கண்ணதாசன் விழா. அவனது தொட்டில் பூமியில் ஒரு கவியரங்கம். அந்த மண்ணில்தான் நானும் பிறந்தேன்.
‘என் குடியும் உன் குடியும் ஒரே குடி -காரைக்குடி’என்று தொடங்கினேன். அரங்கம் ரசனையின் மெல்லிய மயக்கத்தில் மிதக்கத் தொடங்கியது.
நான் மதுவின் சுவையை உணர்ந்ததில்லை. ஆனால், மற்றவர்களின் பேச்சிலும் எழுத்திலும் அதன் போதையை அனுபவித்திருக்கிறேன் பத்திரிகையின் பக்கங்களில் என் வாழ்க்கை பயணிக்கத் தொடங்கிய காலம். அடியாரின் ‘நீரோட்டம்’ நாளிதழில் வேலைக்குச் சேர்ந்திருந்தேன். அ.தி.முக&வின் கொள்கை பரப்புச் செயலாளராக ஜெயலலிதா அறிவிக்கப்பட்டிருந்தார்.
அவரை எதிர்த்து எழுதியதால் அடியார் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவரது வீட்டில் மதுபாட்டில்கள் இருந்ததாக வழக்கு போடப்பட்டது. அப்போது மதுவிலக்குச் சட்டம் அமலில் இருந்தது.
‘அடியாரும் ஆறு பாட்டில்களும்’ என்று அடியாரின் கைதைக் கண்டித்து ஜெயகாந்தன் ‘நீரோட்ட’த்தில் தொடர்ந்து எழுதினார். அவர் சொல்லச் சொல்ல நான்தான் எழுதிக்கொண்டு வருவேன். ‘குடியைப்பற்றி குடித்துக்கொண்டே பேட்டி கொடுக்கிறேன்’ என்றார். மெரீனா கடற்கரையில் கூட்டம் போட்டு ‘பெர்மிட்’டை கிழித்துப் போட்டுவிட்டுக் குடித்ததைச் சொன்னார். அவர் நடுங்காமல் சொன்னார்; அந்தச் சின்ன வயதில் அதை எழுதும் என் விரல்கள் நடுங்கிக்கொண்டே இருந்தன.
2002ல் மலேசியா போயிருந்தேன். தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் ஆதிகுமணன் அழைத்திருந்தார். அங்கு என்னைக் காண வந்திருந்த தமிழ் நண்பர்களின் அன்பில் அலைமோதினேன். இரவு ஒரு நண்பர் பெரிய பாட்டிலைக் கொண்டுவந்து, ‘இந்தாங்க கவிஞரே’ என்றார். ‘நான் குடிக்கமாட்டேன்’ என்றேன். ‘மசாஜுக்கு போகலாமா’ என்றார். மெல்லிய சிரிப்புடன் மறுதலித்தேன்.
‘தன்னை மறக்கப் போதை தான் அழியப் புணர்ச்சி தன்னந்தனியாக இல்லையா எதுவுமே’ என்றெழுதிய விக்ரமாதித்யனை நான் அழைத்துப் போயிருக்க வேண்டும். அந்த நண்பருக்குத் தோதான நண்பர் கிடைத்திருப்பார்.

‘மதுப்பழக்கம் உள்ள ஒருவனே மதுவினால் விளையும் தீமைகளைத் தெளிவாக எடுத்துரைக்க முடியும்’ என்று கவிஞர் கண்ணதாசன் ‘அர்த்தமுள்ள இந்து மத’த்தில் நிறைய எழுதியிருக்கிறார்... ‘சட்டத்தினால் மதுவை ஒழிக்க முடியாது. சட்டம்போட்டு ஒன்றை மறைக்க மறைக்க, அது பற்றிய ஆசைகளே கிளர்ந்து எழும். முழுக்க மூடிக்கொண்டிருக்கும் பெண்ணைப் பார்க்க விரும்பும் கண்ணைப் போல், முழுக்க மறைக்கப்பட்ட ஒன்றைச் சுவைக்க விரும்புவது மனித இயல்பு.
மது, விலைமாதர் போன்ற விஷயங்களில் அழுத்தமான நீதி போதனையே மனிதனின் மனதை மாற்ற முடியும். அந்நாளில் அரசாங்கம் லைசென்ஸ் கொடுத்தாலும் ஊருக்குள்ளே கள்ளுக்
கடையோ சாராயக்கடையோ வைக்க எந்தக் கிராமத்திலும் யாரும் இடம் கொடுக்கமாட்டார்கள். குடித்துவிட்டு சபைக்கு வரும் ஒருவனை அந்நாளில் காணவே முடியாது. குடிப்பவனுக்குப் பெண் கொடுக்கமாட்டார்கள்.’
இன்றைய காலம் போதையின் உச்சத்தில் கவிழ்ந்து படுத்துக் கிடக்கிறது. கோயில், திரையரங்கம், பள்ளிக்கூடம் எல்லா இடங்களுக்கு அருகிலும் சாராயக்கடைகள். குடித்துக் குடித்துக் கடக்க முடியாத நீண்ட இரவை அங்கேயே தூங்கிக் கழிக்கிறார்கள் ‘குடி’மக்கள். திருமண வீடுகள், சாவு வீடுகள், கார்ப்பரேட் கம்பெனி கூட்டங்கள், பத்திரிகையாளர் சந்திப்பு சகலமும் இன்று சாராய வாசம். குடி ஒரு தகுதியாகிவிட்டது. ‘வெளியில் குடிக்க வேண்டாம்; வீட்டுக்கு வாங்கி வந்து குடியுங்கள்’ என்று கணவர்களைக் கெஞ்சிக் கேட்டுக் கோழி வறுத்துக் கொடுக்கிறார்கள் இல்லத்தரசிகள். ‘கொடுக்கட்டுமா கொஞ்சம் உனக்கு; கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு’ என்று பழகிக் களிக்கும் பெண்களும் பெருகிக் கொண்டிருக்கிறார்கள்.
தன்னை பாலியல் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கி, தனது மகளிடமும் அதைத் தொடர நினைத்த குடிகாரக் கணவனை சென்னை வடபழனியில் கூலிப்படை வைத்துக் கொலை செய்திருக்கிறாள் ஒரு மனைவி. குடித்துவிட்டுத் தன்னிடம் தொடர்ந்து தகராறு செய்த மகனை வேலூரில் கூலிப்படை வைத்துக் கொலை செய்திருக்கிறாள் ஒரு தாய். கடந்த வாரங்களில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் இவை.
பாரசீகக் கவிஞன் உமர்கயாம் மதுக்கடையில் அமர்ந்து பகிரங்கமாகக் குடிப்பாராம். ஆனால், ஒரு காலிப்பயலைப் போல் அவர் குடித்ததில்லை; தத்துவவாதியாகவே குடித்தார் என்பார்கள். நமக்கு அப்படிக் குடிக்கத் தெரியாது.
மறைந்த இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசன் வீட்டில் இசைக்கலைஞர்களுக்கு விருந்து வைத்தபோது மலையாளப் பாடலாசிரியர் வயலார் ராமவர்மா அளவுக்கு அதிகமாகக் குடித்துக் கொண்டிருந்தாராம். ‘இப்படிக் குடித்தால் உடம்பு கெட்டுப் போகாதோ’ என்று திருமதி ஷஹிதா சீனிவாசன் கேட்டபோது அவர் ஒரு கவிதை சொல்லியிருக்கிறார். வரிகள் என் நினைவில் இல்லை; உள்ளடக்கத்தை மட்டும் சொல்கிறேன்:
‘முந்தாநாள்என் மதுக்கோப்பையில்ஒரு தூசி விழுந்து கிடந்ததுஎடுத்துப் போட்டுவிட்டுக்குடித்துவிட்டேன்.நேற்றுஎன் மதுக்கோப்பையில்ஒரு பூச்சி விழுந்து கிடந்ததுஎடுத்துப் போட்டுவிட்டுக் குடித்துவிட்டேன்.இன்று என் மதுக்கோப்பையைஎடுத்து வைக்கிறேன்...என்னால்ஒன்றுமே செய்ய முடியவில்லை.ஏனென்றால் அதில்நானே விழுந்து கிடக்கிறேன்.காடுறை உலகம்காதலர்கள் முத்தமிடும்போது கண்களை மட்டும் மூடுவதில்லை; உலகத்தின் அத்தனைக் கதவுகளையும் மூடி விடுகிறார்கள். தங்களை முழுவதுமாக மறந்துவிடுகிற அந்த முத்தத்தின் மொத்த நேரத்திலும்கூட உள்ளுணர்வில் இயற்கையை நினைத்திருந்தவர்கள் சங்க காலக் காதலர்கள். அவர்கள் காதலர்கள் மட்டுமல்ல; பூவுலகின் நண்பர்கள்.
ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் போதாது காதலுக்கு. நிலா வேண்டும்; மழைவேண்டும்; மீன் வேண்டும்; காடு வேண்டும்; தும்பி வேண்டும்; மழலை வேண்டும்; மண்புழு வேண்டும்; கவிதை வேண்டும் என்று நான் ‘மழைப்பெண்’ணில் எழுதினேன்.
காட்டையும் காட்டு உயிர்களையும் காதலிக்கும் ஒரு கவிதைத்தொகுதியை இன்று அவைநாயகன் தந்திருக்கிறார். ‘காடுறை உலகம்’ & சுற்றுச்சூழல் அமைப்பான ‘ஓசை’யின் முதல் வெளியீடு. டிஸ்கவரி சேனலும் அனிமல் பிளானெட்டும் நமக்கு ஏற்படுத்தும் சூழல் விழிப்புணர்வை மீண்டும் கவனப்படுத்துகிறது அவை நாயகனின் கவிமொழி.
புதரில் உதிர்ந்து மறைந்துகிடக்கும் மானின் கொம்பை விரும்பித்தேடி உணவாக்கிக் கொள்ளும் முள்ளம்பன்றி&
நிழலில் நிற்கும் புள்ளிமான் பசியாற தேக்கிலை பறித்துப்போடும் உச்சிமரச் சாம்பல் மந்தி&
எதிரிகள் சூழ்ந்த புல்தரையில், பிறந்தவுடனேயே எழுந்து நடந்து ஓடத் தொடங்கும் புள்ளிமான்&
நீரில் அமிழ்ந்த புலியின் மீசையைப் பூச்சியெனக் கருதி இழுத்துச் சீண்டும் கெண்டைமீன்கள்&
தனது வலசைப் பாதையை மறக்கமுடியாமல் தேடி அலையும் யானைக்கூட்டம்&
காட்டின் உயிர்ப்பை அதன் ஆச்சரியங்களோடு அழகாகப்
பதிவுசெய்திருக்கிறார் அவை நாயகன்.
எழுதாத அவரது ஓர் அனுபவத்தை எனக்குச் சொன்னார்:
சேகர் என்கிற வனப்பாதுகாவலர் அவரை சிறுவாணிக்கு அழைத்துப் போயிருக்கிறார். அங்கு வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறைய தேக்குமரங்கள். ‘அதோ பாருங்கள் யானை’ என்று அவைநாயகனுக்குக் காட்டியிருக்கிறார். ஆனால், யானை இல்லை. எங்கே என்று கேட்டபோது, ஒரு தேக்குமரத்தில் யானை தேய்த்துப் போயிருந்த முதுகின் சேற்றுத்தடத்தைக் காட்டியிருக்கிறார். யானை வந்து போயிருப்பதற்கான அடையாளம் அது. ‘இதை நாங்கள் அறிவியல்பூர்வமாக ஙிவீஷீ ஷிவீரீஸீணீtuக்ஷீமீ என்போம்’ என்றாராம் சேகர். தமிழில் & உயிரின் கையெழுத்து. எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்கள் உண்மை.
இந்த புத்தகத்தைப் ‘பசுமை இலக்கியத்தின் துளிர்’ என்று அறிமுகம் செய்திருக்கிறார் சு.தியோடர் பாஸ்கரன். இதை இன்னும் கவனப்படுத்துவது இரண்டு விஷயங்கள். வண்ணதாசனின் அணிந்துரை; அற்புதமாகவும் நுட்பமாகவும் பதிவுசெய்யப்பட்டிருக்கும் காட்டு உயிர்களின் புகைப்படங்கள்.
‘வீடு போ போ என்கிறது; காடு வா வா என்கிறது’ என்று நம்மிடம் ஒரு புலம்பல் உண்டு. அது புலம்பல் அல்ல; உண்மையில் அதுதான் உயிரின் திரும்பல். காடுதான் நம்மை வாழ வைக்கிறது; காடுதான் நமது தலைமுறையை ஆசீர்வதிக்கிறது.
தினசரி கொஞ்சமாவதுமதுவருந்ததுவங்கியிருக்கிறேன்தினசரி கொஞ்சமாவதுமரணத்தை விரும்பத் துவங்கியிருக்கிறேன்தினசரி கொஞ்சமாவது பூமா ஈஸ்வரமூர்த்தி
(சலசலக்கும்)
பழநிபாரதி