அமெரிக்க ராணுவத்துடன் ஹாலிவுட் கூட்டணி?!



தலைப்பு பகீர் என்று இருக்கிறதல்லவா..? 2018ம் ஆண்டு ‘ரஷ்யா டுடே’ இணைய இதழில் மைக்கேல் மெக்காஃப்ரே எழுதிய ‘The Pentagon & Hollywood’s successful and deadly propaganda alliance’ கட்டுரை பல அதிர்ச்சிகரமான ரகசிய செய்திகளை - நிகழ்வுகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

ரஷ்யா - உக்ரைன் இடையிலான யுத்தம் அடுத்தகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் மைக்கேல் மெக்காஃப்ரேவின் அதே கட்டுரை மீண்டும் சர்வதேச அளவில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
கட்டுரையின் சாரம் இதுதான்: ஹாலிவுட் பணம் சம்பாதிப்பதற்கு அமெரிக்காவின் இராணுவத் தலைமையகமான பென்டகன் உதவுகிறது. பதிலுக்கு, அமெரிக்காவின் கொடூரமான இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்தி ஹாலிவுட் பிரசாரம் செய்கிறது.

குழப்பமாக இருக்கிறதா..? விரிவாகவே பார்க்கலாம்.ஹாலிவுட் + அமெரிக்க ராணுவ கூட்டணியில் உருவான முதல் படம் 1927ம் ஆண்டு வெளிவந்த ‘விங்ஸ்’ (Wings).
விருது பெற்ற இப்படத்தின் வெற்றி தொடர்ந்து இக்கூட்டணியை செயல்படுத்த வைக்கிறது. யெஸ்... 1927 முதல் 2018 வரை 1800 திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இக்கூட்டணி தயாரித்திருக்கிறது. இந்த ‘இராணுவப் படங்களுக்கான’ தளவாடங்களை பென்டகன் ஸ்பான்சர் செய்திருக்கிறது என்பதுதான் ஹைலைட்!

பழைய உதாரணங்களைச் சொல்லி உங்களைக் கடுப்பேற்ற விரும்பவில்லை! ‘லோன் சர்வைவர்’, ‘கேப்டன் பிலிப்ஸ்’, ‘டிரான்ஸ்ஃபார்மர்ஸ்’, பிறகு மார்வெல் - டிசி சூப்பர் ஹீரோ வரிசைப் படங்கள் எல்லாம்... யெஸ்... ஸ்பான்சர் & கோ ஸ்பான்சர்ட் பை அமெரிக்கன் மிலிட்டரிதான்!  

ரைட். ஹாலிவுட் இராணுவ சாகசப்படங்கள் எப்படித் தயாரிக்கப்படுகின்றன?

அமெரிக்க அரசு பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கு ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் இராணுவத்துடன் ஓர் ஒப்பந்தம் போட வேண்டும். அதன்படி இராணுவம்தான் திரைக்கதையின் இறுதி வடிவத்தை அங்கீகரிக்கும். பதிலுக்கு பல கோடி கோடி டாலர் செலவு பிடிக்கும் அமெரிக்க இராணுவத் தளவாடங்களை பயன்படுத்தவும், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் படம் பிடிக்கவும் தயாரிப்பாளர்களுக்கு அமெரிக்க இராணுவம் உதவும்.

அதாவது நாட்டுமக்களின் பணத்தை பாதுகாப்புத்துறை அமைச்சகம் தனது நலனுக்கு பயன்படுத்துவதாக தன் கட்டுரையில் மைக்கேல் மெக்காஃப்ரே குறிப்பிடுகிறார்.இதிலிருந்து தெரிவது ஒன்றே ஒன்றுதான். 

ஒரு படத்தில் ஆபாசம் இருக்கிறதா, உண்மையா பொய்யா, கலாபூர்வமான வெளிப்பாடு... இவையெல்லாம் இராணுவத்துக்கு பொருட்டல்ல. மாறாக தேசிய வெறி பிடித்து அமெரிக்க மக்களும் உலக மாந்தர்களும் யுஎஸ் ராணுவத்தை ஆதரிக்க வேண்டும். இதை மட்டுமே அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் விரும்புகிறது.

இக்கூட்டணியின் அபாயம் என்ன?

பிரம்மாண்டமான பொழுதுபோக்கு ரசனையை திறமையுடன் உருவாக்கும் ஹாலிவுட், அமெரிக்க அரசின் ஆக்கிரமிப்பு போர்களுக்கு ஆதரவான மன
நிலையை உருவாக்குகிறது. ‘அயர்ன் மேன்’, ‘எக்ஸ்-மென்’, ‘டிரான்ஸ்பார்மர்ஸ்’, ‘ஜுராசிக் பார்க்’... போன்ற படங்களில் ஏதோ வேடிக்கை காட்டுவதற்காக அமெரிக்க இராணுவம் பங்கேற்பதில்லை. அமெரிக்க மக்களை, குறிப்பாக இளைஞர்களிடம் உளவியல் ரீதியாக இராணுவத்தை வழிபடும் மனநிலையை உருவாக்குகிறார்கள். இத்தகைய அப்பட்டமான வெறி யதார்த்த உலகில் பெரும் அழிவுகளையும் ஏற்படுத்துகிறது.

‘Guts and Glory’ புத்தகத்தின் ஆசிரியர் லாரன்ஸ் சூயிட், ‘அல் - ஜசீரா’விடம் “வியட்நாம் போரின் வரலாற்றை வகுப்பறையில் நான் பாடமாக நடத்தும்போது, நாம் எதற்காக வியட்நாமில் சிக்கிக் கொண்டோம் என்பதை என்னால் விளக்க முடியவில்லை. என்னால் விவரங்களையும், தேதிகளையும் கூற முடிந்தது. ஆனால், ஏன் என்ற கேள்விக்கு விடை கூற இயலவில்லை. திரைத்துறைப் படிப்பை முடித்து பட்டம் வாங்கும்போதுதான் நான் யோசித்துப் பார்த்தேன்.

தங்கள் நாடு ஒரு போரில் தோற்றிருப்பதாக அமெரிக்க மக்கள் ஒருபோதும் எந்த திரைப்படத்திலும் பார்த்ததே இல்லை என்ற உண்மை திடீரென்று அப்போதுதான் எனக்கு உரைத்தது...’’ என்று கூறியிருப்பது ஒரு சோறு பதம். 

 அமெரிக்க மூளையில் ஹாலிவுட் தடுப்பூசிசூயிட் கூறுவது பொய்யல்ல. தலைமுறை தலைமுறையாக அமெரிக்க மக்கள் இரண்டாம் உலகப் போரின்போது நார்மண்டி கடற்கரையில் இறங்கும் ‘த லாங்கஸ்ட் டே’ (The Longest Day) திரைப்படத்தின் நாயகன் ஜான் வெயின் போன்றவர்களின் சாகசத்தை மட்டுமே பார்த்து வருகிறார்கள்.

அமெரிக்கா என்றாலே இரக்க குணம் கொண்ட நாயகன் என்ற பிம்பம் அவர்கள் மனதில் பதிந்திருக்கிறது. சந்தேகம் என்பதே அவர்கள் சிந்தனைக்குள் நுழைய முடியாத அளவுக்கு அமெரிக்கர்களின் மூளையில் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இப்படி இராணுவத்தை விமர்சனமற்று விதந்தோதுவதால்தான் ஹாலிவுட்டின் பெருவெற்றிப் படங்கள் அமெரிக்க மக்களின் மனநிலையை மாற்றி, 2003 இராக் போர் போன்ற ஆக்கிரமிப்புகளை ஆதரிக்க வைக்கின்றன. இராக் ஆக்கிரமிப்பு போரை ஆதரிக்கும் உளவியல் சூழலை உருவாக்கிய படங்கள்தான், ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளியான ‘சேவிங் பிரைவேட் ரியான்’ (1998), ஜெர்டி பிரக்ஹெய்மர் தயாரித்த ‘பிளாக் ஹாவ்க் டவுண்’ (2001) போன்றவை.

இத்தகைய படைப்பாளிகளைத்தான் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் தனது பெரும் நம்பிக்கைக்குரிய கூட்டாளிகளாகக் கருதுகிறது.பாதுகாப்பு அமைச்சகம் தனது கொள்கை பிரசாரத்திற்காக டாம் குரூஸின் பெருவெற்றிப் படமான ‘டாப் கன்’ஐ (1986) ஆதரித்தது மற்றுமொரு சான்று.

ப்ரூக் ஹைமரை தயாரிப்பாளராகக் கொண்ட இப்படம்தான் ஹாலிவுட் - அமெரிக்க இராணுவக் கூட்டணிக்கு ஒரு மைல் கல். அதே நேரம் போர் எதிர்ப்பு படங்களான ‘அப்போகலிப்ஸ் நவ்’, ‘பிளாட்டூன்’, ‘ஃபுல் மெட்டல் ஜாக்கெட்’ போன்றவை வியட்நாம் போரில் சிக்கிய அமெரிக்காவின் நெருக்கடியை சித்தரித்ததால் இராணுவம் இப்படங்களை கடுமையாக எதிர்த்தது.

கூட்டிக் கழித்துப் பார்த்தால், வெற்றிப் பெருமிதத்துடன் அமெரிக்க ஆதிக்கத்தை கொடியசைத்து கொண்டாடும் ரீகனுடைய அரசியலின் திரை வடிவம்தான் ‘டாப் கன்’ படம் என்பது புரியும். பனிப்போர் காலகட்டத்தில், வியட்நாம் தோல்வியால் துவண்டிருந்த அமெரிக்க மனத்துக்கு போடப்பட்ட முறிவு மருந்தும் அதே ‘டாப் கன்’தான்.அமெரிக்க இராணுவத்தின் பெரிய அளவிலான உதவியுடன் உருவான ‘டாப் கன்’ மாபெரும் வெற்றி பெற்று இராணுவம் குறித்த மக்களின் ஆதரவை பெருமளவு உயர்த்தியது. அதன் விளைவாகவே 1991 வளைகுடா ஆக்கிரமிப்பு போரின்போது 85 சதவீத மக்கள் இராணுவத்தை ஆதரித்தார்கள் என்கிறார் மைக்கேல் மெக்காஃப்ரே தனது கட்டுரையில்.

மட்டுமல்ல; ‘டாப் கன்’ காலத்திலிருந்து அமெரிக்க இராணுவத்தின் பிரசார எந்திரம், 72 சதவீத மக்களின் ஆதரவைப் பெறுவதை சாத்தியமாக்கியிருக்கிறது. அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களில் 12%, ஊடகங்களில் 24%, தேவாலயங்கள் 40% மட்டுமே இராணுவத்தை ஆதரிக்கின்றனர் என்ற நிலையில் பொது மக்களின் ஆதரவு இவை அனைத்தையும் விட அதிகமாக இருப்பது கவனிக்கத்தக்கது.

சித்திரவதைக்கு ஆதரவான சிஐஏ திரைப்படம்

இப்படியான போர் ஆதரவு வேலைகளை ஏதோ பாதுகாப்பு அமைச்சகம்தான் செய்கிறது என்பதல்ல. அமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏ-வும் தனது இமேஜை உயர்த்திக் கொள்வதற்காகவும் வரலாற்றை திரிப்பதற்காகவும் இதைச் செய்கிறது.சான்றாக, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது சார்லி வில்சனின் ‘வார்’ (2007) திரைப்படத்தைப் பயன்படுத்தி, ஆப்கான் முஜாகிதீன்களுடன், தான் கொண்டிருந்த கடந்த கால உறவை மறைத்துக் கொண்டு, மாவீரர்களாக அமெரிக்காவை சித்தரித்துக் கொண்டது சிஐஏ.

அதே போல சிஐஏ உதவியுடன் 2012ம் ஆண்டில் வெளிவந்த ‘சீரோ டார்க் தர்ட்டி’ என்ற படம், வரலாற்றை திரித்ததோடு, கைதிகளைச் சித்திரவதை செய்வதுதான் அவர்களிடமிருந்து தகவல்களைக் கறப்பதற்கான வழி என்று அமெரிக்க மக்களை நம்ப வைத்தது.

இந்தப் படத்தின் மூல வடிவம் 2001 முதல் 2010 வரை ஒளிபரப்பான ‘24’ என்ற தொலைக்காட்சித் தொடர். இந்தத் தொடருக்கும் சிஐஏ-தான் உதவி செய்தது. எம்மி விருது பெற்ற ‘ஹோம்லாண்ட்’ நிகழ்ச்சியும் சிஐஏ புகழ் பாடியதோடு, சித்திரவதைகளையும் ஆதரித்தது.

சிறந்த திரைப்படம் என்ற விருதைப் பெற்ற ‘ஆர்கோ’ (2012) கதையே சிஐஏ - ஹாலிவுட் கூட்டணியை அம்பலமாக்குவதுதான். இருப்பினும், இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுடனும் கூட்டு வைத்துக்கொண்டு, தங்களைப் பற்றிய வரலாற்று உண்மைகளை திரித்ததன் வாயிலாக சிஐஏ தனது இமேஜை பாதுகாத்துக் கொண்டது.அமெரிக்காதான் இந்த உலகின் மிக உயர்ந்த ஜனநாயக நாடு என்றால், அதன் இராணுவமும், உளவுத் துறையும் எதன் பொருட்டு தனது குடிமக்களை திசை திருப்ப வேண்டும்? கலையின் பெயரால் உண்மைகளை ஏன் திரிக்க வேண்டும்?

விடை தெரிந்ததுதான். அமெரிக்காதான் இந்த உலகின் மிக உயரிய ஜனநாயகம் என்று அமெரிக்க மக்களை நம்ப வைக்க வேண்டுமானால், இந்தப் பொய் பித்தலாட்டம், கலை கிராபிக்ஸ் எல்லாம் இருந்தால் மட்டும்தான் முடியும் என்கிறார் மைக்கேல் மெக்காஃப்ரே!வியட்நாம் போரில் அமெரிக்கா தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து வெளிவந்த பல படங்கள் சங்கடமான பல உண்மைகளைப் புலனாய்வு செய்து வெளியே கொண்டு வந்தன.

‘அப்போகலிப்ஸ் நவ்’, ‘கமிங் ஹோம்’, ‘த டீர் ஹன்டர்’, ‘பிளாட்டூன்’, ‘ஃபுல் மெட்டல் ஜாக்கெட்’ மற்றும் ‘பார்ன் ஆன் த ஃபோர்த் ஜூலை’ போன்ற ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்கள் அனைத்துமே அமெரிக்க பாதுகாப்புத்துறையின் உதவியின்றி தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டுமல்ல; வியட்நாம் போருக்குப் பின் வெளிவந்த விமரிசன பூர்வமான திரைப்படங்கள் எதுவும் இராக் படையெடுப்பின் தோல்விக்குப் பின்னர் வரவில்லை. ஆப்கன் புதைகுழியில் மீளமுடியாமல் அமெரிக்கா சிக்கியிருப்பது குறித்தும் ஹாலிவுட் படங்கள் எதுவும் வரவில்லை என்பதை நினைவில் கொள்வது நல்லது.

சிறந்த திரைப்படத்துக்கான விருதினைப் பெற்ற 2008ல் வெளியான ‘த ஹர்ட் லாக்கர்’ ஒரு விதிவிலக்கு. மெசபடோமியாவில் (இராக்கில்) அமெரிக்கா நடத்திய தோல்வியுற்ற போர் குறித்த அசிங்கமான உண்மைகளை தைரியமாக சித்தரித்த இந்த திரைப்படம் பாதுகாப்புத் துறையின் உதவி இல்லாமல் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.மொத்தத்தில் பாதுகாப்புத்துறை - சிஐஏ - ஹாலிவுட் கூட்டணிதான் அமெரிக்க மக்களை அறிவே இல்லாத இராணுவ வெறி பிடித்த முட்டாள்களாக மாற்றியிருக்கிறது.

முடிவே இல்லாத ஒரு போர் ஆதரவு வெறிப்பிரசார சுழலில் அமெரிக்கா சிக்கியிருக்கிறது. விளைவு- அமெரிக்க மக்கள் தங்களுடைய அரசிடமிருந்தும் பொழுதுபோக்கு சாதனங்களிடமிருந்தும் மென்மேலும் இராணுவ சாகசத்தை எதிர்பார்க்கிறார்கள். அலசி துவைத்து காயப்போட்டு மீண்டும் மீண்டும் எத்தனை முறை அதே சரக்கையே கடை விரித்தாலும் பார்த்து மயங்கத் தயாராக இருக்கிறார்கள்.

வருங்காலத்தில் அமெரிக்கா நடத்தவிருக்கும் தோல்வியுறும் போர்களை மென்மேலும் அதிகமாக கண்மூடித்தனமாக ஆதரிப்பதற்கும், உலகம் முழுவதும் பலகோடி மக்களின் மரணத்திற்கு உடந்தையாக இருப்பதற்கும் அமெரிக்க மக்களைப் பக்குவப்படுத்துவதற்கும் இராணுவ - சிஐஏ - ஹாலிவுட் பிரசாரக் கூட்டணி உத்தரவாதமளிக்கிறது... என அழுத்தம்திருத்தமாக தன் கட்டுரையை முடிக்கிறார் மைக்கேல் மெக்காஃப்ரே.  

கே.என்.சிவராமன்