்வொரு டெக்னாலஜியையும் பிரிச்சுப் பேச ஆரம்பிச்சுட்டாங்க.உங்க விஷ் லிஸ்ட்ல இருக்கும் இயக்குநர் யார்?ஃபிரெஞ்ச் ஃபிலிம் மேக்கர் கஸ்பர்.
எஸ்.ராஜா
|