அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே...’ பாடியவர் ஒரு டாக்டரா?



தமிழ் மெல்லிசை மேடைகளில் சில குரல்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதருக்கு இரண்டு ஆண்டுகள் இசைப் பயிற்சி அளித்த இசைச்சித்தர் சி.எஸ்.ஜெயராமனின் குரல் தமிழ் சினிமாவில் தனித்த அடையாளம் என்றே கூறலாம். நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு  முதல் பின்னணி பாடகர் இவர்தான். ‘கா கா கா கா கா கா...’ என்ற அந்த பாடலை பாடிய சி.எஸ்.ஜெயராமன் பாடிய அத்தனை பாடல்களும் கால வெள்ளத்தால் கரைந்து போகாதவை.

ஒருவரின் குரலுக்காக மூன்று தீபாவளிக்கு ஓடி  சாதனையைப் படைத்த திரைப்படம் ஹரிதாஸ். அந்த சாதனைக்குச் சொந்தக்காரர் எம்கேடி என்றழைக்கப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர். தமிழ் திரைத்துறையின் முதல் சூப்பர் ஸ்டார். இசையிலும், நடிப்பிலும் புகழ்பெற்ற இவரின் குரல் லட்சக்கணக்கானோருக்கு மயக்கத்தை மட்டுமின்றி, கிறக்கத்தையும் தந்தது.
தமிழ் சினிமாவில் ஆண்கள் கொடி கட்டிப்பறந்த நேரத்தில், தனது வெண்கலக் குரலால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் கே.பி.சுந்தராம்பாள் என்ற கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள். இந்தியத் திரையுலகில் ஒரு லட்ச ரூபாய் ஊதியம் பெற்ற முதல் நடிகை.

கர்நாடக இசை தெரிந்தவர்கள் மட்டும்தான் இசை ரசிகர்களாய் இருக்க முடியும் என்ற கோட்பாட்டை உடைத்து பாமரரும் இசையை ரசிக்க முடியும் என தமிழ் இசையை வளர்த்தவர். இன்று வரை இவரது குரல் போல யாராலும் பாட முடியவில்லை. அதற்குக் காரணம் உச்சஸ்தாயியில் இவரைப் போல யாராலும் ஸ்ருதி மாற்றி பாட முடியவில்லை.  
இவரைப் போலவே வெண்கலக்குரலில் ஓங்கி ஒலித்த சீர்காழி கோவிந்தராஜனின் பாடல்கள், தமிழர்களின் வாழ்வியலில் தத்துவம் தோய்த்துத் தந்தன. கோயில் மணி ஒலிக்கும்போதெல்லாம், சீர்காழியின் குரல் நமக்கு ஞாபகத்திற்கு வருகிறது. அவ்வளவு கணீர் குரலுக்குச் சொந்தக்காரர் அவர்.

தமிழ் சினிமாவின் யுனிக் வாய்ஸ் என்று கொண்டாடப்பட்டவர் ஏ.எல்.ராகவன். காதல், சோகம், வீரம், நகைச்சுவை என அவர் குரல்களில் காட்டிய பாவம், தமிழ் சினிமாவில் அவருக்கு  தனித்த அடையாளத்தைத் தந்தது. அவர் பாடிய ‘எங்கிருந்தாலும் வாழ்க...’ பாடல் காதலின் தேசிய கீதமாய் ஒரு காலத்தில் கொண்டாடப்பட்டது. துள்ளல் நடையுடன், ஆங்கில வார்த்தைகளை அழகாய் பாடக்கூடியவர்.

இவர் குரலில் பாடுவது சிரமம் என்பதால் மேடை நிகழ்ச்சிகளில் டிஎம்எஸ் குரலில் பாடுபவர்களே பெரும்பாலும் ஏ.எல்.ராகவன் பாடிய பாடல்களைப் பாடுவார்கள். இவரைப் போலவே கண்டசாலா, ஏ.எம்.ராஜா என தமிழ்த் திரையிசையில் முத்திரை பதித்த எத்தனையோ பேர் உள்ளனர்.ஆனால், இவர்களில் இருந்து தமிழ் சினிமாவில் வித்தியாசப்பட்டது ஒரு குரல்.
அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்  ஒரு டாக்டர். இசை நடத்துனர். தமிழகம், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தியவர். அற்புதமான இசைக்கலைஞர். அவர் பெயர் சாமுவேல் கிரப் தனகரன் சிங்.

பொள்ளாச்சியில் பிறந்த சாமுவேல் கிரப் என்ற அந்தக் கலைஞன், பாடகர் டாக்டர் கல்யாண் மற்றும் நண்பர்களுடன் இணைந்து 54 ஆண்டுகளுக்கு முன் ‘மெட்ராஸ் மியூசிக்கல் அசோசியேஷன்’  அமைப்பு மூலம் தனது இசைப்பயணத்தை துவங்கினார். 1989 முதல் 2008ம் ஆண்டு  வரை ‘மெட்ராஸ் மியூசிக்கல் அசோசியேஷன்’ நடத்துனராக இருந்த அவர், ஏராளமான இளம் தலைமுறை இசைக்கலைஞர்களை உருவாக்கியுள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பத்தாண்டு காலமாக பணிபுரிந்ததுடன், துறைத்தலைவராகவும் இருந்துள்ளார். லிபியாவிலும் சில ஆண்டுகள்  பணியாற்றியுள்ளார்.  

இங்கிலாந்தில்  எம்எம்ஏவின் முதல் இசை நிகழ்ச்சியை நடத்தியவர் என்ற பெருமை கிரப்பிற்கு உண்டு. அது மட்டுமின்றி சர்வதேச தேவாலய விழாவில் பாடி அனைவரையும் மகிழ்வித்துள்ளார்.  சிட்னி ஒபேரா ஹவுஸில் க்ரப் தலைமையில் மிகப்பெரிய இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.டாக்டர் கல்யாண் மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். நவீன இசை வடிவத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் அவர்கள் வழங்கிய பாடல்கள் அனைவரையும் கவர்ந்தன. சாமுவேல் கிரப்  பாடும் லாவகத்தைக் கண்டு அமெரிக்காவின் ‘நற்செய்தி பாடலின் ராணி’ என்று அழைக்கப்பட்ட மஹாலியா ஜாக்சன் வியந்து பாராட்டியுள்ளார்.

ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட் டாக்டரான க்ரப், தமிழ் சினிமாவில் பாடல்களைப் பாடியுள்ளார்  என்றால் நம்ப முடிகிறதா?  கிரப்பின் குரல், அதுவரை தமிழ்த் திரையுலகம் கேட்டிராதது.
1982ம் ஆண்டு கங்கை அமரன் இயக்குநராக அறிமுகமான படம் ‘கோழி கூவுது’. பிரபு, சில்க் ஸ்மிதா, சுரேஷ், விஜி உள்ளிட்டோர் நடித்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.
இப்படத்தில் பிரபுவின் முறைப்பெண்ணான விஜி, சுரேஷுடன் ஊர் சுற்றுவதாக நண்பர்கள் பிரபுவிடம் போட்டுக் கொடுப்பது போன்ற காட்சிக்காக அமைக்கப்பட்ட பாடல் காட்சி.  கங்கை அமரன் எழுதிய அந்த பாடலைத்தான் சாமுவேல் கிரப், தீபன் சக்கரவர்த்தி, வித்யாதர், சுந்தர்ராஜன் ஆகியோர் பாடினர்.

அண்ணே அண்ணே
சிப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு
இப்போ ரொம்ப
கெட்டுப் போச்சண்ேண...

இந்தப் பாடலில் வரும் ‘அண்ணே அண்ணே...’ என்ற பேஸ் வாய்ஸ்தான் சாமுவேல் கிரப் பாடியது. பாடல் முழுவதும் அவர் எப்படி இப்படி பாடினார் என்று தெரியவில்லை. இப்பாடலில் பாடிய மற்றொரு பாடகர் வித்யாதர், இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷின் வளர்ப்பு மகன். மிகச் சிறந்த வயலின்
கலைஞர்.

‘அண்ணே அண்ணே...’ குரலில் இருந்த பேஸ் வாய்ஸ், தமிழ் சினிமா அதுவரை கேட்டிராதது. கிரப்பை இசைஞானி இளையராஜா தனது படங்களில்  தொடர்ந்து பயன்படுத்தியுள்ளார்.
1984ம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் விஜயகாந்த், சுலக்ஷனா நடிப்பில் வெளியான படம் ‘ஜனவரி 1’. இளையராஜா இசையில் இப்படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகியுடன் இணைந்து சாமுவேல் கிரப் பாடிய இந்தப் பாடல் துள்ளாட்டம் போட வைக்கும்.

நீ ஒண்ணும் பத்தினி இல்ல
நான் கூட உத்தமன் இல்ல
நான் போட்டேன் கணக்கொன்று மனசுக்குள்ளே
சம்மதிச்சா சுகம் வரும் சம்மதம் சொல்லு...

கிரப்பின் குரல்  பாடலின் துவக்கத்தில் ஜனகராஜுக்கு பொருத்தமாக ஒலிக்கும். அதனைத் தொடர்ந்து ‘லா லா லா லா...’ என எஸ்.ஜானகியின் குரலில் அனுராதாவுடன் துடிப்பான நடனமாடும் டான்ஸ் மாஸ்டர் ஜான்பாபுவிற்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரல் கொடுத்துள்ளார். ஒரு ஹோட்டல் பாடல்தான், அதற்கு இளையராஜாவின் மெனக்கெடல் எப்படியான இசை வழங்கியுள்ளது என்பதை உணர முடியும். கிரப்பின்  வித்தியாசமான குரலை ஜனகராஜுக்கு பயன்படுத்தியதுதான் ராஜாவின் சாதுரியம். எஸ்.ஜானகியின் அழகிய ஹம்மிங்கோடுதான் இந்தப் பாடலின் பல்லவி துவங்கும்.

தமிழில் 1984ம் ஆண்டு வெளிவந்த முதல் 3 டி திரைப்படம் ‘மை டியர் குட்டிச்சாத்தான்’. இதன் தொடர்ச்சியாக  ‘அன்னை பூமி’ திரைப்படம்  3 டி எபெக்ட்டில் எடுக்கப்பட்டது.
1985ம் ஆண்டு விஜயகாந்த், நளினி, ராதாரவி உள்பட பலர் நடித்த இப்படத்தை ஆர்.தியாகராஜன் இயக்கினார். இளையராஜா இசையில் இப்படத்தில் குழந்தைகள் ஆடிப்பாடும் வகையில் ஒரு அழகிய பாடல் இடம் பெற்றது. கவிஞர் வாலி எழுதிய இந்தப் பாடல், அன்றைய பள்ளி ஆண்டு விழா மேடைகளில் தவறாமல் இடம் பெற்றது. பேபி சோனியா தன் தோழிகளுடன் பாடுவது போன்று அமைக்கப்பட்ட இப்பாடலை எஸ்.ஜானகி, சாமுவேல் கிரப் மற்றும் குழுவினர் பாடியுள்ளனர்.

ஓ ஜூலி ஜூலி ஏய் ஜாலி ஜாலி
மான் போல் குதிப்போம்
மயில் போல் நடப்போம்
மலர் போல் சிரிப்போம்
மனம் போல் இருப்போம்
வா வா வா...

எனத் துவங்கும் கவிஞர் வாலி எழுதிய இந்தப் பாடலில் மந்திரவாதி வேடத்தில் வரும் தேங்காய் சீனிவாசனுக்கு கிரப் குரல் கொடுத்துள்ளார். அதிர அதிர அவர் சிரிப்பதும், பாடுவதுமாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும். 3 டி எபெக்ட்டிற்கு ஏற்ற வகையில் பறக்கும் கார், பறக்கும் தட்டு, ஸ்பைடர் மேனாக மாறும் பேபி சோனியா, தேங்காய் சீனிவாசன் அனுராதாவாகி பின்பு எலும்புக்கூடாக மாறுவது போன்று அமைக்கப்பட்ட இந்த வித்தியாசமான பாடலில் சாமுவேல் கிரப் தனித்துத் தெரிவார்.

1984ம் ஆண்டு எஸ்.எஸ்.கே.சங்கர் இயக்கத்தில் பிரபு, ராதா நடிப்பில் வெளியான ‘கைராசிக்காரன்’, பி.ஆர்.ரவிசங்கர் இயக்கத்தில் விஜய் மேனன், சாந்திகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘அன்புள்ள மலரே’ ஆகிய படங்களிலும் கிரப் பாடியுள்ளார். அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசையை சுவாசித்த சாமுவேல் கிரப், மே மாத துவக்கத்தில் தனது சுவாசத்தை நிறுத்திக் கொண்டார். ‘அண்ணே அண்ணே...’ பாடல் இனி எங்கு கேட்டாலும் கிரப்பின் நினைவு நம்மிடையே நிழலாடும்.

ப.கவிதா குமார்