வாங்க பேசலாம்! இது Clubhouse கலாட்டா



இந்த டெக்னாலஜி உலகம் நம்மை சும்மாவே இருக்க விடாது போல! அந்தா வந்தாச்சு ‘Clubhouse’ ஆப்ளிகேஷன்!இதென்ன புது பூகம்பம் என்று டவுன்லோடு கொடுத்து உள்ளே போனால்... நுழைந்தவுடனேயே ‘எங்கே உன் போன் நம்பர்’ என்னும் ரீதியில் செக் வைக்கிறது. போன் நம்பர் கொடுத்து, யூசர் நேம், புரொஃபைல் எல்லாம் உருவாக்கியபிறகுகூட நமக்கான கணக்கு கிடைக்காது! நம் நண்பர்கள் யாரேனும் ஏற்கனவே உள்ளே பயனாளராக இருந்து நம்மை அவர்கள் அனுமதிக்க வேண்டும். அந்த நண்பரும் ஏற்கனவே இதேபோல் ஏதோ ஒரு நண்பரால் ‘ஓகே, வந்து தொலையட்டும்’ (Let them in) என அனுமதி கொடுத்து வந்தவர்களே.

அதென்ன ’கிளப்ஹவுஸ்’?
பொது இடத்துல கூட்டம் போடாதீங்கனு சொல்லிட்டாங்க இல்லையா..? ஸோ, மாற்றா இங்க கூட்டமா ரூம் போட்டு பேசிக்கலாம். அதாகப்பட்டது ஆடியோ சாட் ரூம். உள்ளே நுழையும்போதே உங்களின் விருப்பங்கள், மற்றும் ஆர்வங்கள் குறித்த ஆப்ஷன்கள் வரும். அதன் மூலம் உலக அளவிலான உரையாடல் ரூம்களும், பின் நம் மொபைலில் உள்ள நண்பர்கள் பட்டியல்படி யாரெல்லாம் உள்ளே இருக்கிறார்களோ அவர்கள் உள்ள ரூம்களும் நமக்குப் புலப்படும்.

ரூம்களுக்கு மேலே டாபிக்குகள் இருக்கும். உதாரணமாக ‘கதை பேசலாம் வாங்க’, ‘சினிமா லவ்வர்ஸ்’, ‘சென்னை பசங்க’ இப்படி அந்த நேரத்தில் உங்கள் நண்பர்கள் யார் எந்த ரூமில் இருந்தாலும் நீங்கள் அங்கே ஐக்கியமாகலாம்.பேசணும் ப்ரோ... மூச்ச புடிச்சு பேசணும். அவ்ளோதான் ரூல்ஸ். சரி... அப்படி நினைத்தவுடன் பேச முடியுமா?அங்கேதான் டுவிஸ்டு. ரூம் கிரியேட்டர் மற்றும் மாடரேட்டர் (அதாவது அட்மின்) இவர்கள் மட்டுமே அங்கே டான். யாரெல்லாம் பேசலாம் என அனுமதி கொடுக்கிறார்களோ அவர்கள் மைக் எல்லாம் ஆக்டிவ் மோடில் இருக்கும்.

அதேபோல் உள் நுழைந்த நாம் பேச நினைத்தால் மொபைல் ஸ்கிரீனின் கீழே இருக்கும் ‘கை’ சிம்பளை கிளிக் செய்தால் அட்மினோ அல்லது ரூம் ஓனரோ நம் மைக் ஆப்ஷனை ஆக்டிவ் செய்வார். இதுதவிர ஸ்டார்ட் ரூம் ஆப்ஷன் மூலம் நாமும் ஒரு ரூம் கிரியேட் செய்து நம் நண்பர்கள் மற்றும் நண்பர்களுக்கு நண்பர்கள் என சேர்த்து வைத்துக் கொண்டு கூட்டமாகப் பேசலாம்.

இந்த கிளப்ஹவுஸின் ஸ்பெஷல், நமக்கு யாரும் பர்சனல் மெஸேஜ் போட்டு டார்ச்சர் கொடுக்க முடியாது என்பதுதான். அது போலவே, பேசுவதை ரெக்கார்ட் செய்ய இயலாது. இதனாலேயே இங்கே பலரும் நேரம் காலம் தெரியாமல் பேசிப் பொழுதைக் கழிக்கின்றனர்.

இந்த பூதம் எங்கே இருந்து கிளம்பி வந்தது?சான்பிரான்சிஸ்கோ. ஆரம்பத்தில் இதன் பீட்டா வெர்ஷனை உருவாக்கியவர்கள் இருவர். பால் டேவிசன் மற்றும் ஆல்ஃபா எக்ஸ்ப்ளோரேஷன் கோ நிறுவனத்தின் ரோஹன் சேத். இருவரும் முதற்கட்டமாக iOS சுக்கு மார்ச் 2021இல் ஆண்ட்ராய்டுக்கான பீட்டா வெளியீட்டுடன் அறிமுகப்படுத்தினர். இந்த வருடம் ஜூன் ஒன்றாம் தேதி iOSஇலும், ஜூன் 3ம் தேதி ஆண்ட்ராய்டிலும் அதிகாரபூர்வமாக வெளியானது. இது முழுக்க முழுக்க அரட்டைக் கச்சேரி என்பதால் நண்பரின் நண்பர்கள் என்னும் கான்செப்ட்டில் பயனாளர்களை அனுமதிக்கிறது. இந்தக் கிளப்ஹவுஸ் அப்ளிகேஷனை பூதம் எனச் சொன்னதுக்கும் காரணம் உண்டு.

உலக அளவில் ஐந்துக்கும் மேற்பட்ட நாடுகள் இந்த அப்ளிகேஷனை தடை செய்துள்ளன. அப்படி தடை செய்யப்பட்ட நாடுகளில் உலகுக்கே பெப்பே காட்டி வரும் சீனாவும் ஒன்று!
ஆரம்பத்தில் சீனர்களை அதிகம் ஈர்த்த இந்த கிளப் ஹவுஸ் app நாளடைவில் அந்நாட்டு அரசியலை விமர்சிக்கத் தொடங்கியது; உள்நாட்டுப் பிரச்னைகளை விவாதிக்கத் தொடங்கியது. இதனால் சீனாவின் நிஜ முகம் உலகுக்கு தெரியத் தொடங்கவே ஓவர் நைட்டில் இந்த appக்கு தடை விதித்துவிட்டது.

செயலிக்கான சரியான லைசென்ஸ் இல்லாததால் ஓமன் நாடும் குட் பை சொன்னது. இதனைத் தொடர்ந்து ஜோர்டான் நாடும் தடை செய்த லிஸ்ட்டில் சேர... இப்பொழுது தைவானும் ஐக்கிய அரபு நாடுகளும் கிளப்ஹவுஸை தடை செய்யலாமா என யோசித்து வருகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த அப்ளிகேஷனை ‘பயங்கரவாதி களுக்கான இடம்’ என எகிப்து அறிவித்துள்ளது.

முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சேகரிக்கப்படும் டேட்டாக்களைக் காட்டிலும் ஆபத்தான டேட்டாக்களை கிளப் ஹவுஸ் சேகரிக்கிறது. மொபைல் எண் மற்றும் மொபைல் உள்நுழைவு அனுமதி மூலம் அனைவரது பர்சனல் விவரங்களும் கிளப்ஹவுசுக்கு நேரடியாகக் கிடைக்கின்றன.

‘இதற்கான பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்கிறோம்’ என கிளப்ஹவுஸ் கூறினாலும், கடந்த ஏப்ரல் 2021ல் பீட்டா வெர்ஷனிலேயே சுமார் 1.3 மில்லியன் கணக்காளர்களின் டேட்டா, புரொஃபைல் விவரங்கள், உண்மையான பெயருடன் லீக் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.முகநூல், டுவிட்டர், ஷேர் சாட் என மற்ற சமூக வலைத் தளங்களும் போட்டியை சமாளிக்க இந்த குரல் அரட்டை கான்செப்ட்டைக் கொண்டு ரூம்ஸ் ஆப்ஷனை உருவாக்கியுள்ளன. இவற்றிலும் கிளப் ஹவுஸ் போலவே பேசுவதை ரெக்கார்ட் செய்ய முடியாது. ஆனால், இன்னொரு மொபைலின் உதவியுடன் வீடியோவாகவே பதியலாம்!

ரூம் சாட்களை கிளப்ஹவுஸ் மானிட்டர் செய்யும். புகார் எதுவும் வராவிட்டால் ரூம் சாட் முடிந்தவுடன் ரெக்கார்ட் தானாகவே அழிந்து விடும். அதாவது ரூம் சாட்டில் எவரேனும் மோசமாகப் பேசினாலோ, அநாகரிகமாக நடந்துகொண்டாலோ ஆன் த ஸ்பாட் புகார் அளிக்கலாம். கிளப் ஹவுஸ் விரைந்து நடவடிக்கை எடுக்கும். சாட் முடிந்து புகார் கொடுத்தால் நோ யூஸ். இந்தியாவில் எப்பொழுது கிளப்ஹவுஸ் தடை செய்யப்படும் என்று தெரியாது. அதுவரை, வாங்க பேசலாம்!

ஷாலினி நியூட்டன்