என்னை ஏன் சாதிப்பெயரைச் சொல்லி விமர்சிக்கிறீங்க..?
‘பாப்கார்ன்’ என்னும் மலையாளப் படத்தில் ஒரு சின்ன ரோல், அடுத்து ‘தீவண்டி’ படத்தின் ‘ஜீவாம்சமாய்...’ பாடல் மூலம் மலையாள ரசிகர்களின் ஜீவனை சற்றே அசைத்துப் பார்த்த சம்யுக்தா, தொடர்ந்து ‘களரி’, ‘ஜூலைக் காற்றில்’ என தமிழிலும் நடித்துவிட்டு அமைதியானார். பின்னர் மீண்டும் மலையாளத்தில் சில படங்களில் நடித்தவர் உடல் எடையைக் குறைத்து ஃபிட்டானார். விளைவு... தமிழில் ‘வாத்தி’, தெலுங்கில் ‘பீம்லநாயக்’, ‘பிம்பிசாரர்’ என பிசியானார்.
எல்லாவற்றுக்கும் சிகரமாக, இப்போது தெலுங்கு பாக்ஸ் ஆபீசில் கலக்கிக் கொண்டிருக்கும் ‘விருபாக்ஷா’வில் சம்யுக்தாவின் நடிப்பு பேசுபொருளாகி இருக்கிறது.
அழகான ராட்சசிக்கு மிரட்டலான பிசாசு கெட்டப் எப்படி இருந்தது..?
ஆரம்பத்தில் ‘விருபாக்ஷா’ இயக்குநர் கார்த்திக் வர்மா என்னிடம் இந்தக் கதை சொல்லும் போது நம்ம ஸ்டைலிலேயே இல்லையே... இது ஒர்க் அவுட் ஆகுமா இல்லையா... இப்படி நிறைய கேள்விகள் மைண்ட்ல இருந்துச்சு.
ஆனா, ஒரு கட்டத்திலே ஓகே, ஏன் முயற்சி செய்யக் கூடாதுனு தோணுச்சு. ஏன்னா எனக்கான கேரக்டர் பலமா இருந்துச்சு. கதையே என் மேலேதான் பயணிக்கப் போகுதுன்னு தெரிஞ்சது. அதனாலேயே ஓகே சொல்லிட்டேன். ஒரு நடிகையா எல்லா கேரக்டரும் நடிக்கணும்ன்னு நினைக்கிறேன். ‘ஹீரோயின் வித் கோல்டன் லெக்’ என அழைக்கப்படுவதை எப்படிப் பார்க்கறீங்க? ‘ஹீரோயின் வித் கோல்டன் லெக்’ (Heorine with Golden Leg) பொதுவாக தொடர் வெற்றிப் படங்களில் நடித்து மூன்றாவது படமும் பிளாக் பஸ்டர் ஹிட்டானால் மட்டுமே அந்த நடிகைக்கு விருதாக - கெளரவமாக - வழங்கப்படும்.
இதை ஒரு பழமையான சென்டிமென்டாதான் பார்க்கறேன். என்னைப் பொறுத்தவரை தங்கக் கால்களோ, இரும்புக் கால்களோ... ஒரு படத்தின் வெற்றி தோல்வி எல்லாம் எப்படி நாயகியைப் பொறுத்து அமையும்..? கதை, திரைக்கதை... இதெல்லாம்தானே முக்கியம்... இதை நாம ஏத்துக்கிட்டு கொண்டாட ஆரம்பிச்சா, நாளைக்கு படம் ஓடலைன்னாலும் நம்ம பெயர்தான் அடிபடும். அதையும் ஏத்துக்க தயாரா இருக்கணும்.
அதனால இந்த செல்லப் பெயர் அல்லது பாக்ஸ் ஆபீஸ் பொருத்து கொடுக்கப்படற பட்டம் எல்லாம் வேண்டாம். ஓடாத படமா இருந்தாலும் நம்ம நடிப்பு அங்கே பாராட்டப்பட்டாலே, நாம நம்ம வேலையை சரியா செய்திட்டோம்னுதான் அர்த்தம்.
‘விருபாக்ஷா’ படத்தின் வெற்றி மூலம் நீங்க கத்துக்கிட்ட பாடம் என்ன?
சினிமாவில் மட்டும் எதையும் நாம முடிவு செய்யவே முடியாது. மக்கள் எப்ப எதை ஏத்துக்குவாங்க, எதை கொண்டாடுவாங்கன்னு உறுதியா சொல்லவே முடியாது. நல்ல வாய்ப்புகள்னு தெரிஞ்சா யோசிக்காம நம்ம சிறப்பான உழைப்பைக் கொடுத்திடணும். அதைத்தான் கத்துக்கிட்டேன்.
‘விருபாக்ஷா’ நந்தினிக்கும், சம்யுக்தாவுக்கும் ஏதேனும் ஒற்றுமை உண்டா?
நான் எதையுமே கொஞ்சம் பக்குவமா பார்த்துதான் முடிவு செய்வேன். எடுத்தோம், கவிழ்த்தோம்னு யோசிக்க மாட்டேன். ஆனா, நந்தினி எதையுமே யோசிக்காம முடிவு எடுத்து ஒரு பெரிய ஆபத்தையே உருவாக்குகிற கேரக்டர். ரியல் சம்யுக்தாவைக் காட்டிலும் படு எனர்ஜிடிக் நபர். ஒரே ஒற்றுமை - இந்த சம்யுக்தாவும் கேரளா, பாலக்காடு பக்கத்திலே ஒரு கிராமத்தில் வளர்ந்தவ என்பது.
உங்களுடைய அடுத்த படம் எப்படி இருக்கும்?
‘விருபாக்ஷா’ பட ரிசட்ல்டுக்காக காத்திருந்தேன். ஏன்னா இதுவரைக்கும் எடுக்காத கதை, நடிக்காத கேரக்டர், மக்கள் என்னை எப்படி ஏத்துக்கறாங்கன்னு பார்க்கணும்னு யோசிச்சேன். சில கதைகள், சில பெரிய புராஜெக்ட்கள் பேசியிருக்காங்க. நந்தமூரி கல்யாண்ராம் சார் கூட நடிச்ச ‘டெவில்’ பட வேலைகள் எல்லாம் முடிஞ்சிடுச்சு. படத்தின் வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் கூடிய சீக்கிரம் வரும். மற்ற படங்கள் இனிமேதான் முடிவு செய்யணும்.
சமீபத்திய மலையாள ‘பூமராங்’ படத்தின் போது, நடிகர் ஷைன் டாம் சாக்கோ உங்களைப் பற்றி கூறிய சர்ச்சை கருத்துக்கு உங்கள் பதிலென்ன?
என்ன சொல்றதுனு தெரியல... ஒரு பட புரமோஷனுக்கு வரலை என்கிறதுக்காக ஏன் என்னுடைய சாதிப் பெயரை இழுத்துப் பேசணும்..? இன்னமும் சிலர் என்னை ‘மேனன்’னு கூப்பிடுவதை என்னால் ஏத்துக்க முடியலை.
கொஞ்சம் கொஞ்சமா மாறும்ன்னு நினைக்கும்போது இப்ப ஒரு படக் குழுவே இப்படி என்னுடைய சாதிப் பெயரைச் சொல்லி என்னைப் பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன இருக்குனுதான் புரியலை.
தமிழ், தெலுங்கு இரண்டுமே நல்லா பேசுறீங்களே?
நான் மொழிகள் கத்துக்கறதும் சினிமா மூலமாதான். குறிப்பா பாடல்கள் மூலமா வரிகளைக் கேட்டுக் கேட்டு தெரிஞ்சு, அதற்கு அர்த்தம் கண்டுபிடிச்சுதான் கத்துக்கறேன். இன்னமும் கத்துக்கிட்டுதான் இருக்கேன். சீக்கிரம் ரெண்டு மொழிகளிலும் டப்பிங் செய்யற அளவுக்கு வந்துடுவேன்னு நம்பறேன். ஏன்னா தெலுங்கிலே கதை கேட்கவும், கேரக்டரில் நடிக்கவும் கூட சில சமயங்கள்ல டிரான்ஸ்லேட்டர் தேவைப்படறாங்க.எந்த ஆர்ட்டிஸ்ட்டும் இப்படி இருக்கக் கூடாதுனு நினைக்கறேன்.
ஷாலினி நியூட்டன்
|