
எளிய மக்கள் விரும்பும் இலகுவான பழிவாங்கும் ஆவியின் கதை. ஆனால் ஆவியாக மாறும் பாத்திரத்தின் தன்மையையும், தேவையையும் புதிதாகச் சிந்தித்திருப்பதில் வித்தியாசப்படுகிறார் இயக்குநரும், ஹீரோவுமான ராகவா லாரன்ஸ்.
‘முனி’ முதல் பாகத்தில் வந்த அதே குணாதிசயம் கொண்ட பாத்திரத்தில் ராகவா லாரன்ஸ். பகலில் ஆறு பந்துகளையும் சிக்ஸர் அடித்தாலும், இரவு வந்துவிட்டால் பாத்ரூம் போகக்கூட அம்மாவின் துணை வேண்டும். அப்படிப்பட்ட அவர் மீது ஒரு ஆவி ஏறிக்கொண்டால் என்ன பாடுபடுவார், மற்றவர்களை எப்படிப் படுத்துவார் என்பது ‘ஆவி பறக்கும்’ திரைக்கதையில் சொல்லப்பட்டிருக்கிறது.

தனக்கென வடிவமைத்துக்கொண்ட கேரக்டரில் எளிதாகப் பொருந்திவிடுகிறார் லாரன்ஸ். பசங்களோடு கிரிக்கெட் ஆடிப் பொழுதைப் போக்குவதிலும், பயம் வந்தால் ஓடிப்போய் அம்மாவின் இடுப்பில் ஏறிக்கொள்வதிலும் துள்ளலாகச் செய்திருக்கிறார். அண்ணியின் தங்கை லக்ஷ்மி ராய் தங்கள் வீட்டுக்கு வந்ததும் வடிக்கும் ஜொள்ளில் ஆரம்பித்து, கடைசியில் காஞ்சனாவின் ஆவி கதையறிந்து அந்த ஆவிக்கு உயிர் கொடுத்து வில்லன் கும்பலை ஸ்பேர் பார்ட்களாகப் பிரித்தெடுப்பது வரை தன் ஹீரோயிஸத்தை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். அம்மா என்று நினைத்து அண்ணி தேவதர்ஷினி இடுப்பிலும், ஒருகட்டத்தில் லக்ஷ்மி ராய் இடுப்பிலும்கூட ஏறிக்கொள்வது ஆனாலும் லந்து..!
‘காமெடியில் இத்தனை திறமையான நடிகையைப் பார்த்து எத்தனை நாளாச்சு..?’ என்று உச்சுக் கொட்ட வைத்து விடுகிறார் கோவை சரளா. தங்கள் வீட்டுக்குள் பேய் இருப்பதைத் தெரிந்து கொள்ள முயலும் கட்டங்களிலும், லாரன்ஸின் மீது ஏறிக்கொண்ட பேய் பண்ணும் அதகளத்தில் உறைந்து உளறிக்கொட்டும் இடங்களிலும் பின்னி எடுத்திருக்கிறார். அவருக்கு ஈடான காமெடியில் தேவதர்ஷினி. அவரது கணவராக வரும் ஸ்ரீமன் அமைதியாக அறிமுகமாகி ஒரு கட்டத்தில் தானும் காமெடியில் கைகோர்த்துக்கொள்கிறார்.
ஏற்கனவே ஆவி ஏறிய லாரன்ஸிடம் மிதிபட்ட அவர், அதற்குப்பின் லாரன்ஸின் மீது ஆவி ஏறும் கட்டங்களில் எல்லாம், ஏற்கனவே அடிவாங்கியவர் போலவே நடித்து தப்பிக்க முயல்வது அமர்க்களம்.
ஆவியின் கூத்துகளுக்கு நடுவில் கூலாக ரிலாக்ஸ் செய்ய லக்ஷ்மி ராய் நிறையவே உதவுகிறார். கந்தர் சஷ்டிக் கவசமென்று நினைத்து ‘காக்க காக்க’ பாட்டு புத்தகத்திலிருந்து பாட்டுப்பாடி, ஆவியிடம் அடி உதையை வாங்கிக்கட்டிக் கொண்ட நிலையிலும் தன் பேமென்ட்டை கறாராக வசூலித்துக்கொண்டு போகும் மயில்சாமியும், மனோபாலாவும் வரும் காட்சிகளும் கலகல.
இத்தனைக்கும் மேல் ஹைலைட், ஆவிக்குண்டான பாத்திரமாக வரும் ‘திருநங்கை’ வேட சரத் குமார். திருநங்கையாக மாறிய பின்னால் கல்வி கற்க முடியாமல் போக, தன்னைப்போலவே இருக்கும் திருநங்கையைப் படிக்கவைத்து டாக்டராக்க முயலும் வேளையில் அநியாயமாக வில்லன்களால் கொல்லப்படுவது பரிதாபம். இப்படியொரு வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதுடன் அதில் நேர்மையாக நடித்தும் நெகிழவைக்கிறார் சரத்.
வெற்றி - கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவும், எஸ்.தமனின் பின்னணி இசையும் தேவைக்கேற்ப மிரள வைக்கின்றன. திருநங்கைகளுடன் லாரன்ஸ் ஆடும் கடைசிப் பாடல் விறுவிறுப்பு. வெறும் பயமுறுத்தும் நோக்கம் மட்டும் இல்லாமல், நெகிழவைக்கும் சென்டிமென்ட்டுடன் சிரித்துவிட்டும் வரலாம். கமர்ஷியல் தூக்கலான ஆவியாக இருக்கிறாள் காஞ்சனா.
குங்குமம் விமர்சனக்குழு