எது ஜீவன்?



Untitled Document



பூமியை துவம்சம் செய்யும் துரோகிகளையும் இன்றைய நாட்டு நடப்பையும் 'பூமியை வாழவிடு!' கவிதை நெஞ்சில் தைப்பதுபோல எடுத்துரைத்தது.
- பிரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.


நகரங்களின் வசதிகளால் ஈர்க்கப்படும் மக்களின் இடம்பெயர்தலால், கிராமங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகச் சொல்லும் புள்ளிவிவரங்கள் வருத்தம் தருகின்றன. நம் தேசத்தின் ஜீவனே கிராமங்கள்தானே?
- எம்.சம்பத், கரூர்.


 
பிச்சைக்காரர்களே தினமும் 600 ரூபாய் சம்பாதிக்கும் இக்காலத்தில் 20 ரூபாய் சம்பாதிப்பவன் ஏழையில்லை என திட்டக் கமிஷன் தெரிவித்திருப்பதிலிருந்து, இவர்கள் இன்னும் கற்காலத்திலேயேதான் இருக்கிறார்கள் எனத் தெரிகிறது. 
- வி.ஜி.சத்தியநாராயணன், சென்னை-61.


'பெண்களிடம் அதிகரிக்கும் ஆண்தன்மை' - அதிர்ச்சி தரும் நிஜச்செய்தியைக் கண்டு சில நிமிடங்கள் 'ஆடி'ப் போய் விட்டோம்.
- பி.ராஜசேகரன், மதுரை-10.


'திருமணம் to தற்கொலை' தொடரைப் படித்தபோது ரொம்ப நாள் நெருங்கிப் பழகிய ஒரு தோழியைப் பறிகொடுத்த சோகம் நெஞ்சைப் பிழிந்தது. சமூகத்தில் ஸ்வீட்டியைப் போல எத்தனை சகோதரிகள் கத்திமுனை அவஸ்தையில் வாழ்கிறார்களோ?
- எம்.பர்வீன் பாத்திமா, சென்னை-91.


திக்குத் தெரியாத கவுன்சிலிங் காட்டில் சிக்கித்தவித்த மாணவர்களுக்கு கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் ஒரு கலங்கரை விளக்கம். பின்னணியில் பாடுபட்ட மண்ணச்சநல்லூர் ராம்பிரசாத்துக்கு ஹேட்ஸ் ஆஃப்!
 
- எம்.சுரேந்தர், திண்டுக்கல்-1.


மிஸ்டுகால் வில்லன்கள் இளம்பெண்களுக்கு எமன்! மிஸ்டு கால், ராங் கால், எஸ்.எம்.எஸ் தவிர்க்கச் சொல்லியிருப்பது சரியான நேரத்தில் சொல்லப்பட்ட தெளிவான கருத்து!
   
 
- எம்.சிவகுமார், வேதாரண்யம்..


'தெய்வத் திருமகள்' விமர்சனம் நச்! விக்ரமின் மைல்கற்களில் இது மிக முக்கியமானது. ஏற்கனவே பல பரிணாமங்களைக் கடந்து வந்தவராக இருப்பினும் கற்றுக்கொள்ளத் துடிக்கும் ஆர்வமே அவரை முன்னிறுத்தியிருக்கிறது. 'அழகுத் திருமகள்' சாராவுக்கு ஒரு திருஷ்டிப்பொட்டு! 
- பூ.திலகவதி, சிதம்பரம்.


தேவைகளை நிறைவு செய்யும் உபாயத்தைக் கையாளும் கலையைக் கற்றுத்தருகின்ற நிதர்ஸனாவின் வழிகாட்டுதலுக்கு நெஞ்சார்ந்த நன்றி! 
- 'இனாம்' கேசவன், சாத்தூர்.


சுற்றுச்சூழலுக்கு எமனாகிவிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாகும் பாக்குமட்டை பற்றி படித்தேன்! அதைக்கொண்டு சிறிய முதலீட்டில் ஸ்பூன் முதல் தட்டு வரை தயாரிக்க வழிகாட்டும் மேனகா பாராட்டுக்குரியவர்! 
- அ.ராஜப்பன், கருமத்தம்பட்டி.


பாம்புக்கு அஞ்சாத அருந்ததி... & 'போடிநாயக்கனூர் கணேசன்' நாயகி தைரியமான பொண்ணு என நிரூபிக்கிறார்.
- கே.மோகன், மங்கலம்்.