மினாரி
கடந்த வருடத்தில் வெளியான சிறந்த 10 படங்களில் ஒன்று, ‘மினாரி’. ஆங்கிலமும் கொரியனும் கலந்த இந்தப் படம் அமேசான் ப்ரைமில் காணக் கிடைக்கிறது. எண்பதுகளில் படத்தின் கதை நிகழ்கிறது. தென் கொரியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறிய குடும்பம் அது. கலிபோர்னியாவில் வசித்து வந்த இந்தக் குடும்பத்தின் தலைவன் ஜேக்கப். அவருடைய மனைவி மோனிகா. இந்த தம்பதிக்கு ஒரு மகனும் மகளும் இருக்கின்றனர்.மகனுக்கு இதயத்தில் கோளாறு.
இந்நிலையில் அர்கன்சாஸில் உள்ள கிராமப்புறத்தில் நிலத்தையும் வீட்டையும் வாங்கி குடியேறுகின்றனர். நிலத்தில் விவசாயம் செய்து முன்னேறிவிடலாம் என்பது ஜேக்கப்பின் ஐடியா. அருகிலிருக்கும் கோழிப்பண்ணையில் மனைவியுடன் சேர்ந்து வேலை பார்த்துக்கொண்டே விவசாயத்திலும் ஈடுபடுகிறார் ஜேக்கப். கணவனும் மனைவியும் வேலைக்குப் போவதால் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள தென் கொரியாவிலிருந்து பாட்டி வருகிறாள். ஜேக்கப் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையையும், விவசாயத்தையும் எதார்த்தமாக சொல்லிச் செல்கிறது திரைக்கதை.
சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை பாட்டியாக நடித்த யூன் யூ ஜங் தட்டியிருக்கிறார். இதன் மூலம் ஆஸ்கர் விருதை வென்ற முதல் கொரிய நடிகை என்ற பெருமையையும் தன்வசப்படுத்தியுள்ளார். படத்தின் இயக்குநர் லீ ஐசக் ஜங்.
தொகுப்பு: த.சக்திவேல்
|