அனுபவங்கள் என்றுமே புதுமை...



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine


கடந்த வாரம் இயற்கை எய்திய நடிகர் ரவிச்சந்திரன் சினிமாவுக்கு அறிமுகமான படம் 1964ல் வெளிவந்த இயக்குநர் ஸ்ரீதரின் ‘காதலிக்க நேரமில்லை’. அதற்குப்பின் நாயகனாக நூற்றுக்கு மேற்பட்ட படங்களை முடித்துவிட்டார் என்றாலும் இன்றும் அவரது பெயர் சொல்லும் படங்களில் முக்கியமானதாக அவரது முதல்படமே நினைவில் நிற்கிறது. அதில் அவருடன் ஜோடியாக நடித்த ராஜஸ்ரீ, ரவிச்சந்திரனுடனான நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

‘‘ரவிச்சந்திரன்னதும் முதல்ல நினைவுக்கு வர்றது அவரோட ஃபிரெண்ட்லியான அணுகுமுறைதான். ‘காதலிக்க நேரமில்லை’ அவருக்கு முதல் படம்னாலும், நான் அதுக்கு முன்னமே பல படங்கள்ல நடிச்சிருந்தேன்.

அதனால யார்கிட்ட என்னைப்பற்றிச் சொன்னாலும், ‘ராஜஸ்ரீ எனக்கு சீனியர்...’னுதான் சொல்வார். ஆனாலும் எந்த பேதமும் இல்லாம நட்போட பழகுவார். முதல் படத்திலேயே அத்தனை அற்புதமா நடிச்சதை இப்ப டிவியில பார்த்தாலும் ஆச்சரியமா இருக்கும்.

தோளை சாய்ச்சு அவர் நடக்கிற அந்த ஸ்டைலான நடையை நாங்க அப்பவே ரசிப்போம். அதுக்காகவே அவருக்கு நிறைய ரசிகர்கள் இருந்தாங்க. அப்ப இந்தியில புகழ்பெற்றிருந்த சசி கபூர், ஷம்மி கபூர் போல ஸ்டைலான நடிப்புக்கு இவரோட நடிப்பு இணையா இருந்தது.

‘காதலிக்க நேரமில்லை’ படத்தைத் தமிழுக்கு அடுத்து இந்தியிலும், தெலுங்கிலும் ஸ்ரீதர் டைரக்ட் பண்ணினார். அதுல எல்லா நடிகர்களும் மாறினாங்க. மாறாம இருந்த ஒரே நடிகை நான் மட்டும்தான். ரவிச்சந்திரன் கேரக்டர்ல இந்தியில நடிச்ச சசிகபூரோடவும், தெலுங்கில நடிச்ச நாகேஸ்வரராவ் கூடவும் நான் நடிச்சிருந்தேன். மூணு படங்களையும் ஒப்பிட்டா அறிமுக நடிகரான ரவிச்சந்திரனோட நடிப்புதான் என்னைப் பொறுத்தவரை சிறப்பா இருந்ததுன்னு சொல்வேன்.

வசனங்களைத் திருத்தமா பேசறதிலும் முதல் படத்திலேயே அற்புதமா பண்ணினார். அவரோட ஃபேவரிட்டான ‘விஸ்வநாதன் வேலை வேணும்’ பாடல்ல நானும், காஞ்சனாவும் பக்கெட் பக்கெட்டா அவர்மேல தண்ணியை ஊத்தும்போது பக்கெட் தவறி அவர் தலையில விழுந்து மயக்கமாவார். அதுக்குப் பிறகு அவர் பேசற வசனம் ஒண்ணு நீளமா இருக்கும். அதை அவர் ஒரே மூச்சில பேசி முடிச்சப்ப, ‘அடடே... சிவாஜி மாதிரியே பேசறாரே..?’ன்னு சின்ன கிண்டலோட பாராட்டுவோம்.

‘காதலிக்க நேரமில்லை’ படத்தைப் பொறுத்தவரை அதுக்காக ஆழியார் அணை, ஊட்டின்னு அவுட்டோர்லயே மாசக்கணக்கா தங்க வேண்டியிருந்ததால அதுல நடிச்ச டி.எஸ்.பாலையா, வி.எஸ்.ராகவன், முத்துராமன், ரவிச்சந்திரன், காஞ்சனா, நாகேஷ், சச்சு, நான், டைரக்டர் ஸ்ரீதர், சி.வி.ராஜேந்திரன், சித்ராலயா கோபுன்னு மொத்த யூனிட்டுமே ஒரு குடும்பமா பழகினோம். அதனால மத்த பட அனுபவங்களைவிட அந்தப்படத்தோட அனுபவங்கள் எப்பவுமே புதுமையானவை.

நானும், ரவிச்சந்திரனும் நடிச்சிருந்த ‘அனுபவம் புதுமை’ பாடலுக்கு என்னை வீட்டுக்குள்ள தனியா வச்சும், அவரை வெளியே ஒரு டென்ட்டுக்குள்ள தனியா வச்சும் ஸ்ரீதர் எடுத்தார். மேட்ச் பண்ணிப் படத்தில பார்த்தபோது ஒரு டூயட்டுக்குண்டான இனிமை இருந்தது. அதுக்குப் பிறகு ‘டில்லி மாப்பிள்ளை’, ‘மயிலாடும் பாறை’, ‘எல்லைக்கோடு’ன்னு பல படங்கள்ல அவரோட ஜோடியா நடிச்சிருக்கேன்.

1977ல திருமணமாகி நான் சினிமாவிலேர்ந்து விலகி ஹைதராபாத்ல செட்டிலாகிட்டேன். பிறகு 91லதான் மீண்டும் சென்னை வந்தேன். ஆனா எல்லார்கூடவும் நல்ல நட்பு தொடர்ந்துக்கிட்டிருந்தது. ரவிச்சந்திரன் குடும்பமும் கூட எங்க குடும்ப நண்பர்களாகவே பழகி வந்தாங்க. கொஞ்ச காலம் முன்னால ஒய்.ஜி.மகேந்திரன் முயற்சி எடுத்து எங்க ‘காதலிக்க நேரமில்லை’ டீமை வரவழைச்சு ஒரு விழா ஏற்பாடு பண்ணியிருந்தார். அப்ப ஸ்ரீதரும் இருந்தார். காஞ்சனா, சச்சு, ரவிச்சந்திரன்னு எல்லோரும் அப்ப சந்திச்சு பழைய விஷயங்களை நினைவுபடுத்தி சந்தோஷப்பட்டோம். அந்த டீம்ல இன்னைக்கு ஸ்ரீதர் சார் இல்லை. முத்துராமன், நாகேஷ் இல்லை. அதில கடைசியாயிருந்த ஹீரோ ரவிச்சந்திரனும் இப்ப இல்லைன்னு அவர் மறைவுக்கு காஞ்சனா வந்திருந்தப்ப வருத்தப்பட்டுப் பேசினோம்.

தன் பேத்தியோட நடன அரங்கேற்றத்துக்கும் எங்களை அவர் அழைச்சிருந்தார். போயிட்டு வந்தோம். கடைசியா மருத்துவமனைல சேர்க்கப்பட்டிருந்த அவரை ஒரு வாரம் முன்னால போய்ப் பார்த்தேன். அப்பவே அவருக்கு நினைவு இல்லை. ஒருசில நாட்களுக்குள்ளயே அவர் மறைஞ்ச செய்தி வந்தது. என்னோட அம்மா இறந்ததிலேர்ந்து மனசு கனத்துப்போயிட்டதால பெரும்பாலும் இதைப்போன்ற துயர நிகழ்ச்சிகளுக்குப் போறதைத் தவிர்த்திருக்கேன். ஆனா ரவிச்சந்திரன் மறைஞ்ச செய்தி கேட்டு அப்படி என்னால இருக்க முடியலை. இப்ப விட்டா இனி எப்ப அவரைப் பார்க்கப்போறோம்னு போய் பார்த்துட்டு வந்தேன். அந்த அனுபவமும் புதுசுன்னாலும் சொல்லமுடியாத மிகுந்த வருத்தத்தை எங்களுக்குத் தந்த அனுபவம் அது...!’’
சந்திப்பு:வேணுஜி
படங்கள் உதவி: ஞானம்