ஒரு ஊர்ல ஒரேயொரு குதிரை வண்டி...
ஒரு காலகட்டத்தில் வீதிதோறும் குதிரை வண்டி டக்... டக்... என்ற சத்தத்தோடு ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால், இன்றைய நவீன உலகத்தில் குதிரை வண்டிகள் காணாமல் போய்விட்டன. குதிரை வண்டிகள் இருந்த காலகட்டத்தில் அதில் பயணம் செய்தவர்களுக்குத்தான் தெரியும் அதன் அருமை.கடலூர் மாவட்டம் சிதம்பரம் மேல வீதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இன்றும் விடாமல் குதிரை வண்டியை ஓட்டிக் கொண்டுதான் இருக்கிறார்; அதுவும் அந்த குதிரை வண்டியை இன்றும் பழமை மாறாமல் அப்படியே வைத்திருக்கிறார்.
‘‘சிதம்பரத்தில் 50க்கும் மேல குதிரை வண்டிகள் ஓடிட்டு இருந்துச்சு. இப்ப நான் ஒருத்தன்தான் ஓட்டிக்கிட்டு இருக்கேன். எனக்கு 65 வயசாகுது. நான் பத்து வயசு முதல் இந்த வண்டியை ஓட்டிக்கிட்டு இருக்கேன். இந்த வண்டி ஓடினாதான் என் குடும்பமும் ஓடும். எனக்கு மூணு பெண் பிள்ளைகள், ஒரு மகன்னு எல்லாருமே இந்த ஒரு குதிரை வண்டியை நம்பித்தான் இருந்தோம்... இருக்கறோம்...’’ புன்னகைக்கும் கிருஷ்ணமூர்த்தி, இந்த வண்டியை விற்றுவிட்டு ஆட்டோ ஓட்ட விரும்பவில்லை.
‘‘பத்து வயசுலேந்து எனக்கு சோறு போடுறது இந்த வண்டிதான். அதை எப்படி என்னால விட்டுட முடியும்..? இங்க பக்கத்துல ஆட்டோ ஸ்டாண்ட் இருக்கு. அந்த பசங்க கூட ‘வாங்க தாத்தா... நாங்க ஆட்டோ ஓட்ட கத்துக் கொடுக்கறோம்’னு கூப்பிடுவாங்க. ‘வேண்டாம்பா... கடைசி வரை நான் இந்த வண்டியே ஓட்டறேன்’னு சொல்லிடுவேன்.
குதிரை வண்டி ஒரு நிலை இல்லாத தொழிலா போச்சு. பள்ளிப் பசங்கள முன்னாடி எல்லாம் ஏத்திக்கிட்டு போவேன். குதிரை வண்டில அவங்களும் ஜாலியா வருவாங்க. இப்ப இருக்கற பசங்க குதிரை வண்டிய கண்டாலே ஓடறாங்க. பசங்க மாறிட்டாங்க. அப்படியும் நாலு பசங்க என் வண்டில ஸ்கூலுக்கு இப்ப வராங்க... அவங்க வழியா மாசம் ஒரு தொகை வருது. அதுதான் நிரந்தர வருமானம்.
முன்னாடி வயசானவங்க குதிரை வண்டியை விரும்பினாங்க. இப்ப அவங்களும் விரும்பறதில்ல. ஆக, நிலையில்லாத வருமானமா போச்சு. ஒரு நாளைக்கு ரெண்டு, மூணு சவாரி கிடைக்கும்...’’ என்னும் கிருஷ்ணமூர்த்தி, மதியம் வரை அன்று சவாரி எதுவும் கிடைக்கவில்லை என்றால் சோர்ந்து விடுவாராம்.‘‘வீட்டுல நான் பசியோடு தூங்கிடுவேன். குதிரை தூங்குமா? ஒரு ஆட்டோ டிரைவர் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு ஓட்டினாலே லாபம் கிடைக்கும். ஒருநாள் ஓட்டலைனாலும் மறுநாள் ஓட்டிக்கலாம். பெட்ரோல் போட்டது போட்ட படியே இருக்கும்.
ஆனா, எங்க பொழப்பு அப்படி இல்ல. தினமும் குதிரைக்கு ரூ.200 செலவு செய்தே ஆகணும். புல்லு, கொள்ளுனு அதுக்கு வாங்கிக் கொடுக்கணும். அதை பட்டினி போட முடியாதே. இங்க பாருங்க... ரோட்ல எவ்வளவு மோட்டார் பைக் ஓடுது... எவ்வளவு புகை வருது... இதெல்லாம் குதிரை வண்டியால வராது. தினமும் காலைல குதிரை வண்டிய இங்க கொண்டு வந்து நிறுத்திட்டு சவாரிக்கு யாராவது வருவாங்களானு காத்திருப்பேன்...’’ என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.
பொ.பாலாஜிகணேஷ்
|