
தாய்ப்பாலின் பரிசுத்தத்துக்கு எதுவுமே ஈடில்லை என இனி சொல்ல முடியாது. காரணம், அர்ஜென்டினாவிலுள்ள ஒரு பசு. பெயர் & ரோஸிட்டா ஐஎஸ்ஏ. லேசுபட்டவள் இல்லை இந்த ரோஸிட்டா! ஏப்ரல் 6 அன்று அவள் இவ்வுலகை எட்டிப்பார்க்கும்போதே 45 கிலோ எடையில் இருந்தாள். ஜெர்சி பசுக்களின் சராசரி எடையைவிட இரு மடங்கு. எடை மிக அதிகம் என்பதால் சிசேரியன் தேவைப்பட்டது. இந்தச் சீமைப்பசுவுக்கும் தாய்ப்பாலுக்கும் என்ன சம்பந்தமாம்?
அம்மா தரும் தாய்ப் பாலில் இயற்கையாக உள்ள நுண்ணுயிர்ப் புரதங்கள் குழந்தையின் வாழ்க்கையையே மாற்றியமைக்கிறது. குழந்தையின் எதிர்கால வளர்ச்சி ரகசியம் தாய்ப்பாலில்தான் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, தாதுக்கள், வைட்டமின்களை குழந்தைக்கான உகந்த வளர்ச்சி அடிப்படையில், சரியான விகிதங்களில் கொண்டுள்ளது தாய்ப்பால்.
அற்புத திரவமான தாய்ப்பாலில் உள்ள புரதங்கள் ரோஸிட்டா அளிக்கும் பாலில் உண்டு என்பதுதான் இங்கு விஷயம். இது அதிசயம் என்றாலும் விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை! ஆனால், எப்படி சாத்தியம்? தாய்மார்கள் குழந்தைக்குப் புகட்டுகிற தாய்ப்பாலில் உள்ள அதே புரதம் ரோஸிட்டா கறக்கவிருக்கும் பாலிலும் எப்படி கிடைக்கும்? அதுதான் மரபணுப் பொறியியலின் மகத்தான வளர்ச்சி.

தாய்ப்பால் புரதத்தின் மகிமைக்குக் காரணமான இரு மனித மரபணுக்களை செலுத்தியே, ரோஸிட்டா குளோனிங் முறையில் படைக்கப்பட்டிருக்கிறாள்.
யோசித்துப் பாருங்கள்... மனித பால் உற்பத்தி செய்யும் மாடுகள்! தாய்ப்பாலுக்கு நிகரான பால்! அது மட்டுமல்ல... பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்புப் பாதுகாப்பையும் குழந்தைகளுக்கு வழங்கும். தாய்ப்பாலில் இல்லாத இன்னபிற நோய் எதிர்ப்பு சக்திகளையும் தேவைக்கேற்ப இப்பாலில் சேர்த்துவிட முடியும். செரிமானப் பிரச்னைகளையும் நீக்கிவிட முடியும். ரோஸிட்டா பாலில் உள்ள லேக்டோஃபெரின் புரதம் வைரஸ், பாக்டீரியாக்களுக்கு எதிராகச் செயல்படும். இன்னொரு புரதமான ‘லைசோஸைம்’மும் பாக்டீரியாக்களை எதிர்த்துச் செயல் படும்.
சில காலம் முன், மனித மரபணுக்களைப் பயன்படுத்தி உலகின் முதல் மரபியல் மாற்ற மாடு உருவாக்கப்படும் என்று அர்ஜென்டினாவிலுள்ள அக்ரிபிசினஸ் தேசிய தொழில்நுட்பக் கழகமும் ஷான் மார்ட்டின் தேசியப் பல்கலைக் கழகமும் அறிவித்தது. அன்று முதலே, இந்த ஆராய்ச்சிக்கு மாபெரும் எதிர்பார்ப்பு. இந்த ஆராய்ச்சி சிறப்பான வெற்றி பெற்றதன் விளைவாக ஊட்டச்சத்துகளும் நோய் எதிர்ப்புசக்திகளும் நிறைந்த தாய்ப்பாலை தாராளமாக அளிக்கும் நிலையங்களாக நம் மாட்டுப்பண்ணைகள் மாறுகிற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது!
சீனாவிலும் இதுபோலவே, மனித மார்பகப் பாலில் காணப்படும் புரதங்கள் கொண்ட பால் உற்பத்தி செய்யும் கறவைமாடுகள் பற்றிய ஆராய்ச்சி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், அர்ஜென்டினா விஞ்ஞானிகளோ, தங்களது ஆராய்ச்சி மனிதர்களோடு மிகவும் நெருக்கமானது என்றும் அதில் மனிதர்களின் இரண்டு மரபணுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் விளக்குகிறார்கள். சீனாவின் தாய்ப்பால்&பசும்பால் ஆராய்ச்சியில் ஒரு மனித மரபணு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
சில ஆண்டுகள் முன் தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக, தாய்ப்பாலில் செய்த ஐஸ்க்ரீம் உள்ளிட்ட உணவுகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது பிரிட்டனில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதுபோல இந்த ஆராய்ச்சியும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘மரபணு மாற்றப் பசுக்கள் அளிக்கும் தாய்ப்பால் மனித மார்பகப் பாலுக்கு தாழ்வான மாற்றுதான்’ என்று விமர்சிக்கிறார்கள் சிலர். மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்போரும் இச்சர்ச்சையில் உரக்க முழங்குகிறார்கள். ஆனாலும், பல்வேறு காரணங்களால் தங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் தர முடியாத ஏக்கத்தோடு இருக்கும் பெண்களுக்கு இந்தப் பால் திருப்தியான மாற்றாக இருக்கக் கூடும்.
இன்னும் சில ஆண்டுகளில் டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் இந்த ரகப் பாலையும் பாக்கெட்டில் வைத்து விற்பதைக் காண முடியும்!
தாஸ்