ரத்த மகுடம்-120பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘இதுதானா..?’’ சிவகாமியின் செவியை தன் நாவினால் வருடியபடியே கரிகாலன் தன் கரங்களில் இருந்த கச்சையை முழுமையாக அலசினான்.
அதிர்ந்த தன் உடலுக்கு அடைக்கலம் தேடி அவனது பரந்த மார்பில் சிவகாமி மேலும் ஒன்றினாள். ‘‘ஆம்...’’ அவளது செவித் துவாரத்தினுள் ஊதினான். ‘‘மற்றொன்று..?’’ சிவகாமியின் மேனி சிலிர்த்தது. ‘‘அதுதான் கடந்த முறை உங்கள் கண்களை எனது கச்சையினால் மூடிக் காண்பித்தேனே...’’
‘‘எதை..?’’ கரிகாலனின் வதனத்தில் அப்பாவித்தனம் அளவுக்கு அதிகமாக வழிந்தது.

தன் தலையை உயர்த்தி அவனது நாசியைக் கவ்வினாள். ‘‘அன்று காண்பித்தேனே... அதை...’’‘‘எதை..?’’ மறுபடியும் கரிகாலன் அதே வினாவைத் தொடுத்தான்.பட்டென்று அவன் கன்னத்தில் அறைந்தாள். ‘‘கச்சையில் வரையப்பட்டிருந்த அசுரப் போர் முறையை...’’
நந்தவனமே அதிரும்படி கரிகாலன் நகைத்தான்.சட்டென்று அவன் உதடுகளைத் தன் உதடுகளால் மூடினாள். ‘‘யாருக்காவது கேட்டுவிட்டால் ஆபத்து...’’
‘‘வாய்ப்பில்லை சிவகாமி...’’ அவளது கேசங்களை வருடினான்.

‘‘எப்படிச் சொல்கிறீர்கள்..?’’ காற்றுப்புகாத வண்ணம் அவன் தேகத்தோடு குழைந்தாள். ‘‘இந்த நந்தவனம் அவ்வளவு ரகசியமானதா..?’’
‘‘ஆம்... இது சோழ அரச குடும்பத்தினர்களுக்கு மட்டுமே தெரிந்த நந்தவனம்... இப்படியொரு பகுதி இருப்பது சோழ வீரர்களுக்குக் கூடத் தெரியாது...’’
கரிகாலன் இப்படிச் சொல்லி முடித்த மறுகணம் -‘‘மன்னிக்க வேண்டும் கரிகாலரே...’’ என்ற குரல் எழுந்தது.
தன் தலையை உயர்த்தி கரிகாலனைப் பார்த்தாள் சிவகாமி.நான்கு நயனங்களும் கணங்களுக்கும் குறைவான நேரம் உறவாடின.
‘‘இந்த இடம் அடியேனுக்கும் தெரியும்...’’ மீண்டும் அதே குரல்.கரிகாலனும் சிவகாமியும் நகைத்தார்கள்.

‘‘வரலாமா..?’’ குரல் கேட்டது.‘‘பொறு...’’ சொன்ன கரிகாலன் தன் கையில் இருந்த கச்சையை விரித்து இமைக்கும் பொழுதில் சிவகாமியின் மார்பை மூடினான். முதுகில் முடிச்சிட்டான். ‘‘கரடியே... வா...’’‘‘நல்லவேளையாக நாகரீகமான சொற்களால் திட்டிவிட்டீர்கள்... எங்கே தேவி உபாசனை தடைப்பட்ட கோபத்தில் சொற்களைக் கொட்டிவிடுவீர்களோ என்று பயந்தேன்...’’ நகைத்தபடியே வந்தாள் நங்கை.

‘‘அதெல்லாம் கடிகை பாலகனின் கல்யாண குணங்கள்! உன்னை ஆராதிக்கும்போது யார் குறுக்கே வந்தாலும் அநாகரீகமான சொற்களை அவனே உதிர்ப்பான்...’’ நாசி அதிர சிவகாமி சிரித்தாள்.நங்கையின் வதனம் சிவந்தது. சமாளித்தபடி இருவரின் அருகில் அமர்ந்தாள்.

‘‘வேளிர்களின் தலைவனை சிறைச்சாலையாக மாறியிருக்கும் சத்திரத்துக்கு அனுப்பிவிட்டாயா..?’’ கேட்டபடியே தன் இடுப்பில் இருந்து புத்தம் புதிதான சிவப்பு நிற கச்சை ஒன்றை எடுத்த கரிகாலன் மடமடவென்று அதில் அரக்கினால் கோடுகளை முன்னும் பின்னும்... மேலும் கீழுமாகத் தீட்டினான்.

சிவகாமி பிரமித்தாள். அவள் அணிந்திருந்த கச்சையில் இருக்கும் அசுரப் போர் வியூகத்தை அப்படியே பிரதி எடுத்துக் கொண்டிருந்தான்... எனில் பூரணமாக வெளிப்பட்ட தன் கொங்கைகளை அவன் காணவேயில்லை... வியூகத்தை மட்டுமே உள்வாங்கியிருக்கிறான்... அன்றைய தினம் போலவே...
சிவகாமிக்குப் பொங்கியது. தன்னையும் அறியாமல் அவனை ஒட்டியபடி அமர்ந்தாள்.

உள்ளுக்குள் நகைத்த நங்கை, வெளியில் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. இதே உணர்வை அவளும்தானே கடிகை பாலகனிடம் அனுபவிக்கிறாள்...
‘‘என்ன நங்கை... விடையளிக்காமல் மவுனமாகி விட்டாய்..?’’ தலையை உயர்த்திக் கேட்ட கரிகாலன், தன் கரத்தில் இருந்த கச்சையை அவளிடம் கொடுத்தான்.   

‘‘வார்த்தைகளற்று சிவகாமியுடன் உரையாடிக் கொண்டிருந்தேன்...’’ முத்துக்கள் கொட்டியது போல் கலகலத்த நங்கை, கரிகாலனிடம் இருந்து அந்தக் கச்சையைப் பெற்றுக் கொண்டாள். ‘‘புலவர் தண்டியின் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன்... வேளிர்களின் தலைவர் இப்பொழுது காபாலிகருடனும் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் சகோதரர் அனந்த வர்மருடனும் அச்சத்திரத்தில்தான் சிறைப்பட்டிருக்கிறார்...’’ ‘‘நல்லது... என்னை...’’‘‘நம்ப வேண்டாம் என புலவர் சொன்னதாக அவரிடம் தெரிவித்துவிட்டேன்... இந்த விவரங்களை என்னைக் காண நீங்கள் வந்த அன்றே தெரிவித்துவிட்டேன்...’’‘‘அதனால் என்ன... மறுமுறை உறுதிப்படுத்திக் கொள்வதில் தவறொன்றுமில்லையே... எனது கட்டளையை நிறைவேற்றி விட்டாய்... நன்றி நங்கை...’’ கரிகாலன் எழுந்து நின்றான். ‘‘இப்பொழுது உன்னிடம் கொடுத்த கச்சையையும் பதினாறு துண்டுகளாக வெட்டி, பதினாறு இடங்களில் நெய்யக் கொடுத்து விடு...’’‘‘ஆகட்டும் கரிகாலரே...’’ நங்கையும் எழுந்து நின்றாள். ‘‘மொத்தம் இரு கச்சைகள்... முப்பத்திரண்டு துண்டுகள்... கணக்கு சரிதானே..?’’‘‘உன் கணக்கு எப்பொழுது தவறியிருக்கிறது..?’’ நங்கையை அணைத்து சிவகாமி முத்தமிட்டாள்.
 
‘‘நானொன்றும் கரிகாலர் அல்ல...’’ நங்கை சிணுங்கினாள்.‘‘தெரியும்... அதனால்தான் உன்னை அனுப்பிவிட்டு கரிகாலருக்கு உரியதை
அவருக்கு கொடுக்கப் போகிறேன்...’’ சிவகாமி கண்சிமிட்டினாள்.‘‘இவளை எப்படிச் சமாளிக்கிறீர்கள் கரிகாலரே..?’’ நங்கை தன் நெற்றியில் அடித்துக் கொண்டாள். ‘‘முடியவில்லை நங்கை... அதனால்தான் சிவகாமியை வேறொரு இடத்துக்கு அனுப்பப் போகிறேன்...’’சுண்டிவிட்டது போல் நங்கையும் சிவகாமி யும் நிமிர்ந்தார்கள். ஒருசேர கரிகாலனை ஏறிட்டார்கள். இருவரின் வதனங்களிலும் இப்பொழுது குறும்புகள் கொப்பளிக்கவில்லை. கம்பீரமே பூத்திருந்தது.

கரிகாலன் இமைக்காமல் அவர்கள் இருவரையும் பார்த்தான்.‘‘வருகிறேன் நங்கை... சந்திப்போம்...’’ சட்டென விடைபெற்று நகர்ந்த சிவகாமி
நான்கடி எடுத்து வைத்ததும் நின்று கரிகாலனைத் திரும்பிப் பார்த்தாள். நயனங்களால் உரையாடினாள். அகன்றாள்.
‘‘சிவகாமி எங்கு செல்கிறாள்..?’’ ஆச்சர்யத்துடன் நங்கை கேட்டாள்.‘‘நான் அனுப்ப நினைத்த இடத்துக்கு...’’ கரிகாலன் நிதானமாக பதில் அளித்தான்.
‘‘எந்த இடம் என்று நீங்கள் சொல்லவில்லையே..?’’‘‘சிவகாமியிடம் சொன்னேனே...’’
‘‘எப்பொழுது..?’’

‘‘இப்பொழுதுதான்!’’
‘‘நானிருக்கும்போதா..?’’
‘‘ஆம்...’’
‘‘எனக்கு எதுவும் கேட்கவில்லையே..?’’
‘‘சிவகாமிக்கு கேட்டால் போறாதா..!’’
‘‘கரிகாலரே...’’
‘‘நங்கையே...’’

‘‘அங்கு சென்று என்ன செய்யப் போகிறாள்..?’’
‘‘அசுரப் போர் வியூகத்தை நிறைவேற்றப் போகிறாள்!’’
‘‘வியூகங்கள் என்னிடம் அல்லவா இருக்கின்றன..?’’
‘‘அவளல்லவா அவற்றைச் சுமந்து செல்கிறாள்!’’
‘‘கரிகாலரே...’’
‘‘நங்கையே...’’
‘‘விளையாடுகிறீர்களா..?’’
‘‘ஆம்...’’

‘‘புலவர் தண்டி அதை அனுமதிக்கவில்லை...’’
‘‘தெரியும்...’’
‘‘என்ன தெரியும்..?’’
‘‘அவர் உன்னிடம் இட்ட கட்டளை!’’
நங்கை கூர்மையுடன் கரிகாலனைப் பார்த்தாள். ‘‘தெரிந்துமா...’’

‘‘அறிந்தே சிவகாமியை அனுப்பியிருக்கிறேன்! என்னையும் சிவகாமியையும் பல்லவ இளவரசர் இருக்கும் இடத்துக்குச் செல்லும்படி புலவர் தண்டி கட்டளையிட்டிருக்கிறார் அல்லவா..?’’
‘‘ஆம்...’’
‘‘அப்படிச் சென்றால் பல்லவ இளவரசர் எங்கள் இருவரையும் கைது செய்ய மாட்டாரா?!’’
நங்கை அதிர்ந்தாள். ‘‘கரிகாலரே... பல்லவ இளவரசர் ஏன் உங்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும்..?’’
‘‘தெரியாதது போல் கேட்கிறாயே நங்கை...’’ அருகில் வந்து அவளது தலைக் கேசத்தைத் தடவினான். ‘‘சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரை காஞ்சிக்கு வரவழைத்ததே நான்தான் என்ற உண்மையை புலவர் தண்டி கண்டுபிடித்துவிட்டார் என்பதை அறியாமலா இப்பொழுது உன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்...’’

‘‘கரிகாலரே...’’
‘‘உன் வழியாக புலவரிடம் மட்டுமல்ல... சாளுக்கிய மன்னரிடமும் பரஞ்சோதி உருவாக்கிய... அதுவும் பயன்படுத்தப்படாத இரு அசுரப் போர் வியூகங்களின் வரைபடத்தைக் கொடுத்திருக்கிறேன்... ம்ஹூம்... சிவகாமியையும் இதில் சேர்த்துக்கொள்ளவேண்டும்... எனவே கொடுத்திருக்கிறோம் என்று சொல்வதே சரி... இரு தரப்பினரிடமும் கொடுத்திருக்கும் அசுரப் போர் வியூகங்களில் எந்த மாற்றத்தையும் நாங்கள் செய்யவில்லை... இப்பொழுது பல்லவர்கள் வசம் இருப்பதும் சாளுக்கியர்களின் கையில் கொடுத்திருப்பதும் சாட்சாத் பரஞ்சோதியால் உருவாக்கப்பட்ட உண்மையான அசுரப் போர் வியூகங்கள்தான்... இரு தரப்பினருக்கும் விசுவாசமாக நடந்து கொண்டிருக்கிறோம்... இவை எல்லாம் ராஜத் துரோகக் குற்றங்கள் அல்லவா..? எனக்கும் சிவகாமிக்கும் சிரச்சேதம்தானே இதற்கான ஒரே தண்டனை..?’’
‘‘கரிகாலரே...’’ நங்கை தழுதழுத்தாள்.

‘‘அரசியல் சதுரங்க ஆட்டத்தை மன்னர்களும் ராஜ தந்திரிகளும் மட்டுமல்ல... ஒற்றர்களும் உபசேனாதிபதிகளும் கூட ஆடுவார்கள்... காய்களை நகர்த்துவார்கள்... வெட்டுவதற்காக மட்டுமல்ல... வெட்டுப்படுவதற்காகவும்! அந்த வகையில் இப்பொழுது நான் வெட்டுப்படுவதற்காகவே ஒரு காயை நகர்த்தியிருக்கிறேன்! அதுவும் முக்கியமான ஒரு காயை! இதுதான் எனது ராஜ தந்திரம்! இதுதான் கரிகாலனின் ஆட்டம்! முடிந்தால் உனது ஆசானான புலவர் தண்டி யிடம் சொல்லி அந்தக் காயை வெட்டுப்படாமல் காப்பாற்றச் சொல்!’’ நிறுத்திய கரிகாலன் அலட்சியமாக நங்கையைப் பார்த்தான்.

‘‘ஏன் தெரியுமா..? வெட்டுப்படுவதற்காகவே நான் நகர்த்தியிருக்கும் காய் வேறு யாருமல்ல... சிவகாமிதான்! வெட்டுப்படத்தான்... வெட்டுப் பாறைக்குத்தான்... அவளை அனுப்பியிருக்கிறேன்! இதற்கான புள்ளியை மதுரையில் இட்டேன்... இந்நேரம் பாண்டிய மன்னரும் பாண்டிய இளவரசரும் அப்புள்ளியில் கோடு கிழித்திருப்பார்கள்! அது வலையாக மாறி விரைவில் காஞ்சியின் மீது விழும்!’’

‘‘மந்திராலோசனை முடிந்ததுமே என்னை வந்து சந்திப்பாய் என்று நினைத்தேன் ரணதீரா...’’ பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மர் தன் மகனை நிதானமாக ஏறிட்டார்.இரணதீரன் எதுவும் பேசவில்லை. தன் இடுப்பில் இருந்த முத்திரை மோதிரத்தை எடுத்து அரிகேசரி மாறவர்மரிடம் கொடுத்தான்.‘‘இப்பொழுது உனக்கு உண்மை புரிந்திருக்குமே..?’’ பாண்டிய மன்னரின் புருவங்கள் உயர்ந்தன.

இரணதீரன் நிமிர்ந்து தன் தந்தையை உற்றுப் பார்த்தான். ‘‘இது சிங்களர்களின் முத்திரை மோதிரம். இதை உங்களிடம் கொடுத்தது கரிகாலன். எங்கு..? மதுரை பாதாளச் சிறையில். யாரிடமிருந்து இதைக் கைப்பற்றியதாகச் சொன்னான்..? சிவகாமியிடம் இருந்து. சிவகாமி யார்..? அவள் பல்லவ இளவரசியா அல்லது சாளுக்கியர்களின் ஒற்றர் படைத்தளபதியா என்ற சர்ச்சை இன்னமும் பல்லவ, சாளுக்கியர்களுக்கு மத்தியில் நிலவுகிறது! சரி... கரிகாலனுக்கும் சிவகாமிக்கும் என்ன உறவு மன்னா..?’’

‘‘காதலர்களாகவும் அவர்களைப் பார்த்திருக்கிறார்கள்... பகைவர்களாகவும் கண்டிருக்கிறார்கள்...’’‘‘அதாவது யாருக்குமே இதுவரை அவர்கள் இருவருக்கும் இடையில் என்ன உறவு நிலவுகிறது என்று தெரியாது... அப்படித்தானே மன்னா..?’’அரிகேசரி மாறவர்மரின் கண்கள் ஒளிர்ந்தன. ‘‘ம்...’’‘‘உறவு முறையே தெரியாதவர்கள் தமிழகத்தின் நிலப்பரப்புகளுக்கு இடையிலான உறவு முறையை எழுதிக் கொண்டிருக்கும் விந்தையை என்னவென்று சொல்வது மன்னா?!’’

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்