முக்கிய தலைவர் கொலை வழக்கு புலன்விசாரணை நடைபெற்ற காலகட்டம்... சயனைடு குப்பியையும் ஆயுதத்தையும் மீறி, என்னால் கைது செய்யப்பட்ட விடுதலை இயக்கப் போராளி, திடீரென சிறையிலிருந்து தப்பி விட்டான் என்ற செய்தி நள்ளிரவை விழிக்க வைத்தது.
‘‘சார்... நீங்க பிடித்த போராளி உள்பட 26 பேர், சிறையிலிருந்து ரகசியமா சுரங்கப்பாதை தோண்டி தப்பித்துச் சென்று விட்டனர். உங்களால் பிடிபட்டவன் அறையை சோதனையிட்டோம். உங்களைக் கொன்று விடுவதாக அங்கு எழுதி வைத்துள்ளான். பத்திரமாக இருங்கள்’’ என்றார் சிறையிலிருந்து பேசிய எஸ்.பி.
தூக்கம் தொலைந்தது. கைத்துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்பினேன். இதைக் கவனித்த என் மனைவி, ‘‘இந்த நேரத்தில் எங்க ரெய்டுக்குப் போறீங்க’’ என்றார். ‘‘இல்லம்மா... நம்ம வீட்டில்தான் ரெய்டு’’ என்று சிரித்தபடி சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர்ந்தேன்.
‘சிறையிலிருந்து தப்பித்த போராளி உங்களைக் கொல்ல வருவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது’ என்ற எஸ்.பி&யின் அறிவுறுத்தல் மனதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. உயிரைப் பணயம் வைத்து போராளிகளைப் பிடித்துக் கொடுத்துள்ளோம். அவர்களைத் தப்ப விட்டுவிட்டு, ‘உங்கள் உயிருக்கு ஆபத்து... பாதுகாப்பாக இருங்கள்’ என்றால் எப்படி?
சமயங்களில் இப்படி நேர்ந்து விடுகிறது. ‘சரி... வருவதை எதிர்கொள்வோம்’ என்று தயாரானேன்.
வராண்டா நாற்காலியில் இரவு முழுவதும் துப்பாக்கியுடன் விழித்தபடி உட்கார்ந்திருந்தேன். தப்பித்தவர்களை மற்ற கைதிகளைப் போல எளிதாக எடைபோட்டுவிட முடியாது. பல முக்கிய தலைகளைச் சாய்த்தவர்கள். எதற்கும் அஞ்சாதவர்கள். மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
பொழுது விடிந்தது.
சிறையில் சுரங்கப்பாதை அமைத்து 26 பேர் தப்பிச்சென்ற செய்தி, நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. நானும் பரபரப்பு அடைந்தேன். ‘‘சிறையில் இருந்து தப்பித்தவர்களில் ஒருவன் என்னைக் கொல்லத் திட்டமிட்டுள்ளான். நீயும் பிள்ளைகளும் ஊருக்குச் செல்லுங்கள்’’ என்று மனைவியிடம் அவசரப்படுத்தினேன். என் மனைவியோ அதைக் கேட்பதாக இல்லை. ‘‘மரணம் ஒருமுறைதான். அது எல்லாருக்கும் பொது. எதுவாக இருந்தாலும் சந்திப்போம்’’ என்றார். ஒரு காவல்துறை அதிகாரியின் மனைவியாகவே அவர் அச்சூழ்நிலையில் செயல்பட்டார்.
எனக்கு உள்ளுக்குள் கணவன், பிள்ளைகளுக்கு தகப்பன் என்ற பொறுப்பும் இருந்தது. அவர்களை கவனமாக இருக்கச் சொல்லிவிட்டு, என் பணிகளில் கவனமானேன். அடிக்கடி வீட்டுக்குத் தொடர்பு கொண்டபடி இருந்தேன். காவல்துறை பணியில் உள்ளவர்கள், தங்கள் கடமையைச் செய்வதற்காக படும் சிரமங்கள் இப்படித்தான் இருக்கும். இதுதான் இந்தப் பணியின் இயல்பு. முக்கிய வழக்குகளில் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் பலரும் இதுபோன்ற தருணங்களைக் கடந்து வந்தவர்கள்தானே!
தப்பியவர்களில் 12 பேர் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடுத்த சில நாட்களில் பிடிபட்டனர். இதைக் கேட்டதும், என்னுடைய ஆள் இருக்கிறானா என்று ஆர்வமாக விசாரித்தேன். ஆனால், அவன் பிடிபடவில்லை! ‘சரி... நமக்கு ரிஸ்க் தொடருது’ என்று நினைத்துக் கொண்டேன். நாட்கள் நகர்ந்தன. போராளிகளைப் பற்றிய தகவல்களை அடிக்கடி விசாரித்துக் கொண்டிருப்பேன். அதேசமயம், எதையும் எதிர் கொள்ளத் தயாரான மனநிலையிலேயே இருந்தேன்.
இப்படியே கழிந்த நாட்களில் ஒருநாள்... போராளி களுக்காக பல வழக்குகளில் நீதிமன்றங்களில் வாதாடுகிற வழக்கறிஞர் ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டார்... ‘‘சார், உங்கள் பிரச்னை தீர்ந்துவிட்டது. உங்களைக் கொல்லத் துடித்துக் கொண்டிருந்த போராளி கொல்லப்பட்டு விட்டான்’’ என்றார்.
சிறையிலிருந்து தப்பிய அவர்கள் மறைவிடத்தில் பதுங்கியிருந்துள்ளனர். முக்கிய தலைவர் கொலைக்குப் பிறகு, தமிழகத்தில் அவர்கள் மறைந்து வாழும் வாய்ப்பு பெரும்பாலும் தடைபட்டது. பக்கத்து மாநிலத்தில் தங்கி, படகு மூலம் தங்கள் நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளனர். அந்நாட்டு கடல் எல்லையில் இருந்தபடி, அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குச் செல்ல, தலைமையிடம் அனுமதி கேட்டுக் காத்திருக்கிறார்கள்.
அந்த சமயத்தில் அவர்கள் அமைப்பின் பிரதான ஆட்கள், தலைமையுடன் ஆலோசித்திருக்கிறார்கள்... ‘தமிழ்நாட்டுக் காவல்துறையை எளிதாக எடைபோடக் கூடாது. சயனைட் கடித்து இறக்காமல், உயிருடன் காவல்துறையிடம் பிடிபட்டுள்ளனர். மத்திய, மாநில உளவுத் துறையினர் பலநாள் இவர்களிடம் வந்து விசாரணை நடத்தியுள்ளனர். நிறைய ரகசியங்களைப் பெற்றிருக்க வாய்ப்பு உள்ளது. வந்திருப்பவர்களில் யாரையாவது உளவாளியாக மாற்றி அனுப்பி வைத்திருக்கலாம். அவர்களைக் கொன்று விடுவதுதான் சரி’ என்று அந்த ஆலோசனையில் முடிவு செய்துள்ளனர். அதன்படி கடலில் காத்திருந்த அனைவரையும் சுட்டுக் கொன்று விட்டதாக தெரியவந்தது. அதோடு, ‘இந்தியாவில் இனிமேல் ஒரு மனிதக்கொலை நம் இயக்கத்தால் நடக்கக்கூடாது’ என்று அந்தப் போராளிகள் இயக்கத் தலைவர் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ள தகவலையும் அறிந்தேன். இவற்றைக் கேட்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன். நமக்கு இருந்த ஆபத்து நீங்கியது ஒருபக்கம். விடுதலைப் போராளிகள் இப்படியும் யோசித்துச் செயல்படுவார்களா என்பது மறுபக்கம்!
மூன்றெழுத்து ஊரில் உயிரைத் துச்சமென நினைத்து போராளியை உயிருடன் பிடித்தது, வழக்கின் புலன் விசாரணை ஆகியவற்றுக்காக 1991&ல் அன்றைய மற்றும் இன்றைய முதல்வரால், வீரதீரச் செயலுக்கான முதல்வர் பதக்கம் பெற்றேன். முக்கிய தலைவர் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாகச் சேர்க்கப்பட்டு, வழக்கு விசாரணையின்போது, தைரியமாகவும் தெளிவாகவும் வாக்குமூலம் தந்தேன்.
ஒருகட்டத்தில் எதிர்த்தரப்பு வழக்கறிஞர் என்னிடம் சிக்கலான கேள்விகளை எழுப்பி மடக்க நினைத்தார். எதிர்க்கேள்வி கேட்டு அவரை நான் மடக்கினேன். இதனால் அந்த வழக்கை விசாரித்த சிபிஐ இயக்குநர் மற்றும் வழக்கறிஞர்கள், அதிகாரிகள் என்னைப் பாராட்டினர். இவ்வழக்கில் காவல்துறை அதிகாரியாக என் கடமையைச் செய்த உணர்வு இன்றும் என்னிடம் எஞ்சி இருக்கிறது. அன்று எடுத்த துப்பாக்கி இன்றும் தோட்டாக்கள் நிரப்பியபடிதான் உள்ளது. இதுதான் காவல்துறையின் தனிச் சிறப்போ?
(பெயர்களும் ஊர்களும் மாற்றப்பட்டுள்ளன)
துப்பறிவோம்!
அ.கலியமூர்த்தி