Climate & Change விலைவாசி உயர்வு!
ஒரு காலத்தில் பருவநிலை மாற்றம், உலக வெப்பமயமாதல் குறித்து விவாதித்துக்கொண்டு மட்டுமே இருந்தோம். இப்போது பருவநிலை மாற்றத்தால் உண்டாகும் பாதிப்புகளை நேரடியாக சந்தித்து வருகிறோம். ஆம்; இன்று நாம் நுகரும் பல பொருட்களின் விலையேற்றத்துக்குப் பின்னணியில் பருவநிலை மாற்றம்தான் இருக்கிறது. இன்றைய உலகத்தை பருவநிலை மாற்றமடைந்த உலகம் என்றே சூழலியலாளர்கள் சொல்கின்றனர். இந்தப் பருவநிலை மாற்றம்தான், நாம் உடுத்தும் உடைகள், உண்ணும் உணவு முதல் விமான டிக்கெட்டுகள் வரை எல்லாவற்றின் விலையும் அதிகரிக்க முக்கிய காரணம். உதாரணத்துக்கு, உலகம் முழுவதும் நுகரப்படும் ஆலிவ் எண்ணெய் மற்றும் சாக்லேட்டை எடுத்துக்கொள்வோம். பருவநிலை மாற்றம் காரணமாக வெப்பநிலை அதிகரித்ததால், மத்தியதரைக்கடல் பகுதியில் வறட்சி ஏற்பட்டது.
இதன் காரணமாக ஸ்பெயினில் ஆலிவ் உற்பத்தி பெரியளவில் பாதித்தது. உலகிலேயே அதிகளவு ஆலிவ்வை உற்பத்தி செய்யும் நாடு ஸ்பெயின்தான் என்பது குறிப்பிடத்தக்கது. வறட்சி காரணமாக ஸ்பெயினில் மற்ற வருடங்களுடன் ஒப்பிடும்போது 2023-ம் வருடத்தில் ஆலிவ் உற்பத்தி 40 சதவீதம் சரிவடைந்தது.
இதன் காரணமாக கடந்த ஜூனில் அமெரிக்காவில் ஆலிவ் எண்ணெயின் விலை 27 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றம் உலகமெங்கும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. ஆம்; நம்ம ஊரில் உள்ள கடைகளில் கிடைக்கும் ஆலிவ் எண்ணெயின் விலைகூட முன்பைவிட அதிகம்.
ஆலிவ் எண்ணெயைப் போலவே சில சாக்லேட்டுகளின் விலையும் எகிறியுள்ளது. உதாரணத்துக்கு கேட்பரி’ஸின் ‘ஃபிரெட்டோ’ என்ற சாக்லேட்டின் விலை அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் சந்தைகளில் 200 சதவீதம் அதிகரித்துள்ளது.
பருவநிலை மாற்றத்தின் காரணமாக கானா மற்றும் ஐவரி கோஸ்ட்டில் கோகோ விவசாயம் வீழ்ச்சியைச் சந்தித்ததே இந்த விலையேற்றத்துக்குக் காரணம். கானா மற்றும் ஐவரி கோஸ்ட்டிலிருந்துதான் உலகின் முக்கியமான சாக்லேட் நிறுவனங்களுக்குத் தேவையான கோகோ செல்கிறது.
பருவநிலை மாற்றத்தின் விளைவாக உண்டான இயற்கைப் பேரிடர்கள் காரணமாக உலகமெங்கும் கோதுமை விளைச்சலும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உலகின் முன்னணி கோதுமை உற்பத்தியாளரான அர்ஜெண்டினாவில் கோதுமை விளைச்சல் 30 சதவீதம் சரிந்துள்ளது. தவிர, ரஷ்யா- உக்ரேனுக்கு இடையில் நடக்கும் போரினால் கோதுமை விளைச்சலும், விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் குறைவான கோதுமை விளைச்சல் மற்றும் குறைவான விநியோகம் காரணமாக, 2021-ம் வருடத்தில் இருந்தே கோதுமை மற்றும் கோதுமை சார்ந்த பொருட்களின் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக பெரும்பாலான நாடுகளில் ரொட்டியின் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றம் வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மட்டுமல்ல, கோதுமை விலையேற்றம் காரணமாக அமெரிக்காவில் பாஸ்தாவின் விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அமெரிக்கர்கள் கேன்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பழங்களுக்கு மாறி வருகின்றனர். ஆம்; அங்கே பாஸ்தாவின் விலையைவிட பழங்களின் விலை குறைவு.
‘‘இயற்கைக்கு எதிராக மனிதன் செய்த செயல்களால் பல வருடங்களாக இந்த பூமி பருவநிலை மாற்றத்தால் பீடிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதற்குமான உணவுத்தேவையைப் பூர்த்தி செய்வது, உணவுப் பொருட்களை விநியோகம் செய்வது என்பது முக்கிய பிரச்னையாக வெடித்துள்ளது. இதைப் பற்றி சிந்தித்து, தக்க நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால் அடுத்த சில பத்து ஆண்டுகளில் உணவுப்பஞ்சம் தலைவிரித்தாடும்...’’ என்கிறார் சூழலியல் நிபுணரான ஜேம்ஸ் ஹேன்ஸன்.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் கடுங்குளிர், அதிக வெப்பம், தண்ணீர் பற்றாக்குறை ஆகிய மூன்றும் சேர்ந்து பயிர்களின் விளைச்சலில் பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது. இது உலகம் முழுமைக்கான உணவுப் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது.
இதனால் நடுத்தரக்குடும்பத்தினர் மற்றும் கீழ் நடுத்தரக் குடும்பத்தினர்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஒரு காலத்தில் பெரிய அளவில் விளைச்சலைக் கொடுத்து, தங்களுக்குத் தேவையானது போக, மீதத்தை மற்றவர்களுக்கு விநியோகம் செய்த விவசாயிகள் கூட அதிக விலை கொடுத்து உணவுப் பொருட்களை நுகர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தப் பருவநிலை மாற்றம் விளைச்சலை மட்டுமல்ல, விவசாயிகளின் எண்ணிக்கையையும், விளை நிலங்களின் பரப்பளவையும் கணிசமாகக் குறைத்துள்ளது. ஆம்; கடந்த ஐந்து வருடங்களில் மட்டுமே உலகமெங்கும் உள்ள இருபது சதவீத விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு, வேறு வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டனர். தவிர, பல விளை நிலங்கள் வீடுகளாக மாறிவிட்டன. பருவநிலை மாற்றத்தால் பல பயிர்கள் விளைய மறுக்கின்றன என்பதுதான் இதிலுள்ள அதிர்ச்சியான விஷயம்.
உதாரணத்துக்கு, ஒரு காலத்தில் கனடாவில் அவோகேடோவும், மினியாபோலிஸில் மிளகும் நன்றாக விளைந்தன. இப்போது அங்கே அவோேகடோவும், மிளகும் விளைவதே இல்லை. காரணம், பருவநிலை மாற்றத்தால் அதிகரித்த வெப்பமும், குளிரும் அவோகேடோ, மிளகு விளைவதற்காக சூழலையே மாற்றியுள்ளன. இது ஒரு உதாரணம்தான். இதுபோல உலகம் முழுவதும் பல பயிர்கள் விளைய மறுக்கின்றன. மீண்டும் அந்தப் பயிர்களை விளைவிப்பதற்கான ஆராய்ச்சிகளைச் செய்துவந்தனர்.
இந்தச் சம்பவம் பல நாடுகளின் அரசுகளைப் பதற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. பருவநிலை மாற்றம் என்ற சவாலை எதிர்கொள்வதற்காக விரைவிலேயே விளைச்சலைக் கொடுக்கும் விதைகளைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். உணவுப் பாதுகாப்பையும், உணவு விநியோகத்தையும் அதிகரிப்பதற்கான ஆராய்ச்சிகளும் நடக்கின்றன. இதற்காகவே குறிப்பிட்ட தொகையை உலக வங்கியும் ஒதுக்கியுள்ளது.
‘‘கொரோனா வந்தபோது உலக நாடுகள் எல்லாம் ஒன்றிணைந்து வைரஸிலிருந்து பாதுகாப்பதற்காக, 18 மாதங்களில் 500 கோடி தடுப்பூசிகளைத் தயாரித்தன. இதே முறையைத்தான் விலைவாசி உயர்வு மற்றும் உணவுப் பற்றாக்குறை பிரச்னையிலும் கையாள வேண்டும்.
அதாவது பருவநிலை மாற்றத்தால் உருவாகும் உணவுப் பிர்சனையைத் தீர்ப்பதற்கு உலக நாடுகள் எல்லாம் ஒன்றிணைந்து, விளைச்சல் மற்றும் உணவு விநியோகம் குறித்து தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க வேண்டும்...’’ என்று அழுத்தமாகச் சொல்கிறார் ஜேம்ஸ் ஹேன்ஸன்.
த.சக்திவேல்
|