பட்டையைக் கிளப்பும் சின்னத் திரையின் பாச மலர்!



சன் டிவியில் தொடர்ந்து வெற்றிகரமாக வலம்வந்து கொண்டிருக்கும் சூப்பர் டூப்பர் சீரியல் ‘வானத்தைப்போல’. சினிமாவிற்கு ஒரு ‘பாசமலர்’ என்றால் சீரியலுக்கு ‘வானத்தைப்போல’ எனச் சொல்லும் அளவுக்கு அண்ணன், தங்கை பாசத்தை வித்தியாசமாகக் காட்டி மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றுள்ள தொடர் இது.
 இப்போது இந்தத் தொடர் 750 எபிசோடுகளை எட்டவிருக்கிறது. இந்நிலையில், ‘வானத்தைப்போல’ குடும்பத்தை ஒரு ஷூட்டிங் ஹவுஸில் சந்தித்தோம்.   முதலில், ஹீரோயின் துளசிக்கு மாமனாராக சங்கரபாண்டி கேரக்டரில் நடிக்கும் மகாநதி சங்கர் நம்மிடம் பேசினார்.

‘‘இரண்டரை ஆண்டுகள் போனதே தெரியல. நான் இயக்குநர் திருமுருகனுக்கு சன்டிவியில் ‘பஞ்சவர்ணக் கிளி’, ‘சத்யா’, ‘நாதஸ்வரம்’னு நிறைய சீரியல்கள் பண்ணியிருக்கேன். பிறகு, ‘மாயா’வில் நடிச்சேன். இப்ப ‘வானத்தைப் போல’ தயாரிப்பாளர் உதய்சங்கர் சார் கூப்பிட்டு பேசினார்.
அப்படியாக இந்த சீரியல் உள்ளே வந்தேன். ஆரம்பத்துல என் கேரக்டர் ஒரு வில்லனாகத்தான் என்ட்ரி ஆச்சு. என் மகன் ராஜபாண்டி. என் மனைவியாக செல்லத்தாயி. இந்த மூணு கேரக்டரும் ஸ்ட்ராங்காக நின்னது. அதேமாதிரி சின்ராசு கேரக்டர், துளசி கேரக்டர், அவங்க மாமாவாக வர்ற முத்தையா கேரக்டர், அவர் மனைவியாக நடிக்கிற கமலா கேரக்டர் எல்லாமே ரொம்ப வலுவானது.

அண்ணன், தங்கச்சி பாசத்தை இந்த டிரெண்டுக்கு ஏற்ப மாற்றி சிறப்பாக பண்றோம். இதுல மக்கள் தர்ற ஆதரவுதான் வேற லெவலாக இருக்கு. அப்புறம் ஆர்ட்டிஸ்ட்கள், டயலாக் ரைட்டர், கேமராமேன், இயக்குநர் எல்லாருமே சிறப்பாக அமைஞ்சிருக்காங்க. அதனால வெற்றிகரமாகப் போகுது...’’ என மகாநதி சங்கர் நிறுத்த, அவர் மனைவி செல்லத்தாய் கேரக்டரில் நடிக்கும் செந்தில்குமாரி தொடர்ந்தார்.

‘‘சன் டிவியில் இதுதான் என் முதல் சீரியல். ரொம்ப சந்தோஷமாக இருக்கு. இதுல என் கேரக்டருக்கு அவ்வளவு ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு. என்னுடைய குரலும், பேச்சு மொழியும் ரொம்பப் பிடிச்சிருக்குனு நிறைய பேர் சொன்னாங்க. இப்ப எல்லோருமே செல்லத்தாயாகப் பார்க்கிறாங்க...’’ என்றார். அப்போது, க்ளோஸ்அப் ஷாட் முடித்து வந்தார் ராஜபாண்டி கேரக்டரில் வரும் கார்த்தி. ‘‘சன் டிவியில் வொர்க் பண்றது மறக்கமுடியாதது. ஏன்னா, நடிக்கிறவங்களுக்கு தேவை எக்ஸ்போஷர்.

அந்த நடிப்புக்கு என்ன தேவையோ... என்ன கேரக்டர் கொடுத்தால் ஸ்கோர் பண்ணுவாங்களோ அதைத் தெரிஞ்சு அந்தக் கேரக்டரைக் கொடுத்து நடிக்க வைச்சிருக்காங்க. அதை நான் சிறப்பாக செய்திருக்கேன்னு நினைக்கிறேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கு. இதுக்கு முன்னாடி சன் டிவியில் நிறைய சீரியல்கள் பண்ணியிருக்கேன். ‘ராஜகுமாரி’, ‘வம்சம்’, ‘பாசமலர்’, ‘குலதெய்வம்’ உள்ளிட்ட நிறைய சீரியல்கள். அதுல நான் நடிச்ச சின்னச் சின்ன கேரக்டருக்கு மக்கள் நல்ல வரவேற்பு தந்திருக்காங்க. ஆனா இந்த கேரக்டருக்கு மக்கள் ஆதரவு வேற லெவல்தான்.

ஏதாவது ஃபங்ஷனுக்கு போகும்போது, ‘துளசியை கைவிட்டுடாதேப்பா. நல்ல பொண்ணுப்பா’னு சொல்வாங்க. அந்தக் கேரக்டராகவே மக்கள் எங்கள பார்க்கிறாங்கனு புரிஞ்சது. சீரியல் வெற்றிகரமாக போயிட்டு இருக்கு.

அதுக்குக் காரணம் மக்கள்தான்...’’ என நெகிழ்ந்தார் கார்த்தி.  அந்நேரம், காட்சிக்குத் தயாராகி வந்த ஹீரோயின் துளசியிடம் பேசினோம். ‘‘தமிழ்ல என்னுடைய முதல் சீரியல் இது. பொதுவாக சீரியல்கள் எல்லாமே பெண்கள் சார்ந்து போகும். ஆனா, இது அண்ணன், தங்கச்சி பாசத்தை மையப்படுத்தியது. வித்தியாசமான கன்டென்ட். நான் இதுக்குள்ள வந்ததே ரீபிளேஸ்மென்ட் கேரக்டர்தான். அப்படியும் எனக்கு அன்பு தந்திருக்காங்க.  

முதல்ல, ‘வானத்தைப்போல’ல லீட் கேரக்டர் ரீபிளேஸ்மென்ட் ஆகுதுனு சொல்லி நான் பெங்களூர்ல இருக்கும்போது கால் பண்ணினாங்க. அப்ப முதல் சீரியலே இப்படி ரீபிளேஸ்மென்ட் கேரக்டர் பண்ணினா நல்லாயிருக்குமானு மைண்ட்ல தோணுச்சு. எப்படி மக்கள் ஏத்துப்பாங்கனு இருந்தது.

ஆனா, எல்லாமே மாறுச்சு. முதல்ல இந்தப் பொண்ணு நல்லா பண்ணும்னு தயாரிப்பு தரப்புல நம்பிக்கை வச்சாங்க. சேனல்ல காவேரி மேடம்கூட ‘இந்தப் பொண்ணு பண்ணிடுவாங்க. போட்டுக்கோங்க’னு சொன்னாங்க. அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றியிருக்கேன்னு நினைக்கிறேன். அப்புறம், சன் டிவியில் ஹீரோயினாக நடிக்கிறது என் கனவாக இருந்தது. அதுவும் நிறைவேறியிருக்கு.

இதுல நடிக்கிற பலரும் மூவி ஆர்ட்டிஸ்ட்ஸ்தான். நான், ராஜபாண்டி மட்டும்தான் சீரியல் ஆர்ட்டிஸ்ட்ஸ். கோமதி அம்மா, மகாநதி சங்கர் சார், செந்தில்குமாரி அம்மா,  அண்ணா உள்ளிட்ட பலரும் படங்கள் பண்ணினவங்க. ஆனா, யாரும் சீனியர், சினிமா ஆர்ட்டிஸ்ட்னு நினைச்சு பழகுறதே கிடையாது. ரொம்ப ஃப்ரண்ட்லியா என்கரேஜ் பண்ணுவாங்க...’’ என
உருகினார் மான்யா.   

அவரைத் தொடர்ந்தார் வள்ளி கேரக்டரில் நடிக்கும் தட்சணா. ‘‘என் முதல் நெகட்டிவ் கேரக்டர் ‘வானத்தைப்போல’தான். இதுவரை நான் பாசிட்டிவ் ரோல்தான் பண்ணிட்டு இருந்தேன். எனக்கும் நெகட்டிவ் ரோல் பண்ணணும்னு ரொம்ப ஆசை. ஏன்னா, அதுலதான் நாம் நிறைய ஷேட்ஸ் எடுத்திட்டு வரமுடியும். நடிக்கிறதாகட்டும், பேசுகிற ஸ்டைல் ஆகட்டும் எல்லாத்தையும் நெகட்டிவ் ரோல்ல கொண்டு வரமுடியும். அந்த வாய்ப்பு இந்த சீரியல்ல எனக்கு கிடைச்சது ரொம்ப சந்தோஷமாக இருக்கு...’’ சிரித்தார் தட்சணா.

அவரின் அம்மாவாக கோமதி கேரக்டரில் நடிக்கும் சுஜாதா, ‘‘இப்ப என்னை ‘ஈசன்’ சுஜாதா அல்லது டான்ஸ் மாஸ்டர் சுஜாதானு சொன்னால் யாருக்கும் தெரியாது. ‘வானத்தைப்போல’ கோமதினு சொன்னால் ஈஸியா கண்டுபிடிக்கிறாங்க. அந்தளவுக்கு என் கேரக்டர் ரீச்சாகி இருக்கு.

இந்த ‘வானத்தைப்போல’ சீரியல்ல கமிட்டாக காரணமாக இருந்த கலைமணி சார், எங்க தயாரிப்பாளர், சேனல்ல ரவி சார் எல்லோருக்கும் நன்றி. ஏன்னா, நான் நாற்பது ஆண்டுகாலமாக சினிமாவில் இருக்கேன். முப்பது ஆண்டுகளாக டான்ஸ் மாஸ்டராக பணிசெய்தேன். அப்ப கிடைக்காத அங்கீகாரம் இந்த ரெண்டு ஆண்டுகளாக நம்பமுடியாத அளவில் கிடைச்சிருக்கு. இது என் கேரக்டருக்கு கிடைச்ச வெற்றிதானே.

நான் இந்த சீரியலுக்குள்ள வரும்போது என்ன கேரக்டர்னு எதுவும் தெரியாது. ஆனா, செட்டுக்கு வந்தபிறகு முதல்ல இயக்குநர் ஆர்.சி சார் இருந்தார். அவர்தான், ‘இந்தக் கேரக்டர் ‘மண்
வாசனை’ காந்திமதி அம்மா, ‘முதல்மரியாதை’ வடிவுக்கரசி அம்மா மாதிரி வாயைத் திறந்தால் பேசிட்டே இருக்கணும்னு சொல்லி நடிச்சும் காட்டினார். அவர் பண்ணினதை சிறப்பாகச் செய்தேன்.

இதன்பிறகு இயக்குநராக ஆர்.கே சார் வந்தார். அவரும் வேற லெவல். என்ன வேணுமோ அதை பெஸ்ட்டாக வாங்குவார். ரொம்ப ஃப்ரண்ட்லி. நான் முதல் முறையாக சன்
டிவிக்கு பண்றேன். சீரியலாகவும் எனக்கு இதுதான் முதல். இந்த வெற்றிக்கு முழுக்கக் காரணம் டீம் வொர்க்...’’ என்றார் சுஜாதா. அடுத்ததாக, கமலா கேரக்டரில் கலக்கும் தாட்சாயிணி, ‘‘எனக்கு இந்த ஜர்னி எப்படி ஆரம்பிச்சதுனு முதல்ல சொல்றேன். நான் ‘அண்ணாமலை’ படத்துல ரஜினி சாரின் மகளாக நடிச்சேன். அந்தப் படத்துல உதவி இயக்குநராக இருந்தவர் உதய்சங்கர் சார். இப்ப அவர்தான், ‘வானத்தைப்போல’ தயாரிப்பாளர்.

ரொம்ப ஆண்டுகள் கழிச்சு சாரை மீட் பண்ணினேன். இப்படியொரு புரொஜெக்ட்னு சார் சொன்னதும் உடனே ஓகே சொல்லி வந்தேன். என் கேரக்டரும் ரொம்ப நல்ல கேரக்டர். இதுல வொர்க் பண்றது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கு. இந்தக் கேரக்டர் கெட்அப் ரொம்பப் பிடிச்சிருக்கு. வெளியில்போகும்போது, ‘உங்க கேரக்டர் ரொம்ப நல்லாயிருக்கு’னு சொல்றாங்க...’’ என அவர் சொல்ல, சின்ராசு கேரக்டரில் மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட நடிகர் குமாரிடம் பேசினோம்.

‘‘எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். அதனால, எந்த புரொஜெக்ட் கிடைச்சாலும் அது ஜீசஸ் கொடுத்ததுதான்னு நினைப்பேன். அப்படித்தான் இந்த புரொஜெக்ட் எனக்கு கிடைச்சதுனு சொல்லணும். இந்த புரொஜெக்ட்டின் உண்மையான ஹீரோ சேனலின் ரவி சார்தான். அவர்தான் இந்த மூலக்கதையை உருவாக்கியவர்.

ரவி சார் இந்த புரொஜெக்ட் ஆரம்பிக்கும்போதே சின்ராசு கேரக்டருக்கு என்னைத்தான் கேட்டார். அப்ப இன்னொரு சேனல்ல சீரியல் பண்ணிட்டு இருந்தேன். அதனால, அவர்கிட்ட முடியாதுனு சொன்னேன். ‘இல்லங்க இந்தக் கேரக்டரை உங்கள மைண்ட்ல வச்சுக்கிட்டுதான் பண்ணினேன்’னு சொன்னார். எனக்கும் அவருக்கும் நல்ல புரிதல் உண்டு. அடுத்து இந்த சீரியலின் வெற்றிக்கு ரவி சாருக்குப் பிறகு இன்னொரு முக்கிய காரணம் சீரியலின் எடிட்டர் சஜின்.

இவங்க ரெண்டு பேருமே நான்தான் நடிக்கணும்னு நினைச்சாங்க. ஆனா, சூழலால் பண்ணமுடியல. பிறகு, தமன் பண்ணினார். தங்கச்சி கேரக்டரும் இன்னொரு ஆர்ட்டிஸ்ட் பண்ணினாங்க. ரெண்டுபேருமே நல்லா பண்ணினாங்க. ஆனா, தெய்வாதீனமாக அது எனக்குதான் வரணும்னு இருந்திருக்கு.

லீட் ரோல் ரெண்டு பேருமே வெளியே போயிட்டாங்க. அப்ப நான் இன்னொரு சீரியலுக்கு கமிட்டானேன். அந்நேரம், ரவி சார் மறுபடியும் கேட்டார். இது கடவுள் கொடுத்ததுனு நினைச்சு உள்ளே வந்தேன். அப்புறம், ரீபிளேஸ் பண்றது கொஞ்சம் சிக்கல்தான். ஏன்னா, என் நடிப்புக்கு ஆடியன்ஸைக் கொண்டு வரணும். அதனால அது சவாலாக இருந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டுவந்தேன்.

உண்மையில் ஒரிஜினல் சின்ராசு கேரக்டருக்கும் என் ரியல் கேரக்டருக்கும் சம்பந்தம் கிடையாது. சின்ராசு கேரக்டர் பொறுமையான கேரக்டர். ஆனா, நான் எப்ப டென்ஷன் ஆவேன்னு தெரியாது. ஏன் டென்ஷன் ஆகிறேன்னா எனக்கு ஆக்டிங் சீரியஸான புரொஃபஷன். இதுல விளையாட்டுத்தனம் இருக்கக்கூடாதுனு நினைப்பேன். சீரியஸ்னஸ் இல்லாமல் பண்ணினால் எனக்குக் கோபம் வந்திடும்.

ஆனா, இதுல அமைஞ்ச ஆக்டர்ஸ் எல்லோரும் சிறப்பானவங்க. துளசியா வர்ற மான்யா, ராஜபாண்டியாக வர்ற கார்த்தி, எனக்கு மனைவியாக பண்ற சாந்தினி எல்லோருமே சிறப்பா செய்றாங்க. இயக்குநர் ஆர்கேவும் ரொம்ப சிறப்பாக செய்றார். இதுல இன்னொருவரைப் பற்றியும் சொல்லணும். சேனல்ல நிர்வாகத் தயாரிப்பாளர் மோனிஷா நிறைய சப்போர்ட் தர்றாங்க. இவங்க எல்லோராலும் இந்த சீரியல் வெற்றிகரமாகப் போகுது...’’ என உற்சாகமாகக் குறிப்பிட்டார் குமார்.

தொடர்ந்து பிரேக்கில் இயக்குநர் ராமகிருஷ்ணன் என்கிற ஆர்.கேவிடம் பேசினோம். ‘‘இப்படியொரு தொடரை சன் டிவிக்கு இயக்குற வாய்ப்பு எனக்குக் கிடைச்சது சந்தோஷமாக இருக்கு. இதுக்காக கடவுளுக்கும், சன் டிவிக்கும், இதன் தயாரிப்பாளர் ஆரா கிரியேஷன்ஸ் உதய்சங்கர் சாருக்கும், சேனல்ல ரவி சாருக்கும், கதை எழுத்தாளர் ராஜ்பிரபு சாருக்கும் ரொம்ப நன்றி சொல்லிக்கிறேன். அப்புறம் என் கேமராமேன் சேகர், எழுத்தாளர் பாலமுருகன், எடிட்டர் சஜின் உள்ளிட்டவருக்கும் நன்றி சொல்லணும்.

அவங்களாலதான் இதை வெற்றிகரமாக கொண்டுபோக முடியுது. இதிலுள்ள ஆர்ட்டிஸ்ட்களும் சிறப்பாக நடிக்கிறாங்க. கேரக்டராகவே வாழ்றாங்கனு சொல்றது பொருத்தமாக இருக்கும். இப்ப இந்த சீரியல் நம்பர் ஒன், நம்பர் டூனு டிஆர்பியில் மாறிமாறி இடம்பிடிக்குது. இதுக்குக் காரணம் டீம் வொ ர்க்...’’ என உற்சாகத்துடன் சொன்னார் இயக்குநர் ஆர்கே.   

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்