Must Watch



கிளிப்ஃபோர்டு த பிக் ரெட் டாக்

‘நெட்பிளிக்ஸின்’ டாப் டிரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ஆங்கிலப்படம், ‘கிளிப்ஃபோர்டு த பிக் ரெட் டாக்’. நியூயார்க்கில் அம்மாவுடன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறாள் சிறுமி எமிலி. எமிலியைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை மாமா கேஸியிடம் கொடுத்துவிட்டு, அம்மா பிசினஸ் விசயமாக வெளியூருக்குச் செல்கிறார்.

கேஸியும், எமிலியும் ஒரு அரிய விலங்குகளின்  முகாமுக்குச் செல்கின்றனர். அங்கே ஒரு சிவப்பு வண்ண நாய்க்குட்டி எமிலியைக் கவர்கிறது. ‘நீ இந்த நாய்க்குட்டியிடம் எந்த அளவுக்கு அன்பு காட்டுகிறாயோ அந்த அளவுக்கு இந்த நாய்க்குட்டி பெரிதாக வளரும்’ என்கிறார் அந்த முகாமை நடத்தும் பிரிட்வெல்.  

எமிலி நாய்க்குட்டி வாங்க ஆசைப்படுகிறாள். தடுக்கிறார் கேஸி. அன்று மாலை எமிலியின் புத்தகப்பைக்குள் அந்த நாய்க்குட்டி இருக்கிறது. ‘இந்த ஒரே ஒரு இரவு மட்டும் நாய்க்குட்டியை வைத்துக்கொள்கிறேன்’ என்று எமிலி கெஞ்ச, கேஸி சம்மதிக்கிறார். அடுத்த நாள் ராட்சத அளவில் அந்த நாய்க்குட்டி வளர, சுவாரஸ்யமாகிறது திரைக்கதை. குழந்தைகளுடன் கண்டுகளிக்க அற்புதமான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் வால்ட் பெக்கர்.

பிரணய விலாசம்

மனதை நெகிழ்விக்கும் ஒரு மலையாளப் படம், ‘பிரணய பிலாசம்’. ‘ஜீ 5’ ல் காணக்கிடைக்கிறது. ராஜீவன் கிராம நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். அவருடைய மனைவி அனுஸ்ரீ. மகன் சூரஜ் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறான். இசையில் ஆர்வமுடையவன் சூரஜ். அவனுக்கும் அப்பாவுக்கும் இடையில் நல்ல உறவு இல்லை. மட்டுமல்ல, ராஜீவனுக்கும் மகன், மனைவி மேல் பெரிதாக அக்கறை இல்லை. தன்னுடைய முதல் காதலி மீராவின் நினைப்பிலே இருக்கிறான் ராஜீவன்.

மீண்டும் மீராவுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறான் ராஜீவன். சூரஜும் கல்லூரியில் படிக்கும் கோபிகாவுடன் காதல் வயப்படுக்கிறான். அப்பாவும், மகனும் தங்களின் காதல்களில் திளைத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சூரஜ்ஜின் அம்மா அனுஸ்ரீ இறந்துவிடுகிறாள். ராஜீவனும், சூரஜ்ஜும் நிலைகுலைகின்றனர்.

ஒரு நாள் அனுஸ்ரீயின் டைரி ராஜீவனுக்குக் கிடைக்கிறது. அதில் அனுஸ்ரீக்கு வினோத் என்ற காதலன் இருந்த விஷயம் ராஜீவனுக்கும், சூரஜ்ஜுக்கும் தெரிய வருகிறது. அனுஸ்ரீயின் கடைசி ஆசையை வினோத்தால்தான் நிறைவேற்ற முடியும். அப்பாவுடன் சேர்ந்து மகன் எப்படி தன் அம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்றுகிறான் என்பதே நெகிழ்ச்சியான திரைக்கதை. படத்தின் இயக்குநர் நிகில் முரளி.

த மதர்

நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியாகியிருக்கும் ஆங்கிலப்படம் ‘த மதர்’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.  இராணுவத்தில் ‘த மதர்’ என்ற பெயரில் கொலையாளியாக இருக்கிறாள். அவளுடைய உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது. ஒரே நேரத்தில் முன்னாள் இராணுவ வீரன் ஆட் ரியனுடனும், ஆயுதங்களை விற்கும் ஹெக்டேருடனும் காதலுறவில் இருக்கிறாள். அதனால் அவள் கர்ப்பமடைகிறாள்.

ஆட்ரியனும், ஹெக்டேரும் ஆயுதக் கடத்தலில் ஈடுபடுகிறார்கள். அது மதரைப் பெரிதாக பாதிப்பதில்லை. இருவரும் சேர்ந்து குழந்தைக் கடத்தலில் ஈடுபடுவது மதருக்குத் தெரிய வருகிறது. இதைப் பற்றி எஃப்பிஐக்கு தகவல் தெரிவிக்க, ஆட் ரியனுக்கும், ஹெக்டேருக்கும் எதிரியாகிறாள் மதர்.

அவளுக்கு மகள் பிறக்கிறாள். தன்னுடன் இருந்தால் ஆபத்து என்று வளர்ப்பு பெற்றோரிடம் மகளைக் கொடுத்துவிட்டு, தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறாள் மதர். சில வருடங்களுக்குப் பிறகு ஆட் ரியன், ஹெக்டேரால் மகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது. மகளை எப்படி மதர் காப்பாற்றுகிறாள் என்பதே மீதிக்கதை. ஆக்‌ஷன் பிரியர்கள் தவறவிடக்கூடாத படம். த மதராக ஜெனிபர் லோபஸ் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். படத்தின் இயக்குநர் நிக்கி கரோ என்ற பெண்.  

டிரையேங்கிள் ஆஃப் சேட்னஸ்

‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் உயரிய விருது உட்பட பல சர்வதேச விருதுகளை அள்ளிய ஆங்கிலப் படம், ‘டிரையேங்கிள் ஆஃப் சேட்னஸ்’. இப்போது ‘சோனி லிவ்’வில் தமிழ் டப்பிங்கில் பார்க்கலாம். வளர்ந்து வரும் ஆண் மாடல், கார்ல். சமூக வலைத்தள பிரபலம் மற்றும் மாடலாக இருக்கிறாள் யாயா. கார்லை விட அதிகமாக சம்பாதிக்கிறாள் யாயா.

இருவரும் காதலில் இருக்கிறார்கள். ஒரு ஹோட்டலில் சாப்பிடச் செல்கின்றனர். பில்லை கார்லின் தலையில் கட்டுகிறாள் யாயா. அதனால் இருவருக்கும் இடையில் பிரச்னை ஏற்படுகிறது. கார்ல் மீது காதல் வயப்பட்டிருந்தாலும் பெரிய பணக்காரனைக் கல்யாணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்பதுதான் யாயாவின் ஆசை.

இந்நிலையில் சோஷியல் மீடியா புரமோஷனுக்காக ஒரு சொகுசுப் படகில் பயணிக்க கார்லுக்கும், யாயாவுக்கும் அழைப்பு வருகிறது. அந்தப் படகில் பெரும் பணக்காரர்களுக்கு மத்தியில் கார்லும், யாயாவும் பயணிக்க, சூடுபிடிக்கிறது திரைக்கதை. வர்க்க பேதத்தை நையாண்டியாக சொல்லியிருப்பதோடு, அதிகாரம் தனது கையில் கிடைக்கும்போது ஒவ்வொரு மனிதனும் எப்படி நடந்து கொள்வான் என்பதையும் அழுத்தமாகச் சித்தரிக்கிறது இந்தப் படம். இதன் இயக்குநர் ரூபேன் ஆஸ்ட்லுண்ட்.

தொகுப்பு: த.சக்திவேல்