உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வைஸ் கேப்டன்.. சாலையோரத்தில் வீடு...+2வில் சாதனை...!
அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவி மோனிஷா சமீபத்தில் வெளியான +2 தேர்வில் 600க்கு 499 மதிப்பெண்களை எடுத்து அசத்தியிருக்கிறார். 600க்கு 600 எடுத்திருக்கும் மாணவிகள் மத்தியில் இதிலென்ன ஆச்சரியம் என்கிறீர்களா?
ஆம். ஆச்சரியமேதான்! வீடற்றவராக +2 மாணவி மோனிஷா வசிப்பது, சென்னை வால்டாக்ஸ் பகுதியில் உள்ள சாலையோரம். “எனக்கு வசிக்க வீடில்லை. சிறுவயதில் இருந்தே சாலையோரத்தில்தான் என் வாழ்க்கை...” என்கிற மோனிஷா, சத்தமில்லாமல் கூடுதலாக இன்னொரு சாதனையையும் ஏற்கனவே நிகழ்த்தியிருக்கிறார். ஆம். ஒருகாலத்தில் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்தின் கோட்டைக்குள், அவர்களின் பெருமைமிகு லாட்ஸ் மைதானத்தில் 2019ல் வைஸ் கேப்டனாக நுழைந்து, இங்கிலாந்து வீரர்களை எதிர்த்து விளையாடி, ‘தெருவோரக் குழந்தைகளுக்கான உலகக் கோப்பையை’ வென்று வந்திருக்கிறார். இந்த நிகழ்வுக்குப்பின் ஊடகங்களின் பார்வையில் அப்போதே மோனிஷா விழுந்திருக்கிறார்.
வால்டாக்ஸ் சாலையில் மோனிஷாவின் சாலையோர வசிப்பிடம் தேடி சென்றால் புன்னகையுடன் நம்மை வரவேற்றார். இதுதான் என் வீடென மோனிஷா கை நீட்டியது சின்னதாக அட்டைப்பெட்டி மாதிரி தகரத்தால் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய அறை. ‘‘இதை எங்கள் வீடுன்னு சொல்ல முடியாது.
இங்கிருக்கிற முப்பது குடும்பத்திற்கும் இது பொதுவான வீடு. இதில்தான் பெண்களான நாங்கள் உடை மாற்றுகிறோம். மற்றபடி குளிப்பது, காலைக் கடன்களை முடிப்பதெல்லாம் சாலையோரம் உள்ள கட்டணக் கழிப்பறையில்தான்.
மழை, வெயிலென எதுவானாலும எங்களுக்கு வாழ்க்கை தெருவோரம்தான்...” என்கிற மோனிஷா சிறு வயதிலேயே தன் அப்பாவை இழந்திருக்கிறார். அம்மா சென்னை மாநகராட்சியில் நகரசுத்தி தொழிலாளியாக வேலை செய்து வருகிறாராம்.‘‘வால்டாக்ஸ் சாலையில் நிறைய கார்கோ மூவர்ஸ் இருக்கிறார்கள்.
அவர்களுடைய டிராலி, ரிக்ஷா போன்றவற்றை இரவில் சாலையோரங்களில்தான் நிறுத்தி வைப்பார்கள். பெரும்பாலும் நாங்கள் இரவில் அதில் ஏறித்தான் படுத்துத் தூங்குவோம். வயது பெண்களான எங்களுக்கு இதனால் பாதுகாப்பு இல்லாத சூழல்தான். இருந்தாலும் எங்களுக்கு வேறு வழியில்லை.
இரவில் சிலரோட பார்வை சரியாகவே இருக்காது. ரொம்பவே ஏளனமாகவும் சிலர் எங்களைப் பார்ப்பார்கள். சிலர் தண்ணி அடிச்சுட்டு வந்து சாலையில் படுப்பார்கள். பல இரவுகள் எனக்கு இதனால் சரியான தூக்கம்கூட வராது...’’ என்றவர், எங்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை, நாங்கள் மட்டும் ஏன் இவ்வளவு கீழே தாழ்ந்து வாழ்கிறோம் என்கிற கேள்வியை நா தழுதழுக்க அழுத்தமாகவே நம்முன் வைக்கிறார்.
‘‘எங்களுக்குன்னு ஒரு வீடு, எங்களுக்குன்னு சில அடையாளம் இருந்தால்தானே எங்களாலும் இருப்பிடச் சான்று, சாதிச் சான்று, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை போன்றவற்றைப் பெற முடியும்..? தேர்தல் நேரத்தில் மட்டும் எங்களை வந்து சந்திக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் அதன்பிறகு சுத்தமாகக் கண்டுகொள்வதில்லை. அப்பா இல்லாமல் அம்மா மட்டும் தனி ஆளாக உழைத்து என்னையும் அண்ணனையும் படிக்க வைக்க ரொம்பவே கஷ்டப்படுகிறார். நான் நன்றாகப் படித்து மேலே வந்து எங்கள் வாழ்க்கையை மாற்றிக் காட்டணும். அம்மாவையும் நல்லாப் பார்த்துக்கணும்...’’ என்கிற மோனிஷாவின் கண்களில் வாழ்க்கை மீதான எதிர்பார்ப்பும் ஏமாற்றங்களும் மாறிமாறி துயரமாகப் படிந்திருக்கிறது.‘‘லண்டன் சென்று விளையாடிவிட்டு வருவதற்கு முன்பும் என் நிலை இதுதான். விளையாடிவிட்டு உலகக் கோப்பையோடு வந்தபிறகும் என் நிலை இதுதான்...’’ என்றவரின் நீண்டநாள் கனவு, வசிக்க தனக்கும் ஒரு பாதுகாப்பான வீடு வேண்டும் என்பதே.
‘‘உலகக் கோப்பையை நாங்கள் வென்று வந்தபோது, தெருவோரக் குழந்தைகள்தானே, நம் வெற்றியை நமது நாட்டில் மதிப்பார்களா... நம்மைக் கொண்டாடுவார்களா... என்றுதான் முதலில் நினைத்தோம். ஆனால், மீடியாக்கள் தொடர்ந்து எங்களைத் தேடிவந்து நிறையவே எங்களை செய்தியாக்கினார்கள்.
சன் தொலைக்காட்சி எங்களை ஏர்போர்ட்டில் வந்து முதலில் பேட்டி எடுத்து அன்றே செய்தியாக வெளியிட்டார்கள்...’’ எனப் புன்னகைத்தவர், ‘‘பக்கத்து ஊருக்குக்கூட போகமுடியாத எங்களை லண்டன்வரை அனுப்பி வைத்த பெருமை, சென்னை தண்டையார்பேட்டையில் இருக்கும் ‘கருணாலயா’ தொண்டு நிறுவனத்தைத்தான் சேரும். அவர்கள்தான் என்னைப் போன்ற தெருவோரக் குழந்தைகளைத் தேடிக் கண்டுபிடித்து, எங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வருகிறார்கள். அவர்கள் மூலமாகவே நான் கிரிக்கெட் விளையாட லண்டன் சென்றேன்...’’ என்கிற மோனிஷா, அடுத்து கல்லூரியில் இணைந்து பி.காம் அல்லது பி.ஏ. கார்ப்பரேட் செகரெட்ரிஷிப் படிக்கப்போவதற்கான கனவுகளை விழிகளில் தேக்கி வைத்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி தோற்ற அதே ஆண்டு அதே மைதானத்தில் இவர்கள் வென்றார்கள்!
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2019ம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், விராட்கோலி தலைமையிலான இந்திய அணி அரையிறுதியில் நியூஸிலாந்திடம் வெற்றி வாய்ப்பை இழந்தது. ஆனால் அதே ஆண்டு, அதே மைதானத்தில் களமிறங்கிய சென்னை சாலையோர சிறார்கள் அணி வங்கதேசம், மேற்கிந்திய தீவுகள், மொரீஷியஸ், தான்சானியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 10 அணிகளுடன் மோதி, இறுதியாக இங்கிலாந்து அணியை அவர்கள் மண்ணிலேயே தோற்கடித்து, உலகக் கோப்பையை வென்றது. தடைகள் பல கடந்து சிறார்கள் பெற்றது, ‘தெருவோரக் குழந்தைகளுக்கான உலகக் கோப்பை’.
‘‘வசிப்பதற்கு வீடில்லாமல் சாலையிலேயே உண்டு, உடுத்தி, உறங்கி வாழும் சிறார்களின் வாழ்வில் மாற்றத்தை விதைத்து, குழந்தைகளின் பாதுகாப்பு, மேம்பாடு, மறுவாழ்வென செயல்படும் ‘கருணாலயா’ தொண்டு நிறுவனத்தை, 1995ல் சென்னை தண்டையார்பேட்டையில் தொடங்கி, கடந்த 28 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.
தெருவோரக் குழந்தைகளுக்காக லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ‘ஸ்ட்ரீட்சைல்ட் யுனைடெட்’ தொண்டு நிறுவனத்துடன் எங்களின் ‘கருணாலயா’ கைகோர்த்து, தெருவோரக் குழந்தைகளுக்கான ஃபுட்பால், கிரிக்கெட், தனி விளையாட்டு என திறமையாளர்களை உருவாக்கி, பிரேசில், மாஸ்கோ, பிரான்ஸ், இங்கிலாந்து, கத்தார், இந்தோனேஷியா என வெளிநாடுகளுக்கு பயணிக்க வைக்கிறது. 2014ல் இருந்தே எல்லா விளையாட்டுகளையும் விளையாடுவதற்கான அணி எங்களிடம் அடுத்தடுத்து உருவாகிக்கொண்டே இருக்கிறது...’’ என்கிறார் ‘கருணாலயா’ தொண்டு நிறுவனத்தின் செயலாளரான பால் சுந்தர் சிங்.
செய்தி: மகேஸ்வரி நாகராஜன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|