ஆடு வளர்ப்பில் அசத்தும் ஆப்பிரிக்கப் பெண்!
மனிதனுக்கும் ஆடுகளுக்கும் இடையிலான உறவு ஆரம்பித்து பத்தாயிரம் வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. கி.மு. 8000ல் மேற்கு ஆசியாவில் வாழ்ந்து வந்த பழங்குடிகள் உணவு தேடி காட்டுக்குள் சென்றனர்.
அப்போது அவர்களது பார்வையில் அதற்கு முன்பு பார்த்திராத ஓர் உயிரினம் தென்பட்டது. அதுதான் ஆடு. அதை வேட்டையாடி, அதன் இறைச்சியைப் பழங்குடிகள் ருசித்தனர். மற்ற இறைச்சிகளைவிட ஆட்டிறைச்சியின் சுவை பழங்குடிகளை வெகுவாக ஈர்த்தது. அடுத்த நாளும் ஆட்டை வேட்டையாடச் சென்றனர். இந்த வேட்டைப் பயணம்தான் அவர்களை ஆடு வளர்ப்பு நோக்கி அழைத்துச் சென்றது. மனிதன் வீட்டில் வளர்த்த முதன்மையான உயிரினங்களில் ஆடும் இடம்பிடித்தது.
இந்த ஆடு வளர்ப்புப் பயணம் மேற்கு ஆசிய நாடுகளில் ஆரம்பித்து, ஆப்பிரிக்கா, அமெரிக்கா என உலகம் முழுவதும் பரவியது.
கி.மு. 5000ல் இறைச்சிக்காக மட்டுமல்லாமல் பாலுக்காகவும் ஆடுகளைத் தனியாக வளர்க்க ஆரம்பித்தான் மனிதன். அதனுடைய எலும்புகளை ஆயுதமாக பயன்படுத்தினான். ரோமம் மற்றும் தோலைக் கொண்டு ஆடைகளை உருவாக்கினான். அத்துடன் ஆட்டின் சாணத்தை எரிபொருளாகப் பயன்படுத்தினான். இப்போதும் பால், இறைச்சி, தோல் மற்றும் ரோமத்துக்காகவே ஆடுகள் வளர்க்கப்படுகின்றன.
இன்று 300 வகையான ஆடுகள் இருக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள ஆடுகளின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டும். இதில் 96 சதவீத ஆடுகள் வளர்ந்த நாடுகளில் மட்டுமே உள்ளன.
சீனாவில் 13 கோடி ஆடுகளும், அமெரிக்காவில் 26 லட்சம் ஆடுகளும் வளர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் சுமார் 50 கோடி ஆடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன. உலகில் நுகரப்படும் இறைச்சியில் 5 சதவீதம் ஆட்டிறைச்சியாகும்.
1999க்குப் பிறகு அமெரிக்காவில் ஆட்டிறைச்சியை நுகர்வது 320 சதவீதம் அதிகரித்துள்ளது. அங்கே மட்டுமல்லாமல் பல நாடுகளில் ஆட்டிறைச்சியை நுகர்வது அதிகமாகியுள்ளது. ஆனால், தேவைக்குக் குறைவாகவே ஆடுகள் இருக்கின்றன. அதனால் நாலாப்பக்கமும் ஆடு வளர்ப்பு முக்கியத் தொழிலாக பரிணமித்துள்ளது. இதில் கொடி கட்டிப் பறக்கிறார் உகாண்டாவைச் சேர்ந்த கிரேஸ் வோஜி என்ற பெண். இவருடைய ‘வோஜி ஃபார்ம்ஸ்’ எனும் பண்ணை உகாண்டாவிலேயே மிகப்பெரிய ஆடு வளர்ப்புப் பண்ணையாகத் திகழ்கிறது.
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள முக்கியமான ஒரு நாடு, உகாண்டா. அங்கே உள்ள கியோடெரா நகரிலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவிருக்கும் ஒரு கிராமத்தில் பிறந்தார் கிரேஸ் வோஜி. இவருடைய தந்தை வாழைப்பழ விவசாயம் செய்து வந்தார். கிரேஸின் ஊரில் பெண்களுக்குக் கல்வி என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. விவசாயம் செய்து ஈட்டிய வருமானத்தில் கிரேஸைப் படிக்க வைத்தார் அவரது தந்தை. அந்தக் கிராமத்திலேயே கல்லூரிக்குச் சென்று படித்த ஒரே பெண் கிரேஸ்தான். மட்டுமல்ல; வெளியூரில் வேலைக்குச் சென்ற ஒரே பெண்ணும் இவரே.
ஆம்; உகாண்டாவின் தலைநகரமான கம்பாலாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலைக்குச் சேர்ந்தார் கிரேஸ். ஆண் விரிவுரையாளர் வாங்கும் சம்பளத்தில் 35 சதவீதம்தான் பெண் விரிவுரையாளருக்கு கிடைக்கும் என்ற நிலை.
முதல் இரண்டு மாதங்கள் கிரேஸுக்கு சம்பளமே கிடைக்கவில்லை. அவரைப் போன்ற விரிவுரையாளர்கள் போராட்டம் நிகழ்த்தி தங்களது சம்பளத்தைப் பெற்றனர். அதனால் அந்தப் பல்கலைக்கழகத்தைவிட்டு இன்னொரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலைக்குச் சேர்ந்தார். அங்கே முன்பைவிட சம்பளம் குறைவு. அத்துடன் வேலை அதிகம். அதனால் ஆறு மாதங்களுக்கு மேல் அந்த வேலையில் கிரேஸால் இருக்க முடியவில்லை. மட்டுமல்ல; தினமும் ஒரே மாதிரி வேலை செய்வது அவருக்குச் சலிப்பைக் கொடுத்தது. பரிசோதனை முயற்சிகள் மற்றும் கிரியேட்டிவ்வான விஷயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர் கிரேஸ்.
மூன்றாவதாக கம்பாலாவில் இருந்த இன்னொரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலைக்குச் சேர்ந்தார். முன்பு வேலை செய்த இரண்டு பல்கலைக்கழகங்களைவிட மோசமான அனுபவத்தைக் கொடுத்தது இந்தப் பல்கலைக்கழகம். இனிமேல் விரிவுரையாளர் வேலையே வேண்டாம் என்று சொந்த கிராமத்துக்குத் திரும்பினார் கிரேஸ். அப்போது கிழக்கு ஆசிய நாடுகளில் ஆட்டிறைச்சிக்கான தேவை அதிகமாக இருந்தது. ஆனால், போதுமான ஆடுகள் இல்லை.
இந்த விஷயம் கிரேஸுக்கு ஆடு வளர்ப்புக்கான ஆர்வத்தைத் தூண்டியது. மூன்று பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராக வேலை பார்த்திருந்தாலும் அவரிடம் ஒரு பைசா கூட இல்லை. 2015ம் வருடம் கியோடெரா நகரத்துக்கு அருகில் வீற்றிருக்கும் தன் அப்பாவுக்குச் சொந்தமான இடத்தில், நண்பர்களிடம் கடனாக வாங்கிய ஒரு லட்சம் ரூபாயை மூலதனமாக வைத்து, 30 உகாண்டா பாரம்பரிய ஆடுகளுடன் ஒரு பண்ணையை அமைத்தார் கிரேஸ்.
‘ஒரு பெண்ணாக எப்படி பண்ணையைக் கவனித்துக் கொள்வாய், ஆடுகளைத் திருடிக்கொண்டு போய்விடுவார்கள், தனியாக இருந்தால் யாராவது வந்து தாக்கிவிடுவார்கள்...’ என்று வீட்டிலும், சமூகத்திலும் கிரேஸுக்கு நிறைய எதிர்ப்புகள் கிளம்பின. இதையெல்லாம் மீறி ஆடு வளர்ப்பில் இறங்கினார்.
முதல் இரண்டு வருடங்கள் ஆடு வளர்ப்பு ரொம்பவே கடினமாக இருந்தது. உள்ளூர் விவசாயிகளின் வழிகாட்டுதலுடன் சிலரை வேலைக்கு அமர்த்தி ஆடுகளை வளர்த்தார். ‘வோஜி ஃபார்ம்ஸ்’ என்று ஒரு பிராண்டிங்கை உருவாக்கினார். சமூக வலைத்தளங்களில் மார்க்கெட்டிங் செய்து ஆடுகளை விற்றார். அத்துடன் அருகிலிருக்கும் நாடுகளுக்கு ஆடுகளை ஏற்றுமதியும் செய்கிறார் கிரேஸ். உகாண்டாவிலேயே குறிப்பிட்ட ஒரு பெண் விவசாயியாக இன்று வளர்ந்துவிட்டார். இப்போது 200 ஏக்கர் பரப்பளவுக்கு விரிவடைந்திருக்கிறது ‘வோஜி ஃபார்ம்ஸ்’. செம்மறி, பாரம்பரிய ஆடுகள் என 700 ஆடுகளை வளர்க்கிறார் கிரேஸ். இந்த எண்ணிக்கையை 3000க்கு கொண்டு செல்வதே கிரேஸின் திட்டம். வாரத்துக்கு 200 ஆடுகள் வரை ஆர்டர்கள் வருகின்றன. கிரேஸால் 80 முதல் 100 ஆடுகள் வரையே கொடுக்க முடிகிறது. தனக்கு வரும் ஆர்டர்களுக்கு உரிய ஆடுகளைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் அவரது முக்கிய இலக்கு. அவரது பண்ணையில் 20 பேர் வேலை செய்கின்றனர். இதுபோக 22 ஏக்கரில் வாழைப்பழ விவசாயமும் செய்து வருகிறார். ஆடு வளர்ப்பு குறித்த பயிற்சிகளையும் கொடுக்கிறார். கிரேஸின் வெற்றி உகாண்டாவில் உள்ள பல பெண்களுக்கு உந்துதலைத் தந்திருப்பதுதான் இதில் ஹைலைட்.
த.சக்திவேல்
|