கடல் நாய்கள் தீவு... முயல் தீவு... பூனைத் தீவு...பன்றித் தீவு... ராட்சஷ பல்லி தீவு... பாம்புத் தீவு...



மனிதர்களே வாழாத, விலங்குகள் மட்டுமே வசிக்கும் islands

உலகில் மொத்தம் ஆறு லட்சத்திற்கும் அதிகமான தீவுகள் இருக்கின்றன. இதில் சுமார் 11 ஆயிரம் தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வசிக்கின்றனர். மீதம் உள்ளவற்றில் ஏதோ ஒரு காரணத்தால் வசிக்கமுடியாத சூழல்கள் நிலவுகின்றன.  இதில் சில தீவுகளில் குறிப்பிட்ட விலங்குகள் மட்டுமே பெரும்பான்மையாக உள்ளன. இதனால், அந்தத் தீவுகளுக்கு அந்தந்த விலங்குகளின் பெயர்களே செல்லப்பெயராகி விடுகின்றன. அப்படியான சில சுவாரஸ்யமான தீவுகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

கொமோடோ

இந்தோனேஷியாவில் உள்ள 17 ஆயிரத்து 508 தீவுகளில் ஒன்று கொமோடோ. இந்தத் தீவு கொமோடோ டிராகன் எனப்படும் ராட்சச பல்லியினத்திற்குப் பெயர் போன ஒன்று.
சுமார் 390 கிமீ பரப்பளவு கொண்ட இந்தத் தீவில் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் 2 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். 1991ம் ஆண்டு இந்தத் தீவு கொமோடோ தேசிய பூங்காவிற்குள் சேர்க்கப்பட்டது.

பின்னர் இந்தத் தீவினை, யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. இதற்குக் காரணம் கொமோடோ தீவைச் சுற்றியுள்ள நீர், வளமான கடல் பல்லுயிர்களைக் கொண்டிருப்பதுதான். இங்குள்ள கொமோடோ டிராகன் மிகப்பெரிய பல்லி இனமாகும். ஒரு ராட்சச ஆண் பல்லி சுமார் 10 அடி நீளமும், 150 கிலோ எடையும் கொண்டதாக இருக்கிறது. முப்பது ஆண்டுகள் வரை வாழக்கூடியது.

இது கொமோடோ, ரின்கா, ஃப்ளோரஸ் மற்றும் கிலி மோட்டாங் உள்ளிட்ட இந்தோனேஷிய தீவுகளில் காணப்படுகின்றன. குறிப்பாக கொமோடோ தீவில் அதிகளவில் உள்ளதால் கொமோடோ டிராகன் எனப் பொதுவாக அழைக்கப்படுகிறது. 1910ல்தான் இந்த ராட்சச பல்லியை டச்சுக்காரர்கள் ஆவணப்படுத்தினர். 

அப்போது இந்தப் பகுதி டச்சு காலனி நிர்வாகத்தினுள் இருந்தது. இந்தப் பல்லியினம் பற்றி அறிந்த டச்சு லெப்டினன்ட் வான் ஸ்டெய்ன் வான் ஹென்ஸ்ப்ரூக் உடனடியாக கொமோடோ தீவுக்குச் சென்று ஒரு டிராகனை தனது படைவீரர்களுடன் சேர்ந்து வேட்டையாடினார்.

இதன்பிறகு கொமோடோ தீவில் உள்ள இந்த ராட்சச பல்லிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, டச்சு அரசாங்கம் 1915ம் ஆண்டில் இந்தப் பல்லிகளைப் பாதுகாப்பதற்கான விதிமுறையை வெளியிட்டது. ஏனெனில், இந்தத் தீவுகளில் மட்டுமே காணப்படக்கூடிய அரிய வகை உயிரினமாக இந்த ராட்சச பல்லிகள் இருந்ததுதான். 

பின்னர், பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்த ராட்சச பல்லிகள் பற்றி ஆய்வு செய்தனர். இந்தக் கொமோடோ பல்லிகள் மாமிச உண்ணிகள். சிறியதாக இருக்கும்போது பூச்சிகள், பறவைகளை உட்கொள்கின்றன. அவையே வளர்ந்தபிறகு பன்றிகள், மான்கள், காட்டெருமை வரை உட்கொள்கின்றன. அரிதாகவே மனிதர்களைத் தாக்கியிருக்கிறது. இந்த நான்கு தீவுகளிலும் சேர்த்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொமோடோ ராட்சச பல்லிகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

முயல்

முயல் தீவு என்றதும் நமக்கெல்லாம் தூத்துக்குடியில் உள்ள முயல் தீவுதான் ஞாபகத்திற்கு வரும். ஆனால், இந்த முயல் தீவு ஜப்பானில் இருக்கிறது.இந்தத் தீவின் பெயர் ஒகுனோஷிமா. ஜப்பானின் உள்புற கடற்பகுதியில் இருக்கும் இந்தத் தீவில் சுமார் ஆயிரம் முயல்கள் வரை இருக்கின்றன. இதனாலேயே இதனை முயல் தீவு என அழைக்கின்றனர். இங்கு மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை. ஏனெனில், இந்தத் தீவிற்கு அப்படியொரு இருண்ட பின்புலம் இருக்கிறது.

1925ம் ஆண்டு ரசாயனப் போரைத் தடை செய்யும் ஜெனிவா நெறிமுறையில் ஜப்பான் கையெழுத்திட்டிருந்தது. ஆனால் இதற்கு நேர்மாறாக நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 1929ல், இந்த ஒகுனோஷிமா தீவில் ஒரு ரகசிய இரசாயன ஆயுதத் தொழிற்சாலையைக் கட்டியது ஜப்பான் அரசு. 

அந்நேரத்தில் தொழிற்சாலையை ரகசியமாக வைத்திருக்க அதிக முயற்சி எடுத்தது. அதனாலேயே உள்புற கடற்பகுதியில் இருந்த இந்தத் தீவினைத் தேர்ந்தெடுத்தது. அத்துடன் வரைபடங்களிலிருந்தும் இத்தீவினை அகற்றியது. அங்கே என்ன உற்பத்தி செய்யப்படுகிறது எனவும் உள்ளூர் மக்களுக்கு தெரிவிக்கவில்லை.

ஆனால், இந்தத் தீவில் சுமார் ஆறு கிலோ டன் மஸ்டர்ட் வாயு மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டு ஆகியவற்றை தயாரித்தது ஜப்பான். இங்குள்ள முயல்கள் இரண்டாம் உலகப் போரின் போது இரசாயன ஆயுத ஆலையின் சோதனைக்குப் பயன்படுத்தப்பட்டன. அதற்காகவே இந்த முயல்கள் இங்கு கொண்டு வரப்பட்டதாகச் சொல்கின்றன தகவல்கள். 

ஆனால், இப்போது தீவில் உள்ள முயல்களுக்கும் அவற்றுக்கும் சம்பந்தமில்லை என்கின்றனர். இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தவுடன் ஆவணங்களும், சம்பந்தப்பட்ட கட்டடங்களும் அழிக்கப்பட்டன. நேச நாட்டுப் படைகளின் உதவியுடன் இரசாயனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

இதன்பிறகே இந்தத் தீவிற்கு புதியதாக முயல்கள் வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. பின்னர் இதனை முயல் பூங்காவாக மாற்றியது ஜப்பான் அரசு. இருந்தும் 2014ல் சமூக வலைத்தளங்களில் இந்தத் தீவின் வீடியோ வைரலாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது.இவர்களே இந்த முயல்களுக்கு உணவளிக்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் வந்ததும் அவர்களின் கால்களைச் சுற்றிவிடுகின்றன இந்த முயல்கள். எதுவும் மனிதர்களைக் கண்டு அஞ்சுவதில்லை.

இந்த முயல்களைப் பாதுகாக்கும் பொருட்டு இங்கு நாய்களுக்கும், பூனைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, இந்தத் தீவில் 1988ல் உருவாக்கப்பட்ட நச்சுவாயு அருங்காட்சியகம் ஒன்று இருக்கிறது. இதனையும் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கின்றனர். இதன்வழியாக போரின் தாக்கத்தை அறிந்துகொள்வதுடன் அமைதியின் முக்கியத்துவத்தையும் மக்கள் உணர்ந்துகொள்வார்கள் எனச் சொல்லப்படுகிறது.

பன்றி

பஹாமாஸ் நாட்டின் 360 தீவுகளில் எக்ஸூமா பகுதிக்குள் இருக்கிறது இந்த பன்றி கடற்கரை. குறிப்பாக, ‘Big Major Cay’ என்ற தீவில் உள்ளது. மனிதர்களற்ற இந்தத் தீவினில் வாழும் காட்டுப் பன்றிகளால் இந்தப் பெயரைப் பெற்றுள்ளது இங்குள்ள கடற்கரை. மொத்தம் 60 பன்றிகள் வரை இங்கு உள்ளன. 

இவை எப்படி இந்தத் தீவினுள் வந்தன என்பதற்கு பல்வேறு செவிவழிக் கதைகள் உலவுகின்றன. இதில் ஒன்று, இந்த வழியாக வரும் கப்பல் மாலுமிகள் சாப்பிடுவதற்குக் கொண்டு வரப்பட்ட பன்றிகளை இங்கு விட்டிருப்பார்கள்; பின்னர் அவர்கள் இங்கு வராமல் போயிருக்கலாம் என்பது.

மற்றொன்று, இங்கு ஏதாவது கப்பல் விபத்துகள் நடந்திருக்கலாம். அதிலிருந்து தப்பிப் பிழைத்து இங்கே பன்றிகள் வந்திருக்கலாம் என்பது. வேறு சிலரோ, 1990களில் அருகிலுள்ள ஸ்டானியல் தீவில் வசிப்பவர்களால் உணவுக்காக வளர்க்கப்பட்ட பன்றிகள் இவை என்கின்றனர். எப்படியோ இந்தப் பன்றிகள் அங்குள்ள கடலில் நன்றாக நீச்சலடிக்கின்றன. 

இவை சமூக வலைத் தளங்களில் வைரலாக இந்தப் பன்றி கடற்கரையும் பாப்புலராகிவிட்டது.  இதனால், இதனைப் பார்க்க நிறைய சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இப்போது அண்டை தீவுகளில் வசிப்பவர்களும், சுற்றுலாப் பயணிகளும்தான் இந்த பன்றிகளுக்கு உணவளிக்கின்றனர்.

பூனை

இதேபோல ஜப்பானில் தஷிரோஜிமா என்ற சிறிய தீவு உள்ளது. இதனைப் பூனைத் தீவு என்று அழைக்கின்றனர். இங்கே நூற்றுக்கும் மேற்பட்ட பூனைகள் உள்ளன. மனிதர்களைவிட இந்தத் தீவில் பூனைகளே அதிகம். ஜப்பானிய கலாசாரத்தில் பூனைகள் அதிர்ஷ்டத்தைத் தருவதாகக் கருதப்படுகிறது. இதனாலும் சுற்றுலாப் பயணிகள் இந்தத் தீவிற்கு வந்து செல்கின்றனர்.

சீல்

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரின் அருகே உள்ள ஃபால்ஸ் விரிகுடாவில் இருக்கிறது இந்தத் தீவு. கடற்கரையிலிருந்து ஆறு கிமீ தொலைவில் இருக்கும் இந்தத் தீவில் சீல் எனப்படும் கடல்நாய்கள் அதிகம் வசிக்கின்றன. அதனாலேயே இது சீல் தீவு எனப்படுகிறது. சுமார் 5 ஏக்கர் தீவுப் பகுதி, 64 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழுப்பு நிற கடல்நாய்களுக்கு வசிப்பிடமாக உள்ளது. இதனுடன் மற்ற கடல் பறவைகளும் இருக்கின்றன. தாவரங்கள் என்று எதுவும் இந்தத் தீவில் இல்லை.

ஆனால், இந்தத் தீவுகளைச் சுற்றி நிறைய பெரிய வெள்ளை சுறா மீன்கள் வாழ்கின்றன. காரணம், கடல்நாய்கள் அவற்றுக்கு உணவாக இருப்பதால் இந்தத் தீவின் அருகேயே கடலுக்கடியில் இருக்கின்றன. இப்படி வெள்ளை சுறாக்கள் அடிக்கடி கடல்நாய்களை வேட்டையாடும் உலகின் ஒரே பகுதியும் இந்த சீல் தீவுதான். இந்தத் தீவிற்குச் சென்று பழுப்பு நிற கடல்நாய்களையும், வெள்ளைச் சுறாக்களையும் பார்த்துவர படகு சவாரிகளும் உள்ளன.

கொய்மடா கிராண்டே

இந்தப் பெயரைவிட பாம்புத் தீவு என்றே இதனை அங்குள்ளவர்கள் அழைக்கின்றனர். இதற்குக் காரணம் இந்தத் தீவு பாம்புகளால் நிறைந்தது என்பதே! பிரேசில் நாட்டின் சாபாலோ மாநிலத்தினுள் வருகிறது இந்தத் தீவு. அதன் கடற்கரையிலிருந்து 33 கிமீ தூரத்தில் உள்ளது. பல்வேறு காலநிலைகளைக் கொண்ட இத்தீவில் பாறைகள் சூழ்ந்த மழைக்காடுகள் காணப்படுகின்றன. மனிதர்கள் வாழத் தகுதியற்ற தீவு இது. காரணம் பாம்புகள்.

மொத்தம் 106 ஏக்கர் கொண்டது. அதாவது 4 லட்சத்து 30 ஆயிரம் சதுர மீட்டர்கள். இதில் ஒரு சதுர மீட்டருக்கு ஒரு பாம்பு என்ற விதத்தில் மொத்தம் 4 லட்சத்து 30 ஆயிரம் பாம்புகள் இந்தத் தீவில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.  அதுமட்டுமல்ல. இந்தத் தீவில் பல்வேறு கொடிய நச்சுத்தன்மை உள்ள பாம்புகள் இருக்கின்றன. என்றாலும் மிகக்கொடிய விஷமுள்ள, அரிதாகக் காணப்படும் ‘கோல்டன் லான்ஸ்ஹெட்’ என்கிற ஒருவகை பாம்பின் தாயகமாக இந்தத் தீவு விளங்குகிறது.

இதன் விஷம் மனிதர்களை உடனடியாகக் கொல்லக்கூடியது என்கின்றனர் ஆய்வாளர்கள். இங்குள்ள பாம்புகள் இந்தத் தீவிற்கு வரும் பறவைகளைத் தங்கள் உணவாகக் கொள்கின்றன.
இந்தப் பாம்புகளால் மனிதர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் இந்தத் தீவிற்கு செல்ல பிரேசில் அரசு தடைவிதித்துள்ளது. அதுமட்டுமல்ல. வேட்டையாடும் மனிதர்களிடம் இருந்து இந்தப் பாம்புகளைக் காப்பாற்றும் பொருட்டும் இந்தத் தடை நீடிக்கிறது.

பேராச்சி கண்ணன்