கொரோனா அம்மன்!



உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், கோவையில் ‘கொரோனா தேவி’ என்ற பெயரில் அம்மன் சிலை வடிவமைக்கப்பட்டு, 48 நாட்கள் சிறப்பு பூஜைக்குப் பின், பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

கொரோனா நோயை கட்டுப்படுத்த, உலகம் முழுக்க தடுப்பூசிகள், மருந்துகள் தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் பரவியுள்ள உருமாறிய கொரோனா மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகிறது. இதற்கு இளம் வயதைச் சேர்ந்த பலரும் பலியாகியுள்ளனர்.இந்நிலையில், கோவை இருகூரைச் சேர்ந்த காமாட்சிபுரி பகுதியிலுள்ள 51வது சக்தி பீடத்தில் இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே இருகூர் பகுதியில்தான் முன்பு பிளேக் நோய் பரவியபோது, ‘பிளேக் மாரியம்மன்’ சிலை வழிபாட்டுக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்த கொரோனா தேவி தொடர்பாக காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரா, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘கோவிட்19 என்ற வைரஸ், மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. இதை மனதில் வைத்து, கொரோனா தேவி சிலையை வடித்துள்ளோம். பிளேக் நோய் பரவியபோது, பிளேக் மாரியம்மன் சிலை வடிவமைக்கப்பட்டு வழிபடப்பட்டது. காலரா, பிளேக் போன்ற கொள்ளை நோய்களின்போது, தங்களைக் காப்பாற்ற அம்மனை வழிபட்டது வரலாறு.
கடவுள் மட்டுமே ஒரே நம்பிக்கை என்ற நிலையில், இதுபோல சிலைகள் வடிக்கப்பட்டு வழிபாடுகள் நடந்துள்ளன. அதே மாதிரிதான், கொரோனாவின் கோரத் தாண்டவத்தை நிறுத்த, கொரோனா தேவி சிலையை வடித்துள்ளோம்.

48 நாட்கள் மகாயக்ஞம் நடத்தி வழிபடுவோம். பக்தர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் பூஜையில் கலந்து கொள்ள அனுமதியில்லை. கோயில் பூசாரிகள் மட்டுமே பூஜைகள் நடத்துவார்கள். மாரியம்மன், மாகாளியம்மன் வழிபாட்டைப் போலவே, கொரோனா தேவி வழிபாடும் முக்கியமானது...’ என தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக கோவை யைச் சேர்ந்த எழுத்தாளரும், சினிமா விமர்சகரும், ‘தமிழினி’ இலக்கிய இணையப் பத்திரிகையின் ஆசிரியருமான கோகுல் பிரசாத், மானுடவியல் வரலாறு சார்ந்த தன் கருத்துகளை முன்வைக்கிறார்.

‘‘நோய்த்தொற்று கிருமிகளுக்குக் கோயில் கட்டுவதொன்றும் புதிதல்ல. மனிதர்கள் எதைக் கண்டு அஞ்சுகிறார்களோ அதற்கெல்லாம் தெய்வ வடிவை அளிப்பதென்பது உலகெங்கிலும் உள்ள மரபுதான். எது தங்களைக் கொல்லுமோ... எது சாவைக் கொண்டு வருமோ... அது உடனடியாக தெய்வமாகிவிடும். பழங்காலத்தில் முறிமருந்து இல்லாததால் பாம்பைக்கூட வணங்கியிருக்கிறார்கள்.

பின்னர் பெருந்தொற்றுக் காலங்களில் சின்னம்மை, காலரா, பிளேக் போன்ற கொள்ளை நோய்கள் பரவி கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்தபோது ஊருக்கு ஊர் புதிய அம்மன் தெய்வங்கள் தோன்றி அருள்பாலித்தன. அவை அந்தந்த நோய்களின் பெயராலேயே வழங்கப்படும் (காலரா அம்மன், பிளேக் மாரியம்மன்) அல்லது அந்த நோயினால் செத்துப்போன பெண் குழந்தைகளின் பெயரால் அழைக்கப்படும் (அங்காளம்மா, எருக்கம்மா). இன்றைக்கு நாம் வழிபடுகிற பெரும்பாலான அம்மன்கள் இப்படி உருவானவையே!

எல்லோரும் கைவிட்ட பின், கடவுளைச் சரணடைவதே ஒரே மார்க்கம் என்றான பின், சாமானியர்களுக்கு வேறு கதியில்லை. எதையாவது பற்றிக்கொண்டு நம்பிக்கையுடன் மீண்டுவர அவர்கள் முயல்கிறார்கள். அவ்வளவு தான். ‘தற்போதைய சூழலுடன் ஒப்பிடும்போது அந்தக் காலத்தில் மூடப் பழக்கவழக்கங்களின் தாக்கம் மிகுதியாக இருந்தது, அதனால் புதிது புதிதாக தெய்வங்கள் முளைத்தன. இப்போது என்ன கேடு’ என்கிற எண்ணமே கொரோனா தேவி மீதான எள்ளலுக்குக் காரணம்.

இதற்கு ஒரே பதில்தான். உயிரச்சம் கடுமையாக பாதித்திருக்கிறது. அறிவியலும் மருத்துவமும் தம்மைக் கைவிட்டுவிட்டதாக மக்கள் கருதுகிறார்கள். அதனால் கடவுளை நாடுகிறார்கள்.

இதுவொரு பண்டைய காலத்து மனநிலை. தொன்றுதொட்டு தொடர்கிற வழக்கம். அதை அவ்வளவு சுலபத்தில் உதறிவிட பாமர மக்களால் முடிவதில்லை...’’ என்கிறார் கோகுல்
பிரசாத்.                           

நிரஞ்சனா