வெள்ளிப் பனிமலையின் மீதுலாவி...-5
பாரா கிளைடிங் முடித்து ஒரு மணி நேரத்தில் திரும்ப வேண்டியவர்கள் மிக மிகத் தாமதமாகத் திரும்பியபோது என் மகளின் முகம் வெளிறிப் போயிருந்தது.
‘நாங்கள் பெண்கள் இருவரும் ஆறாயிரம் கட்டணத் தொகை திரும்பக் கிடைக்காது’ என்று அவர்கள் சொன்னபோதும், ‘பரவாயில்லை, இந்த பாரா கிளைடிங் வேண்டாம் என்று முடிவு செய்தோம்’ என்றாள்.
‘ஏன்’ என்றேன்.மேற்கொண்டு தொடரும் முன்பாக பாரா கிளைடிங் சாகசம் என்பது என்ன என்று சிறு குறிப்பு வரைந்துவிடலாம்.காற்றில் பறக்கும் அந்த சாகசத்தில் முறையான பயிற்சி இருந்தால் நாமே தனியாக பறந்து விட்டு வரலாம். சொந்தமாக கிளைடர் வாங்கி வைத்துக் கொண்டு அதை ஒரு பொழுதுபோக்காகவே வைத்திருப்போர் உலகம் முழுதும் உண்டு. அதன் விலை இந்திய மதிப்பில் ரூபாய் பத்தாயிரத்தில் துவங்கி பத்து லட்சம் வரை தரத்தின் அடிப்படையில் உண்டு. முறையாகப் பயிற்சி அளிக்கவும் நிறைய அமைப்புகள் உள்ளன. ஆனால், இதுபோன்ற சுற்றுலாத் தலங்களில் ஆர்வமாகப் பறக்க விரும்புபவர்கள் தனியாகப் பறக்க வாய்ப்பில்லை. இயலாது. கூடாது.
நம்முடன் கூடவே ஒரு பைலட்டும் இருப்பார். அவர் பின்னேயும், நாம் முன்னேயுமாய் பாதுகாப்பு பெல்ட்டுகளை அணிந்துகொள்ள வேண்டும். மேலே வளைவாய் இருக்கும் வடிவமைப்பின் காரணமாக காற்றை நிரப்பிக்கொள்ளும் கிளைடர் எனப்படும் பலூனுடன் தொடர்புக் கயிறுகள் இணைக்கப்பட்டிருக்கும்.
பொம்மலாட்டத்தில் கயிறுகள் மூலம் பொம்மைகளை இயக்குவதைப் போல பைலட் குறிப்பிட்ட கயிற்றை இழுப்பதன் மூலம் குறிப்பிட்ட திசையில் திரும்புவதை கன்ட்ரோல் செய்வார். கீழே இறங்க மற்றொரு கயிறு. ஓர் உயரமான இடத்தில் இருந்து கொஞ்சம் சரிவாக இருக்கும் பாதையில் பைலட்டின் குறிப்புகளின்படி அவரோடு இணையாக கொஞ்ச தூரம் ஓடினாலே போதும். கயிறுகளால் இணைக்கப்பட்ட கிளைடரின் சின்னச் சின்ன துவாரங்களில் காற்று நிரம்பி அது வளைவான பெரிய பலூனாக மாறுவதோடு உயரத்தில் பறக்கத் துவங்கும்.
இந்த சாகச விளையாட்டை நடத்தும் பல நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுடன் அந்த உயரமான இடத்திற்கு வந்து அருகருகாக அமைந்துள்ள ஓடுபாதையைப் பயன்படுத்துவார்கள்.
என் மகளுக்கு முன்பாக மாப்பிள்ளை சொன்ன குறிப்புகளின் படி ஓடி தன் பைலட்டுடன் பறக்கத் துவங்கிவிட்டார். அடுத்து வேறு இரண்டு ஆண்கள். அதன்பிறகு என் மகள்.
மகள் அதற்கான பாதுகாப்பு உடை எல்லாம் அணிந்து தயாராகி இருந்தபோது... பைலட்டுடன் ஓடிய ஓர் இளைஞர் சரியான புரிதலின்றி இணைந்து ஓடாததால் கிளைடர் சரியாக விரியவில்லை. அதற்குள் பள்ளத்தாக்கின் விளிம்பும் சமீபிக்க... கீழே இருந்த சில பாறைகளில் அந்த இளைஞர் மற்றும் பைலட் இருவருமே மோதி உருண்டு இருவருக்கும் சின்னச் சின்னதாக ரத்தக் காயம் ஏற்பட... நிறுவனத்தைச் சேர்ந்த நபர்கள் ஓடிச்சென்று...நல்ல வேளையாக இருவரையும் டேக் ஆஃப்புக்கு முன்பாகவே பிடித்து நிறுத்தி முதலுதவிக்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள்.
இந்த விபத்தைக் கண் முன்னால் பார்த்ததும் இரண்டு பெண்களுக்கும் பயம் வந்துவிட்டது. ஆனால், நிறுவன ஊழியர்கள் ‘இது எப்போதாவது நிகழ்வது, அந்த இளைஞர் சரியாக ஒத்துழைக்கவில்லை, தைரியமாக நீங்கள் போங்கள்’ என்று பயத்தைப் போக்க முயன்றிருக்கிறார்கள். ‘வேண்டாம் என்று இப்போது சொன்னால் நீங்கள் கட்டிய இரண்டு பேருக்குமான ஆறாயிரம் தொகையும் திரும்பக் கிடைக்காது’ என்றிருக்கிறார்கள்.
இவர்கள் பறப்பதா வேண்டாமா என்று இரண்டு மனதுடன் தயங்கிக்கொண்டிருந்தபோதே அடுத்ததாகப் பறக்க ஓடிய இன்னொரு இளைஞரும் அதேபோல தடுமாறி விழுந்து காயமாகி... அதற்குள் விளிம்பு வந்துவிட... கிளைடரும் விரிந்து விட... அந்தக் காயத்துடனே பறந்துவிட்டதைப் பார்த்ததும் முடிவே எடுத்துவிட்டார்கள் அந்த அனுபவமே வேண்டாம் என்று. என் மகள் இதையெல்லாம் படபடப்புடன் சொல்லி முடித்ததும் எங்களுக்கும் அந்தப் பதற்றம் தொற்றியது. ‘இத்தனை ரிஸ்க் எடுத்து இதுபோன்ற சாகச விளையாட்டுகளில் ஈடுபடத்தான் வேண்டுமா, இனிமேல் எங்கும் இதைச் செய்ய வேண்டாம்’ என்று என் மாப்பிள்ளைக்கு நானும் என் மனைவியும் அறிவுரை சொல்லத் துவங்கிவிட்டோம். அவருக்கு எப்போதுமே துணிச்சல் அதிகம். ‘இது எப்போதாவது நிகழும் விபத்து சம்பவம்... வானில் பாருங்கள் நூற்றுக் கணக்கானவர்கள் பறந்து கொண்டுதானே இருக்கிறார்கள்.
அடுத்தடுத்து இரண்டு சம்பவங்கள், அதுவும் கண்ணெதிரே நடந்ததால் இவர்கள் பயந்தது நியாயம்தான். ஆனாலும் பறந்திருந்தால் அந்தப் பத்து நிமிட அனுபவமே தனிதான்’ என்று சொன்னார்.
பறந்தபோது பைலட் மூலம் எடுத்த படங்களைக் காட்டினார். ‘இதில் உங்கள் முகத்திலும் கொஞ்சம் பயம் தெரிகிறதே’ என்றேன். ‘அது... கொஞ்சம் இருக்கத்தான் செய்தது...’ என்றார் சன்னக் குரலில்.அடுத்து... ஹாட் ஏர் பலூனில் மேலே கொஞ்ச நேரம் பறந்துவிட்டு இறங்குவது. ‘சாந்தி நிலையம்’, ‘சிவந்த மண்’, ‘லிங்கா’ படங்களில் பார்த்திருப்பீர்கள். இந்த மெகா சைஸ் பம்பரம் போன்ற பலூன் இப்போது நம் மூணாறிலேயே வந்துவிட்டது.
ஒரு தொட்டி போல இருக்கும். அதில் ஏறி நின்றுகொள்ள வேண்டும். எட்டு பக்கங்களிலும் இழுத்துப் பிடித்திருக்கும் முரட்டுக் கயிறுகளை பட்டத்திற்கு நூல் விடுவது போல ஒரே நேரத்தில் ஊழியர்கள் மெல்ல மெல்ல விடுவிக்க... பலூன், அதன் அடியில் கேஸ் சிலிண்டர் மூலம் எரியும் நெருப்பின் வெப்பக் காற்றில் மேலே எழும். மேலே சென்றதும் மிதக்கும்.
அங்கிருந்து கீழே மினியேச்சர் மனிதர்களை, கட்டடங்களை டாப் ஆங்கிளில் பார்த்து ரசிக்கலாம். ஒரு நபருக்கு பத்து நிமிட பலூன் பறத்தலுக்குக் கட்டணம் ரூபாய் ஆயிரத்து ஐநூறு. இங்கே பேரம் எடுபடவில்லை. ஆற்றில் ரிவர் ராஃப்ட்டிங்கில் பயந்த என் மனைவி பலூனில் ஏறி காற்றில் புன்னகைத்து அமெரிக்காவின் வேட்பாளர் போல உற்சாகமாக கீழே இருந்தவர்களைப் பார்த்துக் கையசைத்துக் கொண்டே இருந்தார்.
மறுநாள். தரம்சலாவில் அமைந்துள்ள இமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் ஸ்டேடியம் சென்றோம். குறைந்த கட்டணம் பெற்று ஸ்டேடியம் பார்க்க சுற்றுலாப் பயணிகளை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அனுமதிக்கிறார்கள்.
ஐபிஎல் மேட்ச்சுகள் தரம்சலாவில் நடக்கும்போது டெலிவிஷனில் பார்க்கும்போதே பனி வழியும் மலைகளின் பின்னணியில் அமைந்த அந்த ஸ்டேடியம் அத்தனை அழகாக இருக்கும். நேரில் பார்க்கும்போது இன்னும் அழகு. இந்தியாவில் மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கிரிக்கெட் ஸ்டேடியம் இதுதான். 22,000 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க இயலும்.அடுத்து நாங்கள் போகத் திட்டமிட்டது ரோத்தங் பாஸ் என்கிற பனிச் சிகரம்! இமாலயாசில் அமைந்துள்ள அத்தனை பனிச்சறுக்கு விளையாட்டுக்களும் கொண்ட இந்த இடம் மணாலியிலிருந்து 51 கிலோ மீட்டர் தூரத்திலும் கடல் மட்டத்திலிருந்து 13,058 அடி உயரத்திலும் அமைந்துள்ளது. மணாலியிலிருந்து லே செல்லும் ஹைவேஸ் சாலையில் அமைந்துள்ளது. ஹைவேஸ் என்றதும் எட்டு பாதைகளுடன் கற்பனை செய்யாதீர்கள். போகவும், வரவுமான இரண்டே பாதைகள்தான். பல மலைச் சிகரங்களைக் கடந்து செல்லும் இந்த மலைப் பாதை முழுக்கவே அபாயகரமானது.
ஒரு பக்கம் மலைகளை உடைத்தும் குடைந்தும் போடப்பட்டுள்ள இந்தச் சாலையின் மற்றொரு புறம் சரேலென்று சரியும் ஆழமான பள்ளத்தாக்குகள்! தமிழகத்தின் முக்கியமான ஊட்டி, கொடைக்கானல், மூணாறு, ஏற்காடு மலைப் பாதைகளில் விளிம்புப் பகுதிகள் முழுக்க பாதுகாப்புக்கு குட்டியாக சுவரோ, இரும்புத் தடுப்புகளோ இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், இந்த மலைப் பாதையில் மிக முக்கியமான ஊசி முனைத் திருப்பங்கள் தவிர எந்தத் தடுப்புச் சுவர்களும் கிடையாது.
வருடத்தின் 365 தினங்களும் இந்தச் சாலையில் அதிகமான டிராஃபிக் ஜாம் இருக்கும் என்பதால் அதிகாலை ஐந்து மணிக்கே புறப்பட வேண்டும் என்று ஓட்டுனர் சொன்னபோது மிகையாகச் சொல்கிறார் என்றுதான் நினைத்தோம்.ஆனால், அனுபவத்தில் உணர்ந்து நொந்துபோனோம். சொன்னபடி அதிகாலை ஐந்து மணிக்கே மணாலியில் புறப்பட்ட எங்கள் இரண்டு கார்களையும் புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே ஏழெட்டு முரட்டு இளைஞர்கள் கத்தியபடி வந்து தடுத்து நிறுத்தினார்கள்.
(...தொடரும்)
- பட்டுக்கோட்டை பிரபாகர்
|