வந்துவிட்டார் கொரோனாவை அழிக்கும் வீரன்!



கோவாக்சின் தடுப்பூசி செயல்படும் விதம்...Step by Step கவரேஜ்

இருபத்தொன்றாம் நூற்றாண்டில் மனித குலம் கண்ட துயரங்களில் மிகக் கொடியது கொரோனா. உயிர்களை இழந்து, உறவுகளை இழந்து, உடமையை இழந்து, இனி இழப்பதற்கு எதுவுமில்லை என உலக மானுடம் சர்வநாடியும் ஒடுங்கி நிற்கிறது. ஒரு வருடத்துக்கு மேலாக எப்போது வரும் என உலகமே வழி மேல் விழி வைத்துக் காத்திருந்த கொரோனா தடுப்பூசி வந்தேவிட்டது.

இந்தியாவில் இதன் பெயர் கோவாக்சின். ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமும் (ஐசிஎம்ஆர்) இணைந்து இதைக் கண்டறிந்துள்ளன. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கும் இந்தியாவில் அனுமதி தரப்பட்டுள்ளது.
இந்த இரு தடுப்பூசிகளுமே ஜனவரி 13ம் தேதி முதல் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வருகின்றன. இந்தியாவின் சுகாதாரத் துறை அமைச்சர், ‘எதிர்வரும் ஜூலைக்குள் சுமார் இருபத்தைந்து கோடிப் பேருக்கு தடுப்பூசி போடப்பட வாய்ப்பிருக்கிறது’ என்று தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் சுமார் அறுபது கோடிப் பேருக்கு மேல் போட்டாலே ஹெர்ட் இம்யூனிட்டி என்னும் மந்தை எதிர்ப்பாற்றல் நிலையை நாம் அடைந்துவிடுவோம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த 2021ம் ஆண்டு என்பது கொரோனாவுடனான தடுப்பூசிப் போரில் இந்தியா வெல்லும் நிலையை உருவாக்கும் என்ற நம்பிக்கையின் ஒளிக்கீற்று தென்படத் தொடங்கிவிட்டது.

தடுப்பூசி எப்படிச் செயல்படுகிறது?

பொதுவாக, தடுப்பூசி என்பது நோய் எதிர்ப்புக் கிருமிகளையே நோயைத் தடுப்பதற்கான கருவி யாகப் பயன்படுத்தும் முறையாகும். மனித உடலில் நுழையும் வைரஸ்கள் பல கோடியாகப் பல்கிப் பெருகும் இயல்புடை யவை. ஒரு வைரஸ் உருவானதுமே நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் அதனோடு போராடுவதற்கான ஆண்டிஜென் என்னும் புரதத்தை உருவாக்கும்.

இந்த நோய் எதிர்ப்புப் புரதம் வைரஸை வென்றாலும் பின்னர் உடலில் தங்கியிருக்கும். எதிர்காலத்தில் அந்த வைரஸ் உள்ளே நுழைந்தால் நமது நோய் எதிர்ப்பு மண்டலம் விரைந்து செயல்பட்டு அந்தக் கிருமியைக் கொன்று ஒழிக்கும். இதுதான் நமது நோய் எதிர்ப்பு மண்டலம் செயல்படும் விதம்.

தடுப்பூசிகளில் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் இந்தச் செயல்பாட்டை செயற்கையாகத் தூண்டுவார்கள். அதாவது, நோயை உருவாக்கும் வைரஸ் கிருமி ஒன்றை செயல் இழக்கச் செய்து, அதன் பல்கிப் பெருகும் தன்மையை ஒடுக்கி உடலில் செலுத்துவார்கள்.

இதனால் வைரஸ் உடலில் பெருகாது. நோய் உருவாகாது. ஆனால், வைரஸ் உள்ளே நுழைந்ததுமே நமது நோய் எதிர்ப்பு மண்டலம் இந்த வைரஸை அழிப்பதற்கான எதிர்ப்புப் புரதங்களை உருவாக்கி வைத்துக்கொள்ளும். எதிர்காலத்தில் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால், ஏற்கெனவே நோய் எதிர்ப்பு மண்டலத்தில் உள்ள நோய் எதிர்ப்பு புரதங்கள் செயல்படத் தொடங்கி நோயை உடலில் நுழைய விடாமல் செய்துவிடும்.

இது தடுப்பூசிகளுக்கான செயல்முறைகளில் ஒன்று. போலியோ உள்ளிட்ட தடுப்பூசிகள் இந்த முறையில்தான் செயல்படுகின்றன. இந்தியாவில் தயாராகும் கொரோனா தடுப்பூசியும் இந்த முறையில்தான் செயல்படப் போகிறது.இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி?இந்தியாவின் தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் கொரோனா வைரஸின் மாதிரிகளைப் பயன்படுத்தி பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு இந்த கோவாக்சினை உருவாக்கியுள்ளது.

செயல் இழக்கச் செய்யப்பட்ட கொரோனா வைரஸில் இருந்து தயாரிக்கப்பட்ட கோவாக்சினை மனிதர்களுக்குச் செலுத்தும்போது, அவை மனித உடலில் நுழையும் ஆபத்தான உயிர்க்கொல்லி வைரஸ்களை அழித்தொழிக்கும். எளிதாகச் சொன்னால், முள்ளை முள்ளால் எடுப்பது போல, கும்கி யானைகள் கொண்டு காட்டு யானைகளை விரட்டுவதைப் போன்ற ஒரு வழிமுறை இது. செயல் இழக்கப்பட்ட வைரஸைப் பயன்படுத்தி புதிய வைரஸ் உடலில் நுழையாமல் தற்காப்பது.

ஆய்வகங்களில் கொரோனா வைரஸை செயற்கையாக வளர்த்து, அதை பீட்டா புரோபியோலேக்டிக் என்ற திரவத்தில் செலுத்தினால், வைரஸின் மரபணுக்கட்டுமானம் சிதைந்து, அதன் பல்கிப் பெருகும்தன்மை செயல் இழந்துவிடும். ஆனால், வைரஸின் உடலில் உள்ள புரதக் கட்டுமானம் சிதையாது என்பதால் அது அப்படியே இருக்கும். இந்த செயல் இழப்பு செய்யப்பட்ட வைரஸுடன் அட்ஜுவண்ட் எனப்படும் நோய் எதிப்புச் சக்தியைத் தூண்டும் துணை கிரியாவூக்கியை இணைப்பார்கள். இந்த இரண்டும் இணைந்த மருந்தே தடுப்பூசி.

இந்தத் தடுப்பூசி போடப்படும்போது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கிறது. மேலும், குறிப்பிட்ட கொரோனா வைரஸுக்கு எதிரான எதிர்ப்பு ஆற்றலும் உடலில் உருவாகிறது. இந்த அட்ஜுவண்ட் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு தொற்றுநோய்க்கு எதிரான உடலின் எதிர்ப்பு ஆற்றலை பல வாரங்கள், பல மாதங்கள், பல வருடங்கள் வரையிலும் நீடிக்க உதவுகிறது.

வைரஸ்களை உடலில் செலுத்தினால் பாதிப்பு ஏற்படாதா?
இந்தக் கேள்வியைப் பலரும் அடிக்கடி கேட்கிறார்கள். குறிப்பாக, தடுப்பூசிக்கு எதிராகப் பிரசாரம் செய்வோர் இதனையே மிக முக்கியமான கேள்வியாக எப்போதும் முன்வைக்கிறார்கள். ஒரு வைரஸ் என்பது எப்போது ஆபத்தானது என்று கேட்டால் அது உடலில் நுழையும்போது ஆபத்தானது என்பதைவிட அது பல நூறாகப் பல்கிப் பெருகும்போதே கொடூரமானதாக மாறுகிறது.

ஒரு வைரஸ் கிருமி என்பதன் ஆயுள் மிகவும் சொற்பம். அதன் பல்கிப் பெருகும் தன்மையை நீக்கிவிட்டால், அது நோயை உடலில் உருவாக்காது. அதன் புரதம் மட்டுமே உடலில் இருக்கும். இதனால், சிலருக்கு தடுப்பூசி போட்டதும் ஏற்படும் ஒரு நாள் காய்ச்சல் போன்ற மிகச் சிறிய பக்கவிளைவுகளைக் கடந்து பெரிய பாதிப்புகள் நிச்சயம் இருக்காது.

ஆனால், ஒரு தடுப்பூசி போடப்படாமல் விடப்படும்போது அதனால் உருவாகும் விளைவென்பது மிக மிக மோசமானது. குழந்தைகள், முதியவர்கள், நாட்பட்ட நோயாளிகள் உட்பட பலருக்கும் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் கொடூரமான நோய்த் தொற்று கொரோனா என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அவர்களைப் பாதுகாக்க ஹெர்ட் இம்யூனிட்டி உருவாக்கப்பட வேண்டுமானால் நிச்சயமாய் ஆரோக்கியமானவர்கள் மனமுவந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

கோவாக்சின்கள் உருவாக்கும் எதிர்ப்பு சக்தி?

கோவாக்சின் தடுப்பூசியில் உள்ள கொரோனா வைரஸ்கள் செயல் இழக்கவைக்கப்பட்டவை. இதனை நாம் கைகளில் போட்டுக் கொள்ளலாம். உடலுக்குள் இந்தத் தடுப்பு மருந்து நுழைந்ததுமே அதில் இருக்கும் செயல் இழந்த வைரஸ்களை நோய் எதிப்பு செல்கள் விழுங்கும். இந்தச் செயல்பாட்டால் இவை நோய் எதிப்பு சக்தியைத் தூண்டும் செல்களாக மாறுகின்றன. இந்த நோய் எதிப்பு சக்தியைத் தூண்டும் செல்கள் கொரோனாவின் செல்களைப் பல பகுதிகளாகக் கிழித்து அவற்றை தனது உடலின் மேற்பகுதியில் வெளிப்படும்படி வைத்துக்கொள்ளும்.

அப்போது நம் உடலில் உள்ள டி செல்கள் எனப்படும் உதவும் செல்கள் கொரோனாவின் சிதறிய பாகங்களை அடையாளம் காண்கின்றன. அந்த கொரோனா வைரஸின் புரதம் தனக்கு உகந்ததாக இருந்தால் டி செல்கள் உடனடியாக வினையாற்றும். மற்ற எதிப்பு செல்களையும் துணைக்கு அழைத்து தடுப்பு மருந்துடன் இணைந்து நோய்க்கு எதிராகச் செயல்படும்.

மனித உடலில் உள்ள இன்னொரு எதிர்ப்பு சக்தி செல்லின் பெயர் பி செல். இதன் மேற்பகுதியில் ஏராளமான புரத வகைகள் உள்ளன. இதில் ஒருசில, கொரோனாவின் புரத வடிவத்துடன் ஒத்துப்போகும். உடனே அந்த குறிப்பிட்ட பொருத்தமான புரதம் கொரோனாவின் புரதத்தோடு இணைந்து கொள்கிறது. மேலும், சிதறிய கொரோனா புரதத்துக்குள் இருக்கும் எல்லா வைரஸ் கிருமிகளையும் இவை விழுங்கும்.

இந்த சமயம் டி செல்கள் விரைந்து செயல்பட்டு, பி செல்கள் விழுங்கிய கொரோனா வைரஸின் அதே பகுதியைப் பற்றிக்கொள்ளும். அப்போது பி செல் துரிதமாகச் செயல்பட்டு கொரோனாவைக் கொல்வதற்கான நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு பெருக்கி, அதனை அழிக்கும்.

கோவாக்சினின் நான்கு கட்ட பரிசோதனைகள்

முதல் கட்டமாக இவை எலிகள் அல்லது குரங்குகளுக்குக் கொடுக்கப்பட்டு தடுப்பூசிகள் முறையாகச் செயல்படுகிறதா எனக் கண்காணிக்கப்படும்.இரண்டாம் கட்டமாக விஞ்ஞானிகள் இந்தத் தடுப்பு மருந்தை குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு வழங்குவார்கள். இதன் பாதுகாப்பு அளவைப் பரிசோதிக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறதா என்பதை உறுதிப்படுத்தவுமே இந்தப் பரிசோதனை.

மூன்றாம் கட்டமாக இதனை விரிவாக்கப் பரிசோதனை செய்வார்கள். குழந்தைகள், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டோர் எனப் பல குழுக்களாகப் பிரிக்கப்பட்ட மக்கள் திரளுக்கு இவற்றை வழங்குவார்கள். ஒவ்வொரு குழுக்களுக்கும் இடையே அதன் செயல்பாட்டில் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா என்பதைப் பரிசோதிப்பார்கள்.

நான்காவது கட்டமாக திறன் பரிசோதனை செய்யப்படும். ஆயிரக்கணக்கான மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு, மருந்தளிக்கப்படாத அல்லது சோதனைக்காக போலி மருந்து போடப்பட்ட மக்களுடன் ஒப்பிடப்பட்டு இவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்படும். இதனால் ஒரு தடுப்பூசியின் நோய் கட்டுப்படுத்தப்படும் திறனை அனுமாணிக்கலாம். இதுதான் ஒரு தடுப்பூசி நிஜமாகவே வீரியமானதா என்பதை அறிய உதவும் முக்கியக் கட்டம்.

இளங்கோ கிருஷ்ணன்