ரத்த மகுடம்-151- பிரமாண்டமான சரித்திரத் தொடர்



சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுவம், குடகம், கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலுங்கம், கலிங்கம், வங்கம், கங்கம், மகதம், கடாரம், கெளடகம், கோசலம், தமிழகம் என்னும் நிலங்களுள் சிறந்ததும் தமிழகத்தின் சிறந்த நகரமாக விளங்கியதும், காஞ்சி என்றும் கச்சி என்றும், கச்சிப்பேடு என்றும், காஞ்சிபுரம் என்றும் பல்வேறு காலகட்டங்களில் அழைக்கப்பட்டு வந்ததும்,
24 கோட்டங்கள், 74 நாடுகள், 1900 ஊர்கள் அடங்கிய தொண்டை மண்டலத்தின் தலைநகராகத் திகழ்ந்ததும் புண்ணிய தீர்த்தம், இட்டசித்தி தீர்த்தம், மங்கல தீர்த்தம், நீண்டகால புடை தீர்த்தம், சர்வ தீர்த்தம் ஆகிய ஐந்து புண்ணிய தீர்த்தங்களை ஆதிகாலம் தொட்டே தன்னகத்தே கொண்டதும், மாமன்னன் கரிகால சோழனால் பலம்வாய்ந்த கோட்டைகளாக சமைக்கப்பட்டதும்,

பாரதப் பெருநாட்டில் உள்ள பல அரச வம்சங்களும் கைக்கொள்ள விரும்பியதும் கலிங்கத்தை வென்ற மாமன்னர் காஞ்சிக்கு வராமலேயே அதை வென்றுவிட்டதாகக் கல்வெட்டுகளில் பதித்து சத்திய விரத ேக்ஷத்ரம் என்று அழைக்கப்பட்டதும் ஆழ்வார்கள் மட்டுமின்றி ஆசார்ய பெருமக்களும், சைவ நாயன்மார்களும் அபிமானம் கொண்டு பாடிப் பரவிய புண்ணிய பூமி என்றும்,

பதினான்கு திவ்ய தேசங்களையும் கணக்கற்ற சிவாலயங்களையும் ஆதிசங்கரர் ஸ்தாபித்து வழிபட்ட அன்னை காமாட்சியின் ஆலயத்தையும் கொண்ட கோயில் மாநகர் என்று கொண்டாடப்பட்டதும் சைவ காஞ்சி, புத்த காஞ்சி, சமண காஞ்சி, வைஷ்ணவ காஞ்சி என நான்கு மதங்களை உள்ளடக்கிய பெருங்காஞ்சி என்றும் பிரம்மதேவனால் விரும்பி பூஜித்த காரணத்தால் காஞ்சி என்று அழைக்கப்பட்டதும் மயில்கள் வாழும் கட்சி என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் திரிந்து கச்சி என்று விளிக்கப்பட்டதாகவும், பொற்றோரான் கச்சி, மலிதோரான் கச்சி, மண்டூர் கச்சி, கருவார் கச்சி, ஆனேற்றான் கச்சி என்று தண்டியலங்காரத்தில் போற்றப்பட்டதும் தண் காஞ்சி,

 பண் காஞ்சி, திண் காஞ்சி, வன் காஞ்சி என்று சேக்கிழார் பெருமானால் குறிக்கப்பட்டதும் காஞ்சனம் பொழி காஞ்சி என்று கலிங்கத்துப் பரணியில் பேசப்பட்டதும், பல்லவ மன்னர்களுக்கு பிரதான தலைநகராகவும், சோழ, பாண்டிய மன்னர்களுக்கு இரண்டாவது தலைநகராகவும், எல்லா காலத்திலும் கலை நகரமாகவும் களை கலையாத பொலிவோடும் இக்கதை நடக்கும் காலத்துக்கு முன்பும் பின்பும் திகழ்ந்த காஞ்சி மாநகரின் நான்கு பிரம்மாண்டமான கோட்டை வாயில் கதவுகளும் மூடப்பட்டு பெரும் காவலின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது.
மதில்களால் பெயர் பெற்ற புராதன நகரங்களில் காஞ்சியும் ஒன்று. எனவே காஞ்சிக் கோட்டை கம்பீரக் கோட்டையாகக் காட்சியளித்தது.

கோட்டையைச் சுற்றி ஆழமும் அகலமும் கொண்ட அகழிகளில் சமீப காலத்தில் ஐநூறு முதலைகள் இறக்கிவிடப்பட்டிருந்ததால் அகழியின் பயங்கரம் அதிகரித்திருந்தது.
கோட்டைக்கு வெளியே குதிரைப் படையும் யானைப் படையும் நான்கு பக்கங்களிலும் நான்கு தீவுகளைப் போல் படர்ந்திருந்தன.நாற்புறமும் கோட்டைச் சுவர்களுக்கு கொம்பு முளைத்தது போல் வீரர்கள் வேல் பிடித்து நின்றிருந்தார்கள். மதில் விளிம்புகளில் அம்பு எய்யும் பொறிகள் வரிசையாக அமைக்கப்பட்டு அவற்றில் அம்புகள் நிரப்பப்பட்டிருந்தன. யந்திரத்தின் விசையை முடுக்கி அம்புகளை வெளியேற்றும் பொருட்டு அவற்றுக்குரிய வில் வீரர்களும் தயாராக இருந்தார்கள்.

கோட்டை மதிலில் உயர்வாக அமைக்கப்பட்டிருந்த இருபத்து ஏழு காவல் கூடங்களுக்கு இருபத்தேழு நட்சத்திரங்களின் பெயர்கள் சூட்டப்பட்டு அங்கே ஐந்தைந்து வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள்.அங்கிருந்தபடி காஞ்சியின் நான்கு பக்கங்களிலும் ஒரு காத தூரம் வரை பார்க்க முடிந்தது. காவல் கூடங்களில் பெரும் பேரிகைகளும் வைக்கப்பட்டிருந்தன. அவற்றிலிருந்து எழும் ஒலி இடியோசை போலவே இருந்ததால் அவற்றுக்கு பேரிடி பேரிகைகள் என்றே பெயர் சூட்டப்பட்டிருந்தன.

கோட்டைக்குள் வரவோ கோட்டையிலிருந்து வெளியேறவோ யாரும் அனுமதிக்கப்படவில்லை. போர் அறிவிப்பு பற்றிய பெயர்ப் பலகைகள் பல கோட்டையைச் சுற்றிலும் வைக்கப்பட்டிருந்தபடியால் காஞ்சிக்கு வந்துகொண்டிருந்த வணிகர்களும் வண்டிகளும் திருக்கழுக்குன்றத்திலும் திருவத்திபுரத்திலும் வணிகத்தை நடத்த ஆரம்பித்தனர்.
மிக முக்கியமானவர்கள் உள்ளே செல்ல வேண்டியிருந்தால் தெற்கு வாயிலை அடுத்த சுரங்கப் பாதை மூலம் நன்கு சோதிக்கப்பட்டும் விசாரிக்கப்பட்டும் அனுப்பப்பட்டனர்.
காஞ்சிக் கோட்டையின் வெளித்தோற்றமானது வேட்டைக்குத் தயாராகிவிட்ட வேங்கையின் நிலையை ஒத்திருந்தது.

கோட்டைக்குள் இருந்த காஞ்சி நகரமோ மேலுக்கு சோபையற்றும் உள்ளுக்குள் உற்சாகம் கொப்பளித்தபடியும் காட்சியளித்தது.தங்கள் பல்லவ மன்னரான பரமேஸ்வரவர்மர் சாளுக்கியர்களுக்கு எதிராக படைதிரட்டி விட்டார்... இழந்த காஞ்சி மாநகரத்தை மீட்கப் போகிறார் என்ற செய்தி தந்த உற்சாகம் காஞ்சி மாநகரின் ஒவ்வொரு மணல் துகளிலும் பிரதிபலித்தது.
உண்மையில் முன்பை விட இப்பொழுதுதான் காஞ்சி மக்கள் அதிகமும் தங்கள் மன்னரை நேசித்தார்கள். உண்மையில் அவர் மன்னரல்ல... மகான் என்ற எண்ணமே மக்கள் மனதில் ததும்பி வழிந்தது.

இத்தனைக்கும் பரமேஸ்வரவர்மர் மாபெரும் வீரர். அவரது வீரதீர பராக்கிரமங்களை மக்கள் அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்கள் கண்களால் பார்த்திருக்கிறார்கள். காதால் திகட்டத் திகட்டக் கேட்டிருக்கிறார்கள். தீர விசாரித்து அறிந்திருக்கிறார்கள்.அப்படிப்பட்டவர் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் தலைமையில் பெரும் படை காஞ்சியை நெருங்கிவிட்டது என்று அறிந்தபோது போர் முரசு கொட்டவில்லை. மாறாக, எந்த மன்னரும் கனவிலும் நினைத்துப் பார்க்காத செயலை நடைமுறைப்படுத்தினார்.ஆம். தனது குடும்பத்துடன் காஞ்சி மாநகரை விட்டு வெளியேறினார்.கையகல நிலம் கொண்ட குறுநில மன்னர்கள் கூட இத்தகைய காரியத்தைச் செய்ய மாட்டார்கள். அனுபவம் வாய்ந்த தளபதிகளை முன்னிறுத்தி வீரர்களைப் பலி கொடுத்து வெற்றியைச் சுவைக்கவே முற்படுவார்கள்.

ஆனால், பரமேஸ்வரவர்மர் அப்படிச் செய்யவில்லை. மாறாக, தன்னைக் கோழை என்றும் வீரமற்றவன் என்றும் வரலாறு தூற்றும் என்று தெரிந்தும் தன் மக்களுக்கும் தன் மூதாதையர் உருவாக்கிய கலை பொக்கிஷங்களுக்கும் எவ்வித சேதமும் ஏற்படக் கூடாது என்று காஞ்சியை விட்டு வெளியேறினார். போர் புரியாமல் பழம் நழுவி பாலில் விழுவது போல் பல்லவ நாடு சாளுக்கியர்களின் வசம் வந்தது. நிச்சயம் சரித்திரத்தில் இதற்காக பரமேஸ்வரவர்மர் இகழப்படு வார். என்றாலும் அக்காரியத்தைத்தான் செய்தார். காரணம், மக்களாகிய தங்கள் மேல் அவர் வைத்திருந்த அன்பு. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இதற்கு கைமாறு செய்ய முடியாது என்றே பல்லவ மக்கள் நினைத்தார்கள். அதனால்தான் இப்பொழுது தங்கள் மன்னர் போருக்குச் சித்தமானதும் குதூகலித்தார்கள்.

ஆனால், அதை வெளியில் காண்பித்துக்கொள்ளவில்லை. சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர் இதனால் மன வருத்தம் அடையலாம் என்பதால் தங்களுக்குள் ஊற்றெடுத்த மகிழ்ச்சியை வெள்ளமாகப் பாயவிடாமல் கட்டுப்படுத்தினார்கள்.விக்கிரமாதித்தர் மேல் காஞ்சி மக்களுக்கு எந்தப் புகாரும் இல்லை. எதிரி நாட்டு மன்னராக இருந்தும்... தங்கள் தலைநகரை பல்லவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் சூறையாடினார்கள் என்ற கனல் மனதில் கொழுந்து விட்டு எரிந்தும் அவர் மக்களைப் பழிவாங்கவில்லை. காஞ்சி மாநகரைத் தீயிட்டுக் கொளுத்தவில்லை. பல்லவ மன்னரைத் தோற்கடிக்க வேண்டும் என்று மட்டுமே விரும்பினார்.

அதனாலேயே விக்கிரமாதித்தர் மீது மதிப்பும் மரியாதையும் பல்லவ மக்களிடத்தில் அதிகரித்தது. இதன் காரணமாகவே வெளிப்படையாக ஆரவாரம் செய்யாமல் அமைதி காத்தார்கள்.ஆலயங்களில் அமைதியாக பூஜை நடத்தினார்கள். ஈசனிடமும் விஷ்ணுவிடமும் புத்தர்பிரானிடமும் மகாவீரரிடமும் மனமுருக வேண்டினார்கள். தங்கள் மன்னரான பரமேஸ்வர வர்மர் போரில் வெற்றி பெற வேண்டும்... சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தரின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படக் கூடாது... அவர் நலமுடன் வாதாபி திரும்ப வேண்டும்... என பிரார்த்தனை செய்தார்கள். வரலாற்றிலேயே இப்படி இருபக்கத்துக்கும் சேர்த்து பிரார்த்தனை செய்தவர்கள் முதலும் இறுதியுமாக காஞ்சி மக்கள்தான்.

அதனால்தான் மகாகவி காளிதாசன், ‘நகரேஷு காஞ்சி’ என நெகிழ்கிறான். சத்திய வாக்கு. சரஸ்வதியின் வாக்கு. நகரம் என்றால் அது காஞ்சிதான். காஞ்சி மட்டும்தான்.
விளிந்தையில் இருந்து காவிரி சமவெளிக்கரையை நோக்கி புரவியில் வந்த கங்க மன்னரான பூவிக்கிரமன், இரவு துவங்கிய நேரத்திலேயே சமவெளியை அடைந்தார். காவிரிக் கரைக்கும் பாசன வாய்க்காலுக்கும் இடையிலிருந்த சமவெளிப் போர்க்களத்தில் பல இடங்களில் பந்தங்கள் எரிந்தன. எரிந்த பந்தங்கள் அளித்த கோரக் காட்சியைக் கண்டு மகிழ்வதா அல்லது வருத்தப்படுவதா என்றே அவருக்குத் தெரியவில்லை.

நாலா பக்கங்களிலும் சிதறிக் கிடந்த பிணங்கள் பார்ப்பதற்கு பயங்கரத்தை அளித்தன. மார்பில் வேல் பாய்ச்சப் பட்டுக் குத்தி நின்ற வேலுடன் மல்லாந்து கிடந்த வீரன் ஒருவனின் ஒளியிழந்த கண்கள் வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.மார்பின் மூலம் அம்பொன்று முதுகுக்கும் அப்பால் ஊடுருவி விட்டதால் குப்புறக் கிடந்த ஒரு வீரன் மண்ணைக் கவ்விக் கொண்டிருந்ததும், முதுகிலிருந்த அம்பும், அதைச் சுற்றிப் பீறிட்டு உறைந்த குருதிக் கறையும் பார்க்க சகிக்காததாயிருந்தது.

காவிரியின் கரை வரையில் கிடந்த பிணக்குவியல்கள், காயப்பட்டும் மாளாத பல வீரர்களின் முனகல்கள்... இத்தனையும் பந்தங்களின் வெளிச்சத்தில் போரின் கோரத்தை உணர்த்திக் கொண்டிருந்தன.இப்படிப் பலபடி மாண்டும் மாண்டு கொண்டுமிருந்த வீரர்களையும் புரவிகளையும் ஒரு சீராக ஒதுக்க தன் நாட்டு வீரர்கள் பலர் கைகளில் பந்தங்களை ஏந்தி முயன்று கொண்டிருப்பதைப் பார்த்தார்.அங்கிருந்த கோர நிலையில் இருந்து பல்லவர்களின் சேதம் மிக அதிகம் என்பதை கங்க மன்னர் பூவிக்கிரமன் உணர்ந்தார். அதே
நேரம், மறுநாள் நடக்கவிருக்கும் போரில் பல்லவர்களின் கை ஓங்கும் என்பதையும் அவரது உள்ளுணர்வு உணர்த்தியது. காரணம், கங்கர்களின் பக்கமும் சேதாரம் அதிகம்.

 எஞ்சிய வீரர்களைக் கொண்டு பல்லவர்களின் தாக்குதலை பொழுது விடிந்ததும் எப்படி எதிர்கொள்வது... உதவிக்கு சாளுக்கியப் படைகள் வருமா... யார் தலைமையில் வரும்... வரும் துணைப் படையை எப்படி பயன்படுத்துவது என்றெல்லாம் சிந்தித்தபடியே தன் பாசறைக்கு வந்த கங்க மன்னரை வரவேற்க அங்கு காத்திருந்தார், பல்லவர்களின் மிகச்சிறந்த ராஜ தந்திரியும், பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மரின் அந்தரங்கத் தோழரும், பல்லவ இளவல் இராஜசிம்மனின் குருநாதருமான புலவர் தண்டி! ‘‘நமது தாக்குதல் இப்படித்தான் இருக்கப் போகிறது...’’ நிதானமாகச் சொல்லி முடித்தான் கரிகாலன்.‘‘அப்படியானால் நமக்கு தோல்வி நிச்சயம்...’’ என கண்களில் கனல் தெறிக்க முழங்கினார் கரிகாலனின் தந்தையான சோழ மன்னர். இதனைத் தொடர்ந்து மந்திராலோசனை சபையில் கூச்சலும் குழப்பமும் எழுந்தது.

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்