ஆக்ஸிசிஜனை அள்ளிக் கொடுக்கும் மூங்கில்!
இன்று ஆக்சிஜனுக்காக இந்தியாவே திணறிக் கொண்டிருக்கிறது. ஆனால், ஒரு மனிதனுக்கு ஒரு வருடத்துக்குத் தேவையான ஆக்சிஜனை ஒரு மூங்கிலால் கொடுக்க முடியும் என்று நம்பிக்கையூட்டுகிறார் ஒரு விவசாய விஞ்ஞானி. மட்டுமல்ல; இந்த மூங்கிலைப் பயன்படுத்தி பெட்ரோல், நிலக்கரி, துணி போன்ற பல பொருட்களைத் தயாரித்து, இந்தியாவை தன்னிறைவுற்ற தேசமாக மலரச் செய்ய முடியும் என்று அடித்துக் கூறுகிறார் அவர். இவ்வளவு சிறப்புவாய்ந்த மூங்கிலின் பெயர் பீமா. இதைக் கண்டுபிடித்தவர் விஞ்ஞானி பாரதி.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரதி, ஓசூர் சிப்காட்டில் ‘க்ரோவ்மோர் பயோடெக் லிமிடெட்’ எனும் பெயரில் உயிரியல் தொழில்நுட்பத்துக்கான நிறுவனத்தை நடத்தி வருகிறார். விவசாயத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்.
‘‘ஒரு நாளைக்கு சுமார் ஒன்றரை அடி வளரும் என்ற அதிசயம்தான் எனக்கு மூங்கில்களின் மீது ஆர்வம் வர காரணம். இந்த அதிசயத்தைப் பற்றி ஆராயும் போதுதான் மூங்கில்களின் அரிச்சுவடி கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது. உலகம் முழுவதும் சுமார் 1300 வகையான மூங்கில்கள் உண்டு. அதில் 800 வகைகள் இந்தியாவில் விளைகின்றன. அதிலும் குறிப்பாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில்தான் மூங்கில் விளைச்சல் அதிகம். காரணம், அங்குள்ள தட்பவெப்பநிலை. தென்னிந்தியாவில் வெறும் 2 வகைதான் இருக்கிறது. ஒன்று முள் உள்ள மூங்கில்; மற்றது புதராக, குள்ளமாக வளரக்கூடிய புதர் மூங்கில்...’’ என்று ஆரம்பித்த பாரதி, இந்திய மூங்கில்களில் உள்ள சிக்கல்களைப் பற்றி பேசினார்.
‘‘இந்தியாவில் 139 ஹெக்டேர் நிலத்தில் மூங்கில் விளைகிறது. உலகளவில் மூங்கில் விளைச்சலில் இந்தியாதான் நம்பர் ஒன். ஆனால், இந்த மூங்கில்கள் நம் தேவைகளைப் பூர்த்தி செய்வதில்லை. காரணம், விளைச்சலின் அளவு குறைவு. 139 ஹெக்டேரில் விளையும் மூங்கிலின் அளவு 125 லட்சம் டன். இதன்படி ஒரு ஏக்கருக்கு 400 கிலோதான் விளைகிறது. ஆனால், பீமா மூங்கில் ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் கிலோ விளைச்சலைத் தரும். இதுதான் பீமா மூங்கிலின் சிறப்பு.
இந்திய மூங்கிலை அதிக விளைச்சல் தரக்கூடியதாக மாற்றுவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, இந்தியாவில் விளையும் முள் மூங்கிலிலும், புதர் மூங்கிலிலும் பாம்புகள் அதிகமாக இருக்கும். பாம்புகள் மறைவாக வாழவும், சட்டைகளை உரிப்பதற்கும் இந்த மூங்கில்கள் வசதியாக இருக்கின்றன. பாம்புகள் இருப்பதால் விவசாயியால் மூங்கிலைப் பராமரிப்பது கடினம். தண்ணீர், உரம் போட முடியாது; கடைசியில் வியாபாரத்துக்காக வெட்டவும் முடியாது...’’ என்கிற பாரதி, பீமா மூங்கில் கண்டுபிடிக்கப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்தார்.
‘‘வடகிழக்கு மாநிலங்களில்தான் என் மூங்கில் ஆராய்ச்சியையும் ஆரம்பித்தேன். அங்கே வளரும் மூங்கில் வகைகளில் எது சிறந்தது என அறிய ஒவ்வொரு வகை மூங்கிலையும் ஆராய்ந்தேன். அதில் சிறந்த ஒன்றைத் தேர்வு செய்தேன். தேர்வு செய்த மூங்கிலில் உள்ள குறைகளை நீக்கினேன்.
அதாவது நோய்களை நீக்கும் முகமாக திசு வளர்ச்சிமுறை (டிஷ்யு கல்ச்சர்) எனும் தொழில் நுணுக்கம் மூலம் பீமாவை உருவாக்கினேன். இதற்கு என் நிறுவனத்தின் ஆய்வுக்கூடத்தில் வேலைசெய்யும் 250 பேரும் உதவினர்.‘மகாபாரதத்’தில் பீமன் பாத்திரம் பலசாலியாக இருக்கும். அதையே இந்த மூங்கிலுக்கும் பெயராக சூட்டினேன்...’’ என்று உவகையாகச் சொல்லும் பாரதி, பீமா மூங்கிலின் சிறப்புகளைப் பட்டியலிட்டார்.
‘‘இந்திய மூங்கில் உட்பட உலகில் உள்ள எல்லா மூங்கிலிலும் முள் இருக்கும். முள் இருப்பதால்தான் பாம்பு வருகிறது. இதைவிட மோசமானது புதர் மூங்கில். இதில் பாம்புகளின் பட்டாளமே வசிக்கும்.ஆனால், பீமா மூங்கிலில் முள் இருக்காது. தவிர, மற்ற மூங்கில்கள் இருபது, முப்பது வருடங்கள் வளர்ந்து, பூ பூத்து மடிந்துவிடும். பிறகு மறுபடியும் புது நாற்றுகளை நடவேண்டும். ஆனால், பீமா பூவும் பூக்காது, மடியவும் செய்யாது. அத்துடன் நூறு, நூற்றைம்பது அல்லது முந்நூறு வருடங்கள் வரை வளர்ந்தபடியே இருக்கும். மட்டுமல்ல; பீமா மூங்கிலை வியாபாரம் செய்யும் பொருட்டு வெட்டினால் கூட, இன்னொரு செடியை நடவேண்டிய அவசியமில்லை.
ஆம்; வெட்டிய பகுதியிலிருந்து மீண்டும் செடி முளைக்கும். இது எல்லாவற்றையும் விட மற்ற மூங்கில்களில் கிடைக்காத விளைச்சலை பீமா தருகிறது...’’ என்கிற பாரதி, விளைச்சல் கணக்கையும் விளக்கினார்.‘‘பீமா செடி ஒன்றை நட்டால் ஒரு வருடத்தில் அது 7ஆக முளைத்திருக்கும். நட்ட முதல் செடியின் மண் பகுதியிலிருக்கும் கிழங்குப் பகுதியிலிருந்து பல்கிப் பெருகும்.
இரண்டாம் வருடம் மேலும் 8, மூன்றாம் வருடத்தில் இன்னும் 10, நான்காம் வருடத்தில்மேலும் 10 செடிகள் என பெருகிக்கொண்டே இருக்கும். மொத்தமாக நான்காம் வருடத்தில் 35 செடிகள் இருக்கும். ஆனால், மற்ற வகை மூங்கில்கள் ஒரு வருடம் கழித்து 3 செடிகளாக மட்டுமே பெருகியிருக்கும். அதனால்தான் சாதாரண மூங்கிலின் விளைச்சல் ஒரு ஏக்கருக்கு 400 கிலோ என்றால், பீமாவில் 40 ஆயிரம் கிலோ கிடைக்கிறது...’’ என்கிற பாரதி, பீமாவின் மற்ற அதிசயங்களை விவரித்தார். ‘‘ஒரு ஏக்கர் நிலத்தில் விளையும் நெல் மூலம் வருடத்துக்கு சுமார் 7000 ரூபாய்தான் விவசாயிக்குக் கிடைக்கும். ஆனால், பீமாவை விளைவித்து விறகுக்காக விற்றால்கூட 1 லட்ச ரூபாய் கிடைக்கும். தவிர, எல்லா வகை மூங்கில்களுமே நிலக்கரி பயன்பாடு, சிமெண்ட் ஆலைகள், பஞ்சு உற்பத்தி, விறகு, அலங்காரப்பொருட்கள், பேப்பர் மில்கள், தளவாடப் பொருட்கள் என பலவிதமான தொழில்களுக்குப் பயன்படுகின்றன. ஆனால், இந்தியாவில் விளைச்சல் குறைவாக இருப்பதால் தொழில்களுக்குத் தேவையான மூங்கில்கள் கிடைப்பதில்லை. அதனால் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் மூங்கில்களுக்கு என ஒரு துறையை ஏற்படுத்தி, மூங்கிலை அபிவிருத்தி செய்துவருகின்றன.
தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களில் மூங்கில்விளைச்சல் இன்னும் மோசம். காரணம், இங்கே இரண்டுவகையினமே உண்டு. ஆனால், பீமா மூங்கில் இந்த குறைகளை நிவர்த்தி செய்யும். அத்துடன் சாதாரண மூங்கிலை விட பன்மடங்கு தொழில்களுக்குப் பயன்படும்...’’ என்கிற பாரதி, பீமாவின் தொழில் ரகசியங்களையும் பகிர்ந்தார்.
‘‘நிலக்கரிக்கு மாற்றாகவும், வாகனங்களுக்குத் தேவையான எத்தனால், பெட்ரோல், மின்சாரம்கூட பீமாவில் இருந்து உருவாக்கலாம். உதாரணமாக ஒரு கிலோ பீமாவில், ஒரு கிலோ வாட் மின்சாரமும்; 4 கிலோவில் 1.2 லிட்டர் எத்தனாலும்; 4 கிலோவில் 1 லிட்டர் பெட்ரோலும்; 1 டன் மூங்கிலில் 1 டன் நிலக்கரியும் உருவாக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளோம்.
இதை பல தொழில் நிறுவனங்களுக்கும் விளக்கிச் சொல்லி வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு நாடுகளுக்கு பீமா ஏற்றுமதியாகியிருக்கிறது...’’ என்கிற பாரதி, காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதலைக் கூட பீமா கட்டுப்படுத்தும் என்கிறார்.
‘‘மரம், செடி கொடிகள் எல்லாமே காற்றில் கலந்திருக்கும் நச்சான கரியமில வாயுவை உறிஞ்சி ஆக்சிஜனை வெளியிடுகிறது என்பது உண்மைதான். ஆனாலும் செடி கொடிகளிலும் வேறுபாடு உண்டு. உதாரணமாக அமேசான் காடுகளில் ஒரு ஏக்கர் பரப்பளவு உள்ள காடு 12 ஆயிரம் கிலோ ஆக்சிஜனை வெளியிடுவதாக கணக்கிட்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு ஏக்கரில் விளையும் பீமா மூங்கில் சுமார் 62 ஆயிரம் கிலோ ஆக்சிஜனை வெளியிடும் என்று கண்டுபிடித்திருக்கிறோம். மட்டுமல்ல; 300 வருடங்கள் இருப்பதால் கரியமில வாயுவில் உள்ள கரியமிலத்தை தன் தண்டுகளில் சேமித்துவைக்கக்கூடிய திறனும் அதற்கிருக்கிறது.
இந்தத் திறன்படி கணக்கிட்டால் ஒரு பீமா மூங்கில் மட்டுமே ஒரு வருடத்துக்கு சுமார் 450 கிலோ கரியமிலத்தை எடுத்துக்கொண்டு சுமார் 320 கிலோ ஆக்சிஜனை வெளியிடுகிறது. ஒரு மனிதனுக்கு ஒரு வருடத்துக்குத் தேவையான ஆக்சிஜன் அளவே 250 கிலோதான். ஆகவே, ஒரு மனிதனுக்கு ஒரு மரம் என வைத்துக்கொண்டாலே நாம் எவ்வளவு பீமாவை வளர்க்க வேண்டும் என்று கணக்கிட்டுக்கொள்ளலாம். தமிழக அரசும் சில தனியார் துறையினரும் இந்த மூங்கிலைக்கொண்டு ஆக்சிஜன் பூங்காக்களை அமைத்திருப்பது இதற்கு ஓர் அடையாளம்...’’ என்று முடித்தார் பாரதி.
பெட்ரோல் எடுக்கும் முயற்சியில் அமெரிக்க நிறுவனம்!
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், தன் வளாகத்தில் பீமா மூங்கிலைக்கொண்டு ஆக்சிஜன் பூங்காவை அமைத்திருக்கிறது. அதேபோல தமிழக அரசின் தொழில் அபிவிருத்தி கார்ப்பரேஷன், சென்னை சிறுசேரியின் ஐடி பூங்காவில் ஒரு ஆக்சிஜன் பூங்காவை அமைத்திருக்கிறது. அமெரிக்காவின் நம்பர் ஒன் தனியார் பெட்ரோல் நிறுவனமான ‘ஷெல்’, தமிழகத்தில் பீமாவைக்கொண்டு (200 ஏக்கர்) பெட்ரோல் எடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது .
டி. ரஞ்சித்
|