என்னை வைச்சு டைரக்ட் செய்தவங்க கஷ்டம் நான் இயக்குநரானதும்தான் புரிஞ்சுது!
அசோக சின்னத்தை எந்த பக்கம் திருப்பினாலும் அதன் மதிப்பு குறையாதளவுக்கு சிங்கமுகம் தெரியும். அதுமாதிரிதான் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளர், நடிகர், பாடகர், பாடலாசிரியர், எடிட்டர், தயாரிப்பாளர் என சினிமாவில் இவருக்கு பல முகங்கள் உண்டு. இப்போது முகங்களுக்கு எல்லாம் முகமாக ‘பிச்சைக்காரன்’ இரண்டாம் பாகத்தில் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.
திடீர்னு டைரக்டராயிட்டீங்க?
டைரக்ஷன் ஐடியா இருந்ததில்ல. ‘பிச்சைக்காரன்’ இரண்டாவது பாகம் செய்யணும் என்கிற நிர்ப்பந்தம்தான் என்னை டைரக்டராக்கியிருக்கு. ‘பிச்சைக்காரன்’ மாதிரி ஒரு படம் மீண்டும் வந்தா நல்லாயிருக்குமேனு நினைச்சு ஒரு வேகத்துல கதையும் எழுதி முடிச்சேன். பவுண்டட் ஸ்கிரிப்ட் ரெடியான பிறகும் யார் டைரக்ஷன் பண்ணப் போறாங்க என்ற கேள்விக்கு விடை இல்லாம இருந்துச்சு.நியாயமா சசி சார்தான் இந்தப் படத்தை டைரக்ட் பண்ணப் வேண்டியவர். அவரிடம் கேட்டேன். அவர், ‘நூறு கோடி வானவில்’ படப்பிடிப்பில் பிஸியா இருந்தார். அந்தப் படத்தை முடிச்சுட்டுதான் உங்க படத்துக்குள்ள வரமுடியும்னு தன் சூழலை விளக்கினார்.
அதோட இன்னொரு தயாரிப்பாளர்கிட்ட அட்வான்ஸ் வாங்கிய விஷயத்தையும் சொல்லி, அவருக்கு படம் பண்ணுவதுதான் சரியாக இருக்கும்னும் சொன்னார். ஒரு நடிகனா அந்த கம்பெனிக்கு நானும் ‘பிச்சைக்காரன்’ பண்ண முடியாத சூழ்நிலையில் இருந்தேன். சசி சார் வர முடியாத சூழல் ஏற்பட்டதால தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் சிலரை அப்ரோச் பண்ணினேன். எதுவும் செட்டாகல. என்ன செய்யறதுனு யோசிச்சப்ப நாமே டைரக்ஷன் பண்ணிடலாம்னு முடிவெடுத்தேன்.
முதல் பாகத்தின் தொடர்ச்சிதான் ‘பிச்சைக்காரன்’ இரண்டாம் பாகமா..?
இல்ல. இது ஃப்ரஷ்ஷான இன்னொரு கதை. மூளை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஒருவனின் கதை. முதல் பாகம் அம்மா - மகன் பாசத்தைப் பேசியது. இது அண்ணன் - தங்கை பாசத்தைப் பற்றிய படம்.
இந்தியாவின் ஏழாவது பணக்காரரான விஜய் குருமூர்த்தியின் வாழ்க்கையில் நடக்கும் சில சுவாரஸ்யமான நிகழ்வுகள்தான் படம். விஜய் குருமூர்த்திக்கு சத்யானு இன்னொரு பேர் இருக்கு. அந்தப் பெயர் ஏன் வந்துச்சுனு படம் பார்த்தா புரியும். எனக்கு எது வசதியோ... என் மேனரிசத்துக்கு என்ன வருமோ அதைத்தான் பண்றேன். இந்தப் படமும் அப்படித்தான். இயக்குநர் விஜய் ஆண்டனிக்கு நடிகர் விஜய் ஆண்டனியின் பலம், பலவீனம் தெரிந்திருக்குமே?
நடிகர் விஜய் ஆண்டனியின் மைனஸ் முதலிலேயே தெரியும்! அதனால படப்பிடிப்பில் கவனமா இருந்தேன். மைனஸ் ஆன ஆளை வெச்சு படம் பண்ணியது இயக்குநர் விஜய் ஆண்டனிக்கு கஷ்டமா இருந்துச்சு!ஈஸியா பெர்ஃபாம் பண்ற தொழில் முறை நடிகர்கள் நிறைய பேர் இருக்காங்க. ரொமான்ஸ் பண்ணுவதாக இருந்தாலும், கோபப்படுவதாக இருந்தாலும் அந்த எக்ஸ்பிரஷனை அழகா தர்றவங்க நிறைய பேர் இருக்காங்க. அந்த மாதிரி இல்லாத சட்டிலான ஒரு நடிகரின் ஃபிரேமை ஹேண்டில் பண்ணுவது கஷ்டமா இருந்துச்சு. என்னை வெச்சு படம் எடுத்த இயக்குநர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்கனு இப்ப நெனச்சுப் பார்க்கிறேன்!
மலேஷியால விபத்து ஏற்பட்டதே... என்னதான் நடந்துச்சு?
அது ஆக்ஷன் சீன்ல நடந்த விபத்தா இருந்திருந்தா பெருமையா சொல்லியிருக்கலாம். ரொமான்ஸ் சீன்லல நடந்துச்சு. அதனால அந்த விபத்தை பெருமையா சொல்ல முடியாது. ‘ஜெட் ஸ்கி’ ஷாட் அது. நான் ஒரு படகுல ரவுண்ட் அடிச்சுட்டே கேமராமேன் இருக்கும் படகை உரசுவது மாதிரி காட்சி. ஒரு ரவுண்ட் நல்லபடியா முடிஞ்சது. ஆர்வ மிகுதியில இதைவிட பெட்டர் ஷாட் தர்றேன்னு இன்னொரு ரவுண்ட் போனேன்.
அலைகள் அதிகமா இருந்ததால நிதானமாதான் படகை இயக்கினேன். ஏதோ ஒரு பாயிண்ட்ல விபத்து நடக்குது. அதுவரைதான் எனக்கு ஞாபகத்துல இருந்துச்சு. அதன் பிறகு, பக்கத்துல இருந்த படகோட நுனியில முகம் பட்டு, மூக்கு உடைஞ்சு நிலைதடுமாறி, சுயநினைவு இழந்து கடலோட ஆழத்துக்கு போனதாக சொன்னாங்க.ஹீரோயின் காவியாவும், உதவி கேமராமேன் ஒருவரும் கடலில் குதித்து என்னைக் காப்பாற்றினாங்க. நுரையீரல்ல தண்ணி அதிகமா சேர்ந்து, மிகவும் ஆபத்தான கட்டத்துல ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணினாங்க.
வலது கண் பக்கமா ஐந்து தையல். ஏற்கனவே எனக்கு பல எலும்புகள் உடைஞ்சிருக்கு. இதுல இன்னும் டேமேஜ் ஆனது. முகம் முழுவதும் ப்ளேட் வெச்சிருக்காங்க.
பாடல்கள் எப்படி வந்திருக்கு..?
எல்லாமே கதைக்கு தேவையான பாடலாக இருகும். கவிஞர் அருண்பாரதி எழுதியுள்ளார். பின்னணி இசையும் கதையை மீறாதளவுக்கு இருக்கும்.ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வேற லெவல் கேமரா ஒர்க் என்று விமர்சனம் எழுதுமளவுக்கு டேலண்ட்டட் பெர்சன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ளது. சென்னை, துபாய், மலேஷியானு 300 லொகேஷனில் ஷூட் செய்திருக்கோம்.
எஸ்.ராஜா
|