காஜல் அகர்வால் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்க, அவரது தங்கை நிஷா அகர்வால் தெலுங்கில் அக்காவின் இடத்தைப் பிடித்துவிடுவார் போலிருக்கிறது. நிஷா நடித்த ‘ஏமண்டி இ வேளா’ படம் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட். அந்தப் படம் அப்படியே தமிழிலும் ரீமேக் ஆக, ‘களவாணி’ விமல் ஜோடியாக அதன்மூலம் தமிழிலும் அறிமுகமாகிறார் நிஷா.
ஆகஸ்ட் 14ம் தேதி ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி செல்லத் திட்டமிட்டிருக்கிறார் சூப்பர்ஸ்டார். சிங்கப்பூர் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்ற நேரத்தில், அவருக்காக வேண்டியிருக்கிறது குடும்பம். மகள் சௌந்தர்யாவும் கணவரும் கடந்த வாரம் திருப்பதி சென்று தங்கள் வேண்டுதலை முன்னதாகவே நிறைவேற்றி விட்டார்கள்.
உலகின் மிக காஸ்ட்லியான நிச்சயதார்த்த மோதிரத்தை நடிகை ரீஸ் விதர்ஸ்பூன் கையில் அணிந்திருக்கிறார். அவரை சமீபத்தில் மணந்துகொண்ட காதலர் ஜிம் டோத் அணிவித்த அந்த மோதிரம் பிளாட்டினத்தால் ஆனது; காஸ்ட்லியான அசோகா கட் வைரங்கள் பதித்தது. விலை, ஜஸ்ட் ஆறு கோடியே 62 லட்சம்.
‘நான் கர்ப்பமாக இருப்பதாக முதலில் கேள்விப்பட்டேன். என் கணவருக்கு வேறொரு பெண்ணோடு தொடர்பு இருப்பதாக அடுத்து கேள்விப்படுகிறேன். மீடியா நண்பர்களே, பரபரப்பு கிளப்ப வேண்டும் என்பதற்காக இவ்வளவு கீழே இறங்கி பொய்ச்செய்தி போடாதீர்கள்!’’
நடிகை ஷில்பா ஷெட்டி
‘‘சேனல் 4 வெளியிட்ட தமிழர் படுகொலைக் காட்சிகளைக் கண்டு கலங்கிப் போனேன். என் 28 வயது மகன் அந்தக் காட்சிகளைப் பார்த்து அழுது, ‘நான் சிங்களவன் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன்’ என்றான். என் மகளும் இதைச் சொல்லி அழுதாள்.’’
முன்னாள் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்க
படங்கள் இல்லாவிட்டாலும் பரபரப்பு கிளப்பும் ரகசியத்தைத் தெரிந்துவைத்திருக்கிறார் நேஹா தூபியா. அன்னா ஹசாரே படங்கள் அச்சிட்ட கவர்ச்சி உடை அணிந்தபடி ஒரு பத்திரிகைக்கு சமீபத்தில் போஸ் கொடுத்தார். ஊழல் ஒழிப்புக்கான சியர் லீடர்?
அஜித்துடன் ஜோடி கட்ட பலரும் க்யூவில் நிற்க, ‘பில்லா &2’ படத்தில் இரண்டாவது ஹீரோயின் வாய்ப்பை மறுத்திருக்கிறார் விமலா ராமன். ‘‘தெலுங்கில் பிஸியான நடிகையா இருக்கேன். இந்தியிலும் அறிமுகமாகறேன். இந்த நேரத்துல இது சரியா இருக்குமா?’ என்பது அவர் வாதம்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் ‘யோஹன்: அத்தியாயம் ஒன்று’க்காக கடந்த வாரம் வெளியான விளம்பரத்தைப் பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடிப் போனார்கள். ‘நண்பன்’ முடிந்ததும் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கிறார் விஜய். 2012 மார்ச்சில் விஜய்யுடன் கௌதம் கைகோர்க்க, ஆரம்பமாகவிருக்கிறது யோஹன். கௌதம் வழக்கப்படியே அமெரிக்காவிலும் படமாகும் படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானைக் கேட்டிருக்கிறார்கள். புயல் ஒத்துக்கொண்டால் ‘யோஹம்’தான்..!
திருமணத்துக்குப் பிறகு பிரித்வி ராஜுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது. பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் தயாரிக்கும் இந்திப் படத்தில் பிரதான வேடத்தில் நடிக்கிறார் பிரித்வி. ஜோடி ராணி முகர்ஜி.
‘‘சுரங்க ஊழலை வெளிக்கொண்டு வந்ததற்காக எனக்கு நோபல் பரிசு தரவேண்டும்’’ & பதவி விலகக் கோரிய எதிர்க்கட்சிகளுக்கு இப்படித்தான் பதில் சொன்னார் கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா. ‘அவர் நடிப்புக்கு ஆஸ்கர் வேண்டுமானால் கிடைக்கும்’ என எதிர்க்கட்சிகள் கிண்டலடிக்க, கடைசியில் பி.ஜே.பி. தலைமையே நாற்காலியிலிருந்து அவரைத் தூக்கியடித்தது.