சிறுகதை - துபாய் ரோஜா



ஓர் இளம் அராபியப் பெண்ணிடம் இந்த அளவுக்கு மனசு விட்டுப் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது உண்மையிலேயே ஆச்சர்யம்தான். அதுவும் ஆண் என்றால் விலக்கி வைத்துப் பார்க்கும் துபாயில்!அந்தப் பெண்ணின் வயது 20க்குள்தான் இருக்கும். அராபியப் பெண்களுக்கே உரித்தான சற்று நீளமான முகம், கடவுள் தனிக்கவனம் செலுத்தி செய்து வைத்
ததுபோல் பிரத்தியேக அழகுடன்! உடல், தலை எல்லாம் கறுப்பு உடை உடுத்தியிருந்ததால் மேகம் மறைத்த நிலவாய் மிளிர்ந்தாள்.

Interior Decorationக்காக நான் சென்றபோது 40 வயது மதிக்கத்தக்க பெண்மணியும், மேற்சொன்ன 20 வயது இளம் பெண்ணும் முகத்தை மூடாத கறுப்பு உடையில் (பொதுவாக அரபு நாட்டில் எல்லா பெண்களும் தலை முதல் பாதம் வரையில் கறுப்பு நிற உடை அணிவது நியதி. 
வெளியே செல்லும்போது கண்கள் மட்டும் தெரியும் வகையில் உடை தைக்கப் பட்டிருக்கும். வீட்டுக்குள் அப்படி இல்லை. ஆனால், யாராவது அன்னிய ஆடவர் வந்தால், சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், ‘புர்கா’ என்று சொல்லப்படும் கறுப்பு உடையில்தான் வரவேற்பார்கள்) வரவேற்றபோது வீட்டுத் தலைவரைத் தேடினேன்.

அவர் அங்கு இல்லை!இங்கு வீட்டைப் பற்றிக் கொஞ்சம் சொல்லியாக வேண்டும்.ஒரு நூறு வருடங்களுக்கு முன்பெல்லாம் வெறும் மண்ணையும், கடினமில்லாத பாறைக் கற்களையும், ஈச்சமர ஓலையையும் வைத்துக் கட்டப்பட்ட சிறு சிறு குடிசைகள்தான் இங்கு பிரதானம். மாடி வீடு என்பதெல்லாம் பெரும் கனவு. அப்படியே வெகு சிலர் மாடி வீடு கட்டியிருந்தாலும் அவை அதிகப்படியாக ஒற்றை மாடி தளத்துடன் மட்டுமே சாத்தியமாக இருந்தன. இரண்டாவது மாடி என்பது சாத்தியமே இல்லாத ஒன்று.

கட்டுமானத்திற்குக் கம்பியோ, சிமிண்ட், செங்கல்லோ கிடையாது. உயரமான கட்டடம் கட்டுவதற்குத் தேவையான அடிப்படை ஸ்ட்ரக்ச்சர் என்பது புரியாத ஒன்று. அப்படியே புரிந்தாலும் பொருட்கள் கிடைக்காத நிலைமை வேறு.அவர்களின் பயணத்திற்கு ஒட்டகமும், கழுதையும்! வாகனங்கள் பற்றிப் பெரிதாக அறியப்படாத காலம். 

மின்சாரம் கிடையாது. அதனால் இரவில் வெளிச்சம் கிடையாது. அதிகாலைத் தொழுகைக்கு எழுந்திருக்க வேண்டுமென்றால் இரவு 8 மணிக்குள் உறங்கும் பழக்கம் அவசியம். எனவே, மின்சாரம் பற்றிய எதிர்பார்ப்போ அல்லது புரிதலோ இல்லாத காலம்.

அந்த அரபு நாடுகளில் இருப்பவை மழையே காணாத வறண்ட பாலைவனம். வருடத்தில் 8 மாதங்கள் கடும் வெயிலும், நான்கு மாதங்கள் கடுங் குளிரும் கொண்ட பிரதேசம்.  
ஜூன், ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் உச்சபட்ச வெயில் மாதங்கள். கால், கை, முதுகு ஆகியவை பாளம் பாளமாக வெடித்து அகோரமாகக் காட்சி
யளிக்க வைக்கும்.

அரபு நாடுகளில் மட்டும் எப்படி இயற்கையாக பேரீச்சம் பழம் அத்தனை குவாலிட்டியுடன் கிடைக்கிறது? காரணம் குளிரும், வெயிலும்! மனிதர்கள்? வெம்பிப் போய்க் கிடப்பார்கள். சரி, வெயில்தான் இப்படி வறுத்து எடுக்கிறதே என்று பார்த்தால், அடுத்து குளிர் தன் கோரைப் பற்களோடு தலை காட்டும். டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஸ்வெட்டர் இல்லாமல் வெளியே நடமாட முடியாது. வசந்த காலம்? ம்ஹூம், அதெல்லாம் நமக்குத்தான். அவர்களுக்கு ஒன்லி கசந்த காலம்!

பாலைவன நாட்டில் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை, பல சமயம் நான்கைந்து வருடத்திற்கு ஒரு முறை என்று லேசான சாரல் கண்டவர்களுக்கு, நனையும் அளவிலான மழை என்பது தண்ணீர் சொர்க்கம்!கான்கிரீட் கட்டடம் இவர்களுக்குக் கனவு. மூன்று நான்கு மாடியையே முன்னூறு மாடி போல அதிசயமாகப் பார்த்தவர்கள் இவர்கள். இந்தியாவின் இயற்கை வளத்தைக் கண்டு பொறாமையோடு மலைத்தவர்கள் இவர்கள். அதோடு இந்தியர்களைப் பார்த்தும்!

பாலைவனக் கொள்ளை என்று கேள்விப் பட்டிருக்கிறோமே அதன் சூத்திரதாரிகள் இந்த மண்ணின் மைந்தர்கள். காரணம் வயிறு. பசியை உண்டாக்கும் ஒரு சாண் உடம்பின் பகுதி எதை வேண்டுமானாலும் செய்யச் சொல்லும். பசி இல்லாத மனிதர்களுக்குத்தான் பாவமும் புண்ணியமும்!காலம் எப்போதும் ஒரே மாதிரியாகவா இருக்கும்? மாற்றத்தைக் கொண்டுவந்து சேர்த்தது அவர்களுக்கான காலம். பெட்ரோல் வளம் அரபு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஐம்பதுகளுக்குப் பின்பு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

பெட்ரோல் பணமும், அதனோடு வியாபார குணமும் சேர்ந்து பாலைவனம், சோலையாக மாற ஆரம்பித்தது. அந்தப் பாலைவன நிலத்தில் விழுந்த வியர்வையின் பெரும் பகுதி இந்திய மக்களின் உடம்பிலிருந்து வெளிவந்தது. அந்த வியர்வையைக் காசாக்கி அனுப்பிய பணம் இங்குள்ளவர்களுக்கும் தேவைப்பட்டது. ம்யூச்சுவல்!மளமளவென உயரமான கட்டடங்கள் முளைக்க ஆரம்பித்தன. பாலைவனத்தில் எப்படி உயரமான கட்டடங்களைக் கட்ட முடியும்?

அதற்குத்தான் இருக்கிறார்களே... ஐரோப்பிய, அமெரிக்க ஆர்க்கிடெக்ட்கள். வந்தார்கள், அளந்தார்கள், ஸ்கெட்ச் போட்டார்கள், மணலில் சாய்ந்து விடாத கட்டடங்கள் கட்ட ஐடியா கொடுத்தார்கள், திர்ஹாமையும், ரியாலையும், தினாரையும் அள்ளிக் கொண்டு சென்றார்கள்.நல்ல சாலை வசதி, அதில் செயற்கையாக உருவாக்கப்பட்ட மரங்களும், புல்வெளிகளும் பாலைவனம் என்பதையே மாற்றிக் காட்டின.

வெறும் ஈச்ச மரங்களும், முள்வேலி மரங்களும் மட்டுமே இருந்த பாலைவன நாட்டில் இப்போது குல்மோஹர், சரக்கொன்றை முதற்கொண்டு நிறைய பூ மரங்களும், சவுக்கு, கோனோகார்ப்பஸ் என்று காற்றைத் தடுக்கும் மரங்களும், பெட்டூனியா, செம்பருத்தி, காஸ்மோஸ் போன்ற பூச்செடிகள் வகைகளும்,சப்போட்டா, ஆரஞ்ச், மாதுளம், மா மரம் போன்ற பழ மரங்களும் பாலைவன சீதோஷ்ண நிலையை அனுசரித்து வளரத் தொடங்கின.

சவூதி அரேபியா பாலைவனத்தில் கோதுமை பயிர் செய்யப்பட்டு, தங்கள் நாட்டில் வசிக்கும் மக்களின் உணவுத் தேவைக்குப் போக, மீதத்தை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செயக்கூடிய அளவிற்கு வளர்ந்திருக்கிறது, தற்போது உண்டாக்கப்படும் செயற்கை மழை உட்பட!

நான் சென்ற வீடும் மிகப் பெரியது. வீடு மட்டும் 12 கிரவுண்டிலும், அதனைச் சுற்றித் தோட்டம் ஒரு 60 கிரவுண்டிலும் உருவாக்கப் பட்டிருந்தது. சுற்றுச் சுவரை நடந்து கடக்க அரை மணி நேரமாகும். அவர்கள் வீட்டிற்குள் ஒரு பகுதியில் புதிய ஐடியாவில் இன்டீரியர் டெக்கரேசன் செய்ய வேண்டுமென அழைத்திருந்தார்கள்.வீட்டிற்குள் கொஞ்சம் அராபிய, நிறைய மேற்கத்திய கலாசாரம் தென்பட்டது. நான் பார்த்தபோது எனக்குள் ஏதோ ஒரு வெறுமை தென்பட்டது.

யோசித்தபோது கிராமத்துக் கூரை வீட்டுக் கலாசாரம் நன்றாகப் பொருந்துவதுபோல் பட்டது. ஒரே மாதிரியான கலர் பேட்டர்னில் என் டிசைனால் ஒரு மாற்றம். எல்லா இடங்களிலும் கடைப்பிடிக்கப் பட்டிருந்த நேர்த்தி சற்று அயர்ச்சியைச் கொடுத்தது போலிருந்தது எனக்கு. விளக்கினேன். விழி விரித்துக் கேட்டார்கள். சில சாம்பிள்களைப் பார்த்து ரசித்தார்கள்.
அவர்களது பேலஸ் போன்ற பிரம்மாண்டமான வீட்டிற்குள் நான் கொடுத்த கூரை கான்செப்ட் அவர்களுக்குப் புது மாதிரியாய் தோன்றவே நான் காண்பித்த மாதிரிப் படங்களைப் பார்த்துவிட்டு ‘ஓக்கே’ என்றனர்.

அடுத்த வாரம் அங்கு செல்ல வேண்டிய அப்பாயின்ட்மென்ட். அந்த இளம்பெண்ணைப் பார்த்தபோது புன்னகையோடு வரவேற்றாள். வேலைக்காரர்கள் 10 பேருக்கு மேல் இருக்கும். அனைவரும் சமையல் வேலை, சுத்தம் செய்யும் வேலை, கார்களைக் கழுவித் துடைக்கும் வேலை, கார்டனுக்குத் தண்ணீர் ஊற்றும் வேலை என்றிருந்தனர்.என்னிடம் பேச அப்போது அவள் மட்டும் இருந்தாள். அந்த 40 வயதுப் பெண் இல்லை. கண்களால் சுற்றிப் பார்த்துவிட்டுக் கேட்டேன், “உங்கள் அம்மா வரவில்லையா?”

தணிந்த குரலில் சொன்னாள், “அம்மா இங்கு இல்லை...”எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. யார் டிசைன் பற்றி முடிவெடுப்பது? “சரி, அப்போ டிசைனை உங்களிடம் மட்டும் காண்பித்தால் போதுமா?’’‘‘போதும்...’’ பட்டென்று சொன்ன பதில் எனக்கு சற்று தெம்பைக் கொடுத்தது. ஒப்புதல் வாங்குவது சற்று எளிது.‘‘உங்கள் அம்மா எப்போ வருவார்கள்?”என்னை சற்று சரிந்த ஓரக் கண்ணால் பார்த்தபடி, “என் அம்மா இங்கு வரமாட்டார்கள்...” என்றாள்.

அந்தப் பெண் சொன்னது எனக்கு சரியாக விளங்கவில்லை. அம்மா இன்று வரமாட்டார்களா அல்லது இங்கு வரமாட்டார்களா? “அப்போ அன்னிக்கு உங்கள் கூட இருந்தது..?’’என்னைப் பார்ப்பதைத் தவிர்த்து, தரையைப் பார்த்துக்கொண்டு நீண்ட நேரம் அமைதி காத்தாள்.

 பின்பு மெலிதான குரலில் சொன்னாள். “என் கணவரின் முதல் தாரம்!”நெருப்புக் கங்கை விழுங்கியதுபோல் என் தொண்டைக் குழி தடுமாறியது. அப்பெண்ணிடம் அடுத்து என்ன பேச?என் மௌனத்தைக் கண்டு சங்கடப் பட்டவளாக நெளிந்தாள்.

பலப் பல எண்ணங்களால் என் மனத் திடுக்கிடலை முகம் காட்ட அவள், “கூரை அழகா அல்லது காரை அழகா?” என்று கேட்டாள்.அவளை ஏறிட்டுப் பார்த்தேன். புரியவில்லை என்று தலையை அசைத்தேன்.“கூரைக் கட்டடம் அழகா அல்லது காரைக் கட்டடம் அழகா?”
என்னால் இயல்பாகப் பதில் சொல்ல முடியாவிட்டாலும், “அதது இடத்தைப் பொருத்தது. எனக்குக் கூரை பிடிக்கும்...” என்றேன்.
“ஏன்?”

“எனது சிறு வயதில் கூரை வீட்டில் இருந்தேன். அப்போதிருந்த சந்தோஷம் இப்போதிருக்கும் காரை வீட்டில் கிடைக்கவில்லை...” “அப்போ... காரை வீட்டில் பிறந்த குழந்தைக்கு?” ஈட்டி போலத் தாக்கிய கேள்வி. மௌனமானேன்.  “உங்க கான்செப்ட்டான கூரை, காரை வீட்டுக்குள் எப்படிப் பொருந்தும்?” நான் செய்வது எல்லோருக்கும் பிடிக்கும் அல்லது பிடித்தாக வேண்டும் என்றிருந்த என் திமிர் செயலிழந்தது. பலரிடம் சுவாரஸ்யமாக விவரித்து சமாளித்திருக்கிறேன். புரியாவிட்டாலும் சிலர் ஒப்புக் கொண்டு அவர்களுக்குத் தெரிந்த அல்லது தேவையான மாறுதல்களைக் கூறியிருக்கிறார்கள். ஆனால், இவளது கேள்வி?

“நான் காட்டிய மாடல் படம் உங்களுக்குப் பிடித்திருந்ததே?”
“பிடிக்கலைன்னு சொல்லலை. எப்படிப் பொருந்தும்னு கேட்கிறேன்!”
சத்தியமாக என்னிடம் பதிலில்லை!  என்னுடைய மனக் குழப்பத்தை ஓரளவு உணர்ந்து கொண்டவளாக அடுத்த கேள்வியைக் கேட்டாள். 

“நீங்க கேட்க நினைச்சீங்களே... நான் எப்படி இரண்டாம் தாரம்னு..?”“ஐயோ... அது உங்க பர்சனல்...”“இருக்கட்டும், என்னோட மன நிலைக்கு காரைக்குள் கூரை போல பொருந்தும்!”என்ன ஒரு பதில்!இந்திய வாழ்க்கை முறையில் இதுபோல் வயது வித்தியாசத்தோடு ஒரே வீட்டில் இரண்டு மனைவிகள் இருப்பது சாதாரண நடைமுறையில் இல்லை.

அவளது மண வாழ்க்கையையும், எனது டிசைனையும் அவள் பொருத்திப் பேசியதைக் கேட்டதும் எனக்கு வியப்பாகவும் அதே சமயம் ஒரு ஓரத்தில் பரிதாபமாகவும் இருந்தது.
விசேஷங்களுக்குப் போகும்போது மகள் போன்ற வயது உறுத்தாதா? அகத்திணை வாழ்க்கை எப்படி முழுமையானதாக இருக்கும்?வயிற்றுப் பசிக்கு வசதி இருக்கிறது. 

உடல் பசிக்கு..? காத்திருத்தலும், வெறுமையும்தான் கொடுப்பினையா? ஏற்கெனவே அராபிய ஆண்கள் இரண்டு விசயத்தில் மிகுந்த நாட்டமுடையவர்கள்; ஒன்று கார். புதுப்புது மாடல் கார்கள் எங்கு உற்பத்தியானாலும் உடனே வாங்கிவிட முனைபவர்கள்.

இரண்டு - பெண்கள்!வீட்டுக்குள் குடும்ப வாழ்க்கை ஒருபுறம் இருக்கட்டும், அவள் வயது தோழிகள் (இருந்தால்..!) வாழ்க்கை பற்றிய கனவோடு உல்லாசமாக இருக்கும்போது, கிண்டல் கேலி என எவ்விதத் தளையுமில்லாமல் விட்டு விடுதலையாகிப் பறவையாய் பறக்கும்போது, இவள் மட்டும் பந்தம் என்ற விலங்கோடு, குடும்பம் என்ற சுமையோடு வளைய வருவதென்பது...
தைரியமாக அவளிடம் கேட்டே விட்டேன். “வாழ்க்கை வேறு, வார்த்தை வேறு இல்லையா?” என்னை நிமிர்ந்து பார்த்தாள். ஒன்றும் சொல்லாமல் டிசைனைப் பார்த்தாள். பின்பு என்னை ஆழமாகப் பார்த்தாள். “வாழ்க்கைன்னா என்ன?”‘‘...’’“பிறப்பிலிருந்து இறப்பு வரை வாழ்க்கை. சரிதானே?” கடினமான விசயத்திற்கு திருக்குறள் போல எளிதான கேள்வியால் கேட்டாள்.
“சரிதான்...”

“நீங்கள் சென்னையில் பிறந்தது சாபமா அல்லது வரமா?”
என்னிடம் இதற்கு பதில் இல்லை.
“என் வாழ்க்கை துபாயில் என்று நானா தெரிவு செய்தேன்?”

என் நெஞ்சுக் கூட்டுக்குள் ஏதோ நொறுங்கியது.
“உங்கள் வாழ்க்கையில் உங்களால் கட்டுப்படுத்த முடிந்தது எதெது?”
“வசதி, நேர்மை, நட்பு...”“பெற்றோர்?”

கூர்மையான வார்த்தையால் தாக்கப்பட்டு நிமிர்ந்து பார்த்தேன்.
“சரி, விசயத்துக்கு வருவோம். என் திருமணம் என்னைக் கேட்டு நடக்கவில்லை. இவ்வளவு வயசு வித்தியாசம் ஓர் உறுத்தல்தான். எனக்கும் கனவுகள் இருந்தன. என் மன வானில் நானும் கனவுகளோடு பறந்திருக்கிறேன்... சரி, உங்கள் நாட்டில் வயசு வித்தியாசம் எப்படி?”“4, 5, 6 அதிகபட்சம் 10. இப்ப நெறைய காதல் திருமணம்.

அதனால வயது வித்தியாசம் மிகக் குறைவு...” “எல்லோரும் சந்தோஷமா இருக்காங்களா?”அவளுடைய கேள்வி படாரென என்னைத் தாக்கிற்று. என்ன பதில் சொல்ல? காதல் திருமணங்கள் அதிகரித்திருப்பதும், அதே காதல் திருமணங்களால் அதிகரித்திருக்கும் விவாகரத்துகளும்...“சந்தோஷங்கிறது வயசில் மட்டுமில்லை, ஒருத்தருக்கொருத்தர் அனுசரிக்கிறதுலயும் இருக்கு...” உடைந்த குரலில் சொன்னேன்.“அனுசரிக்க வயசு ஒரு தடையா?”

 “...”“அவர் என்னைக் கலக்காம எதுவும் செய்யிறதில்லை. நான் சந்தோஷமா இருக்கேன்!”அவள் வழியிலேயே கேட்டேன், “சந்தோஷம்னா என்ன?”என் கேள்வி அவளைத் தொட்டிருக்க வேண்டும். யோசித்தாள். “நமக்குத் தேவையான உணவு, இருக்க வசதியான இடம், ‘நான்’ என்ற ஈகோவை திருப்திப் படுத்தும் அங்கீகாரம்... எல்லாம் எனக்குக் கிடைச்சிருக்கு. அதனால நான் சந்தோஷமா இருக்கேன்...”“அப்போ... மூத்த தாரம் சந்தோஷமா இருக்காங்களா?”

திடுக்கிடலுடன் நிமிர்ந்து பார்த்தாள். அந்த வீட்டில் இவளுக்கு அங்கீகாரம் கிடைத்தால், மூத்த தாரத்துக்கு அங்கீகாரம் குறைவு என்று பொருள். “ஏற்கெனவே அங்கீகாரம் உள்ளவங்கதானே? அவங்களும் சந்தோஷமாகத்தான் இருக்க வேண்டும்...”எதைப்பற்றிப் பேசியும் விவாதத்தில் அவளை ஜெயிக்க முடியவில்லை. வாழ்க்கையைத் தெளிவான பார்வையோடு அணுகுபவளை எப்படி விவாதத்தில் ஜெயிக்க?

அதன்பின் நிறையப் பேசினோம். அந்த நாடு பற்றி, அந்த நாட்டின் தொழில் வளம் பற்றி, இந்தியா பற்றி, இந்திய நாட்டின் தற்போதைய நிலைமை பற்றி, அரபு நாடுகளின் மேல் இந்தியர்களுக்கிருந்த மயக்கம் பற்றி, அந்த மயக்கம் வேகமாக விலகுவது பற்றி, உலக மக்கள் வாழ்க்கை பற்றி, இன்டீரியர் தொழிலின் எதிர்காலம் பற்றி, அவளின் தொழில் முனைவு விருப்பம் பற்றி, இந்தியாவில் தொழில் தொடங்கும் அவளது விருப்பம் பற்றி, தோழிகள் பற்றி...என் வாழ்க்கையில் மறக்க முடியாத விவாதமாகவும் அனுபவமாகவும் இருந்தது.

முடிவில் இரண்டாம் தாரம், மகள் வயது என்பன போன்ற என் எண்ணம் தலைகீழாக மாறி அவளுடைய வாழ்க்கை நியதி சரியானதே என்ற முடிவுக்கு வந்தேன்.காண்ட்ராக்ட் ஒப்புதல் பெற்றவுடன் வணக்கம் சொல்லிக் கிளம்பினேன்.அப்போது தழுதழுத்த குரலில் சொன்னாள், “என்னதான் விவாதத்தில் நான் ஜெயித்தாலும், வயது ஒத்த இணையோடு ஜோடியாகப் போக முடியாததில் எனக்கு எப்போதுமே வருத்தம் உண்டு...”

 -  கஸாலி