இந்தியாவில் தினமும் 85 பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகின்றனர்!
ஷாக் ரிப்போர்ட்
பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகள் உலகளாவிய பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது என்று பாலியல் வன்புணர்வு குறித்த ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வின்படி உலகின் பாலியல் வன்புணர்வு தலைநகரமாக போட்ஸ்வானா திகழ்கிறது. அங்கே 70 சதவீத பெண்கள் பாலியல் ரீதியான வன்முறைகளுக்கும், சுரண்டல்களுக்கும் உள்ளாகின்றனர். அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளில்கூட ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகிறார்.
இந்தியாவில் 2022ம் ஆண்டில் மட்டும் 31 ஆயிரம் பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் அடிப்படையில் இந்தியாவில் தினமும் 85 பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகின்றனர்.
இப்படி பெண்களின் மீதான பாலியல் வன்புணர்வு, ஒரு கலாசாரம் போல பல நாடுகளில் பரவியிருக்கிறது. ஒரு தொற்றுநோயைப் போல பெண்களை மட்டுமே தாக்குகிறது.
உலகமெங்கும் பெரும்பாலான பெண்களுக்கு பாலியல் வன்புணர்வு வழக்குகளில் சரியான நீதி கிடைப்பதில்லை.
அத்துடன் பாலியல் வன்புணர்வு காரணமாக பல பெண்கள் தற்கொலை கூட செய்திருக்கின்றனர். மட்டுமல்ல, பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் மீண்டு வந்து இயல்பு நிலைக்குத் திரும்பும் சதவீதமும் குறைவு. பாதிக்கப்பட்ட பெண்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவது அவர்களது வாழ்க்கை முழுவதும் தொடர்கிறது. ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், போராளிகள் எனப் பலரும் பாலியல் வன்புணர்வை தனிப்பட்ட ஒரு நிகழ்வாக மட்டுமே சித்தரிக்கின்றனர். குற்றம் நிகழும்போது மட்டுமே அதன் மீது கவனம் செலுத்துகின்றனர். அந்தக் கவனம் கூட பாதிக்கப்பட்ட பெண், குற்றவாளி, குற்றம் நடந்த இடத்தைச் சுற்றி மட்டுமே இருக்கிறது.
இதற்கான நிரந்தரத் தீர்வை நோக்கி யாருமே பெரிதாக யோசிப்பதில்லை. அதனால்தான் பாலியல் வன்புணர்வு நிகழ்வுகள் ஒரு தொடர்கதையைப் போல நீண்டுகொண்டே செல்கிறது. உதாரணத்துக்கு கொல்கத்தா மருத்துவர் வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே, பல பாலியல் வன்புணர்வுகள் இந்தியாவில் அரங்கேறியிருக்கின்றன. இவற்றையெல்லாம் ஒரு செய்தியைப் போலத்தான் பலரும் கடந்துபோகின்றனர்.
மட்டுமல்ல, பாலியல் வன்புணர்வு வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே குற்றம் சுமத்துகின்றனர்; அந்தப் பெண்ணை அவமதிக்கின்றனர். சரியான ஆடையை அந்தப் பெண் அணியவில்லை, தவறானவர்களுடன் நட்பு வைத்திருந்தாள், நேரம் கெட்ட நேரத்தில் வெளியில் சுற்றிக்கொண்டிருந்தாள் என்று பாதிக்கபப்ட்ட பெண்களின் மீது சுமத்தப்படும் குற்றங்கள் நீள்கின்றன.
சமீபத்தில் கூட கொல்கத்தா உயர்நீதிமன்றம் , ‘‘பெண்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும்...’’ என்று சொல்லியிருந்தது. இது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியது வேறு கதை. ஆனால், இவையெல்லாம் தோல்வியடைந்துவிட்ட நீதித்துறையின் சாட்சியாக இருக்கிறது.
இன்னொரு பக்கம் அதிகப்படியான போதைப்பொருளும், மதுவும் எடுத்துக்கொண்டவர்கள்தான் பாலியல் வன்புணர்வில் ஈடுபடுகின்றனர் என்று ஆய்வுகள் சொல்கின்றன. எது எப்படியாக இருந்தாலும் பாலியல் வன்புணர்வு என்பது பெண்களின் உடலைக் கட்டுப்படுத்த விளையும் ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடே. தவிர, முதலாளித்துவம் பெண்களின் உடலை பாலியல் இன்பம் தரும் ஒரு பண்டம் போலவே மாற்றி வைத்திருக்கிறது.
ஆணாதிக்கமும், முதலாளித்துவமும் பெண்களை மனிதர் என்ற அடையாளத்திலிருந்தே கீழே இறக்கி வைத்திருக்கிறது. மட்டுமல்ல, ஆணாதிக்கமும் முதலாளித்துவமும் பெண்களுக்கு எதிராக ஒவ்வொரு நிலையிலும் பலவிதமான அதிகாரத்தை உருவாக்கி வைத்திருக்கிறது.
அதாவது பெண்களைக் கட்டுப்படுத்த, அவர்களை வேறுபடுத்திப் பார்க்க, அவர்கள் மீது அதிகாரம் செலுத்த பல வழிகளைச் செய்து வைத்திருக்கிறது. இவையெல்லாமே பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளுக்கும், சுரண்டல்களுக்கும் ஆணி வேராக இருக்கிறது.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு நிகழ்வுகள் ஆதி காலம் தொட்டே இருந்து வருகிறது. இது பாலியல் இச்சையை மட்டுமே தீர்த்துக் கொள்வதற்காக நடப்பதில்லை. பெரும்பாலான மதங்கள் கூட பெண்களுக்கு எதிரான ஆணாதிக்கச் சிந்தனைகளைக் கொண்டதாகத் தான் இருக்கின்றன.
தவிர, ஆணாதிக்க சமூகத்தில் குடும்பத்தின் கௌரவமாக பெண்கள் கருதப்படுகின்றனர். அந்த கௌரவம் கூட பெண்களின் குணத்தில்தான் வைக்கப்படுகிறது. அந்த குணம் பெண்களின் உடலை மையப்படுத்தி இருப்பதுதான் இதில் கவனிக்கத்தக்கது. மட்டுமல்ல, பல ஆணாதிக்க சமூகங்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை மிகச் சாதாரண விஷயமாகக் கருதுகின்றன.
இதன் விளைவாகத்தான் குடும்பத்தின் கௌரவத்தைக் காப்பதற்காக என்ற பெயரில் பல பெண்கள் குடும்ப உறுப்பினர்களாலேயே கொலை செய்யப்படுகின்றனர். மதம், ஆணாதிக்கம், முதலாளித்துவம் ஆகிய மூன்றும்தான் பாலியல் வன்புணர்வு கலாசாரத்தின் முக்கிய தூண்கள். இவற்றிலிருந்து கிடைக்கும் விடுதலையே பெண்களுக்கான உண்மையான விடுதலை.
த.சக்திவேல்
|