நான்-சத்யஜோதி டி.ஜி.தியாகராஜன்பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னைலதான். அப்பா ‘வீனஸ் பிக்சர்ஸ்’ கோவிந்தராஜன், அந்தக் காலத்துல சிவாஜி நடிச்ச ‘உத்தமபுத்திரன்’ தொடங்கி பல மெகாஹிட் படங்களை தமிழ், இந்தில தயாரிச்சவர்.அப்பாவுக்கு பட்டுக்கோட்டைதான் சொந்த ஊர். அம்மாவுக்கு திருச்சி. எங்க அம்மா பட்டம்மாள், டி.ஏ.மதுரம் அவர்களுக்கு சகோதரி. என்.எஸ்.கிருஷ்ணன் ஐயா எனக்கு பெரியப்பா.

அம்மாவும் சரி அப்பாவும் சரி கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க. அப்பா முதல்ல இராணுவத்துல இருந்தார். அப்புறம் புரூக் பாண்ட் கம்பெனில வேலைக்கு சேர்ந்தார். இந்தநேரத்துலதான் என்.எஸ். கிருஷ்ணன் அய்யா, அப்பா மேல விருப்பப்பட்டு ‘என்.எஸ்.கே. பிலிம்ஸு’க்கு அவரை மேனேஜரா நியமிச்சார்.

இயக்குநர் ஸ்ரீதரும் அப்பாவும் நண்பர்கள். ரெண்டு பேருக்குமே சினிமா மேல ஆர்வமும் தாகமும் கனவும் இருந்துச்சு. இவங்க ரெண்டு பேருக்கும் கிருஷ்ணமூர்த்தி நட்பானார். மூணு பேர் அலைவரிசையும் ஒண்ணா இருக்கவே... சேர்ந்து ‘வீனஸ் பிக்சர்ஸ்’ ஆரம்பிச்சாங்க. 
நான் பிறந்தது 1951ல. அப்ப குடும்பம் ரொம்ப மோசமான நிலைல இருந்தது. ‘என்.எஸ்.கே. பிலிம்ஸ்’ல இருந்து அப்பா பிரிஞ்சு வந்திருந்த நேரம் அது.
இதுக்குப் பிறகுதான் ‘வீனஸ் பிக்சர்ஸ்’ அத்தியாயம் ஆரம்பிச்சது.

நல்ல வெற்றியை நோக்கி போயிட்டு இருந்த நேரத்துல திடீர் வீழ்ச்சி.அப்பாவின் கனவு சினிமாதான். ஆனா, தன் பிள்ளைங்க யாரும் திரைத்துறைக்கு வரக் கூடாதுனு உறுதியா இருந்தார். அதனால அந்த வாசமே இல்லாம நான் டான் போஸ்கோல பள்ளிப் படிப்பு படிச்சு லயோலால பியூசி முடிச்சு, விவேகானந்தா கல்லூரில பி.காம் செய்துட்டு மணிரத்னம் சகோதரர் ஜி.வி. கம்பெனில ஆடிட்டரா சேர்ந்தேன்.

அப்ப, அப்பா என்னைக் கூப்பிட்டு ‘நீ வெளிநாட்டுல போய் படிக்கலாமே’னு கேட்டார். நானும் அதுக்கான தேர்வை எழுதி செலக்ட் ஆனேன்.
எம்பிஏ படிக்க கலிபோர்னியா போனேன். அந்த நொடில இருந்து என் தேவைகளை நானே கவனிச்சுக்க ஆரம்பிச்சேன். இதுக்காகவே பார்ட் டைம் வேலைல சேர்ந்து சம்பாதிச்சுக்கிட்டே படிச்சேன். அப்பாவை தொந் தரவு செய்யலை.

தவிர அப்பாவும் அப்ப சிரமத்துல இருந்ததால ஒரு செமஸ்டருக்கு மட்டுமே அவரால செலவு செய்ய முடிஞ்சுது.கலிபோர்னியாவுல என்.எஸ்.கிருஷ்ணன் அய்யாவுடைய பொண்ணு கஸ்தூரி அக்காவும், அவங்க கணவர் நவநீதகிருஷ்ணன் மாமாவும் எனக்கு லோக்கல் கார்டியனா இருந்து பார்த்துக்கிட்டாங்க.  பகல்ல படிப்பு. இரவு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல வேலை. எக்சாம் எழுதி முடிக்கறதுக்குள்ள ‘பேங்க் ஆஃப் அமெரிக்கா’ல வேலை கிடைச்சது. நாலு வருஷங்கள் கலிபோர்னியாவுல இருந்தேன். அதுல ஒண்ணரை வருஷம் பேங்க் வேலை.

இந்த சமயத்துல பொருளாதாரப் பிரச்னைகள் காரணமா ‘வீனஸ் பிக்சர்ஸ்’ தள்ளாட ஆரம்பிச்சது. அம்மா, என்னை உடனே வரச் சொன்னாங்க.
சென்னைக்கு வந்து கெமிக்கல் ஃபார் லெதர் நிறுவனத்துல வேலைக்கு சேர்ந்தேன். கிருஷ்ணசாமி அவர்களுடைய மகளும் நானும் சேர்ந்து ‘வீனஸ் பிக்சர்ஸ்’ பிரச்னைகளை எல்லாம் சரி செய்தோம்.  இந்த நேரத்துல எம்ஜிஆர் எங்களை அழைச்சார். அப்ப எம்ஜிஆர் முதல்வராகவும் அவருடைய அமைச்சரவைல ஆர்.எம்.வீரப்பன் முதன்மை அமைச்சர்கள்ல ஒருவராகவும் இருந்தார்.

அரசியல் வேலைகளுக்கு இடைல ‘சத்யா மூவீஸ்’ பணிகளை ஆர்.எம்.வீரப்பனால பார்த்துக்க முடியலை. அதனால என்னையும் எங்க அப்பாவையும் கூப்பிட்டு ‘சத்யா மூவீஸ்’ பணிகளை பார்த்துக்கச் சொல்லி எம்ஜிஆர் சொன்னார். ஆர்.எம்.வீரப்பன் சாரும் எங்க அப்பாவும் நீண்ட கால நண்பர்கள். இந்த ஏற்பாடு அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. தன் மகள் செல்வியை எங்களுக்கு அறிமுகப்படுத்தி ‘சத்யா மூவீஸ்’ பணிகளை ஒப்படைச்சார். பின்னாடி இந்த செல்வியே எனக்கு மனைவியா அமைஞ்சாங்க!

எந்த சினிமா வேண்டாம்னு அப்பா சொன்னாரோ அது  தானாகவே என்னைத் தேடி இப்படித்தான் வந்தது!ஆர்.எம்.வீரப்பன் சார் ஜீனியஸ். அவர்கிட்ட சினிமா தொழிலை முழுமையா கத்துக்கிட்டேன். கிரியேட்டிவ், பட உருவாக்கம் எல்லாம் அவர் தலைமைல நடக்கும். நான் பகுதி நேரமா ‘சத்யா மூவீஸ்’ல மேனேஜரா இருந்து அப்புறம் முழுநேரமா அந்தப் பணிகள்ல ஈடுபட்டேன்.

ஆர்.எம்.வீரப்பன் சார் ஜென்டில்மேன். என்னையும் அப்பாவையும் அவர் ‘சத்யா மூவீஸ்’லயே முடக்க விரும்பலை. நிலைமை சீரானதும் படம்
பண்ணுங்கனு சொல்லிக்கிட்டே இருந்தார்.அப்படித்தான் ஏ.எல்.எஸ். நாச்சியப்பன் மூலமா எங்களுக்கு முதல் படம் வந்தது. ‘சார்... ஒரு நல்ல கதை இருக்கு. இயக்குநர் புதுசுதான். பாரதிராஜா சார் கிட்ட உதவி இயக்குநரா இருந்தவர்’னு கே.பாக்கியராஜை அறிமுகம் செய்தார்.

கதை கேட்ட உடனே அப்பாவுக்கும் எனக்கும் பிடிச்சுப் போச்சு. உடனே அட்வான்ஸ் சொன்னோம். ‘அந்த 7 நாட்கள்’ இப்படித்தான் உருவாச்சு. மிகப்பெரிய வெற்றியும் பெற்றது.அப்புறம் பாலுமகேந்திரா அறிமுகமானார். அவர் சொன்ன கதை எங்களை ஈர்த்தது. கமல் சாரை ஹீரோவா ஒப்பந்தம் செய்தோம். அவரே தேவிகிட்ட பேசி கால்ஷீட் வாங்கினார். ‘மூன்றாம் பிறை’ இப்படித்தான் டேக் ஆஃப் ஆச்சு. இந்த முதல் படத்தோட வெற்றி ‘சத்யஜோதி பிலிம்ஸை’ஆழமா காலூன்ற வைச்சது.

ஆக்சுவலா ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ உருவாகக் காரணமே எம்ஜிஆர்தான். 1978ம் வருஷம் ஒருநாள் அவர் அப்பாவைக் கூப்பிட்டு ‘வீனஸ் பிக்சர்ஸ் நஷ்டத்துல ரொம்பவே தத்தளிக்கறீங்க. இதை சரி செய்ய உங்களுக்கு நான் ஒரு படம் செஞ்சு தர்றேன்’னு சொல்லி தன் கையால ‘சத்யஜோதி பிலிம்ஸை' ஆரம்பிச்சுக் கொடுத்தார்.ஆனா, அரசியல் பணிகள் காரணமா எங்க தயாரிப்புல அவரால நடிக்க முடியலை. அதனால என்ன... தன் ராசியான கைகளால அவர் ஆரம்பிச்சுக் கொடுத்த ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ இப்பவரை வெற்றிகரமா இயங்கிட்டு இருக்கு.

என்னதான் சொந்தப் படங்களை நாங்க எடுத்தாலும் ‘சத்யா மூவீஸ்’ பணிகளையும் நான் பார்த்துட்டுதான் இருந்தேன். ‘பாட்ஷா’ வரை அது தொடர்ந்தது.நான்கு தேசிய விருதுகள் உட்பட எண்ணற்ற விருதுகளைப் பெற்று கமர்ஷியலாகவும் ஜெயித்த ‘மூன்றாம் பிறை’க்குப் பிறகு இன்னொரு புதுமுகத்தை இயக்குநரா தமிழ்ல ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ வழியா அறிமுகப்படுத்தினோம். அவர்தான் மணிரத்னம். கன்னடத்துல ஒரு படம் இயக்கியிருந்தார். அவரை தமிழுக்கு ‘பகல் நிலவு’ வழியா கூட்டிட்டு வந்தோம்.

தரமான கமர்ஷியல் படங்களுக்கு ‘சத்யா மூவீஸ்’னா... வித்தியாசமான கதை அம்சமுள்ள சிறந்த பொழுதுபோக்குக்கு ‘சத்ய ஜோதி பிலிம்ஸ்’. இந்தப் பெயரை இப்ப ‘விஸ்வாசம்’, ‘பட்டாஸ்’ வரை காப்பாத்திட்டு இருக்கோம். கடவுள் ஆசீர்வாதத்தால மூன்று முதலமைச்சர்கள் கைகள்ல இருந்தும் விருதுகள் வாங்கியிருக்கேன். எங்க பயணம் சின்னத்திரையிலும் தொடருது. தூர்தர்ஷன் நடராஜன் எங்க நண்பர். அவர் வழியாதான் சின்னத்திரைல என்ட்ரி ஆனோம். தூர்தர்ஷன்ல கால் பதிச்சோம்.

சன் டிவி தொடங்கப்பட்டதும் ‘ஜெயிப்பது நிஜம்’ சீரியலை முதல் முறையா அவங்களுக்காக எடுத்தோம். இப்ப வரை சன் டிவியோட எங்க பயணம் தொடருது. எங்க தயாரிப்புல உருவாகும் படங்களுக்கான சாட்டிலைட் உரிமையை சன் டிவிக்கே தர்றோம். சீரியலும் அவங்களுக்குதான்.
அரசியல் பலமுறை கதவைத் தட்டியிருக்கு. ஆனா, எனக்கு சினிமா, சினிமாதான். நான் சிவாஜி சார் ரசிகன். மாமா ஆர்.எம்.வீரப்பன் எம்ஜிஆர் தொண்டர். அவர் மகள் செல்விக்கும் எனக்கும் நிச்சயதார்த்தம் நடந்தப்ப மணப்பெண் சார்பா எம்ஜிஆரும் மணமகன் சார்பா சிவாஜியும் கலந்துக்கிட்டாங்க! யாருக்குமே கிடைக்காத வரம் இது.

எங்க திருமணத்தப்ப சிவாஜி சார் ஒரு விபத்துல சிக்கினார். அதனால அவரால வரமுடியாமப் போச்சு.‘சத்யா மூவீஸ்’ சார்பா ரஜினி கூட பயணப்பட்டிருக்கேன். ‘தங்க மகன்’ பண்ணும்போது ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமப் போச்சு. அதனால போட்ட செட் ரெண்டு மாதங்கள் வரை சும்மாவே இருந்தது. அவருக்கு உடம்பு சரியானதும் மீண்டும் ஷூட் தொடங்கினோம்.

‘தங்க மகன்’ ரிலீசானதும் அவருக்குத் தரவேண்டிய மீதி சம்பளத்தை கொண்டு போய் கொடுத்தோம். வாங்க மறுத்துட்டார். ‘என்னாலதானே செட் ரெண்டு மாசம் சும்மா இருந்தது...’னு சொல்லிட்டார்.அப்ப எங்க மாமா ஆர்.எம்.வீ. ‘இந்தப் பணத்தை அடுத்த படத்துக்கான அட்வான்ஸா வைச்சுக்க’னு சொல்லிட்டார். அப்படி உருவானதுதான் ‘மூன்று முகம்’.அஜித், பக்கா ஜென்டில்மேன். டெடிகேட்டட் ஆர்ட்டிஸ்ட். கதைக்காக ரிஸ்க் எடுக்க தயங்கவே மாட்டார். ‘விவேகம்’, ‘விஸ்வாசம்’ படங்கள்ல அவர் காட்டிய ஈடுபாட்டை மறக்கவே
முடியாது.

முழுமையா ஒரு ப்ராஜெக்ட்டுல தன்னை ஒப்படைக்க தனுஷ் தயங்கவே மாட்டார். அவர் கூட ‘தொடரி’, ‘பட்டாஸ்’னு பயணப்படறோம்.காலத்துக்கு ஏற்ப ‘சத்ய ஜோதி பிலிம்ஸ்’ல மாற்றங்கள் கொண்டு வந்திருக்கோம். வெப் சீரிஸ், தரமான கமர்ஷியல் அம்சமுள்ள சிறு பட்ஜெட் படங்கள், பெரிய ஹீரோ படங்கள், டிவி சீரியல்னு திட்டமிட்டு பயணப்படறோம்.  

செல்வி எனக்கு மனைவியா அமைஞ்சது கடவுள் கொடுத்த வரம். எங்க நிறுவனத்தின் அக்கவுண்ட்ஸையும், சின்னத்திரை டிபார்ட்மெண்ட்டையும்
செல்விதான் பார்த்துக்கறாங்க.எங்களுக்கு ரெண்டு பசங்க. பெரியவன் செந்தில். சின்னவன் அர்ஜுன். இவங்க ரெண்டு பேரும்தான் எங்க நிறுவனப் படங்களின் தயாரிப்பு மேற்பார்வை, ஆர்ட்டிஸ்ட் செலக்‌ஷன், கதை கேட்கறதுனு எல்லாம் பார்த்துக்கறாங்க.

கடைசியா நான் கேட்டு ஓகே பண்றேன்.என் சகோதரருடைய பையன் கிரியேட்டிவ் டைரக்டரா இருக்கார்.இப்படி குடும்பமா ஒண்ணு சேர்ந்து ‘சத்யஜோதி பிலிம்ஸை’ நடத்திட்டு இருக்கோம். ஒரு சமயத்துல ஒரு ப்ராஜெக்ட்ல மட்டுமே கவனம் செலுத்தறோம். அது முடிஞ்சதும்தான் அடுத்த ப்ராஜெக்ட். பணம் போட்டு எடுக்குற எந்த பிஸினஸுக்கும் திட்டமிடல் முக்கியம். தேவையில்லாம ஒரு பைசா கூட செலவு செய்யக் கூடாது. இந்த தாரக மந்திரத்தைத்தான் 40 வருடங்களுக்கு மேல கடைப்பிடிச்சுட்டு இருக்கோம்!

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்