2023 ஆண்டுதான் இந்திய எதிர்கால சினிமாவின் தொடக்கமா?
ஒரு காலத்தில் இந்திய சினிமாவின் ராஜாவாகத் திகழ்ந்த பாலிவுட் சினிமா கடந்த ஓரிரு வருடங்களாகவே அதலபாதாளம் நோக்கிப் பாயத் தொடங்க, பச்சக் என அவ்விடத்தைக் கவ்விக் கொண்டு பட்டறையை விரித்தது தென்னிந்திய சினிமாக்கள். எங்கே நடந்தது இந்தத் திருப்புமுனை? ஏன் இந்த மாற்றம்..? தொடர்ந்து அக்ஷய் குமார், சல்மான்கான் போன்ற பாக்ஸ் ஆபீஸ் நடிகர்களின் படங்களே தொடர் தோல்விகளைச் சந்தித்து சறுக்க, அமீர்கானின் படமான ‘லால் சிங் சத்தா’ படமேனும் தொய்ந்து போன பாலிவுட்டுக்கு சத்து ஏற்றும் என நம்பினர். அதற்கும் மதம், சாதி என பல்வேறு அடையாளங்கள் ஒருசேர படம் வேறு விதமான சர்ச்சைகள், சறுக்கல்களில் சிக்கித் தவித்தது.
என்ன காரணம்... எங்கே நிகழ்ந்தது இந்த மாற்றம்... ஏன் 2023ம் ஆண்டு எதிர்கால இந்திய சினிமாவின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது... தென்னிந்திய சினிமா எந்தத் தருணத்தில் இந்திய சினிமாவை ஆளத் தொடங்கியது...?
ரசிகனின் பார்வை:என்றோ விழித்துக்கொண்ட தென்னிந்திய ரசிகர்களின் பார்வை மாற்றம் இப்போதுதான் பாலிவுட்டில் நிகழ ஆரம்பித்துள்ளது. ‘இனி கட்டுக்கதை எல்லாம் ஆகாது, நான் என்னை மறந்து உட்கார எனக்கு நீ என்ன காட்டப் போகிறாய்? இந்த மாஸ், ஹீரோயிஸம், வர்ணஜால டூயட்கள், நடிகைகளின் ஜீரோ இடைகள் எல்லாம் போதும்...’ என இந்தி ரசிகர்கள் புதிதாகத் தேடத் தொடங்கிய காலத்தில்தான் ‘கே.ஜி.எஃப்’ வெளியானது. திரையரங்கில் நேரம் ஒதுக்கிப் பார்க்கும் மக்களுக்கு அதன் பிரம்மாண்டத்தை கண்களுக்கு விருந்தாக்கியது. ஏற்கனவே இதற்கு அடித்தளம் போட்டுவிட்ட ராஜமௌலியின் ‘பாகுபலி’ திரைப்படத்தால் இந்தி ரசிகன் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களுமே அப்படியான படங்களுக்கே காத்திருக்க ஆரம்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து வெளிவந்த ‘கே.ஜி.எஃப்’ ஹிட் ஆக , அடுத்து சலனமே இல்லாமல் இங்கே ‘விக்ரம்’ ஹிட். லோகேஷ் கனகராஜ் என்னும் இளைஞனால் ‘மல்டிவெர்ஸ்’ என்னும் ஹாலிவுட்டில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட புது சாப்டர் அறிமுகமாகி இந்தி சினிமா தயாரிப்பாளர்களின் பார்வையும் கூட தென்னிந்தியாவில் விழத் தொடங்கியது. ஒரு காலத்தில் இந்திப் படங்கள் டப்பிங், ரீமேக் என தென்னிந்தியாவில் வெளியாகின. அந்தக் காலம் இனி இல்லை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்த தென்னிந்தியப் படங்கள் இப்பொழுது பாலிவுட்டில் டப்பிங், ரீமேக் என புது அத்தியாயத்தை எழுத ஆரம்பித்துள்ளன.
பாலிவுட் செய்த தவறு:ஏன் தென்னிந்தியப் படங்கள் மொழி கடந்து பலராலும் பார்க்கப்பட்டன, குறிப்பிட்ட படங்கள் ஹிட்டானது ஏன், இதுதான் மேஜிக் எனத் தெரிந்தும் கூட அந்த மேஜிக்கை ஏற்றுக்கொள்ள பாலிவுட் உலகம் ஏன் தயாராக இல்லை என்பதுதான் வினாக்கள். தென்னிந்தியப் படங்களை இந்தியில் ரீமேக் செய்யும்போது அப்படத்தின் ஆன்மாவைச் சிதைக்க ஆரம்பித்தனர் என்பதுதான் இதற்கான விடை. இங்கே இருந்த ஆண்களின் பாத்திரங்களில் பெண் கேரக்டர்களைத் திணித்தனர். தேவையற்ற ஹீரோயிஸங்கள், பாடல்கள், கிளாமர் எனச் சேர்த்து ஒவ்வொரு ஃபர்னிச்சராக உடைத்தார்கள். ‘ஜிகர்தண்டா’ பட இந்தி ரீமேக்கான ‘பச்சன் பாண்டே’ படத்தில் சித்தார்த்துக்கு பதிலாக நடிகை கீர்த்தி சனோன்; ‘கைதி’ பட ரீமேக்கான ‘போலா’ படத்தில் நரேன் பாத்திரத் திற்கு பதிலாக தபு... என மாற்றங்கள் செய்கிறேன் பேர்வழியாக சிலபல தவறுகளைச் செய்தனர். படத்தின் ஓட்டத்துடன் சென்ற பாடல்கள், கொண்டாட்ட மொமெண்ட்களுக்கும் தேவையில்லாத செலவுகளை அடுக்கி, கதையின் அழகியலை காலி செய்தனர்.
போதாத குறைக்கு ‘டிரைவிங் லைசென்ஸ்’ என்னும் ஆகச்சிறந்த மலையாள மாஸ் படத்தைக் கையில் எடுத்து ‘செல்ஃபி’ என இந்தியில் மாற்றி காலாவதி ஆக்கினர். இதனால் அக்ஷய் குமாரின் மார்க்கெட்டே ஆட்டம் கண்டிருக்கிறது.
இதுகூட பரவாயில்லை. ‘அவதார் 2’ போன்ற பிரம்மாண்ட படங்களையே டிரோல் மெட்டீரியலாக மாற்றி ‘அட கதை எங்கப்பா’ எனக் கேட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் ‘ராம் சேது’ என்னும் படத்தால் மேலும் தனக்குத்தானே ஆப்பு அடித்துக்கொண்டார் அக்ஷய். இப்பொழுது துவண்டு கிடந்த பாலிவுட் நிலையை ‘பதான்’ படம் மூலம் தூக்கி நிறுத்தியிருக்கிறார் ஷாருக்கான். இந்நிலையை அடுத்தடுத்து பாலிவுட் தக்க வைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
பிரம்மாண்ட சினிமாக்களின் வரவு: தொழில்நுட்ப வளர்ச்சி, ஓடிடி என்னும் பெயரில் கைக்குள் இருக்கும் ரிமோட், மொபைல்... என சினிமாவே உள்ளங்கைக்குள் அடங்கி விட்டது. தியேட்டரில் சென்று படம் பார்க்கும் பழக்கம் குறையத் தொடங்கிய சூழலில் ஹோம் தியேட்டரில் கிடைக்காத பரவச உணர்வை தியேட்டரில் தர வேண்டிய கட்டாயத்துக்கு திரையுலகம் ஆளானது.போதாத குறைக்கு உலகின் எந்த மூலையில் தயாரான சூப்பர் ஹீரோ படங்களும், ஆக்ஷன் படங்களும் அனைத்து மொழிகளிலும் செப்பத் தொடங்கிவிட்டன.
ஆக, மக்களைத் திரையரங்குக்கு வரவைக்க வேண்டுமென்றால் கதையம்சத்துடன் பிரம்மாண்டமும், ஆச்சர்யப்படுத்தும் விஷுவல் அம்சங்களும் தேவை என்பதை படைப்பாளிகள் உணரத் தொடங்கினர்.இதன் வெளிப்பாடுதான் ‘பாகுபலி’ தொடங்கி ‘கே.ஜி.எஃப்’, ‘விக்ரம்’, ‘பொன்னியின் செல்வன்’ வரை நீள்கின்றன. எனினும் அதற்கும் கூட ஆப்பு விழுந்தது ‘அவதார் 2’ என்னும் படம் மூலம். அவ்வளவு பெரிய டெக்னாலஜியில் படமெடுத்தும் கூட கதை என ஒன்றில்லையே என்னும் விமர்சனங்களே மிஞ்சின. உலகளாவிய மார்க்கெட் என்பதால் படம் நஷ்டத்தில் இருந்து தப்பித்திருக்கிறது.
இனி என்ன செய்ய என்ற கேள்விக்குத்தான் பதிலானது கன்னடத்தில் ‘காந்தாரா’, தமிழில் ‘லவ் டுடே’, ‘விடுதலை பாகம் 1’, மலையாளத்தில் ‘ரோமாஞ்சம்’, தெலுங்கில் கடைசியாக வந்த ‘விருபாக்ஷா’ படங்கள். காரணம், இவை யாவும் பெரிய பட்ஜெட் பிரமாண்டப் படங்கள் அல்ல. பெரும் நடிகர்களோ அல்லது கமர்சியல் மாஸ் காட்சிகளோ இல்லாத படங்கள். முழுக்க முழுக்க கதைக்குள் பிரம்மாண்டம் காண்பித்து ஜெயித்த படங்கள் இவை.
கதைதான் ஹீரோஇதுதான் இப்போது பாலிவுட் தயாரிப்பாளர்களின் தாரக மந்திரம். காரணம், கொரோனா சமயத்திலும்கூட ‘சூரரைப் போற்று’, ‘ஜெய் பீம்’, ‘சார்பட்டா பரம்பரை’, ‘மலையன் குஞ்சு’, ‘புரோ டாடி’ என அனைத்து மொழிகளிலும் பெரிய பெரிய நடிகர்களே நல்ல கதைகளுக்குள் தங்களை இணைத்துக்கொண்டு வெற்றி பெற்றனர்.
இதனால் நல்ல கதை வேண்டும் என இந்தியில் தேடிய தயாரிப்பாளர்களுக்கு மீண்டும் மீண்டும் தென்னிந்திய ரீமேக் கதைகள்தான் கிடைத்தன. விளைவு-ஏன் தென்னிந்திய கதை மாந்தர்களை இங்கே கொண்டுவரக் கூடாது என தென்னிந்திய இயக்குநர்கள் பாலிவுட்டில் இறக்குமதி செய்யப்பட்டனர். ஷாருக்கானின் ‘ஜவான்’ தமிழ் - இந்தி கொலாபரேஷன் எனில் ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ படம் தெலுங்கு - இந்தி கலவை. இதற்கிடையிலும் கூட ஒன்றிரண்டு இந்திப் படங்கள் தப்பிப் பிழைத்து இங்கே ரீமேக்ஆனதும் (ஆர்ஜே பாலாஜியின் ‘வீட்ல விசேஷம்’ அப்படி ரீமேக் ஆனது), சில இந்திப் படங்கள் கொண்டாடப்பட்டதற்கும் காரணம் ஆயுஷ்மான் குரானா என்னும் இளம் நடிகர். ஆனால், அவருக்கான அந்தஸ்தை இன்னும் இந்தி சினிமா உலகம் கொடுக்கவில்லை.
இந்த மொழி கடந்த இயக்குநர் கலவைகளை தென்னிந்திய சினிமா 2015 காலகட்டத்திலேயே கண்டறிந்து ‘36 வயதினிலே’, ‘ ‘பாபநாசம்’ எனப் படங்கள் கொடுத்து ஹிட் சரித்திரம் எழுதினர். எல்லாவற்றையும் விட பெருகி விட்ட ஓடிடி தளங்களால் தென்னிந்தியப் படங்களின் அருமையை இந்தி ரசிகர்கள் உணரத் தொடங்கிவிட்டனர். இதனாலேயே பாலிவுட் இத்தனை நாளும் கட்டிக் காத்த சூத்திரங்கள் பொய்த்தன. இதன் விளைவுதான் இந்தியப் படங்களின் உருவாக்கமும் இந்திய நடிகர்களின் தோற்றமும்! இந்திய நடிகர்களின் உதயம்:
பன்மொழிகளில் வெளியிட்டால்தான் பெரும் லாபம் ஈட்ட முடியும். இதற்கு நடிகர்களின் பண்டமாற்றம் நிகழ வேண்டும். இதை முதலில் புரிந்துகொண்டது தென்னிந்திய திரையுலகம்தான்.
நல்ல கதை செய்ய நபர்கள் கிடைத்தாலும் அதனை சரியாக வெளிப்படுத்த நடிகர்கள் தேவை என்னும் அடிநாதத்தால் பகத் பாசில், விஜய் சேதுபதி, வரலட்சுமி, சமுத்திரக்கனி போன்றோரை மற்ற மொழிகள் கடன் வாங்கத் தொடங்கின.
எல்லா மொழி ரசிகனையும் பார்க்க வைக்க வேண்டும் என்னும் சூழல் ‘பான் இந்தியா’ என்னும் வார்த்தையை அறிமுகப் படுத்தியது. அத்தனை மொழிகளுக்கும் நடுநிலையாக ‘ஆர் ஆர் ஆர்’ முழுமையான இந்திய நடிகர்களின் பங்கேற்பில் வெளியாகி ஆஸ்கர் வரை மாயம் செய்தது. வித்தியாசமான கதைகளும், கதை மாந்தர்களும் மீண்டும் பிறந்தது இந்த 2022 - 2023 கால கட்டத்தில்தான்.
ஹிட் கொடுத்த இயக்குநர்கள் உருவாக்கிய சில கதாபாத்திரங்கள் மொழி தாண்டி, எல்லை தாண்டி பல ஊர்களில், பல மொழி சமூக வலைத்தளங்களில் ஜொலித்தனர். இதனால் பாலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸ் நாயகர்களே கூட இந்த இந்திய நடிகர் என்னும் கனவுக்கு மயங்கத் தொடங்கினர். அப்படி நிகழ்ந்ததுதான் மலையாள ‘லூசிஃபர்’ படத்தின் தெலுங்கு டப்பிங்கில் சல்மான்கானே சிறப்புத் தோற்றத்தில் நடித்த சம்பவம்.
இந்தக் கதை, கதை மாந்தர்களுக்கான தேடல், இதிகாசங்கள், காப்பியங்கள் வரை போய் நின்றது. இதோ அந்த டிரெண்டை ‘பொன்னியின் செல்வன்’ ஆரம்பித்து வைத்துவிட்ட நிலையில், ‘எங்ககிட்டேயும் சீப்பு இருக்கு’ மோடில் பல மொழி இயக்குநர்களும் கூட தங்கள் மொழிக் கதைகளையும், நாவல்களையும் புரட்டத் தொடங்கியுள்ளனர்.
இனி சினிமா என்பது நடிகர்களுக்காக இல்லை. ரசிகர்களுக்காக, பார்வையாளனுக்காக. ஆம். பார்வையாளனுக்கு இனி அனைத்தும் விளங்கும், எல்லாமே புரியும், எதை ஏற்றுக்கொள்ள வேண்டும், எதை வேண்டாம் என தூக்கி வீச வேண்டும்... என்பதையெல்லாம் கற்றுக் கொண்டான்.
இப்படி ரசிகனும், சினிமாவும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து தங்களைத் தாங்களே அப்டேட் செய்து கொண்ட வருடங்கள் இந்த 2022 - 2023தான். மேலும் பெருகிவிட்ட சமூக வலைத்தளங்களால் ஒரு சினிமாவின் ரிசல்ட் ஒருமணி நேரத்தில் தெரிந்துவிடும் என்னும் பயமும் கூட நல்ல படங்கள் வருகைக்கு காரணமாகிக் கொண்டிருக்கின்றன. இன்னும் இது பல மாற்றங்கள், பல்வேறு நவீன தொழில்நுட்பங்களைக் கூட இந்தியாவிற்குள் கொண்டுவரலாம் என்பது மட்டும் உறுதி. ஒரு பெரும் சமூகத்திற்கு வாழ்வாதாரமே பெற்றுத் தரும் அளவிற்கு சினிமா சக்தி வாய்ந்தது என்பதற்கு உதாரணமாக ‘த எலிஃபன்ட் விஸ்பெரர்ஸ்’ படம் நிரூபித்ததும் இந்த வருடம்தான்.
‘ஆர் ஆர் ஆர்’ படத்தில் இடம்பெற்ற ஒரு 5.35 நிமிட பாடல் செய்த மாயத்தால் உலகளாவிய மார்க்கெட் நமக்குக் கிடைத்ததும் இந்த வருடம்தான்.
இத்தனை குழப்பங்கள், இத்தனை புரிதல்கள், சினிமா தொழிலில் மல்டிபிளக்ஸ் என்னும் புத்துயிர், ஓடிடி வியாபாரம், ஆடியோ மார்க்கெட் என அனைத்தும் ஒருசேர முழுமையாகிக் கொண்டிருப்பதும் இந்த 2023தான். அதனாலேயே இந்த 2023, எதிர்கால இந்திய சினிமாவின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது.
ஷாலினி நியூட்டன்
|