கர்ப்பிணிகளுக்கு தொற்று ஏற்பட்டால் அது குழந்தையை பாதிக்குமா..? தொற்றுள்ள பெண்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா..?
சிறுவர்கள், இளம் வயதினர், பெரியவர்கள், இணை நோய் இல்லாதவர்கள்… என அனைத்துத் தரப்பினரையும் கொரோனா இரண்டாம் அலை தாக்கிக் கொண்டிருக்கும் அதே சமயத்தில் கர்ப்பிணிப் பெண்களையும் விட்டு வைக்கவில்லை. குறிப்பாக கொரோனா முதல் அலையை விட இரண்டாம் அலையில் கர்ப்பிணிகள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
கடந்த இரு மாதங்களில் மட்டும் தமிழகத்தில் 40 கர்ப்பிணிகளுக்கு மேல் உயிரிழந்திருக்கிறார்கள். முதல் அலையின் போது 21 கர்ப்பிணிகளைப் பரிசோதனை செய்தால் அதில் ஒன்று அல்லது இரண்டு பேருக்கு மட்டுமே தொற்று உறுதியானது. அதுவே இரண்டாவது அலையில் ஆறு பேருக்குத் தொற்று உறுதியாவதாக மருத்துவர்கள் வேதனையுடன் குறிப்பிடுகிறார்கள். இதிலும் சிலர் மூச்சுத் திணறலுடன் மருத்துவமனைக்கு வருகிறார்கள். இந்த நிலையில் தொற்று பாதிப்பு ஏற்படும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள் பெரும்பாலும் வீட்டுத் தனிமையையே பரிந்துரைக்கின்றனர்.
கர்ப்பிணிகள் வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் இருப்பது, வீட்டில் இருப்பவர்களுடன் கூட தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது, சத்தான சூடான ஆகாரங்களை உட்கொள்வது, வீட்டில் யாருக்கேனும் தொற்று ஏற்பட்டிருந்தால் கர்ப்பிணிகள் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொள்வது… உள்ளிட்டவை தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவும் என்கிறார்கள் மருத்துவர்கள். இதே கருத்தினை ஆமோதித்துப் பேசும் மருத்துவர் அஞ்சுகம் பூபதி, “கர்ப்பிணிப் பெண்ணுக்குத் தொற்று இருந்தால், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் நூறு சதவீதம் வரவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை’’ என்கிறார்.
“தாயிடம் இருந்து குழந்தைக்கு நஞ்சின் வழியாகவோ அல்லது பனிக்குட நீரின் வழியாகவோ பரவக்கூடிய தன்மையை vertical transmissionனு சொல்லுவோம். அந்த வழியாக கொரோனா தொற்று உள்ள தாயிடமிருந்து குழந்தைக்கு நோய் பரவுகிறது என்பதற்கான எந்த ஓர் ஆதாரமும் இதுவரை இல்லை.
கர்ப்பம் தரிக்கும் ஒவ்வொரு பெண்ணிடமும் அந்தக் காலகட்டங்களில் நோய் எதிர்ப்புத் தன்மை குறைவாக இருக்கும். எனவேதான் எல்லாவிதமான நோய்த் தொற்றுக்கும் ஆளாகக் கூடிய தன்மை இயற்கையாகவே அவர்களுக்குள் வந்துவிடுகிறது. அதே போல் ரத்தம் உறைதல் தன்மையிலும் சில மாறுதல்கள் கருத்தரித்திருக்கும் போது இயற்கையாகவே நடக்கும். இந்த சார்ஸ் கோவிட் 2 வைரசும் ரத்தம் உறையும் தன்மையில் சில மாற்றங்கள் ஏற்படுத்துவதற்குக் காரணமாக இருப்பதால் கர்ப்பிணிகள் எளிதில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிறார்கள். முதல் அலையை விட இரண்டாம் அலையில் தீவிர அறிகுறி களான, மூச்சுத் திணறலோடு பாதிப்புக்குள்ளாகிறார்கள்...” என்று கூறும் மருத்துவர் அஞ்சுகம், கொரோனா தொற்றிலிருந்து கர்ப்பிணிப் பெண்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் விளக்கினார்.
‘‘கருத்தரித்தாலும் சரி, கருத்தரிக்காவிட்டாலும் சரி நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம் தனிமனித இடைவெளிதான். இதனோடு சத்தான உணவுகளும், ஆரோக்கியத்திற்கான சிறு சிறு உடற் பயிற்சிகளும், மூச்சுப் பயிற்சிகளும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களின் குடும்ப உறுப்பினர்கள், அடிக்கடி வெளியே சென்று வரக் கூடாது. கூட்டத்தில் இருக்கும்போது அவர்களே விலகி இருத்தல் நல்லது.
கர்ப்பிணிப் பெண்களே வேலை காரணமாக வெளியே போனால் கூட கண்டிப்பாகத் தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவதோடு முகக்கவசத்தை முறையாக அணிய வேண்டும். எந்த ஒரு பொருளையும் முடிந்த அளவு தொடக் கூடாது. வீட்டுக்கு வந்ததும் கைகளை சுத்தமாகக் கழுவி சுகாதாரத்தோடு இருக்க வேண்டும்.
பொதுவாக கர்ப்பிணிப் பெண்களுக்கு மூன்று மாதத்திற்குப் பிறகு அயன், கால்சியம் மாத்திரைகளோடு வைட்டமின் டி மாத்திரையும் கொடுக்கப்படும். தினசரி இதை இவர்கள் எடுத்துக் கொண்டாலும், நோய் எதிர்ப்பு சக்தி என்பது இந்த மாத்திரைகளையும் தாண்டி வருவதுதான். எனவே ஜாக்கிரதையாக இருந்து கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
இதுவரை நாங்கள் பார்த்ததில் பிரசவத்துக்கு நெருங்குகின்ற காலத்தில்தான் அதிகம் பேருக்கு நோய்த் தொற்று வருவதைப் பார்க்க முடிகிறது. பிரசவிக்கும் காலத்திற்கு முன் கொரோனா ஸ்டேட்டஸ் பார்க்கிறோம். அப்படிப் பார்க்கும்போது அறிகுறிகளே இல்லாமல் நிறையப் பேருக்குத் தொற்று இருப்பதைக் காண முடிகிறது.
ஆரம்பக் காலங்களிலோ அல்லது ஆறு மாதங்களுக்கு முன்னரோ தொற்று இருப்பது குறைவான அளவே!எனவே மாதா மாதம்… 15 நாட்களுக்கு ஒரு முறை மருத்து வரைப் பார்க்கச் செல்வோர் பாதுகாப்பாகச் செல்வதோடு, ஒரு முறை மருத்துவரை அணுகி தங்களது சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டு, அடுத்து மருத்துவரைச் சந்திக்கும் காலத்தினை தள்ளி வைக்கலாம். முதல் 12 வாரங்களில், அதாவது 3 மாதங்களில் மருத்துவரைச் சந்திக்கக் கூடிய சூழல் பெரிதாக இருக்காது. அந்த நேரத்தில் ஆன்லைனிலோ, போனிலோ தங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறலாம். இதே விஷயத்தை ஐந்து மாதம் வரை பின்பற்றலாம். ஆனால், 28 வாரங்களுக்குப் பிறகு அதாவது 7 மாதங்களுக்குப் பிறகு சுகர், பிபி அதிகம் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் கட்டாயம் மருத்துவரைப் பார்க்கக் கூடிய சூழல் ஏற்படும். அப்போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்...” என்று கூறும் மருத்துவர் அஞ்சுகம், கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக் கொள்வது பற்றியும் சொல்லத் தொடங்கினார்.
“கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி போடுவது பற்றி இதுவரை ட்ரையல்ஸ் இல்லாமல் இருந்தது. ஆனால், ஒரு சில நாடுகளில் அப்ரூவல் ஆகியிருக்கிறது. தடுப்பூசி போடுவது குழந்தையை எந்த விதத்திலும் பாதிக்காது என்கிற ஸ்டடியும் வந்திருக்கிறது. இந்தியாவிலும் அந்த மாதிரி நடைமுறை வந்துவிடும். அதுவரை பொறுத்திருப்போம்.
அதற்கு முன் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள, திருமணம், இறப்பு சம்பந்தமான நிகழ்வுகள், அதிக கூட்டம் கூடும் இடம் என எந்த இடங்களுக்கும் செல்லாமல் பாதுகாப்பாக இருப்போம். அதேபோல் நம் கலாசாரத்தில் உள்ள வளைகாப்பு நிகழ்வுகளைக் குறைந்த நபர்களோடு அல்லது கூடுமானவரை தவிர்ப்போம். ஏனெனில் வருகிற நபர்களுக்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் கூட தொற்று இருக்கலாம். அதே நேரத்தில் 35 வயதிற்கு மேல் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கொரோனா தொற்றுள்ள தாய்மார்கள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பாகத் தாய்ப்பால் கொடுக்கலாம். அதன் மூலம் குழந்தைக்குத் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. எல்லாவற்றையும் விட மனதளவிலும், உடல் அளவிலும் உறுதியாக இருக்க வேண்டும். கொரோனா பெருந்தொற்று வந்துவிட்டால், சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திவிடுவார்கள் என்கிற பெரும் மன உளைச்சலைத் தவிர்ப்பது நல்லது. தனிமைப்படுத்துவதால் நம் ஆரோக்கியம் மட்டுமல்ல, மற்றவர்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்காமல் இருக்கிறோம் என்கிற மன உறுதியோடு கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பாகவும், பயமின்றியும் இருக்க வேண்டும்...” என்கிறார் மருத்துவர் அஞ்சுகம் பூபதி.
அன்னம் அரசு
|