பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கான ஜெர்சி



தயாரிப்புக் குழுவில் இருக்கும் ஒரே தமிழர் இவர்தான்!

உலகளவில் இன்று அதிகம் பேசப்படும் ஒரு கலைத் தொழிலாக டிசைனிங் துறை விளங்குகிறது. இந்தியாவிலும் பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் இந்தத் தொழிலில் போட்டிபோட்டுக் கொண்டு முண்டி அடித்துக் கொண்டிருக்கின்றன. 
ஆனால், தில்லியில் பத்துக்குப் பத்து அடி கொண்ட இரு அறைகளில் இருந்து கொண்டு ஒரு 8 பேர் கொண்ட டிசைனிங் குழு இந்தியாவை மட்டுமல்லாமல், வெளிநாடுகளையே மூக்கில் விரலை வைத்துப் பார்க்கும் அளவுக்கு அண்மைக் காலமாக சாதித்து வருகிறது. உதாரணம் அடுத்தவாரம் பாரிசில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்களுக்கான ஜெர்சியை இந்தக் குட்டிக் குழு தயாரித்திருப்பது.

இந்தக் குழுவில் ஒரு தமிழரும் இருப்பது தமிழகத்துக்கு பெருமை சேர்க்கிறது. யார் அந்த சாதனையாளர்கள்?

ஆகிப் வானிதான் (Aaquib wani) அந்தச் சாதனைக்கு சொந்தக்காரர். ‘ஆகிப் வானி டிசைன்’ என்ற அந்தக் குட்டிக் கம்பெனிதான் தொடர்ச்சியாக இந்தியாவின் பல பிரபல நிகழ்வுகளுக்கு டிசைனர்களாக அண்மைக் காலமாக கோலோச்சி வருகிறார்கள். உடை மட்டுமல்லாமல் பல ஈவென்டுகளுக்கு தேவையான விளம்பரங்கள், கையேடுகள், இடங்களை அலங்காரம் செய்வது வரை பல டிசைன் வேலைகளை இந்த குட்டியூண்டு நிறுவனம் செய்து வருகிறது.

ஆகிப், காஷ்மீரைச் சேர்ந்தவர். அவரது தந்தை உலகளவில் பிரபலமாக இருக்கும் காஷ்மீர் கம்பளங்களை தயாரிப்பவர். ஆகிப்தான் இந்த நிறுவனத்தை சில ஆண்டுகளுக்கு முன் தில்லியில் ஆரம்பித்தார். முதன்முதலாக அவர்களுக்கு வந்த அசைன்மென்ட் ‘ரியல் காஷ்மீர் ஃபுட்பால் க்ளப்’ எனும் வெளியே பலருக்கும் தெரியாத ஒரு விளையாட்டுக் குழுவுக்கு ஜெர்சி தயாரித்தது.
பிறகு அண்மையில் முடிந்த இந்திய ஐபிஎல்-லுக்கு இராஜஸ்தான் ராயல் கிரிக்கெட் டீமுக்கு ஜெர்சி தயாரித்தது. கடைசியில் கடந்த மாதம் முடிவடைந்த அமெரிக்க டி டுவென்டி கப்புக்கு இந்திய டீமுக்கு ஜெர்சி தயாரித்தது.

ஆகிப் தயாரித்துக் கொடுத்ததால்தான் இந்திய டீம் கப்பை வென்றது என்றுகூட ராசியாக பேசப்பட்டது. இது எல்லாம் சேர்த்து சில தினங்களில் நடக்கவிருக்கும் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்களுக்கு ஜெர்சியை தயாரிக்கும் அசைன்மென்டும் இந்த ஆகிப் வானியின் டீமுக்கே கிடைத்திருக்கிறது. ஜெர்சியை தயாரிப்பதிலும் பல கட்டங்கள் இருப்பதாகச் சொல்லும் வானி, இராஜஸ்தான் ராயலுக்காக தயாரித்த ஜெர்சியைப் பற்றி பத்திரிகைகளில் பகிர்ந்துகொண்ட விஷயம் சுவாரசியமானது.

‘‘ஒரு வீரர் மைதானத்தில் பல மணிநேரம் இருப்பதால் அந்த ஜெர்சி என்பது வீரர்களுக்கு கம்ஃபர்ட்டாக இருக்கவேண்டும் என்பது முதல் நோக்கம். அதோடு இந்திய கலாசாரத்தின் தன்மைகளையும் அது பேசவேண்டும். 

அப்போதுதான் அந்த பனியன்கள் வீரர்களுக்கு ஓர் உற்சாகத்தையும் வீரத்தையும் வழங்கும். இதனால்தான் இராஜஸ்தான் ராயல் பனியனில் இந்திய தேசிய விலங்கான புலியின் உடம்பில் இருக்கும் வரிகளையும் கொண்டு வந்தோம். இது  வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் நிச்சயமாக ஒரு உணர்வை கட்டாயம் கடத்தும்...’’ என்றார்.

ஜெர்சியில் இவ்வளவு இருக்கிறதா என்ற ஆச்சர்யத்துக்கு மகுடம் சேர்க்கும் விதமாக இன்னொரு வாவ் தகவல்- இந்த பெருமைமிகு குழுவில் இருக்கும் ஒரே தமிழர் நிகில் ஷங்கர்
என்பது.

இந்த நிகில் ஷங்கர், ஆங்கில ‘இந்து’ நாளிதழ் குழுமத்தில் இருந்துவெளிவரம் இருவார இதழான ‘ஃப்ரன்ட்லைன்’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான விஜயசங்கர் ராமச்சந்திரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ‘‘நான் படிச்சது எல்லாம் சென்னையில்தான்...’’ புன்னகையுடன் பேச ஆரம்பித்தார் நிகில் ஷங்கர்.‘‘எம்.ஆர்.சி நகரில் இருக்கும் செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளியில்தான் ப்ளஸ் டூ முடிச்சேன். பிறகு என்ன படிக்கப்போறாய் என்று ஆசிரியர்களும் பெற்றோர்களும் நச்சரிக்க ஆரம்பித்தார்கள்.

ஆனால், நான் பத்தாவது படிக்கும்போதில் இருந்தே கம்ப்யூட்டரில் டிசைனிங் தொடர்பான விஷயங்களை ரகசியமாகக் கற்றுக்கொண்டு வந்தேன். ஆன்லைனில்கூட பல டிசைனிங் போட்டிகளில் கலந்துகொண்டேன். எனவே ப்ளஸ் டூ முடித்ததும் மும்பையில் இருக்கும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைனிங்கில்தான் படிக்க  ஆசைப்பட்டேன். ஆனால், அதில் சீட் கிடைப்பது குதிரைக்கொம்பு என்று கேள்விப்பட்டேன்.

அதற்கு ஈடாக தில்லியில் இருக்கும் இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் டிசைனிங்கில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. இதுவும் கடினமான நுழைவுத் தேர்வுக்குப் பின்னர்தான் கிடைத்தது...’’ என்று சொல்லும் நிகில் 2022ல் ஆகிப் வானியின் நிறுவனத்தில் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

‘‘ஆகிப் வானியின் நிறுவனத்தில் வேலை கிடைப்பதும் கடினம்தான். 150 பேர் போட்டியிட்டதில் நானும் இன்னும் சிலரும்தான் தேர்ந்தெடுக்கப்பட்டோம். இந்த ஆண்டு முதல் நிரந்தரப் பணியாளாகவும் ப்ரொமோஷன் கிடைத்திருக்கிறது. அடுத்து லண்டன் கிங்ஸ் காலேஜில் இருக்கும் மிகப் பிரபலமான டிசைனிங் காலேஜில் படிக்க வேண்டும் என்பது நோக்கம், கனவு.

ஆனால், பெரிய டிசைனர்கள் எல்லாம் இந்த காலேஜில் படிக்க போட்டி போட்டுக்கொண்டு ஆசைப்படுவார்கள் என்பதால் இன்னும் அனுபவத்துக்குப் பிறகு இதில் சேரலாம் என்று நண்பர்கள் அட்வைஸ் செய்கிறார்கள்.

 இப்போதைக்கு ஆகிப் வானியின், அவரது நிறுவனத்தின் பெயரைக் காப்பது எனது பொறுப்பு. உலகளவில் இந்த நிறுவனத்தின் பெயரையும் உயர்த்தவேண்டும். எதிர்காலத்தில் தமிழகத்துக்காக தனியாக சாதிக்கவேண்டும்...’’ கனவுகள் கண்களில் விரிய சொல்கிறார் நிகில்.

டி.ரஞ்சித்