ட்விட்டர் லாமா!
ட்விட்டரில் தலாய் லாமாவைப் பின்பற்றுகிறவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தொட்டிருக்கிறது. இந்த இலக்கை எட்டும் முதல் மதத் தலைவர் இவர்தான்! ‘தங்கள் கருத்துகள் இளைஞர்களை வேகமாகச் சென்றடைய சமூக வலைத்தளங்கள்தான் சரியான வழி’ என தொழில்நுட்ப வல்லமையை போன தலைமுறையும் புரிந்துகொண்டிருக்கிறது. லேடி காகா, ஜஸ்டின் பெய்பர் போன்ற பிரபலங்களைப் பின்பற்றுகிறவர்கள் ஒரு கோடிக்கும் மேல்! ஒபாமா 90 லட்சத்தைத் தாண்டிவிட்டார். இந்தியாவில் ட்விட்டர் என்றாலே, இதனால் பதவியிழந்த சசி தரூர் ஞாபகம்தான் வருகிறது.
சாதனை இந்தியர்கள்!
ஆசியாவின் நோபல் என்று அழைக்கப்படும் ராமன் மகசேசே விருதினை இந்த ஆண்டு நீலிமா மிஸ்ரா, ஹரிஷ் ஹண்டே என்ற இரண்டு இந்தியர்கள் பெற்றிருக்கிறார்கள். எளிய மக்களின் முன்னேற்றத்துக்காக உழைத்தவர்கள் என்பதற்காக விருது. மகாராஷ்டிராவின் பஹதர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நீலிமா. 10 ஆயிரம் மக்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில் யாரும் வங்கிகளிலோ, கந்துவட்டிக்காரர்களிடமோ கடன் வாங்குவதில்லை. நீலிமாவின் அமைப்பு ஒரு சுழற்சி நிதியை ஏற்படுத்தி எல்லோருக்கும் வட்டியில்லா கடன் தருகிறது. விவசாயம், தொழில் எல்லாம் இதனால் செழிக்கிறது. கர்நாடகாவைச் சேர்ந்த ஹரிஷ், சூரிய சக்தி விளக்குகளை மலிவு விலையில் தயாரிக்கும் நிறுவனம் ஆரம்பித்து, மின் வசதி இல்லாத கிராமங்களில் வெளிச்சம் ஏற்றியவர். சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு இவர்கள் ரோல் மாடல்கள்!
கிரிக்கெட் வேணுமாம்!தன் முயற்சியில் சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தன் கதையாக இந்தியா & பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் துவங்கியிருக்கிறது. பாகிஸ்தானின் புதிய வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கர் இதற்காக இந்தியா வந்தார். டெல்லியில் தங்கியபோது அவர், காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர்களை சந்தித்தது சர்ச்சைக்கு ஆளானது. இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா இதைக் கண்டித்தார். மும்பை தாக்குதல் தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்காதது குறித்த அதிருப்தியில் ஹினாவின் கொடும்பாவி பல இடங்களில் எரிக்கப்பட்டது. ஆனாலும் சில உருப்படியான விஷயங்கள் நடந்திருக்கின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துவிட்டுப் போயிருக்கிறார் ஹினா.
வட்டி விர்...
மீண்டும் ஒருமுறை வட்டி விகிதங்களை உயர்த்தியிருக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை என இதை நியாயப்படுத்துகிறார் ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பா ராவ். கடந்த 15 மாதங்களில் 11 முறை வட்டி விகிதங்கள் உயர்ந்திருக்கின்றன. உலகில் வேறெந்த நாட்டிலும் இப்படி நடந்ததில்லை. கடன் வாங்கி வீடு, கார் வாங்கியவர்கள் கலங்கி நிற்கிறார்கள். குறிப்பாக கனவு இல்லம் வாங்குவது இனி நடுத்தர மக்களுக்கு கனவாகவே போய்விடும் போலிருக்கிறது. ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியான ஒரு மணி நேரத்துக்குள், தங்கள் வீட்டுக்கடன் வட்டியை அரை சதவீதம் உயர்த்தி, சுறுசுறுப்புத் திலகம் என பெயர் வாங்கியிருக்கிறது ‘யெஸ் பேங்க்’ என்ற தனியார் வங்கி. பணவீக்கம் அதிகமானதும் வட்டியை உயர்த்துகிறார்கள்; உடனே பணவீக்கம் சற்றே குறைய, உடனே பெட்ரோல், டீசல் விலையை ஏற்றுகிறார்கள்; அதைத் தொடர்ந்து விலைவாசி எகிறி, பணவீக்கம் அதிகரிக்க, திரும்பவும் உயர்கிறது வட்டி விகிதம். இந்த மாயச் சுழல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
ஒபாமாவுக்கே வரி!
லண்டனில் குறிப்பிட்ட சில தெருக்களில் போக்கு வரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில் சொகுசு கார்கள் வந்தால், 'நெரிசல் வரி’ விதிப்பது வழக்கம். பத்து பவுண்டு வரி! இரண்டு மாதங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அவரது பாதுகாவலர்கள் கார் அணிவகுப்புக்கும் இந்த வரி விதிக்கப்பட்டது. மொத்தம் 120 பவுண்டு வரி. ரசீதை எங்கு கொடுத்து வசூலிப்பது என குழப்பத்தில் இருக்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள். வெளிநாட்டுத் தலைவர்களுக்கு இப்படி விதித்து வசூலிக்காமல் இருக்கும் வரி பாக்கி மட்டும் 5 கோடி பவுண்டு இருக்கிறதாம். லிஸ்ட்டில் இப்போது ஒபாமாவும்!
காந்திக்கு அவமரியாதை!
டிக்ஷனரியில் சர்ச்சை என்ற வார்த்தைக்கு, ‘ஜெய்ராம் ரமேஷ்’ என அர்த்தம் போட்டுக்கொள்ளலாம் போலிருக்கிறது. இம்முறை மகாத்மா காந்தியை அவமதித்த குற்றத்துக்கு ஆளாகியிருக்கிறார் இந்த மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர். ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க கடந்த திங்கள்கிழமை சென்ற அவரை வரவேற்று கதராடை போர்த்தினார்கள். காந்தியின் அடையாளமாகக் கருதப்படுவது கதர். நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ‘காந்தியின் கொள்கைகளை மக்கள் வாழ்வில் பின்பற்ற வேண்டும்’ என பேசிக்கொண்டிருந்தபோது, அந்தக் கதராடையால் தன் ஷூவைத் துடைத்துக் கொண்டிருந்தார் ஜெய்ராம் ரமேஷ். இதனால் பி.ஜே.பி. மட்டுமின்றி சொந்த காங்கிரஸின் கண்டனத்துக்கும் ஆளாகியிருக்கிறார் அவர்.