மாற்றி சுற்றுகிறதா பூமி..?



ஆம். பூமியின் மையப்பகுதியானது பூமியின் மேற்பகுதியுடன் ஒப்பிடும்போது மெதுவாக அல்லது எதிர்த்திசையில் சுழல்கிறது என கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் சீன அறிவியல் அகாடமியின் விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளனர்.

பூமியின் ஆழத்தில் என்ன நடக்கிறது?

விண்வெளி குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் பல வருடங்களாக நடத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நிலவில் குடியேறுவது, செவ்வாய் கிரகத்தில் குடியேறுவது குறித்த விவாதங்கள் எல்லாம் நடக்கின்றன. இதுபோலவே பூமி குறித்தும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. விண்வெளி போலவே இதிலும் அறிவியல் துறை ஓரளவுதான் முன்னேறி இருக்கிறது.

இதுவரை பூமிக்குக் கீழ் 12 கிமீ அளவிற்கு மட்டுமே துளையிட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னும் 4800 கிமீ துளையிட்டால்தான் பூமியின் மையப்பகுதியை அடையமுடியும்.

யெஸ். பூமியின் மையப்பகுதி என்பது, தரையில் இருந்து சுமார் 5000 கிலோ மீட்டர்கள் ஆழத்தில் இருக்கிறது. இந்நிலையில் கடந்த 2010 முதல் பூமியின் மையப்பகுதியின் சுற்று வேகம் குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

5000 கிமீ துளையிட்டு, பூமியின் மையப்பகுதியை அணுகாமல் இந்த முடிவுக்கு எப்படி வந்தார்கள்?

நிலநடுக்கத்தின்போது ஏற்படும் நில அதிர்வு அலைகள் (Seismic Waves) மூலமாக பூமியை துளையிடாமலேயே பூமியின் மையப்பகுதி குறித்து அறிந்துகொள்ள முடியும்.
பூமியின் அமைப்பு என்பது பூமியின் மேற்பரப்பு பகுதி (Crust), மேண்டில் (Mantle) எனப்படும் மேற்பரப்பிற்கும் மையப்பகுதிக்கும் இடைப்பட்ட குளிர்ந்த பாறைகளினால் ஆன திடப்
பகுதி, மையப்பகுதி (Core) என மூன்று வெவ்வேறு அடுக்குகளினால் அமைந்துள்ளது.

அதாவது, பூமியை முட்டையுடன் ஒப்பிட்டால் பூமியின் மேற்பரப்பு பகுதியை முட்டை ஓடாகவும், மேண்டில் பகுதியை வெள்ளைக் கருவாகவும், மையப்பகுதியை மஞ்சள் கருவாகவும் வைத்துக் கொள்ளலாம்.

பூமியின் உள் மையப்பகுதியானது இரும்பு, நிக்கல் ஆகிய உலோகங்களால் உருண்டையான வடிவில் காணப்படுகிறது. அதனுடைய ஆரம் (Radius) சுமார் 1221 கிமீ தொலைவு; இதன் வெப்பநிலை 5400 டிகிரி செல்சியஸ்; இது கிட்டத்தட்ட சூரியனுக்கு நிகரான வெப்பநிலை (5700 டிகிரி).

முந்தைய ஆராய்ச்சிகளில் இந்த மையப்பகுதியானது பூமியின் மற்ற பகுதிகளில் இருந்து தனித்து இருக்கிறது என்றும், ஒருவகையான உலோக திரவங்களால் இது பூமியில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது எனவும் கூறப்பட்டது.  

ஆனால், சமீபத்திய ஆய்வு முடிவுகளின் படி, ஏறக்குறைய 40 ஆண்டுகளில் முதல் முறையாக பூமியின் மேண்டிலை விட சற்று மெதுவாக மையப்பகுதி நகர்வதால், கிரகத்தின் மேற்பரப்புடன் ஒப்பிடும்போது மையப்பகுதி எதிர்த்திசையில் சுழல்வதாகக் கருதப்படுகிறது.

பூமியின் மேற்பரப்பில் மாபெரும் நிலநடுக்கங்கள் ஏற்படும்போது, நில அதிர்ச்சி அலைகளின் ஆற்றல்கள் பூமியின் உள் மையப்பகுதி வரை கடத்தப்பட்டு மீண்டும் மேற்பரப்பிற்கு பாய்ந்து வருகிறது. அப்படி பூமியின் உட்பகுதி வரை சென்று மேற்பரப்பிற்கு திரும்ப வரும் இந்த நில அதிர்ச்சி அலைகளுடைய ஆற்றல்களின் வழித் தடங்களை ஆராய்ந்தே விஞ்ஞானிகள் குழு இந்த முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், ‘எதிர்த்திசையில் பூமியின் மையப்பகுதி சுழல்கிறது’ என்பதை வேறு சில விஞ்ஞானிகள் மறுக்கிறார்கள்.

‘ஒரு காரில் 100 கிமீ வேகத்தில் செல்கிறீர்கள். அருகில் உங்கள் நண்பர் ஒருவர் அவரது காரில் அதே 100 கிமீ வேகத்தில் செல்கிறார். இருவரும் ஒன்றாகப் பயணிப்பது போலத் தோன்றும். இப்போது திடீரென அந்த நண்பர் 20 கிமீ வேகத்தைக் குறைத்து 80 கிமீ வேகத்தில் பயணித்தால், உங்கள் இடத்திலிருந்து பார்க்கும்போது அவர் சாலையில் பின்னோக்கிச் செல்வது போலத் தோன்றும் அல்லவா?

இதேபோலதான் பூமியின் மேற்பரப்பு சுற்று வேகத்துடன் ஒப்பிடும்போது மையப்பகுதியின் வேகம் குறைவதால், அது எதிர்த்திசையில் பயணிப்பது போல கருதப்படுகிறது.
பூமியின் மையப்பகுதி குறித்து இன்னும் நாம் முழுமையாகத் தெரிந்துகொள்ளவில்லை. 

ஆய்வுகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. இந்த ‘Core’ எனப்படும் மையப்பகுதியின் வடிவம் கூட தரவுகளின் மூலம் அனுமானிக்கப்பட்டதுதான். எனவே, எதிர்த்காலத்தில் இக்கருத்து மாறவும் கூடும்’ என்கிறார்கள்.

சரி... எதிர்த்திசையில் பூமி சுற்றுகிறதா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். இதனால் என்ன பாதிப்பு ஏற்படும்?

பூமியின் மையப் பகுதியின் சுற்றுவேகம் குறைவதால் காந்த மண்டலத்தில் மாற்றம் ஏற்படும். முன்பே சொன்னபடி பூமியின் மையப்பகுதி (Core) என்பது இரும்பு மற்றும் நிக்கல் ஆகிய உலோகங்களால் உருவானது. எனவே, அதன் சுற்றுவேகத்தில் பாதிப்பு ஏற்படும்போது, அது பூமியின் மேற்பரப்புகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். 

இந்த மாற்றங்களுக்கு காந்த மண்டலம் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. அண்டத்தில் பூமி தனது பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும்போது, பூமிக்குள் உலோகங்களால் ஆன அதன் மையப்பகுதியும் சுழன்றுகொண்டிருக்கிறது. இந்த இரண்டு இயக்கங்களினால் பூமியைச் சுற்றி ஒரு காந்த சக்தி உருவாகிறது. இதுவே காந்த மண்டலம்.

இந்த காந்த மண்டலத்தின் கதிர்வீச்சுகள் சூரியனிலிருந்து பூமியைக் காக்கும் அரணாகத் திகழ்கின்றன. அதேசமயம் இந்த காந்த மண்டலமானது பூமி தனது பாதையில் சுற்றி வரும் நேர அளவுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது நமது நாளின் நீளங்களை தீர்மானிப்பதிலும் காந்தமண்டலம் பங்கு வகிக்கிறது.

எனவே, இப்பொழுது கண்டறியப்பட்ட முடிவுகளின் படி, ஒருநாளின் காலநேரத்தில் மைக்ரோ நொடி மாற்றத்தை இது ஏற்படுத்தக்கூடும். மற்றபடி, நாம் உணரும்படி பெரிய அளவு
பாதிப்பை ஏற்படுத்தாது. இதை மட்டுமே இப்பொழுது சொல்ல முடியும். இதையும் தாண்டி வேறு மாற்றங்கள் நிகழுமா என்பது தொடர் ஆராய்ச்சிகளின் முடிவுகளை வைத்தே சொல்ல முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.பீதியை கிளப்பாதீங்க பா!

ஜான்சி