
மென்மைதான் இதன் சிறப்பு. வேங்கடகிரி சேலையின் ஜரிகை மற்றும் டிசைன் வேலைப்பாடுகள் பட்டுச்சேலை போன்றவை. 80 மற்றும் 100ம் நம்பர் காட்டன் நூலில்தான் நெய்கிறார்கள். முந்தானை, பார்டர் பகுதிகள் மட்டுமின்றி சேலை முழுதுமே ஜரிகை வேலைப்பாடுகள் உண்டு. வயதான பெண்களுக்கான வெள்ளைச் சேலைகள், முந்தானையில் வெறும் புட்டா மட்டும் போட்ட சாதாரண சேலைகளும் உண்டு. எல்லாமும் 250 முதல் 300 கிராம் எடைதான். இந்த எளிமையில்தான் பெண்கள் மயங்குகிறார்கள்.
ஆந்திராவில் போச்சம்பள்ளி, வேங்கடகிரி, கத்வால், சிராலா, நாராயணப்பேட்டை ஆகிய இடங்களில் காட்டன் நெசவு நடந்து வருகிறது. ஊரின் பெயரிலேயே விற்பனைக்கு வரும் இந்தச் சேலைகளுக்கு இந்தியா எங்கும் ஏராளமான ரசிகைகள் உண்டு. அண்மைக்காலமாக இப் பகுதிகளில் பட்டு நெசவு அதிகரித்து வருகிறது. அதிக கூலி, விற்பனை வாய்ப்பு காரணமாக பல நெசவாளர்கள் பட்டுக்கு மாறிவிட்டார்கள். அதனால் ஆந்திர ஜவுளி வியாபாரிகளின் பார்வை வேறு மாநிலங்களுக்குத் திரும்பியிருக்கிறது!

ஆந்திராவில் பெரும்பாலும் குழித்தறிகளே பயன்பாட்டில் உள்ளன. படிகள் கொண்ட குழிக்குள் பொருத்தப்பட்ட அத்தறியில் சில இடர்ப்பாடுகள் உண்டு. தறியை சற்று கடினமாக இயக்கினால் நூல் நைந்து சேலையின் ஃபினிஷிங் குலைந்துவிடும். புட்டாக்கள், கனமான ஜரிகை டிசைன்கள் செய்வதும் சிரமம். தமிழக மேட்டுத்தறிகளில் நெசவை விரைவுபடுத்தவும் உறுதிப்படுத்தவும் வசதிகள் உண்டு. அதிலும் கோர்வைத்தறியில் நினைத்த டிசைனைக் கொண்டுவரலாம். ஜவுளிக்கு வரிவிலக்கு இருப்பதால் மற்ற மாநிலங்களை விட விலை குறைவாகவும் கிடைக்கிறது. இதனால் ஆந்திர ஜவுளி வியாபாரிகள் தமிழக நெசவாளர்களை அணுகத் தொடங்கியுள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் பல கிராமங்கள் காட்டன் நெசவுக்குப் பெயர் போனவை. குறிப்பாக உடையார்பாளையத்தை ஒட்டியுள்ள செங்குந்தபுரம் கிராமத்தில், செங்குந்த முதலியார் சமூகத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் காட்டன் சேலை நெய்கிறார்கள். தமிழகத்தின் பெரும்பாலான நெசவாளர்கள் பட்டுச்சேலைக்கு மாறிவிட்ட நிலையிலும், காட்டன் நெசவை அழியவிடாமல் காத்து நிற்பது இவர்களே!
ஆந்திர வியாபாரிகளின் முக்கிய கொள்முதல் தலமாக செங்குந்தபுரம் விளங்குகிறது. இங்கு கொள்முதல் செய்யும் சேலைகளை ‘வேங்கடகிரி சேலை’ என்று குறிப்பிட்டு இன்னொரு மடங்கு விலை உயர்த்தி விற்கிறார்கள் வியாபாரிகள். செங்குந்தபுரம் மக்களும் ‘வேங்கடகிரி சேலைகள்’ என்ற பெயருக்கே பழக்கப்பட்டு விட்டார்கள்.
செங்குந்தபுரத்தில் 9 தெருக்களில் காட்டன் நெசவு நடக்கிறது. சேலைகள் தவிர, கலம்காரி மற்றும் பிரின்டிங், டையிங் சேலைகளுக்கான காடா துணிகள், வேஷ்டிகளும் நெய்கிறார்கள். நூல்களைக் கொடுத்து சேலையாக பெற்று ஆந்திர வியாபாரிகளுக்கு வினியோகிக்கும் மாஸ்டர் வீவர்களும் இருக்கிறார்கள்.
‘‘இலையூர், சிறுகளத்தூர், வாரியங்காவல், மருதூர், பொன்பரப்பின்னு செங்குந்தபுரத்தைச் சுத்தி பல கிராமங்கள்ல காட்டன் நெசவு நடக்குது. எல்லாத்துக்குமே ‘வேங்கடகிரி சேலைகள்’னுதான் பேரு. மாசத்துக்கு 10 ஆயிரம் சேலைகள் ஆந்திரா போகுது. கூலி கம்மியா கிடைச்சாலும், நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை கிடைக்குது. அதனால இன்னும் இங்கே காட்டன் கைத்தறி ஓடிக்கிட்டிருக்கு’’ என்கிறார் இப்பகுதியைச் சேர்ந்த நெசவாளர் ஜெயபாலன்.
‘‘ஆந்திரத்துப் பெண்கள் கல்யாணத்துக்கு பட்டுச்சேலை உடுத்துறதில்லை. வெள்ளை வேங்கடகிரி காட்டன் சேலையை மஞ்சள் தண்ணியில நனைச்சு, அதைத்தான் உடுத்துவாங்க. மறுவீடு மாதிரி மற்ற விசேஷங்களுக்கும் வேங்கடகிரி காட்டன்தான். சீசன் மாதங்கள்ல நிறைய கல்யாணச் சேலைகளை அனுப்புவோம்...’’ என்கிறார் மணிவண்ணன்.
ஆந்திரப் பெண்களின் கௌரவமிக்க அடையாளமாக விளங்கும் செங்குந்தபுரம் வேங்கடகிரி காட்டனுக்கு தமிழகத்தில் பெரிய அளவில் மார்க்கெட் இல்லை. கல்லூரி மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மிகவும் உகந்தது இச்சேலை. குறிப்பாக, வெயில் காலத்தில் உடுத்தத் தகுந்தது. 300 ரூபாய் முதல் 1300 ரூபாய் வரை விற்கிறார்கள்.
எங்கு கிடைக்கும்?
செங்குந்தபுரம் சேலைகள் சென்னையில் சில கடைகளிலும், கோ&ஆப்டெக்ஸ் விற்பனை மையங்களிலும் கிடைக்கிறது. ‘வேங்கடகிரி சேலைகள்’ என்று கேட்கவேண்டும். செங்குந்தபுரத்தில் வாங்க விரும்பினால் 75020 53834 என்ற மொபைல் நம்பரில் நெசவாளர் ஜெயபாலனை தொடர்புகொள்ளலாம்.
வெ.நீலகண்டன்
படங்கள்: சி.எஸ்.ஆறுமுகம்