சமைக்கிறீர்களா..? இதைப் படிங்க முதல்ல!
‘தெரு முனை கடைகளில் மேக்சிமம் சாப்பிடாதீங்க... வீட்டில் சமைத்த உணவுக்கே எப்போதும் ரைட் சொல்லுங்க’ என பலபேர் அட்வைஸ் செய்வதைப் பார்த்திருப்போம். ஆனால், வீட்டில் சமைக்கும்போதும் கூட ஆபத்து இருந்தால்... எப்படி..?
பொதுவாக சமையல்கட்டுகளில் பலரின் வீட்டில் இருக்கும் முக்கியமான சமையல் பாத்திரம் ‘நான்-ஸ்டிக்’ பேன். இந்த ‘நான்-ஸ்டிக்’ பேனில்தான் ஆபத்து இருப்பதாக அண்மைய ஆய்வுகள் சொல்கின்றன.தோசை சுடுவதற்கு, பதார்த்தங்களை வறுப்பதற்கு எல்லாம் இந்த ‘நான்-ஸ்டிக்’ பேன்கள் அதிகமான வீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. அதிகம் எண்ணெய் தேவையில்லை, விரைவில் சூடாகும் தன்மை மற்றும் சமைத்த பிறகு இலகுவாக கழுவக்கூடிய பிசுபிசு இல்லாத் தன்மையால்தான் (non stick) இந்த பாத்திரமும் சந்தையில் இடம்பிடித்து சக்கைபோடு போட்டது; போடுகிறது.
இதுதான் மேற்குலக நாடுகளில் மட்டும் அல்லாது இந்தியாவிலும் உடல் கோளாறுகளைக் கொண்டு வரலாம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்.
அவர்கள் கூறும்போது, நான் ஸ்டிக் பாத்திரங்களில் பாலி டெட்ராஃப்ளோேரா எத்திலீன் (Polytetrafluoro ethylene - PTFE) என்ற ப்ளாஸ்டிக் சார்ந்த ஒரு இரசாயனம் இருப்பதாகவும், இது பேன் சூடாகும்போது புகையாக எழும்பி சமைப்பவர்களின் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள்.
இந்த ப்ளாஸ்டிக் வகை இரசாயனத்தைத்தான் ‘டெஃப்லான்’ (Teflon) என்றும் அழைக்கிறார்கள். சரி, இதனால் என்ன பிரச்னை உண்டாகும்..?
ஒருவகை காய்ச்சலை உண்டாக்கும் என்றும் (Teflon flu) இத்தோடு தலைவலி, நடுக்கம், மூச்சுப் பிரச்னை, உடல் வலி, சோர்வு, நெஞ்சு இறுக்கம், இருமல், தீராத தாகம் மற்றும் அதிக வியர்வை உண்டாக்கும் என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 2500 பேர்.
இது 2018ஐவிட மூன்று மடங்கு அதிகம் என்றும் கணித்திருக்கிறார்கள். என்ன பிரச்னை என்றால் இந்த டெஃப்லான் காய்ச்சலுக்கு எனத் தனியான பரிசோதனைகள் இல்லை. இதனால் மருத்துவர்கள் மற்ற ஃப்ளூவுக்கும் இந்த ஃப்ளூவுக்கும் வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியாத சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும் ஆஸ்துமா நோயாளிகள், மூச்சு பிரச்னை இருப்பவர்கள், நுரையீரல் பிரச்னை இருப்பவர்கள் எல்லோருமே இந்தப் பாத்திரத்தை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என்கிறார்கள். இத்தோடு நான்-ஸ்டிக் பேனை எந்தவித உணவுகளையும் அதன்மேல் போடாமல் வெறுமனே சூடாக்குவதன் மூலமும் இந்த நச்சு புகைகள் மிதமாக வெளியேறி உடல் உபாதைகளை தீவிரமாக்கலாம் என்றும் எச்சரிக்கிறார்கள்.எல்லாமே பிரச்னை என்றால் எதில் போய் நாம் முட்டிக் கொள்வது..?
டி.ரஞ்சித்
|