நான் கல்லூரி மாணவி. 15 நாளைக்கொரு முறை, முகத்தில் திடீர் திடீரென பெரிய பருக்கள் தோன்றுகின்றன. ஒன்று மறைந்து, இன்னொன்று புதிதாக வருகிறது. பழைய பரு இருந்த இடத்தில் அந்தத் தழும்பு அப்படியே நின்று விடுகிறது. கிரீம் உபயோகித்தும் பலனில்லை. என்னதான் தீர்வு? கே.மகிதா, கோவை-5.
பதில் சொல்கிறார் சரும மருத்துவர் தலத் சலீம்.15 & 19 வயதுக்குள் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் பருக்கள் வரும். இது முகம், தோள்பட்டை, முதுகு, மார்பகங்களில் பரவலாக வரக்கூடும். சாதாரணமாக ஒரு பரு வந்தால், அது 15 & 20 நாட்களுக்குள் தானாக மறைந்து விடும். அதைத் தொடாமல் இருக்கும் வரை பிரச்னையில்லை. நகத்தால் கிள்ளினாலோ, அழுத்தினாலோ, நகத்துக்குள் எப்போதும் மறைந்திருக்கும் பாக்டீரியா, அந்தப் பருவுக்குள் புகுந்துகொண்டு, பருவையும் பெரிதாக்கி, தழும்பையும் ஏற்படுத்தும்.
எண்ணெய் உணவுகள், சாக்லெட், ஐஸ்கிரீம், கூல் ட்ரிங்க், ஏரியேட்டட் ட்ரிங்க்ஸ் போன்றவற்றைத் தவிர்த்து, தினம் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதன் மூலம் பருக்கள் வராமல் தடுக்கலாம். தினம் 3 & 5 முறை முகம் கழுவவும். ஸ்க்ரப் செய்யக் கூடாது. சன் ஸ்கிரீன், மாயிச்சரைசர், மேக்கப் என எல்லாம் ஆயில்ஃப்ரீயாக இருக்க வேண்டியது அவசியம். சாலிசிலிக் ஆசிட் மற்றும் பென்ஸாயில் பெராக்சைடு கலந்த ஃபேஸ் வாஷ், லோஷன் உபயோகிப்பது சிறந்தது.
10&ல் 7 பெண்களுக்கு மாதவிலக்குக்கு முன் பருக்கள் வருவது சகஜம். அதை ஆரம்பத்திலேயே சரி செய்ய மருந்துகள் உள்ளன. ரொம்பவும் அதிகமான பருக்கள் மற்றும் தழும்புகளுக்கு சரும மருத்துவரை அணுகுவதே சிறந்தது.
பருக்களை விரட்டும் பேக் கிடைக்கிறது. வாரம் 1 முறை அதில் புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி, துளசி, வேப்பிலை ஆகியவற்றை அரைத்த சாறு சேர்த்துக் குழைத்து, பருக்களின் மேல் போட்டு, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவவும்.
அரிசி மாவு, தோலுடன் சேர்த்து அரைத்த பாதாம், தயிர் - தலா கால் டீஸ்பூன் எடுத்து, அதில் 4 துளி எலுமிச்சைச்சாறு கலந்து, பருக்களால் உண்டான தழும்பின் மேல் தடவினால் ஒரு மாதத்தில் மறையும். இது தழும்புகளுக்கு மட்டுமே! பருக்களுக்கு அல்ல!
3 வருடங்களுக்கு முன் எனக்குச் சொந்தமான நிலத்தை ஒரு பில்டருக்கு விற்றேன். அதில் 50 சதவீத பங்காக 3 ஃபிளாட்டுகளை எனக்குத் தருவதாக பில்டர் ஒப்புக் கொண்டார். 18 மாதங்களுக்குள் தருவதாக ஒப்பந்தம். 3 வருடங்கள் ஆகியும் இன்னும் ஒப்படைக்கவில்லை. கோர்ட், கேஸ் என்று செல்வதற்கு எனக்கு ஆள் பலமோ, பண பலமோ இல்லை. கோர்ட்டுக்கு வெளியிலேயே வைத்து இந்தப் பிரச்னையை முடித்துக் கொள்ளச் சொல்கிறார்கள் சிலர். அது சாத்தியமா? சி.வாசுதேவன், சென்னை-15.
பதில் சொல்கிறார் வழக்கறிஞரும் இசைவுத் தீர்வாளருமான கணேசன்.கோர்ட்டுக்கு போகாமல், சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும், மூன்றாவது நபர் மூலம் ‘ஆர்பிட்ரேஷன்’ எனப்படுகிற இசைவுத் தீர்ப்பாயம் மூலம் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளலாம். ஒப்பந்தம் போடும்போதே, ‘பின்னாளில் பிரச்னை வந்தால் ஆர்பிட்ரேஷன் முறையில் தீர்த்துக் கொள்வதாகவும்’ குறிப்பிடலாம்; அல்லது பிரச்னை வந்த பிறகும் இரு தரப்பினரும் முடிவு செய்து, இதற்கு சம்மதிக்கலாம். ஆர்பிட்ரேட்டர் வழக்கறிஞராகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. சரியான மனநிலையில் உள்ள யாராகவும் இருக்கலாம். சட்ட அறிவுள்ளவர்களாக இருந்தால் சிறப்பு என்பதால், பலரும் ஓய்வுபெற்ற நீதிபதிகளையும் வழக்கறிஞர்களையும் ஆர்பிட்ரேட்டராக தேர்ந்தெடுக்கிறார்கள்.
கிரிமினல் வழக்குகள், திருமண உறவு சம்பந்தப்பட்ட வழக்குகள், கம்பெனியை மூடுவது, உயிலை நடைமுறைப் படுத்துதல், கார்டியன்ஷிப் போன்ற ஒருசில விஷயங்களை மட்டும் ஆர்பிட்ரேஷன் முறையில் தீர்த்துக் கொள்ள முடியாது. மற்றபடி பெரும்பான்மையான வழக்குகளை இந்த முறையில் நேர விரயமின்றி சுமுகமாகவும், சுலபமாகவும் தீர்த்துக் கொள்ளலாம்.