‘கோ’ படத்தில் நடிகை சோனா தன்னை இமிடேட் செய்து நடித்ததாக கொதித்தெழுந்த நடிகை நமீதா, அதைக் கண்டித்து ஒரு அறிக்கையே வெளியிட்டார். ‘யார் அந்த சோனா..? நான் பதில் சொல்லும் அளவுக்கு அவர் பெரிய நடிகையா? தொடர்ந்து என்னைக் கிண்டல் அடிப்பது போல நடித்து வருகிறார். அடிப்படை நாகரிகம், மரியாதை தெரியாதவர். என்னைப்போல் நடித்து மலிவான விளம்பரம் தேடிக்கொள்வதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்று சூடு பரக்க நீண்டது அந்த அறிக்கை. இதுபற்றி நடிகை சோனாவிடம் கேட்டோம். நமீதாவை காய்ச்சி எடுத்துவிட்டார் சோனா.
‘‘டைரக்டர் எப்படி நடிக்கச் சொல்றாரோ அப்படி நடிக்கணும்... அதுதான் எங்க தொழில். அதுக்குத்தான் பணம் தர்றாங்க. ‘கோ’ படத்துலயும் டைரக்டர் சொன்னதைத்தான் நான் செஞ்சேன். நமீதா மேலே எனக்கு நிறைய மரியாதை இருந்துச்சு. அவங்க நல்ல திறமைசாலி. ஹீரோயின், கிளாமர்னு ரெண்டு சைடும் நின்னு சாதிச்சவங்க. அவங்க ஸ்டைல் எனக்கு ரொம்பப் புடிக்கும்.. அதனால அவங்கள மாதிரி நடிச்சேன். படம் பாத்துட்டு அவங்க சிலபேர்கிட்ட புலம்பற மாதிரி கேள்விப்பட்டேன். ‘உங்களை இமிடேட் பண்ணி நடிச்சதுக்கு மன்னிச்சுக்குங்க. இது நடிப்புதான். கிண்டல் பண்ற நோக்கத்தில இதைச் செய்யலே...’ன்னு உடனடியா எஸ்.எம்.எஸ் அனுப்பினேன்.
அதுக்குப் பதில் இல்லே. நான் அப்படி நடிச்சதால ஏதாவது வருத்தம் இருந்தா படம் வந்தப்பவே பேசியிருக்கணும். படம் 100வது நாளைத் தொடப் போகுது... இப்போ சீப் பப்ளிசிட்டிக்காக அறிக்கை கொடுக்கிறாங்க...’’ என்ற சோனாவிடம், ‘‘நீங்க எஸ்.எம்.எஸ் அனுப்பலே. சோனா ன்னா யாருன்னே தெரியாதுன்னு சொல்லியிருக்காங்களே..?’’ என்றால் மேலும் கொதிக்கிறார் சோனா.

‘‘யாருன்னே தெரியாத சோனாவைக் கண்டிச்சு அப்புறம் ஏன் அறிக்கை கொடுக்கிறாங்க..? அந்த அறிக்கையே பயங்கர குழப்பமா இருக்கு. முதல்ல என்னைத் திட்டியிருக்காங்க. கடைசியில, ‘நான் பெரிய நடிகை. அதனால என்னை கிண்டல் பண்ணி நடிக்கிறாங்க’ன்னு அவங்களே சமாதானம் சொல்லிக்கிறாங்க. பியூட்டி பார்லர், ஃபங்ஷன்ஸ்ல அவங்களைச் சந்திச்சிருக்கேன். ‘ஹாய், பை’ சொல்லியிருக்கோம். ஒருவேளை என்னை மறந்திருக்கலாம். அது இருக்கட்டும். அவங்க மேல வச்சிருந்த மரியாதையிலதான் எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். அதுக்குப் பதிலா அறிக்கை குடுக்கிறாங்க. அவங்கமேல வச்சிருந்த மரியாதை இப்போ காணாமப் போயிடுச்சு...’’
‘‘நீங்க இமிடேட் செஞ்சதால ‘கோ’ படத்தையே அவங்க பாக்கலையாமே. .?’’
‘‘யாருக்கு நஷ்டம்? ஒரு நடிகரையோ, நடிகையையோ இமிடேட் பண்ணி நடிக்கிறது புதுசு இல்லை. நான் ஆம்பளையா இருந்தா ரஜினி சார் மாதிரி நடிக்க முயற்சி செய்வேன். பொண்ணா இருக்கறதால அவங்கள மாதிரி நடிச்சேன். என்னை மாதிரி நாளைக்கு யாராவது நடிக்கலாம். அதுக்கு நான் வருத்தப்படவோ, கோபப்படவோ முடியாது.
‘என்மேல் மரியாதை இருந்திருந்தா டைரக்டர் நடிக்கச் சொல்லும்போது, மறுத்து நடிக்காம தவிர்த்திருக்கணும்’னு நமீதா சொல்றாங்க. நடிக்காம உக்காந்திருந்தா இவங்க வந்து எனக்கு சாப்பாடு போடுவாங்களா..? என் செலவுக்கு பணம் தருவாங்களா..? அவங்களுக்கு நிறைய நேரம் இருக்கு போலிருக்கு. அதான் இப்படியெல்லாம் செய்றாங்க. நான் அப்படியில்லே. எனக்கு 2 பிசினஸ் இருக்கு. படம் புரொடக்ஷன் பண்றேன். நடிக்கிறேன். இதைப் பத்தி தொடர்ந்து பேசிக்கிட்டிருக்க எனக்கு டைம் இல்லே..!’’
வெ.நீலகண்டன்