சேலம் கோயிலில் புதையல்?

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் தங்கப் புதையல் கிடைத்தாலும் கிடைத்தது, இப்போதெல்லாம் எங்காவது கோயிலில் ஒரு கல் பெயர்ந்து நின்றால்கூட, ‘பாதாள அறை... தங்கப்புதையல்’ என்று வதந்திகளைப் பற்றவைத்து விடுகிறார்கள். சேலம் செவ்வாப்பேட்டையில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் உள்ள பாதாள அறையில் தங்கப்புதையல் இருப்பதாக கடந்த வாரம் வதந்தி பரவி சேலத்தைக் கலக்கியது. ‘‘சோழர் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இக்கோயிலின் கருவறையை ஒட்டி ஒரு பாதாள அறை இருப்பது உண்மைதான். ஆனால் அந்த அறைக்குள் கற்களால் மூடப்பட்டுள்ள சுரங்கவழிகள் இருக்கின்றன. அவற்றில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை’’ என்கிறார்கள் கோயில் ஊழியர்கள். மக்கள் தங்கள் மூதாதையர் சொல்லியதாக ஆளுக்கொரு கதை சொல்லி எதிர்பார்ப்பை எகிறச் செய்கிறார்கள். உண்மை, பிரசன்ன வெங்கடாஜலபதிக்குத்தான் தெரியும்!
கிரீன் கலாம்!

பருவ மாற்றத்தால் வெயிலும் மழையும் தாறுமாறாகி பஞ்சத்தை ஏற்படுத்தி வருகிறது. ‘மரம் வளர்ப்பது ஒன்றே இதற்கெல்லாம் தீர்வு’ என்கிறார்கள். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், தான் சந்திக்கும் மாணவர்களிடம் இதைத் தான் வலியுறுத்துகிறார். அவரின் எண்ணத்தை ஈடேற்றுவதற்காக களத்தில் இறங்கி யிருக்கிறார் நடிகர் விவேக். ‘கிரீன் கலாம்’ & இதுதான் திட்டத்தின் பெயர். தமிழகத்தில் 10 லட்சம் மரக்கன்றுகளை நடுவது நோக்கம். எக்ஸ்னோரா, கோவை ‘சிறுதுளி’ அமைப்புகளின் உதவியுடனும், மாணவர்களின் பங்களிப்புடனும் இதுவரை 5 லட்சம் மரக்கன்றுகள் நட்டாகிவிட்டன. 10 லட்சமாவது கன்றை ஒரு சிறிய கிராமத்தில் நட்டு திட்டத்தை நிறைவு செய்து வைக்கிறார் கலாம்!
கல்லானதோ தாய்மனம்?

கடந்த வாரம் மட்டும் பத்துக்கும் அதிகமான கொடூரக் கொலைகள். இதில் வேலூரில் நடந்த கொலை நெஞ்சை உலுக்குகிறது. பெற்ற தாயே கூலிப்படை அனுப்பி மகனைத் தீர்த்துக் கட்டியி ருக்கிறார். கொலை செய்யப்பட்ட வெங்கடேஷுக்கு மூன்று பெண் குழந்தைகள். பொறுப்பில்லாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து கலாட்டா செய்திருக்கிறார். எதற்கும் உதவாத மகன் இருந்தென்ன? செத்தென்ன? இப்படிக் கருதிய வெங்கடேஷின் அம்மா பூஷ்ணம்மாள், வீட்டுக்கு அருகில் இருந்த 10ம் வகுப்பு மாணவனை அணுக, அவன் இரண்டு நண்பர்களிடம் அசைன்மென்ட் தந்திருக்கிறான். 500 ரூபாய் அட்வான்ஸ் வாங்கி¢க்கொண்டு வெங்கடேஷை தனியாக அழைத்துச்சென்று மது வாங்கிக்கொடுத்து கழுத்தை நெரித்துக் கொன்றிருக்கிறார்கள். காரியம் முடிந்ததும் மேலும் 500 ரூபாய் கொடுத்து கணக்கை முடித்திருக்கிறார் பூஷ்ணம்மாள். சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே மாணவனையும் நண்பர்களையும் போலீசார் வளைக்க, அந்த இளம் குற்றவாளிகளைப் பார்த்து வேலூரே அதிர்ந்தது.
திருட்டு புரமோஷன்!

கல்லுக்குழி சுப்பிரமணிக்கு 60 வயது. செய்வது திருட்டுத்தொழில் என்றாலும் அதில் ஒரு கொள்கை உண்டு. 15 வருடங்களாக சைக்கிள் தவிர வேறெதையும் திருடியதில்லை. பூட்டை உடைப்பார். ஆகாதபட்சத்தில் பூட்டிய சைக்கிளுக்குக் கீழே ஒரு சிறிய ரோலர் மாட்டி தள்ளிச்சென்று விடுவார். முதன்முதலாக சுப்பிரமணிக்கு பைக் திருட ஆசை வந்தது. கோவை டவுன் ஹால் பகுதியில் ஒரு பைக்கைக் குறிவைத்தார். பைக்குக்கு ரோலர் சமாசாரமெல்லாம் பயன்படாது. அதனால் கையில் சாவிக்கொத்தோடு மலங்க மலங்க விழித்தபடி நின்றவரைக் கண்காணித்த போலீசார், கையும் களவுமாகப் பிடித்துவிட்டார்கள். 15 வருடங்களாக போலீசுக்கு தண்ணி காட்டி பல சைக்கிள்களை ‘ஆட்டை’ போட்ட ஆசாமி, சைக்கிளிலிருந்து பைக்குக்கு புரமோஷனாக ஆசைப்பட்டு சிக்கிக்கொண்டார்!
சக்தி அழைத்தல்!

சேலம் வட்டாரத்தில் எங்காவது திருட்டு நடந்தால் புதுப் பாளையம் அய்யனாரப்பன் கோயிலில் , 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை சாமியாட விட்டு திருடனைப் பிடிப்பது (?) வழக்கம். இதை ‘சக்தி அழைத்தல்’ என்பார்கள். ஊர்த் திருட்டையெல்லாம் கண்டுபிடிக்கும் அய்யனாரப்பன் கோயிலில் இருந்த மூலவர் சிலையையே கடந்த வாரம் யாரோ ஆட்டையைப் போட்டுவிட்டனர். இதுபற்றி போலீஸில் புகார் செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. இதற்கிடையில் கோயிலில் சக்தி அழைத்தல் நடத்தி திருடனைப் பிடிக்கும் முயற்சியில் மக்கள் இறங்கினார்கள். பம்பை இசை முழங்க, ஏழு சிறுவர் சிறுமியர் அருள்வந்து ஆடினர். திடீரென இருவர் ஓடிச்சென்று ஒரு இடத்தைச் சுட்ட, அங்கு தோண்டிப் பார்த்தபோது ஒன்றும் இல்லை. சக்தி அழைத்தலில் கண்டுபிடிக்கப்படும் திருடனை தப்பவிடாமல் பிடிக்க 2 எஸ்.ஐ&கள் மப்டியில் காத்திருந்து வெறுத்துப் போனதுதான் மிச்சம்!