டைரக்டர் தனுஷ் Vs நடிகர் தனுஷ்!
வித்தியாசத்தை சொல்கிறார் துஷாரா விஜயன்!
‘ஜெயிலர்’ மெகா ஹிட்டுக்குப் பிறகு ‘சன் பிக்சர்ஸ்’ பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் ‘ராயன்’. தனுஷ் இயக்கி நடிக்கும் படம் என்பதோடு தனுஷின் 50வது படம் என்பதால் ‘ராயனு’க்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், சரவணன்... என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். ப்ரொமோஷனுக்காக மொத்த டீமும் பரபரத்துக் கொண்டிருந்த நிலையில் துஷாரா விஜயனிடம் பேசினோம். ‘ராயன்’ வெளியீடு நெருங்கிய நிலையில் உங்கள் மனநிலை எப்படியுள்ளது?
ரசிகர்களைப் போல் எனக்குள்ளும் பதட்டம் அதிகமாகியிருக்கு. ஒரு ரசிகையாக நானும் படத்தை ஆர்வத்தோடு முதல் நாள், முதல் ஷோ பார்க்கணும்னு காத்திருக்கிறேன்.
‘ராயன்’ என்னுடைய சினிமா கரியர்ல முக்கியமான படம். என்னுடைய முதல் படம் மாதிரியே இந்தப் படத்திலும் என்னுடைய பொறுப்பை உணர்ந்து ஒர்க் பண்ணியிருக்கிறேன்.இந்தப் பட வாய்ப்பு வந்தப்ப வேறு ஒரு படப்பிடிப்புக்காக லண்டனில் இருந்தேன். ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்கும் படத்துக்காக தனுஷ் சார் ஆபீசிலிருந்து கூப்பிடுறோம் என்று சொன்னபோது என்னால் அந்த ஆச்சர்யத்தை நம்ப முடியவில்லை. தனுஷ் சார், படத்தைப் பற்றியும், என்னுடைய கேரக்டரைப் பற்றியும் சொன்னதும் இதுக்காகத்தான் இவ்வளவு நாள் காத்திருந்தேன்னு சந்தோஷப்பட்டேன். சினிமாவில் துஷாராவின் காலம் ஸ்டார்ட் ஆயிடுச்சுன்னு மனசுக்குள்ள சொல்லிப் பார்த்தேன்.
தனுஷ் டைரக்ஷன்ல நடிச்ச அனுபவம் எப்படி இருந்துச்சு?
எந்தப் படத்துக்கும் எதிர்பார்ப்புடன் ஷூட்டிங் போகமாட்டேன். என்னுடைய கேரக்டர் பற்றிய சிந்தனைதான் மனசை ஆக்கிரமிச்சிருக்கும். எந்த கேரக்டர் பண்ணினாலும் அது தனித்துவமா இருக்கணும்ன்னு நினைப்பேன்.
என்னுடைய சினிமா ஜர்னியை திரும்பிப்பார்க்கும்போது வெர்சடைல் ஆக்டர் என்ற அடையாளம் இருக்கணும்னு நினைக்கிறேன். அஞ்சு நிமிஷம் வந்தாலும் ஆடியன்ஸோட கனெக்ட்டாகிடணும் என்பதுதான் என்னுடைய மைண்ட் செட்டா இருக்கும்.
அந்தவகையில் ‘ராயன்’ சம்திங் ஸ்பெஷல். மிகச் சிறந்த படத்தில் வேலை பார்த்திருக்கிறேன் என்ற திருப்தி கிடைச்சிருப்பதாக நம்புகிறேன்.இதுல வேற மாதிரி துஷாராவைப் பார்க்கலாம். என்னுடைய கேரக்டரைப் பற்றி அதிகமா சொன்னா படம் பார்க்கும்போது அந்த பெப் இல்லாம போயிடும்.
இதுவரை நான் நடிச்ச படங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது தனித்துவமான படமா இருக்கும்.அதுமட்டுமல்ல, தனுஷ் சார் நடிப்புக்காகவே படம் பார்க்கலாம். படம் ஆரம்பிச்சதிலிருந்து படம் முடியம் வரை ரசிகர்களை என்கேஜ் பண்ணுமளவுக்கு படத்துல நிறைய அம்சங்கள் இருக்கு. மல்டி ஸ்டார் படம் செய்யும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
என்னைப் பொறுத்தவரை என்னுடைய கேரக்டர்தான் மனசுல இருக்கும். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அஞ்சு நிமிஷம் வந்தாலும் அது ஆடியன்ஸ் மனசுல இம்பேக்ட் பண்ணனும். பத்தோடு, பதினொன்றாக இல்லாம தனித்துவமா இருக்கும்படி பார்த்துக்கொள்வேன். அதுமாதிரிதான் படங்களை தேர்வு பண்றேன்.
‘சார்பட்டா பரம்பரை’ மாரியம்மா, ‘நட்சத்திரங்கள் நகர்கின்றன’ ரெனியா, ‘அநீதி’ சுப்பு போன்ற கேரக்டர்கள் அழுத்தமா இருந்துச்சுன்னா அடுத்தடுத்து பண்ற கேரக்டர்களும் அதைவிட அழுத்தமா இருக்கணும்னு நினைப்பேன்.
இதுல ஹீரோ தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், அபர்ணா முரளி என எல்லோருமே சூப்பரா பெர்ஃபாம் பண்ணக் கூடியவங்க. நான் தனுஷ் சாரின் தீவிர ரசிகை. அது டபுள் ட்ரீட் மாதிரி இருந்துச்சு.
மல்டி ஸ்டார்ஸ் கூட நடிப்பதை அழுத்தமா பார்க்காம ஆரோக்கியமான போட்டியா பார்க்கிறேன்.ஏ.ஆர்.ரகுமான் சார் மியூசிக், சன் பிக்சர்ஸ் ப்ரொடக்ஷன் என பிரம்மாண்டமான படத்துல இருப்பது பெரிய வாய்ப்பு. அவ்வளவு பெரிய ஜாம்பவான்கள் இருக்கிற படத்துல நானும் இருக்கிறேன் என்பதை நினைக்கும்போது பெருமையாக உணர்கிறேன். கேரக்டருக்காக உங்களை எப்படி தயார் செய்வீர்கள்?
சினிமா எனக்குப் பிடிக்கும். படத்துக்காக அதிகம் மெனக்கெடணும் என்ற சூழ்நிலை வந்தாலும் அதை கஷ்டமா பார்க்கமாட்டேன். சண்டைக் காட்சிகள் இருக்கும்போது உடல் ரீதியா சில பயிற்சிகளைச் செய்ய வேண்டியிருக்கும்.
ஆனாலும் தயங்கமாட்டேன். அதுதான் எங்களுடைய வேலை. அதுதான் என்னைப் போன்ற சினிமா கலைஞர்களை மக்களிடமிருந்து தனித்துவமா காட்டுகிறது. அந்த வகையில் கேரக்டருக்காக ரிஸ்க் எடுப்பது, மெனக்கெடுவது, நேரம் செலவழிப்பது எல்லாமே என்னுடைய வேலையின் ஒரு பகுதி என்பதால் அதை மகிழ்ச்சியாக பார்க்கிறேன். ‘ராயன்’ல உங்களுக்கு பிடிச்ச பாடல்?
பாடல்கள் எல்லாமே சர்ப்ரைஸா இருந்துச்சு. ‘அடங்காத அசுரன்...’ பாடலுக்கு பிரபுதேவா சார் கோரியோ பண்ணினார். அவர் மூவ்மெண்ட் சொல்லிக்கொடுத்து டான்ஸ் ஆடியது நல்ல அனுபவமா இருந்துச்சு. சினிமாவை நேசிக்கும் எனக்கு அதுபோன்ற வாய்ப்பு இன்னும் பல ஆண்டுகள் சினிமாவுல ஆர்வத்தோட வேலை பார்க்க உதவும்னு நம்புகிறேன்.அதுமட்டுமல்ல, எனக்கு டான்ஸ் பிடிக்கும்.
ஆறாவது படிக்கும்போதே டான்ஸ் கத்துக்க ஆரம்பிச்சேன். பிரபுதேவா சார் கோரியோகிராபியில டான்ஸ் ஆடுகிறோம் என்ற மகிழ்சி ஒரு பக்கம் இருந்தாலும் அவரிடமிருந்து டான்ஸ் கத்துக்கிறோம் என்பதை முக்கியமா பார்க்கிறேன். அது டான்ஸ்ல அடுத்த ஸ்டெப்புக்கு போக உதவும். இந்தியாவின் மிகச் சிறந்த கலைஞர்கள் ஒர்க் பண்ணும் படத்தில் நானும் இருக்கிறேன் என்பதைவிட ஒரு நடிகைக்கு வேறு எது தேவையாக இருக்கும். நடிகர் தனுஷ் - இயக்குநர் தனுஷ் என்ன வித்தியாசம்?
இருவரையும் பிரிச்சுப் பார்க்கவே முடியாது. இயக்குநர் தனுஷ் வேகமா இருப்பார். நேர நிர்வாகத்துல கரெக்ட்டா இருப்பார். எல்லா இயக்குநர்களுக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். அதுபோல் தனுஷ் சார் டைரக்ஷன் வித்தியாசமானது.
இதுவா, அதுவா என்றால் என்னால் சொல்ல முடியாது. ஆனால், இன்ஸ்பயரிங்காக இருக்கும். ஆக்டராக பார்க்கும் போது எப்படியெல்லாம் நடிக்கலாம் என்ற வியப்பை ஏற்படுத்துவார். டைரக்டராக பார்க்கும்போது என்ன மாதிரி எனர்ஜி... சோர்வே இல்லாமல் எப்படி வேலை செய்ய முடிகிறது என்று நினைக்கத் தோன்றும். தனுஷ் சார் எக்ஸலண்ட் ஆக்டர் அண்ட் டைரக்டர். ‘ராயன்’ல என்ன கத்துக்கிட்டிங்க?
என்னுடைய கேரியர்ல பெரிய வெற்றிப் படம் கிடைச்சிருக்கு. தனுஷ் சார் கூட நடிக்கணும் என்பது நீண்ட நாள் ஆசை. அது இப்போ நடந்திருக்கு. மறுபடியும் எப்ப நடிக்கப் போறோம் என்ற ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் ஸ்பேஸ் இருந்துச்சு. கத்துக்கிட்டதைப்பத்தி சொல்லணும்னா நிறைய விஷயம் இருக்கு. ஒரு சீன்ல எப்படி நிக்கணும் என்பதை கத்துக்கிட்டேன். என் கால் சும்மாவே இருக்காது. ஆடிட்டே இருப்பேன். கேமரா முன்னாடி அட்டென்ஷன்ல இருப்பது அடிப்படை. அதை கத்துக்கிட்டேன்.
கலைஞர்களுக்கு கவனம் முக்கியம். கன்டினியூட்டி தெரிஞ்சு வெச்சிருந்தால்தான் நம்முடைய பெஸ்ட் கொடுக்க முடியும். எல்லா நடிகர்களும் தங்கள் ஸ்டைலில் மேஜிக் பண்ணுவாங்க. அதை கவனிச்சாலே போதும். நம்முடைய திறமையை வளர்த்துக்க முடியும். ஒவ்வொரு படமும் எதாவது ஒரு விஷயத்தைக் கத்துக்கொடுக்கும்.இதுவரை நான் நடித்த படங்களாகட்டும், நடிக்கும் படங்களாகட்டும் எல்லாமே வித்தியாசமான படங்கள். ஒவ்வொரு நாளையும் கற்றலுக்கான வாய்ப்பாகப் பார்க்கிறேன்.
‘வேட்டையன்’?
ரஜினி சாருடன் நடிச்ச அந்த தருணத்தை என்னுடைய போன் நோட்ஸ்ல எழுதி வெச்சிருக்கிறேன். ‘வேட்டையன்’ ப்ரொமோஷன் டைம்லதான் அதைப்பத்தி பேசுவேன். ரஜினி சார் என்ன காஸ்டியூம்ல இருந்தார், நான் என்ன காஸ்டியூம்ல இருந்தேன், ரஜினி சார் எந்த கார்ல வந்தார், எங்களுடைய முதல் சந்திப்பு எப்படி இருந்துச்சு, என்ன பேசினோம் என்பதை ஒண்ணுவிடாம நோட் பண்ணி வெச்சிருக்கேன். இயக்குநர் த.செ.ஞானவேல் மிக அழகாக கதை சொன்னார். மிகச் சிறப்பான கதை.
அந்தப் படத்துக்காக இயக்குநர் ஞானவேலை சந்திக்கும்போது அதுல ரஜினி சார், அமிதாப் சார் இருக்கிறார்கள் என்பது தெரியாது. ‘முழுக் கதையையும் சொல்லணுமா’ என்று கேட்டார். ‘என் கேரக்டர் மட்டும் சொல்லுங்க சார்’ன்னு சொன்னேன். கதை சொன்னதும் பிடிச்சது. அவ்வளவு ஸ்டார் உள்ள படத்துல எனக்கான முக்கியத்துவம் உள்ள கேரக்டர் கிடைச்சிருப்பதை இறைவனின் ஆசீர்வாதமா பார்க்கிறேன்.
பிற மொழிகளில் வாய்ப்பு வருகிறதா?
தெலுங்குல ஒரு வாய்ப்பு வந்திருக்கு. மொழி தெரியாம நடிப்பது பெரிய விஷயம் இல்ல. யாராவது டப்பிங் பண்ணிடுவாங்க. எனக்கு அதுல இஷ்டமில்லை. டப்பிங் முக்கியம். அது கேரக்டரின் ஆன்மா. நடிச்சுட்டு டப்பிங் பேசும்போது என்ன நடிச்சோமோ அதுல பத்துமடங்கு குறைக்கவும், அதிகரிக்கவும் முடியும். அதற்கு மொழி முக்கியம். என்னை தயார் படுத்தின பிறகு பிற மொழிகளில் நடிக்கப் போவேன்.
எஸ்.ராஜா
|