அடுத்த ஆண்டு உலகம் அழியப்போகிறது என்பதை நம்புவதற்கு ஒரு பெரும் கோஷ்டியே தயாராக இருக்கிறது. அப்படி அழியப் போகும் உலகில், அழியாமல் தப்பிக்கும் ஒரே இடம் எது என்று தெரிந்தால் அங்கு போவதற்கு நீங்கள் ஆசைப்படுவீர்கள்தானே... அந்த இடத்தைக் கண்டுபிடித்தாகிவிட்டது. பிரான்சில் இருக்கும் ‘புகாரெச்’ என்ற குக்கிராமம்தான் அது. இப்போதே பாஸ்போர்ட், விசா எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு தயாராகலாம்!
பழம்பெரும் மாயன் நாகரிக மக்களின் காலண்டர் 2012 டிசம்பர் 21ம் தேதியோடு முடிகிறது. அதன்பிறகு தேதிகள் இல்லை. எனவே அதுதான் ஆண்டவர் தீர்மானித்த இறுதித் தீர்ப்பு நாள் என மத நம்பிக்கையுள்ள பலர் நம்புகிறார்கள். இன்னும் சிலர் கொஞ்சம் ஃபேன்ஸி நம்பராக இருக்கட்டுமே என்று 12&12&12 தேதியில் உலகம் அழிந்துவிடும் என ஜோசியம் சொல்லி, உலகத்தின் ஆயுளை ஒன்பது நாள் குறைக்கிறார்கள். அப்படி உலகமே பெரும் பிரளயத்தில் மூழ்கும்போது, புகாரெச் கிராமம் மட்டும் பாதிக்கப்படாது என்று உறுதியாக நம்புகிறார்கள் பலர்.
வெறும் 189 பேர் வசிக்கும் குக்கிராமம் புகாரெச். தென்மேற்கு பிரான்சில் இருக்கிறது. கிராமத்தை ஒட்டி பிக் தெ புகாரெச் என்ற 1230 மீட்டர் உயர மலைச்சிகரம் இருக்கிறது. பழமையான இந்த மலை, ஏகப்பட்ட குகைகளைக் கொண்டது. விசித்திரமான வாயில்களும், புதிரான வளைவுகளும் கொண்ட இந்தக் குகைகளால்தான் இவ்வளவு பரபரப்பும்!

10 ஆண்டுகளுக்குமுன் இந்தக் கிராமத்து இளைஞர் ஒருவர், ‘வேற்றுக் கிரக மனிதர்கள் ஓட்டிவந்த ஒரு விண்கலத்தைப் பார்த்ததாகவும், அது இந்த மலைச்சிகரம் அருகே இறங்கி, ஒரு குகைக்குள் போய் மறைந்ததாகவும், மலைக்கு அருகே போனபோது விண்கலம் இயங்கும் ஓசையைக் கேட்டதாகவும்’ சொன்னார். இணையதளத்திலும் எழுதினார். அடுத்த சில நாட்களில் அவர் இறந்துவிட்டார்.
அதன்பிறகு இந்த இடத்தைப் பற்றி ஏகப்பட்ட கதைகள். முன்னாள் பிரான்ஸ் அதிபர் மித்தரண்ட் ஒருமுறை ஹெலிகாப்டரில் சென்று இந்த சிகரத்தின் உச்சியில் இறங்கி ஏதோ ஆய்வு செய்தார்; இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் படைகள் இங்கு குழி தோண்டி ஆய்வு செய்தன; இஸ்ரேலின் உளவுப்படையான மொஸாத் இங்கிருக்கும் குகைகளை ஆராய்ச்சி செய்கிறது; பழமையான இந்த மலையில் விசேஷமான தெய்வீக அதிர்வுகள் வெளியாகின்றன. உலகின் எதிர்காலத்தைக் கணித்த நாஸ்ட்ரடாமஸ்கூட இந்த அதிர்வில் இருந்ததால்தான் எல்லாம் கணிக்க முடிந்தது... இப்படி நிறைய!
‘இந்த மலைக்குள் இருக்கும் ரகசிய குகைகளில் வேற்றுக் கிரகவாசிகள் நிறையப் பேர் வசிக்கிறார்கள். ஊழியின்போது உலகம் அழிந்தாலும், இந்த மலையைச் சுற்றிய இடங்கள் மட்டும் பாதிப்புக்கு ஆளாகாது. அப்போது வேற்றுக்கிரகவாசிகள் தங்கள் விண்கலங்களை எடுத்துக்கொண்டு பூமியை விட்டுப் புறப்படுவார்கள். அந்த சமயத்தில் இங்கு இருக்கும் மனிதர்களும் அவர்களோடு சேர்ந்து உயிர் பிழைக்கலாம்’ என்கிறரீதியில் நிறையப் பேர் அறைகூவல் விடுக்க, தினமும் இந்தக் கிராமத்துக்கு நூற்றுக்கணக்கில் வெளிநாட்டவர்கள் வருகிறார்கள். மலையைச் சுற்றி இடம் வாங்கி, வீடு கட்டி செட்டிலாக ஒரு கூட்டமே அலைகிறது. நிலத்தின் விலை தாறுமாறாக எகிறிவிட்டது. அவ்வளவு வசதியில்லாத பலர் மலையோரம் வந்து கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்துவிட்டுப் போகிறார்கள். திடீர் சாமியார்கள் சிலர் கிளம்பி, இவர்களுக்கான பிரார்த்தனை வகுப்புகளை நடத்துகிறார்கள். நிர்வாணப் பிரார்த்தனை நடத்தி, கடவுள் மனதில் ஸ்பெஷல் இடம்பிடிக்க முயற்சித்த நபர்களும் உண்டு!
எல்லாமாகச் சேர்ந்து கிராமவாசிகளை டென்ஷனில் ஆழ்த்தியிருக்கிறது. இன்னும் தேதி நெருங்க நெருங்க ஆயிரக்கணக்கில் மக்கள் வரக்கூடும். ‘‘யாரும் உள்ளே நுழையமுடியாதபடி ராணுவத்தை வைத்து கிராமத்தை சீல் செய்ய வேண்டிய நிலைமை வரும் போலிருக்கிறது’’ என்கிறார் கிராம மேயர் டிலார்டு.
ராணுவமே உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிப் போகாதோ!
அகஸ்டஸ்