‘ஆனந்த’மாக சினிமாவுக்குள் வந்து ‘ரன்’னடிக்கத் தொடங்கிய நாள்முதல் ‘சண்டக்கோழி’யாய் சிலிர்த்து அதிரடி ஆக்ஷன் படங்களுக்கு புதுப்பாதை போட்ட லிங்குசாமி, இப்போது அடுத்த ‘வேட்டை’க்குக் குறிவைத்திருக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியாவுக்காக அவரே இயக்கும் படம்தான் ‘வேட்டை’. ஆர்யா, மாதவன், சமீரா ரெட்டி, அமலா பால் என்று புருவம் உயர்த்தி வியக்கவைக்கும் நட்சத்திரக் கூட்டணி அதிர களமிறங்கியிருக்கும் லிங்கு, படப்பிடிப்புக்காக தூத்துக்குடி, காரைக்குடி, சென்னை தொடர்ந்து புதுச்சேரியில் முகாமிட்டிருந்தார். இந்த வேட்டைக்களம் பற்றிக் கேட்டபோது மௌனம் கலைந்தார் அவர்...
‘‘வேட்டையாடி விளையாடுவோம், விளையாட்டாய் வேட்டையாடுவோம்... இதுதான் படத்தோட லைன்.‘வேட்டை’ன் னாலே அதுல போலீஸுக்கு வேலையிருக்கு. ஆனா இது முழுக்க போலீஸ் ஸ்டோரியான்னு கேட்டா இல்லைன்னுதான் சொல்வேன். இதுக்குள்ள ஆக்ஷன் இருக்கு, சென்டிமென்ட் இருக்கு, குடும்ப உறவுகள் இருக்கு, நினைச்சு ரசிக்க வைக்கிற காமெடி, மனசு பூக்கிற காதல்னு வாழ்க்கையில் விரவிக் கிடக்கிற அத்தனை அற்புதங்களும் நிறைஞ்சிருக்கு.

நான் கல்லூரியில படிக்கும்போது ‘எப்படி இருந்தா ஒரு படத்தை ரசிக்கலாம்’னு கனவுக்கு வடிவம் கொடுத்து வாழ்ந்தவன். இப்ப அந்தக்கனவோட இருக்கிற இளைஞனுக்கு இந்தப் படம் ஒரு வடிகாலா இருக்கும்.
என்னோட ‘ரன்’னில மாதவனுக்கு ஆக்ஷன் ஹீரோவா புது நிறம் கிடைச்சது. இப்ப அவர் ஒரு இந்திய ஹீரோ. பிறகு ‘சண்டக்கோழி’யில ஆரம்பமே அதிரடியா விஷாலை ஆக்ஷன் ஹீரோவாக்கியதில அவர் இன்னைக்குத் தமிழ்ல தவிர்க்க முடியாத ஆக்ஷன் ஹீரோ. அதேபோல ‘பையா’வில கார்த்தி அதுவரை காட்டாத முகம் காட்டி நாகரிக இளைஞர்களோட உதாரண ஹீரோவா அடுத்த படிக்கு முன்னேறினார். இந்தமுறை ஆர்யாவுக்கு அப்படி ஒரு புதுமுகத்தைக் காட்டப் போறேன்.
அவரோட மாதவனும் கைகோர்க்கிறதில, அவருக்கு ஸ்கிரிப்ட்ல இருக்கிற அவசியம் புரியும். ஒருபக்கம் மாதவனும், ஆர்யாவும் அண்ணன், தம்பியும்னா இன்னொரு பக்கம் சமீரா ரெட்டியும், அமலா பாலும் சகோதரிகள். சமீரா ரெட்டிக்கும் இதுவரை இந்தியிலேர்ந்து தெலுங்கு, தமிழ்னு ஒரு ‘மாடர்ன் இமேஜ்’ இருக்கு. இதுலயும் அவங்க யுவதிதான். ஆனா இதுவரை யாரும் பார்க்காத தாவணி, புடவைல தென்னாட்டுத் தமிழச்சியா திருநெல்வேலி தமிழ் மணக்க வர்றாங்க. இதுவரை இப்படி சமீராவைப் பார்த்ததில்லைங்கிறதை அவங்களோட தோற்றத்திலேர்ந்து நடிப்பு வரை படம் பார்க்கிறவங்க உணரமுடியும்.

>இதுவரை நல்ல நடிகைன்னு அமலா பால் சேர்த்துவச்சிருக்க பெயருக்கு இன்னும் கூடுதலான மதிப்பெண் கிடைக்கிறதோட, அமலாவுக்கு இருக்கிற இளமைக்கும் கூடுதல் கவனம் கிடைக்கும். ‘சகோதரிகள்’ங்கிற உறவை தமிழ் சினிமாவில பார்த்து நாளாச்சு. இணக்கமான தங்கையா வர்ற அமலா, அக்கா சமீராவுக்கான மாப்பிள்ளை எப்படி இருக்கணும்னு கேட்டுப் பாடற பாடல் ஒண்ணைப் படமாக்கினோம். ‘தையத்தக்க தக்கா, எங்கிருக்கே மக்கா... சோளக்கட்டு சொக்கா, காத்திருக்கா அக்கா...’ன்னு தொடங்கி, ‘அக்காவுக்கேத்த மாப்பிள்ளை எங்கிருக்கான் பயபுள்ள..?’ன்னு நா.முத்துக்குமார் எழுதியிருக்க பாடல் ஒண்ணு யுவனோட இசைல கலந்து வழக்கம்போல கலக்கலா அமைஞ்சு களை கட்ட படமாகியிருக்கு.
இயற்கையை எப்படிப் படமாக்குவார்னு எல்லோருக்குமே தெரியற நீரவ் ஷா இந்தப்படத்தில வாழ்க்கையோட வண்ணங்களைப் பதிவு பண்ணிக்கிட்டிருக்கார். இதுவரை நான் இயக்கிய படங்கள்ல பெரிசா ‘மாஸும் கிளாஸுமான’ படமா அமையணும்னு என் சகோதரன், தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் பட்ஜெட்டை விஸ்தரிச்சுக்கிட்டே போக, அதுக்குக் கைகொடுக்க ‘யு டிவி’ நிறுவனமும் தயாரிப்புக்குள்ள வந்திருக்கிறது பிரமாண்டத்துக்குக் கைகொடுக்கிற நிகழ்ச்சியா அமைஞ்சிருக்கு. அந்த நம்பிக்கையோட பின்னி மில்லில ஆக்ஷன், காரைக்குடியில ஆட்டம் பாட்டுன்னு ஆரம்பிச்சு பாடலுக்கான களத்தை சீனா வரை நீட்டிக்கத் திட்டமிருக்கு...’’ என்ற லிங்கு, ‘‘வேட்டை முக்கியம்தான், அதில வெற்றியும் அறுவடை ஆகணுமில்ல..?’’ என்று தன் வழக்கமான வெடிச் சிரிப்பை உதிர்க்கிறார்.
வேணுஜி