குடும்பத் தலைவி + பிசினஸ் வுமன் = சூப்பர் வுமன்
சமூக வலைத்தளங்களிலும், பிசினஸ் பத்திரிகைகளிலும் வைரலாகிக் கொண்டிருக்கும் ஒரு பெயர், சங்கீதா பாண்டே. எந்தவித பின்புலமும் இல்லாமல் வெறும் 1,500 ரூபாய் முதலீட்டில் ஆரம்பித்து, கோடிகளில் டர்ன் ஓவர் செய்யும் ஒரு பிசினஸை நடத்தி வரும் தொழில் அதிபர் இவர். தன்னுடைய சாதனைக்காக 2020ம் வருடம் ‘சூப்பர் வுமன்’ என்ற விருதை தன்வசமாக்கியுள்ளார் சங்கீதா.
யார் இந்த சூப்பர் வுமன்?
உத்தரப்பிரதேசத்திலுள்ள கோரக்பூர் நகரைச் சேர்ந்தவர் சங்கீதா பாண்டே. இவரது கணவர் டிராஃபிக் கான்ஸ்டபிளாக வேலை செய்து வருகிறார். பத்து வருடங்களுக்கு முன்பு குடும்பத்தின் பொருளாதாரச் சூழலை மேம்படுத்துவதற்காக வீட்டுக்கு அருகிலிருந்த ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். மாதச் சம்பளம் 4000 ரூபாய். அப்போது அவருக்கு பிறந்து ஒன்பது மாதமே ஆன ஒரு மகள் இருந்தாள். அதனால் மகளைத் தூக்கிக் கொண்டே முதல் நாள் வேலைக்குச் சென்றார் சங்கீதா.
குழந்தையை வைத்துக்கொண்டு வேலையைப் பார்க்க முடியாது என்று உடன் வேலை செய்தவர்கள் சங்கீதாவிடம் சொல்லியிருக்கின்றனர். அடுத்த நாள் குழந்தையை வீட்டிலேயே விட்டுவிட்டு வேலைக்கு வந்திருக்கிறார். குழந்தையின் எதிர்காலத்துக்காகத்தான் வேலைக்கு வந்திருக்கிறோம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், குழந்தையைக் கவனித்துக்கொள்ளாமல் வேலைக்கு வந்தது சங்கீதாவுக்குள் குற்ற உணர்வைக் கொடுத்தது. இரண்டாம் நாளே வேலையை விட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார்.
இனிமேல் குழந்தையை விட்டுவிட்டு வெளியே வேலைக்குச் செல்ல முடியாது. ஆனால், குடும்பத்தின் பொருளாதாரமும் முன்னேற வேண்டும். அதற்கு வீட்டிலிருந்தே ஏதாவது செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் சங்கீதா. அவருக்குள் ஒளிந்திருந்த தொழில் அதிபர் விழித்துக்கொண்டார். சங்கீதாவுக்கு இனிப்பு வகைகள் செய்வது நன்றாக வரும்.
அதனால் வீட்டிலேயே இனிப்பு வகைகளைச் செய்து விற்பனை செய்யலாம் என்று திட்டமிட்டார். கையிலிருந்த 1500 ரூபாயுடன், வீட்டின் வாசலில் நின்றிருந்த பழைய சைக்கிளை எடுத்துக்கொண்டு, இனிப்பு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை வாங்கி வந்தார். அடுத்த எட்டு மணி நேரத்தில் 100 பெட்டி வரும் அளவுக்கு இனிப்புகளைத் தயார் செய்துவிட்டார். சந்தைக்குக் கொண்டுபோய் அவரே விற்றார். முன் அனுபவம் இல்லாத காரணத்தால் மூலப்பொருட்கள், லாபத்தை வைத்து ஒரு விலையை நிர்ணயிருத்திருந்தார். அந்த விலை சந்தையில் கிடைக்கும் இனிப்பு பண்டங்களின் விலையைவிட அதிகமாக இருந்தது. அதனால் சங்கீதாவின் இனிப்புகளை யாரும் வாங்க முன்வரவில்லை. லாபம் இல்லாமல் விலையைக் குறைத்து 100 பெட்டிகளையும் விற்றுத் தீர்த்தார். சந்தையில் இருந்த சிலர், மலிவான விலையில் மூலப்பொருட்கள் கிடைக்கும் இடத்தைப் பற்றி சங்கீதாவுக்கு ஆலோசனை தந்திருக்கின்றனர். அந்த இடம் லக்னோவில் இருந்தது.
ஒரு சில மாதங்களில் 35 ஆயிரம் ரூபாயைச் சேமித்து, மூலப்பொருட்கள் வாங்குவதற்காக லக்னோவுக்குச் சென்றார். 15 ஆயிரம் ரூபாய்க்கு மூலப்பொருட்களை வாங்கி ஒரு பேருந்தில் எடுத்துவந்தார். முன்பை விட விலை குறைவாக இனிப்பு பண்டங்களை அவரால் கொடுக்க முடிந்தது. லாபமும் கிடைத்தது. தரமும், சுவையும் அருமையாக இருக்க, பல இனிப்பு கடைகள் சங்கீதாவின் வாடிக்கையாளர்களாக மாறின. ஆர்டர்கள் அதிகமானது. தன்னிடமிருந்த நகைகளை 3 லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்தார் சங்கீதா.
லக்னோவிலிருந்து ஒரு லாரி நிறைய மூலப்பொருட்களை கோரக்பூருக்குக் கொண்டு வந்தார். தன்னைப் போன்ற பெண்களை வேலைக்கு அமர்த்தினார். நாளுக்கு நாள் பிசினஸ் பெரிதாகிக்கொண்டே போனது. 50 லட்ச ரூபாய் லோன் கிடைக்க, இனிப்பு தயாரிக்க ஒரு தொழிற்சாலையை ஆரம்பித்தார். இனிப்புகளை டெலிவரி செய்ய டெம்போவும், பேட்டரியால் இயங்கும் ரிக் ஷாவும் வாங்கினார்.
இன்று சங்கீதாவின் பிசினஸ் நேரடியாகவும், மறைமுகமாகவும் 100 பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. இந்தப் பத்து ஆண்டுகளில் அவருக்கு மேலும் இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டனர். எல்லோருமே நல்ல பள்ளியில் படிக்கின்றனர். கோரக்பூரில் இருக்கும் முக்கிய இனிப்பு கடைகள் எல்லாம் சங்கீதாவின் வாடிக்கையாளர்களாக மாறிவிட்டன.
வருடத்துக்கு 3 கோடி ரூபாய் டர்ன்ஓவர் செய்கிறார். வீட்டிலிருந்தே வேலை செய்ய விரும்பும் பெண்களுக்கும் உதவி செய்து வருகிறார் சங்கீதா. இந்த பிசினஸை உத்தரப் பிரதேச அளவில் விரிவாக்க வேண்டும் என்பதுதான் அவரது கனவு.
த.சக்திவேல்
|