ஜெயம் ரவி நடிக்கும் பூமி என் கதை... அதை அப்படியே திருடிட்டாங்க..!கதறுகிறார் உதவி இயக்குநர்

கோலிவுட்டில் ‘பிரிக்க முடியாதது எதுவோ’ என ‘திருவிளையாடல்’ தருமியைப் போல கேள்வி எழுப்பினால், ‘தமிழ்ச் சினிமாவும் கதைத் திருட்டும்’ என சட்டென பதில் வந்து விழும்.

அந்தளவுக்கு அத்தனை கதைத் திருட்டு சம்பவங்களை கோலிவுட் சந்தித்திருக்கிறது. இந்தப் பட்டியலில் லேட்டஸ்ட் ஆக இணைந்திருக்கிறது ஜெயம் ரவி நடிப்பில் லக் ஷ்மன் இயக்கி யிருக்கும் ‘பூமி’ திரைப்படம்.இப்படம் தன்னுடைய ‘துருவன்’ படத்தின் கதைதான் என தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் உதவி இயக்குநரான கார்த்திக் கே.பாலாஜி புகார் ஒன்றை கொடுத்திருப்பது கோலிவுட்டை மீண்டும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

தென்னிந்திய எழுத்தாளர் சங்கமும் கார்த்திக்கின் புகாரைப் பெற்று, சம்பந்தப்பட்டவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகிறது. ‘பூமி’யின் தயாரிப்பாளரான சுஜாதா விஜயகுமாரிடமும் விளக்கம் கேட்டிருக்கிறது. இதற்கு சுஜாதா தரப்பும் பதிலை அளித்திருப்பதாகக் கேள்வி.
தவிர, ‘பூமி’யின் இயக்குநரான லக் ஷ்மனிடமும் ‘‘பூமி’யின் கதைச் சுருக்கம் மற்றும் பவுண்டட் ஸ்கிரிப்ட்டை’ எழுத்தாளர் சங்கம் கேட்டிருக்கிறது.
‘எங்களிடம் கதைச் சுருக்கம் இல்லை... வாய் வழியாகச் சொல்கிறோம்...’ என்று சொல்லி சங்கத்தையே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார் லக் ஷ்மன்.
சுதாரித்த எழுத்தாளர் சங்கம் இப்பொழுது அவரிடம் ‘பூமி’ படத்தின் பவுண்டட் ஸ்கிரிப்ட்டை கேட்டிருக்கிறது.

லக் ஷ்மனின் முந்தைய ‘போகன்’ படமும் கதைத் திருட்டு விவகாரத்தில் சிக்கி, நீதிமன்றம் வரை சென்றது நினைவிருக்கலாம். தன்னுடைய குழந்தை திருடு போன வலியையும் வேதனையையும் மறைத்துக்கொண்டு நல்ல தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார் கார்த்திக் கே.பாலாஜி.இதற்கிடையே ‘பூமி’ ஓடிடிக்கு விற்கப்பட்டுவிட்டதாகவும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதாகவும் பரவும் தகவல் கார்த்திக்கை பதற்றமடைய வைத்திருக்கிறது.        

சரி... கதைத் திருட்டு தொடர்பாக புகார் கொடுத்திருக்கும் கார்த்திக் கே.பாலாஜி யார் என கோடம்பாக்கத்தில் விசாரித்தோம். உதவி இயக்குநர்கள் பலருக்கு அவரைப் பற்றியும் அவரது ‘துருவன்’ படம் குறித்தும் நிறையவே தெரிந்திருக்கிறது.‘‘கார்த்திக் கே.பாலாஜியின் பூர்வீகம் திருச்சி. எம்பிஏ முடித்தவர். இயக்குநர் செல்வா உட்பட சில இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக வேலை செய்தவர். ‘நாளைய இயக்குநர் சீஸன் 2’வில் கலந்து கொண்டு கவனம் ஈர்த்தவர்.

‘வேட்டை’, ‘நிஜம்’, ‘மறுபடி யும்’, ‘பயத்திற்கு அப்பால்’, ‘கல்மண்டபம்’ என பல குறும்படங்களை இயக்கி பரிசையும் வென்றிருக்கிறார். இது தவிர ஆவணப்படங்களும் இயக்கியிருக்கிறார். ‘லைம்லைட் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற விளம்பரப் படக் கம்பெனி மூலம் பல விளம்பரப் படங்களை இயக்கியும் வருகிறார்...’’ என மடமடவென்று கார்த்திக்கின் பயோடேட்டாவை கொட்டிய உதவி இயக்குநர் ஒருவர், பெருமூச்சுடன் தொடர்ந்தார்.

‘‘2008லயே ‘துருவன்’ ஸ்கிரிப்ட்டை கார்த்திக் எழுதிட்டார். அப்புறம் அதை பலமுறை செதுக்கினார். ஆறாவது வெர்ஷனைத்தான் ‘துருவன்’ எனப் பெயரிட்டு எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்திருக்கார்.

பக்காவாக ஸ்கிரிப்ட் ரெடி ஆனதும் விஷாலை தொடர்பு கொள்ள முயற்சித்தார். விஷாலின் மேனேஜர்களான முருகராஜனிடமும் சந்துருவிடமும் இக்கதையைச் சொல்லவும் செய்தார். ‘கதை நல்லா இருக்கு... விஷாலுடன் ஒரு சந்திப்புக்கு ரெடி பண்றோம்’ என அவர்களும் வாக்கு கொடுத்திருக்காங்க.

இந்த பிராசஸ் ஆறு மாதங்கள் தொடர்ந்தது. இதற்கு இடைல ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ல இருந்து முருகராஜ் விலகிட்டார். ஆக, முதலில் இருந்து திரும்பவும் விஷாலைத் தொடர்பு கொள்ள ஆரம்பிக்கணும் என்ற நிலை.

இதுக்கு பல மாதங்களாகும் என்பதால் ‘ட்ரீம் வாரியர்ஸ்’ நிறுவனத்தை சந்திச்சு சூர்யாவின் தம்பி கார்த்திக்குக்காக இக்கதையைச் சொல்லி பவுண்டட் ஸ்கிரிப்ட்டையும் கொடுத்திருக்கிறார் கார்த்திக் கே.பாலாஜி.கதையை முழுமையாகக் கேட்ட ‘ட்ரீம் வாரியர்ஸ்’, ‘ரொம்ப நல்லா இருக்கு...

ஆனா, கார்த்திக் சார் ஏற்கனவே படம் பண்ணின டைரக்டர்ஸோடுதான் ஒர்க் பண்றார். ஸோ, ஒரு படம் இயக்கிட்டு வாங்க’னு சொல்லியிருக்காங்க.
இதுக்கு அப்புறம் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை கார்த்திக் கே.பாலாஜி சந்திச்சிருக்கார். ‘சிம்பு அல்லது ஜெயம் ரவி கால்ஷீட் கிடைச்சா நாம பண்ணலாம்’னு அவங்க சொல்லியிருக்காங்க.

ஜெயம் ரவி பக்காவா சூட் ஆவார்னு கார்த்திக் கே.பாலாஜி நினைச்சார். அதனால, தான் கதை சொன்ன நிறுவனத்தோட புரொடக்‌ஷன் எக்ஸிகியூட்டிவ் ஆன விவேகானந்தனுடன் சேர்ந்து ஜெயம் ரவியை சந்திக்க முயற்சி செஞ்சார்.அப்ப ஜெயம் ரவி ‘அடங்க மறு’ படத்துல நடிச்சுட்டு இருந்தார். அதனால ஜெயம் ரவியின் மேனேஜரும், ‘அடங்க மறு’ படத்தின் எக்ஸிகியூட்டிவ் புரொடியூசரும், ஜெயம் ரவிக்காக கதை கேட்பவருமான ஆனந்த் ஜாயை சந்திச்சு, தங்ககிட்ட ஜெயம் ரவிக்கு ஒரு கதை இருக்கறதா சொல்லியிருக்காங்க.

உடனே ஆனந்த் ஜாய், இவங்க ரெண்டு பேரையும் சாந்தோம்ல இருக்கிற ‘ஹோம் மூவி மேக்கர்ஸ்’ நிறுவனத்துக்கு வரச் சொல்லியிருக்கார். ஜெயம் ரவியின் மாமியாரான சுஜாதா விஜயகுமாரின் படக் கம்பெனி அது. இவங்கதான் ‘அடங்க மறு’ பட புரொடி யூசர். 2018, ஜூன் 19ம் தேதி ஆனந்த் ஜாயை சந்திச்சு கார்த்திக் கே.பாலாஜி ‘துருவன்’ கதையை சொல்லியிருக்கார்.

ஒரு மணி நேரம் கதையைக் கேட்ட ஆனந்த் ஜாய், ‘கதை நல்லா இருக்கு... இப்படியொரு கதையைத்தான் எதிர்பார்த்தோம். அண்ணன்கிட்ட (ஜெயம் ரவி) சொல்லி மீட்டிங் ஃபிக்ஸ் பண்றேன். நீங்க என்னோட டச்ல இருங்க...’னு சொல்லியிருக்கார்.

இருபது நாள் கழிச்சு ஜூலை 10ம் தேதி கார்த்திக்கை மறுபடியும் ஆனந்த் ஜாய் வரவழைச்சு, ‘திரும்பவும் முழுக் கதையைச் சொல்லுங்க’னு கேட்டார்.
கார்த்திக் கே.பாலாஜியும் சொல்லியிருக்கார். ‘பவுண்டட் ஸ்கிரிப்ட் இருக்கா’னு ஆனந்த் ஜாய் கேட்க, கார்த்திக்கும் அதைக் கொடுத்தார்.
‘புரொடக்‌ஷனை நாமே பண்ணலாம்... நீங்க வேற கம்பெனிக்கு ட்ரை பண்ண வேணாம்...’னு ஆனந்த் ஜாய் சொல்லியிருக்கார்.

டிசம்பர்ல ‘அடங்க மறு’ ரிலீசாகும் வரை ஃப்ரெண்ட்லியாவே கார்த்திக் கே.பாலாஜியுடன் ஆனந்த் ஜாய் பழகியிருக்கார். ‘இது விவசாயிகள் பத்தின கதையா இருக்கறதால அண்ணனோட (ஜெயம் ரவி) 25வது படமா இதைப் பண்ணலாம்’னு சொல்லியிருக்கார்.
கார்த்திக் கே.பாலாஜியும் நம்பிக்கையோடு இருந்தார்.

ஆனா, ‘அடங்க மறு’ ரிலீசான பிறகு, 2019 ஜனவரில இருந்து, ஆனந்த் ஜாயின் போக்குல மாற்றம் தெரிஞ்சிருக்கு. கார்த்திக் எப்ப போன் செய்தாலும் அதை அவாய்ட் பண்ண ஆரம்பிச்சிருக்கார். எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் மெசேஜ்களுக்கு லேட்டா ரெஸ்பாண்ட் செய்யத் தொடங்கினார்.

2019 ஜனவரி 6ம் தேதி மாலை 4.30 மணிக்கு ஆனந்த் ஜாயை ‘அடங்கமறு’ அலுவலகத்துல கார்த்திக் சந்திச்சப்ப சிரிச்சுப் பேசி மழுப்பியிருக்கார் ஜாய்.
இப்படியே ஆறு மாதங்கள் வரை போச்சு. ஜெயம் ரவியை சந்திக்கவே முடியலை. ஆனந்த் ஜாய் அதுக்கான நடவடிக்கைகள் எதையும் எடுக்கலை.

கார்த்திக் கே.பாலாஜி பொறுமையாவே இருந்தார். ஆனா, ஜெயம் ரவியின் 25வது படமா ‘பூமி’ உருவாவதாகவும் அது விவசாயம் தொடர்பான படம்னும் செய்திகள் கசிய ஆரம்பிச்சதும் ஷாக் ஆகிட்டார்.

ஜூன் 22ம் தேதி ஆனந்த் ஜாய்கிட்ட ‘துருவன்’ பவுண்டட் ஸ்கிரிப்ட்டை திருப்பிக் கேட்டிருக்கார். ‘ரெண்டு நாளைக்குப் பிறகு ஆபீஸுக்கு வந்து வாங்கிக்குங்க’னு ஆனந்த் ஜாய் சொல்லியிருக்கார்.  இதுக்குள்ள ‘பூமி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிடுச்சு. கார்த்திக் கே.பாலாஜி அதிர்ந்துட்டார். அது அப்படியே அவரோட ‘துருவன்’ கதையை பிரதிபலிச்சது.

இந்த நேரத்துல விஷ்ணு விஷால் அலுவலகத்துல எதேச்சையா ஆனந்த் ஜாயை சந்திச்சார் கார்த்திக் கே.பாலாஜி. ‘என்ன சார்... ‘பூமி’ போஸ்டரை பார்த்தா உங்ககிட்ட நான் சொன்ன கதை மாதிரி இருக்கு...’னு கார்த்திக் கேட்டிருக்கார். பேந்தப் பேந்த விழிச்ச ஆனந்த் ஜாய் அங்க இருந்து கிரேட் எஸ்கேப் ஆகியிருக்கார். இது 2019 ஜூன் 22ம் தேதி நடந்த சம்பவம்.

இதுக்குப் பிறகு ஆனந்த் ஜாயை சந்திக்கவோ போன்ல தொடர்பு கொள்ளவோ கார்த்திக்கால முடியலை. அவர் கொடுத்த ‘துருவன்’ பட பவுண்டட் ஸ்கிரிப்ட்டும் திருப்பிக் கொடுக்கப்படலை. ‘பூமி’ பட ஷூட்டிங் ஜோரா நடக்க ஆரம்பிச்சது.திடீர்னு ஒருநாள் கார்த்திக்கை ‘ஹோம் மூவி மேக்கர்ஸ்’ ஆபீசுக்கு வரச் சொன்ன ஆனந்த் ஜாய், எதுவும் பேசாம ‘துருவன்’ ஸ்கிரிப்ட்டை கொடுத்துட்டு அவசர வேலைனு பறந்துட்டார்.

கார்த்திக் கே.பாலாஜிக்கு தன் ஸ்கிரிப்ட்டை அப்படியே உருவியிருக்காங்கனு சந்தேகம். அது ‘ஆனந்த விகடன்’ல ‘பூமி’ பத்தி வெளியான லக் ஷ்மன் பேட்டியைப் படிச்சதும் உறுதியாச்சு. ‘பூமி’ டீசர் தெள்ளத் தெளிவா அது தன்னுடைய ‘துருவன்’ கதைதான்னு கார்த்திக் கே.பாலாஜிக்கு புரிய வைச்சது.

கொதிப்பும் இயலாமையும் கையறு நிலையுமா அவர் தவிச்சப்ப நண்பர்களான நாங்கதான் எழுத்தாளர் சங்கத்துல புகார் கொடுக்க வைச்சோம்.
2020 செப்டம்பர்ல கார்த்திக் கே.பாலாஜி புகார் அளிச்சார். சில நாட்களுக்குப் பிறகுதான் சங்கத்துல இருந்து புகாருக்கான அக்னாலஜ்மெண்ட்டை கொடுத்தாங்க.

கார்த்திக் கே.பாலாஜியின் ‘துருவன்’ பட ஸ்கிரிப்ட்தான் ‘பூமி’. இது உதவி இயக்குநரான எங்க எல்லாருக்கும் தெரியும்...’’ என்றார் அந்த உதவி இயக்குநர்.‘துருவன்’ ஸ்கிரிப்ட்டை எழுதிய கார்த்திக் கே.பாலாஜியை தொடர்பு கொண்டோம். ‘‘எழுத்தாளர் சங்க தீர்ப்புக்காக காத்திருக்கேன். அதனால இப்ப எதுவும் பேச விரும்பலை.

ஆனா, என்னுடைய ‘துருவன்’தான் ‘பூமி’. அதற்கான அனைத்து ஆதாரங்களும் என்கிட்ட இருக்கு. ‘பூமி’ல பணிபுரிந்த நண்பர்கள்கிட்ட பேசினப்ப சின்னச் சின்ன மாற்றங்களை மட்டுமே டைரக்டர் லக் ஷ்மன் செய்திருக்கார்னு சொன்னாங்க. மத்தபடி அது என் கதைதான்... என் ஸ்கிரிப்ட்தான்.

‘ஹோம் மூவி மேக்கர்ஸ்’ அலுவலகத்துக்கு நான் போனப்ப சுஜாதா விஜயகுமாரை சந்திச்சிருக்கேன். ஆனா, ப்ராஜெக்ட் பத்தி சுஜாதாகிட்ட எதுவும் பேசலை. முழுசா பேசினது ஆனந்த் ஜாய்கிட்டதான். அதனால சுஜாதா விஜயகுமாருக்கு தெரியாமயே ஆனந்த் ஜாய் இந்த கதைத் திருட்டுல இறங்கியிருக்கார்னுதான் நான் நம்பறேன்.

அதேமாதிரி ஜெயம் ரவிக்கும் இது தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. ஏன்னா, அவரை சந்திச்சு நான் கதையே சொல்லலை. ஜெயம் ரவியை சந்திக்க ஆனந்த் ஜாய், என்னை அனுமதிக்கவே இல்லை.என் வருத்தம் என்னன்னா எந்தப் பின்னணியும் இல்லாத புதியவர்களை அரவணைச்சு வாய்ப்பு கொடுக்கற ஜெயம் ரவி படத்துல இப்படி கதைத் திருட்டு நடக்குதே என்பதுதான். ‘துருவன்’ கதையை அவர் கேட்டிருந்தார்னா நிச்சயம் என்னையே டைரக்ட் பண்ணச் சொல்லியிருப்பார்.

இண்டஸ்ட்ரீல நல்ல பெயர் எடுத்திருக்கற அவருக்கு ‘பூமி’ கரும்புள்ளியா போயிடக் கூடாது. இதுக்கு மேலயும் தாமதிக்காம ஜெயம் ரவியும் சுஜாதா விஜயகுமாரும் எனக்கு உரிய நியாயத்தையும் அங்கீகாரத்தையும் வழங்குவாங்கனு நம்பறேன்.

எங்களோட எழுத்தாளர் சங்கத்துல புகார் கொடுத்திருக்கேன். தேவைப்படும்போது என்கிட்ட இருக்கற அத்தனை ஆதாரங்களையும் சமர்ப்பிப்பேன். எழுத்தாளர் சங்கத் தலைவரான கே.பாக்யராஜ் சார் நியாயமான தீர்ப்பு வழங்குவார்னு காத்திருக்கேன்.

‘இந்தக் கதையை நானே இயக்கறேன். என்கிட்ட கொடுங்க’னு லக் ஷ்மன் சார் நேர்மையா கேட்டிருந்தா, கண்டிப்பா கொடுத்திருப்பேன்.இப்பக்கூட, எனக்கான கிரெடிட் கொடுக்கப்படணும்னுதான் போராடறேன்...’’ தழுதழுக்கச் சொல்கிறார் கார்த்திக் கே.பாலாஜி.  ஜெயம் ரவியும் சுஜாதா விஜயகுமாரும் என்ன செய்யப் போகிறார்கள்..?உதவி இயக்குநர் பட்டாளமே இதை அறியக் காத்திருக்கிறது!

எம்.ஏ.பாபு