சிறுகதை-சூழல்



தன்னிச்சையாய் கால்கள் நடந்து வந்தன. புவனாவின் குரல் பின்னாலேயே துரத்திக்கொண்டு வந்த பிரமை. அருகிலேயே நடந்த பூஜாவுடனும் பேசவில்லை. அவன் மனநிலையை உணர்ந்த மாதிரி வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள்.‘‘யாரும் யாரையும் கட்டி வச்சுக்கல. அவங்கவங்க மனசுல என்ன தோணுதோ அதைச் செய்யலாம்...’’
பூஜா இருவரையும் பார்த்தாள். ஆறு வயசுக்கு சற்று அதீத அனுபவங்கள். முன்பு மிரண்டு போய் அழுவாள். இப்போது கலரிங் புத்தகத்தை எடுத்துக் கொண்டு இன்னொரு அறைக்குப் போய் விடுகிறாள்.

‘‘புரிஞ்சுதான் பேசறியா?’’
‘‘புரிஞ்சுக்க வேண்டியது யாரு?’’

பூஜா அறையை விட்டு வெளியே வந்தாள். ‘‘ஆர் யூ ஃபைட்டிங்?’’ என்றாள் குழப்பமாய். ‘‘இல்லியே...’’ என்று அவன் அசட்டுச் சிரிப்புடன் சொல்லவும் க்ரேயான்ஸ் டப்பாவைத் தேடி எடுத்துக் கொண்டு போனாள்.அவனிடம் சட்டென்று ஒரு நிதானம். வேண்டாம். வெளியே போய்  விடலாம்.

‘‘பூஜா வரியா லைப்ரரிக்கு..?’’

வலது இடது கால்களில் மாற்றி அணிந்த செருப்புகளை சரி செய்தான். கீழே இருந்த காலி எண்ணெய் டப்பா இடறியது.லைப்ரரி இருக்கும் பூங்காவிற்கு வந்து விட்டான். மூவருக்குமே பிடித்த இடம். மணமான புதிதில் புவனாவோடு; பிறகு பூஜாவுடனும்.

‘சிறுவர் புத்தகம் இங்கே வச்சிருக்காங்க. ஆனா, இவளுக்குப் பிடிக்குமான்னு தெரியல. படங்கள் இருந்தா ரசிப்பாளோ..?’

குழந்தைகள் புத்தகங்கள் பகுதியில் அவளை நிற்க வைத்தான். ‘பிடிச்சிருக்கா’ என கேட்க நினைத்தவன் எதுவும் பேசவில்லை. பூஜாவிற்கு அப்போது ஐந்து வயது.
தானாக ஒரு புத்தகத்தை எடுத்தாள். விலங்குகள் பற்றிய சிறுவர் நூல். நூலகரிடம் கொடுத்து பதிவு செய்ய அவளையே அனுப்பினான்.

‘‘கிழிக்காம படிப்பியா?’’
‘‘ம்ம்...’’
திரும்பி வந்தபோது பூஜா அவனைக் குனியச் சொன்னாள். இருவருக்குமான உரையாடல் எனும்போது அப்படித்தான் செய்வாள்.
‘‘புக்கை எதுக்குப்பா கிழிக்கணும்?’’

சிரிப்பு வந்தது. பெரிய மனுஷி போல அவள் பேசிய தோரணை.
‘‘இல்லம்மா. யாரோ கிழிச்சிருப்பாங்க. அந்த பயத்துல அவர் சொல்லிட்டாரு...’’
‘‘எல்லாருமே அப்படி இருப்பாங்களா?’’

இருவர் மட்டுமே அன்று லைப்ரரி வந்திருந்தார்கள். புவனா வரவில்லை என்று சொல்லி விட்டாள். வாசிப்பில் அத்தனை ஆர்வம் இல்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போதும் அவளுக்கு. ‘‘போயிட்டு வாங்க அப்பாவும் பொண்ணும். நான் கொஞ்ச நேரம் ஃப்ரீயா இருக்கேன்...’’பூஜா இப்போது சந்தோஷமாய் இருந்தாள். புத்தகத்தை அணைத்துக்கொண்டு நடந்த போது அவள் முகத்தில் ஒரு பெருமிதம்.

‘‘கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போகலாமா...’’ என்றதும் தலையாட்டினாள். அமர்ந்ததும் புத்தகத்தைப் பிரித்தாள்.அவ்வளவுதான். அவளின் ஆழ்ந்த கவனம் அவனுக்கே ஆச்சர்யம் தந்தது. எதையோ கேட்க முயன்றவனை கைவிரலால் வாயைப் பொத்தி விட்டாள்.சிரிப்பு வந்தது. தமக்கென ஒரு அடையாளம் வைத்திருக்கிறார்கள் குழந்தைகள்.

அவன் பார்வையைத் திருப்பினான். சுற்றிலும் மரங்கள். பூங்கா ஓய்வு பெற்றவர்களின் சுக வாசஸ்தலமும் கூட. குடை போல் கவிழ்ந்திருந்த இடத்தில் அடியில் சிமென்ட் பெஞ்சுகள். பெரும்பாலும் அரசியல் பேச்சு. அதை எந்த அரசியல்வாதியாவது கேட்டால் மானஸ்தனாய் இருந்தால் தொங்கி விடுவான் முழம் கயிற்றில். ஆனால் அப்படி ஒரு அதிர்ஷ்டம் நமக்கு இல்லை.
அறுபது பிளஸ் இத்தனை ஆங்காரத்துடன் இருக்கலாமா... என்கிற படபடப்பு வந்து விடும். பொறி பறக்க அவர்கள் பேசும்போது. பேசுகிற இருவரை மற்றவர்கள் வந்து விலக்கும்போது திமிறுகிற காட்சி கண்கொள்ளாதது.

‘‘என்ன அப்பு... இவ்ளோ கோபம்..?’’
‘‘பின்ன என்னத்துக்கு அப்படி அவன் பேசுறான்?’’
‘‘விடுங்க... நாம பேசி என்ன ஆகப் போவுது?’’
‘‘பேசுனா ஒரு நியாயம் இருக்கணும்...’’
திரும்பி பூஜாவைப் பார்த்தான். அவளின் கவனம் முழுக்க புத்தகத்தில். சூரியன் மெல்ல இறங்கும் தருணம். மின் விளக்குகள் ஒளிரும் நேரம். ஆனால், எழுத்துக்கள் புலப்படாது.
‘‘வீட்டுக்குப் போலாமா பூஜா?’’
‘‘ஃபைவ் மினிட்ஸ் பா...’’

தலையை நிமிர்த்தாமலே அப்பாவின் சம்மதம் கிடைக்கும் என்கிற அசாத்திய நம்பிக்கையுடன் சொன்னாள்.
இதுவும் புவனாவுடன் சண்டை வரவழைக்கும் விஷயங்களில் ஒன்று.
‘‘ஏய் எந்திருச்சு வாடி...’’
‘‘டூ மினிட்ஸ் மா...’’
‘‘இப்ப வரியா இல்லியா?’’
‘‘ஒன்லி டூ மினிட்ஸ் மா...’’

பொறுக்க முடியாமல் சொன்னான். ‘‘டூ மினிட்ஸ் தானே விடேன்...’’
புவனா பரம்பரை விரோதியைப் பார்ப்பது போல் அவர்களைப் பார்த்தாள். ‘‘இதையேதான் அரை மணியா சொல்றா...’’
அத்தோடு நிறுத்தி இருந்தாலும் பரவாயில்லை. ‘‘அப்படியே வாரிசு. பசப்புறதுலயும். எல்லாத்துக்கும் ஒரு சால்ஜாப்பு...’’
பூஜா டிவியை அணைத்துவிட்டு சட்டென்று எழுந்து வந்துவிட்டாள்.

புவனாவின் அருகில் வந்து நின்றவளின் முகம் வேறு திசையில். இம்மாதிரி சில நிகழ்வுகளுக்குப் பின் அவனுக்கு உறைத்தது. பூஜா இன்னமும் குழந்தை இல்லை.
அப்போதுதான் லைப்ரரி ஞாபகம் வந்தது. புத்தகங்களை அறிமுகப் படுத்தினால் என்ன. ஒவ்வொரு ஞாயிறும் வந்து விடுவார்கள். அரை மணி ஒரு மணி என்று இங்கேயே பொழுது போகும். நடைதான். அதுவும் பூஜாவின் யோசனை.

முதலிரு முறை டூவீலரில் வந்தார்கள். அடுத்த வாரம் வண்டியை எடுத்தபோது ‘‘நடக்கலாம் பா...’’ என்றாள்.தெரு நிறைய ஆச்சர்யங்களை வைத்திருந்தது. பூஜாவிடம் கேள்விகளும் நிறைய. பதில் சொல்ல அவனுக்கும் அலுக்கவில்லை. அவனுக்குமே சில திகைப்புகளைத் தெரு வைத்திருந்தது.

‘‘இந்த வீட்டை இடிச்சுட்டாங்களா?’’

இடிக்கப்பட்டு புது வீடு எழும்பி இருந்தது. இங்கேதான் சுதா குடியிருந்தாள். ஒவ்வொரு முறை வீட்டைக் கடக்கும்போதும் அவன் பார்வை தன்னையும் அறியாமல் திரும்பும். திடீரென ஒரு நாள் வீட்டு வாசலில் தொங்கிய பூட்டு அதிர்ச்சி தந்தது. காலி செய்து போய் விட்டார்கள் என்கிற தகவல் அடுத்த நாட்களில்.திரும்பி பூஜாவைப் பார்த்தான். எழுத்து புரிபடாமல் புத்தகத்தைக் கிட்டே கொண்டு வந்து வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.அடுத்த பெஞ்சுகளில் இருந்தவர்களிடம் மெல்ல ஒரு அமைதி பரவியது.

இருட்டுத் திரை இறங்கியது. எட்டு மணிக்கு மேல் அங்கிருக்க இயலாது. ஒவ்வொருவராய் எழுந்திருக்க மனதின்றி ஊர்ந்து போனார்கள்.அரசியல் பெஞ்சில் இருந்தவர்களும் கலைய ஆரம்பித்தார்கள். வீட்டுக்குப் போய் என்ன செய்வார்கள் என்று யோசித்தான்.வீடு திரும்பியதும் அவர்களை ஒரு வெறுமை தாக்கப் போகிறது... மறுநாளின் விடியலுக்காய் இன்னொரு மாலை நேரத்திற்காய் அவர்கள் காத்திருக்க வேண்டும்.

மற்றவர்கள் நகர்ந்ததும் சண்டையிட்ட இருவரும் கடைசியாய் போனார்கள்.கீழே மஞ்சள் சரக்கொன்றை சிதறி நடைபாவாடை விரித்திருந்தது. அதன் மணம் சற்று காட்டமாகவே மூக்கில் இறங்கியது. ஒருத்தர் தடுமாற அடுத்தவர் கை பிடித்தார்.

‘‘ஏலே... பார்த்து...’’
‘‘ம்...’’
‘‘கணேசனும் போயிட்டான்... ஒரு வருஷம் பெரியவனா?’’
‘‘ஆமா...’’
‘‘போன வருஷம் ஆறு பேர் இருந்தோம்... மார்கழி மாசம் சுந்தரம் போனான்...’’
‘‘ம்...’’

கண்கள் மறைத்த அந்த அரை வெளிச்ச மயக்கத்தில் ஒருவர் இன்னொருவரைப் பார்த்து கசிந்தது அவரவர் மனசுக்கு மட்டுமே புரிந்திருக்கும்.
‘‘போடா... எதுக்கு நாம சந்திச்சு பழகினோம்... இப்படி பொசுக்குனு பிரிஞ்சு போகவா?’’

வாசல் கேட்டு மூடி இருந்தது. சுழல் கதவில் நுழைந்து வெளியே வரும்போது கொஞ்சம் குழந்தைத்தனம் எட்டிப் பார்த்தது அவர்களிடம்.
‘‘பென்ஷன் வாங்க என்னிக்கு போற?’’

‘‘சொல்றேன்... உன்னை விட்டு போக மாட்டேன்...’’
இரு திசைகளில் பிரிந்து அவர்கள் போனபோது ஆண் பெண் காதல் எல்லாம் சற்றே அலட்சியமாய் தெரிந்தது அப்போது!
பூஜா அவனைப் பற்றி உலுக்கினாள். ‘‘போலாமாப்பா...’’
‘‘ம்ம்...’’
‘‘ஆர் யூ ஓகே?’’
பூஜாவின் கரிசனக்குரலில் நெகிழ்ந்தான். குனிந்து தலையில் முத்தமிட்டான்.
‘‘அம்மா பாவம் தானேப்பா...’’

‘‘என்ன..?’’
‘‘நான் ஸ்கூலுக்கு போயிடறேன். நீ ஆபீஸ். அம்மாக்கு போர் அடிக்குதுன்னு நினைக்கிறேன்...’’
பூஜா பேசும்போது பதினைந்து இருபது வயசுப் பெண்ணாய் உயர்ந்து நின்ற பிரமை.
‘‘தாத்தா பாட்டிட்ட பேசறச்ச அம்மா அழுவாப்பா. ஏன் அழறேன்னு கேட்டா உன் வேலையைப் பார்த்துண்டு போன்னு என்னைத் திட்டுவா...’’
‘‘ஓ...’’

‘‘அம்மாக்கு என்னப்பா ப்ராப்ளம்..?’’
பூஜா தெரிந்து பேசுகிறாளா அல்லது குழந்தைத்தனமாய் கேட்கிறாளா. அவளையே வெறித்தான்.
‘‘தெரியலியேம்மா...’’நிஜமாகவே தெரியவில்லை என்கிற தவிப்பு அவன் குரலில்.

‘‘ஏதோ எண்ணெய் தீர்ந்து போச்சுன்னு மார்னிங் சொன்னா. வாங்கிண்டு போலாமா? சர்ப்ரைஸ் அம்மாக்கு...’’
‘‘ம்ம்...’’அம்மாவிற்குப் பிடித்த சாக்லேட் என்று பெரிய பார் ஒன்றையும் பூஜாவே எடுத்தாள்.

வீட்டுக்குள் நுழையும் போது ‘‘அப்பா நீயே தா அம்மாட்ட...’’ என்றாள் பூஜா. ‘‘அம்மா கண்ணு மூடிக்கோ ஒரு சர்ப்ரைஸ்...’’ என்றாள் புவனாவிடம்.
சாக்லேட் பட்டையை நீட்டியவனின் விரல்கள் அப்போது நடுங்கிக் கொண்டிருந்தன தன்னிச்சையாய்.

ரிஷபன்