சூப்பர்ஸ்டார் ரஜினியோட பல படங்கள்ல வேலை பார்த்திருக்கேன். அவர்கூட நல்ல தோழமை உண்டு. ராகவேந்திர ஸ்வாமிகளோட பக்தர் அவர்ங்கிறது எல்லாருக்கும் தெரியும். அவரோட ஆசைப்படி கவிதாலயா தயாரிச்ச 'ஸ்ரீராகவேந்திரா’ படத்தோட மேக்கப்புக்காகவும், செட்டுகள் போடவும் என்னை மந்த்ராலயம் அனுப்பி, அங்கே இருக்கிற ராகவேந்திர ஸ்வாமிகள் உருவத்துடன் கூடிய கருவறையை படம் எடுத்துவரச் சொன்னாங்க. அங்கே கருவறையைப் படமெடுக்க அனுமதியில்லை. ஆனா இந்தப்படத்தோட முக்கியத்துவத்தைச் சொல்லி, சிறப்பு அனுமதி வாங்கி, சர்வ அலங்காரத்தோட ராகவேந்திர ஸ்வாமிகளை படம் எடுத்து வந்தேன். அதே அலங்காரங்களோட ரஜினிக்கு ராகவேந்திரர் வேடம் போட்டு உட்கார வச்சு எடுத்தப்ப, தத்ரூபமா உண்மைப்படம் போலவே இருந்தது.
நான் எடுத்து வந்த ஸ்வாமிகள் படத்தைப் பார்த்து மனத்தைப் பறிகொடுத்த ரஜினி, அதை ஆறடி உயரத்துக்கு பிரமாண்டமா ப்ரிண்ட் போட்டு வாங்கி வீட்டில வச்சுக்கிட்டார். அது நான் எடுத்ததுங்கிற பெருமை எனக்கு. ‘ஸ்ரீராகவேந்திரா’ படம் முழுக்க ரஜினியிலேர்ந்து அதுல சம்பந்தப்பட்ட லைட்பாய் வரைக்கும் எல்லாரும் கடுமையா விரதம் இருந்தோம். உணவு விஷயத்தில மட்டுமல்லாம தாம்பத்ய விஷயத்திலும் கூட விரதம் இருந்து ஒரு படத்தை முடிச்சதில எல்லாருக்கும் ஆன்ம சுகம் கிடைச்சது.
கோடம் பாக்கத்தில என் பேரன் படிக்கிற ஸ்கூல் ஆண்டு விழாவுக்கு, ‘ரஜினியைக் கூட்டி வர முடியுமா?’ன்னு விளையாட்டா கேட்டாங்க. நானும், ‘சரி...’ன்னேன். நான் ரஜினிகிட்ட கேட்டதும், அவர் வர ஒத்துக்கிட்டாரு. ஆனா சூப்பர்ஸ்டார் எங்கே இந்த சின்ன ஸ்கூலுக்கு வரப்போறாருன்னு அதை யாரும் சீரியஸா எடுத்துக்கலை. விழா அன்னைக்கு பள்ளி நிகழ்ச்சிகள் நடந்துக்கிட்டிருந்தது. ரஜினி விஷயத்தை எல்லோரும் மறந்தே போயிருந்தாங்கன்னு சொல்லலாம். ஏன்னா யாரும் அதை நம்பலை. ஒருவேளை அவர் வந்துட்டா அவரை வரவேற்கக்கூட எந்த ஏற்பாடும் செய்யப்படலை. ரஜினி வீட்டுக்குப் போய் அவரைக் கூப்பிட்டேன். அவரும் அவரோட கார்லயே என்னையும் ஏத்திக்கிட்டு ஸ்கூலுக்கு வந்துட்டார்.
திடீர்னு ரஜினியைப் பார்த்த ஸ்கூல் நிர்வாகத்தினருக்குக் கையும் ஓடலை, காலும் ஓடலை. ஆனா அடுத்த அஞ்சாவது நிமிஷம் ஸ்கூல்ல திருவிழாக்கோலம்தான். விஷயம் கேள்விப்பட்டு எங்கேர்ந்துதான் அத்தனை கூட்டம் வந்ததோ, அந்த தெருவே ட்ராபிக் ஜாம் ஆயிடுச்சு. சொன்ன வாக்கை ரஜினி காப்பாத்தியதில நானும் என் வாக்கைக் காப்பாத்தினேன். அவர் அந்த சின்ன விழாவுக்கு வர ஒத்துக்கிட்டதுக்கு ரெண்டு காரணங்கள் & ஒண்ணு, என் மேலிருந்த அன்பு. ரெண்டாவது விஷயம், அந்த ஸ்கூலோட பேர்ல ராகவேந்திரர் பெயர் இருந்தது.
கடந்த இதழில் வெளிவந்த கமல் & ஸ்ரீதேவி சம்பந்தப்பட்ட நிகழ்வு ‘சட்டம் என் கையில்’ படப்பிடிப்பில் நடந்தது அல்ல. அது ‘சங்கர்லால்’ படப்பிடிப்பின்போது நடந்த நிகழ்ச்சி என்பதே சரி..!
தொகுப்பு: வேணுஜி