கலெக்டர் உதவ... திருநங்கைகள் நடத்தும் இந்தியாவின் முதல் பால் கூட்டுறவுச் சங்கம்!‘‘இந்தச் சமூகம் எப்பவும் எங்களப் புறக்கணிச்சிக்கிட்டேதான் இருக்கு. இங்க எங்களுக்குனு ஒருத்தரும் வீடு தரமாட்டாங்க. அப்படியே கொடுத்தாலும் இரண்டு மடங்கா வாடகை சொல்வாங்க. ரேஷன் கார்டோ, ஓட்டர் ஐடியோ... ஏன், திருநங்கைகளுக்கான அடையாள அட்டையோ கூட இல்லாம நகருக்கு ஒதுக்குப்புறமா வாழ்க்கை நடத்திட்டு இருந்தோம்.
ஆனா, இன்னைக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் சாரால அந்த நிலை மாறியிருக்கு. எங்களுக்குனு வீடுகள் கட்டிக் கொடுத்து, தொழிலும் ஏற்படுத்தித் தந்திருக்கார். நிச்சயம் முன்னேறிக் காட்டுவோம்...’’ கண்களில் நம்பிக்கை மிளிர பேசுகிறார் பூமிகா. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த திருநங்கை இவர்.

ேகாவில்பட்டியிலிருந்து சுமார் மூன்று கிமீ தொலைவிலுள்ள மந்தித்தோப்பு என்ற இடத்தில் திருநங்கைகளுக்கென்று மாவட்ட நிர்வாகம் பசுமை வீடுகள் கட்டித் தந்துள்ளது. மட்டுமல்ல. இவர்களின் வாழ்வாதாரத்திற்காக ஒரு மாட்டுப் பண்ணையைத் தொடங்கியதுடன் பால் கூட்டுறவு சொசைட்டியையும் உருவாக்கிக் கொடுத்துள்ளது. இந்தியாவில் முதன்முதலாக திருநங்கைகள் நடத்தும் பால் கூட்டுறவுச் சங்கம் இதுதான் என்பது கூடுதல் சிறப்பம்சம். இதன் தலைவராக பூமிகா உள்ளார்.

‘‘இதுக்கு முக்கிய காரணம் திருநர் உரிமை கூட்டமைப்பின் இயக்குநர் கிரேஸ் பானு அம்மாதான். அவங்கதான் நிறைய உதவிகள் செய்தாங்க...’’ என்கிற பூமிகாவைத் தொடர்ந்தார் கிரேஸ் பானு. ‘‘கோவில்பட்டில 85க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வாழறாங்க. கடந்த ஏழு வருஷங்களா தங்களுக்கான அடையாள அட்டைகளுக்காக போராடிட்டு இருந்தாங்க. குறிப்பா, சமூகநல வாரியத்துல தர்ற திருநங்கை நலவாரிய அடையாள அட்டை வழியா ஆதார் கார்டு, தேர்தல் அடையாள அட்டை எல்லாம் வாங்கலாம். சமூக நலத்துறையில் இருந்து சுயதொழில் தொடங்க மானியத் தொகை கிடைக்கும்.

ஆனா, அடிப்படை அடை யாள அட்டை இல்லாததால ரொம்ப சிரமப்பட்ேடாம். அதனால, எல்லாருமா சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துல மனு கொடுப்போம்னு முடிவெடுத்தோம். நாலஞ்சு முறை மனுவும் கொடுத்தோம். நடவடிக்கை எடுக்கப்படல. ரெண்டு வருஷங்களுக்கு முன்னாடி சந்தீப் நந்தூரி சார் இங்க மாவட்ட ஆட்சியரா வந்ததும் அவரைப் பார்க்கலாம்னு நினைச்சோம். அதுக்காக டிஆர்ஓவான தியாகராஜன் சாரை சந்திச்சோம்.

அவர் எங்களை அலுவலகத்துக்கு உள்ள கூப்பிட்டு பேசினார். அதுக்கு முன்னாடி எந்த அதிகாரி யும் எங்கள உள்ள கூப்பிட்டு பேசினதில்ல. வாசல்லயே பேசி அனுப்பிடுவாங்க. அவர்கிட்ட, ஏழு வருஷங்களா அடையாள அட்டைக்காக அலையறோம்னு எங்க குறைகளைச் சொன்னோம்.
உடனே எங்கள் ேகாரிக்கைகளை கவனிக்கச் சொன்னார்.

ஒருவாரம் கழிச்சு மாவட்ட ஆட்சியரை சந்திச்சோம். இதுக்கு முன்னாடி கொடுத்த கோரிக்கை மனுக்களை எல்லாம் அவர்கிட்ட காட்டினோம். அவர் அப்பவே சம்பந்தப்பட்ட துறைகளுக்கு போன் பண்ணி பேசினார். இவங்களுக்கு எவ்வளவு சீக்கிரம் அடையாள அட்டை கொடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொடுங்கன்னார். பிறகு, எங்க தேவைகளைக் கேட்டார்.

‘எங்களுக்கு யாரும் வீடு தர்றதில்ல சார்... அப்படியே கிடைச்சாலும் ரொம்ப சிரமத்தை ஏற்படுத்துவாங்க. மாசத்துக்கு ஒருமுறை வீடு மாறிட்டே இருக்க வேண்டியிருக்கு. மற்ற ஊர்கள்ல அரசு வீடு கொடுத்திருக்காங்க’னு சொன்னேன். ஆட்சியர் சார் நீங்களே இடம் பார்த்து ெகாடுங்கனார். கூடவே வாழ்வாதாரத்திற்கு ஏதாவது செய்து கொடுங்கனும் கேட்டோம். அதுக்குப்பிறகு எல்லாம் நடந்தது.

ஒருமாசத்திற்குள்ளயே முப்பது திருநங்கைகளுக்கு அடையாள அட்டை கிடைச்சது. மந்தித்தோப்புல இடமும் பட்டாவும் கொடுத்தாங்க. ஆட்சியர் சாரும், டிஆர்ஓ சாரும் எங்க மேல நம்பிக்கை வச்சு அவங்க பெர்சனல் போன் நம்பரைக் கொடுத்தாங்க. எது தேவைனாலும் நேரடியா எங்களுக்கே போன் பண்ணுங்கனு சொன்னாங்க...’’ என நெகிழும் கிரேஸ் பானுவைத் தொடர்ந்தார் பூமிகா.

‘‘பட்டா வழங்கிய அதேநேரத் துல என்ன மாதிரியான பிசினஸ் பண்ணப் ேபாறீங்கனு கேட்டாங்க. ஆட்சியர் சந்தீப் சார்தான் ஒரு மாட்டுப் பண்ணை வைக்கலாம்னு ஐடியா ெகாடுத்தார். நாங்க, கோவில் மாடு கொடுத்தாலும் போதும்னோம். ஆனா, சார்தான் புரொஃபஷனலா பண்ணணும்னு சொன்னார். பணம் தேவைங்கிறதால மத்திய கூட்டுறவு வங்கி மூலம் கடன் ஏற்படுத்தித் தந்தார்.

ஒருபக்கம் பசுமை வீடுகள் திட்டம் வழியா வீடுகள் கட்டும் பணி ஆரம்பிச்சது. இன்னொரு பக்கம் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வழியா மாட்டுத் தொழுவம் கட்டும் பணி தொடங்குச்சு. அதேநேரம் மாட்டிற்கான கடன் வேலையும் நடந்தது.அடுத்து மாடு வாங்கணும். அப்ப மறுபடியும் ஆட்சியர் சார் ‘உங்களுக்கு மாடு பார்த்து வாங்கத் தெரியுமா’னு கேட்டார். ‘அனுபவம் கிடையாது. இருந்தாலும் நாங்க முயற்சி பண்றோம்’னு சொன்னோம்.

நாங்க முப்பது பேரும் சேர்ந்து முயற்சி எடுத்தோம். ஒரு டீம் எங்களுக்கு உள்ளேயே உருவாக்கி ஒவ்வொரு கிராமமா போய் எப்படி மாடு வளர்க்கிறாங்க... எப்படி பராமரிக்கிறாங்கனு கத்துக்கிட்டோம். இதேநேரம் எங்களுக்கு கால்நடைத் துறையிலிருந்து மூணு நாட்கள் பயிற்சியும் கொடுத்தாங்க. இருந்தும் ப்ராடிக்கலா நாங்க கத்துக்கிடணும்னு கிராமத்துக்குப் போனோம். நிறைய பண்ணைகளை விசிட் பண்ணினோம்.

இங்க உள்ள முப்பது மாடுகளும் நாங்க பிடிச்சதுதான். கால்நடை பராமரிப்புத் துறையினர் மாடு நல்லா இருக்கா... நோய் எதுவும் இருக்கானு டெஸ்ட் பண்ணினாங்க. பிறகுதான் மாடுகளை வாங்கினோம்.

மாடு வாங்கின பிறகு பால் கறந்து எப்படி விற்பீங்கனு மறுபடியும் ஒரு கேள்வி வந்துச்சு. ஏன்னா, திருநங்கைகள் பால் கொண்டு வந்து தந்தா சமூக மக்கள் ஏத்துப்பாங்களானு தெரியாது. நேரடியா போய் பால் விற்கிறது கஷ்டம். அப்ப சந்தீப் சாரே, ஆவின் கூட கைகோர்த்து வைக்கலாம்னு சொன்னார். ஆனா, ஆவின் நிறுவனம் சொசைட்டி இருந்தால்தான் பண்ண முடியும்னு சொன்னாங்க.

இதன் பிறகுதான் பால் கூட்டுறவு சொசைட்டி உருவாச்சு. இப்ப வரை இந்தியாவுல பால் கூட்டுறவு சொசைட்டியை திருநங்கைகள் யாரும் பண்ணல. நாங்க பண்றோம்னு சொன்னதும் நிறைய ஆவணங்கள் தேவைப்பட்டுச்சு. நிறைவா, பதிவு பண்ணிசான்றிதழ் தந்தாங்க. இந்தியாவிலேயே முதல்முதலாக திருநங்கைகள் பதிவு செய்த முதல் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் இதுதான்...’’ என உற்சாகமாகச் சொல்லும் பூமிகா, தங்கள் நகருக்கு கலெக்டர் பெயரையே சூட்டி அரசிதழில் பதிந்திருக்கிறார்.

‘‘வீடு, மாட்டுத் தொழுவம், மாடு எல்லாமே ரெடியாச்சு. அப்ப நம்ம நகருக்கு என்ன பெயர் வைக்கலாம்னு யோசிச்சோம். அப்ப மாவட்ட ஆட்சியரின் உதவியுடன்தான் எல்லாமே சாத்தியமாச்சு. அதனால, மாவட்ட ஆட்சியரின் பெயரில் சந்தீப் நகர்னு பெயர் வச்சோம். இப்ப ஒருநாளைக்கு காலையும் மாலையும் சேர்த்து 300 லிட்டர் வரை பால் கிடைக்குது. ஆவின்ல இருந்து நேரடியா வந்து பாலை கொள்முதல் பண்ணிட்டு போயிடுறாங்க. பத்து நாட்களுக்கு ஒருமுறை பணம் கொடுக்குறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கோம்.

சொந்த வீடு ரொம்ப மகிழ்ச்சியைத் தருது. இனி, நாங்க யாரையும் எதிர்பார்க்க வேண்டியதில்ல. யாருடைய தொந்தரவும் இருக்காது. எங்க கைகளை நம்பி முன்னேற ஆரம்பிச்சிருக்கோம். நிச்சயம் நல்ல நிலையை எட்டுவோம். நாங்க பட்ட கஷ்டத்துக்கு நல்லதொரு விடிவு கிடைச்சிடுச்சு...’’ என பூமிகா நெகிழ... தொடர்ந்தார் கிரேஸ் பானு. ‘‘இத்திட்டத்தை மொத்தமா சுமார் ஒன்றரைக் கோடியில் பண்ணியிருக்காங்க. ஒரு வீட்டுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயும், மாட்டுத் தொழுவத்திற்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாயும் ஒதுக்கினாங்க.

இந்த இடம் திருநங்கைகளுக்கு வருங்காலத்திலும் பயன்படணும் என்பதற்காக ரெண்டரை ஏக்கர்ல செய்திருக்காங்க. இங்க உள்ளவங்க எல்லோரும் இளம் திருநங்கைகள். அதுல பத்து பேர் டிஎன்பிஎஸ்சிக்கும், போலீஸுக்கும் படிச்சிட்டு இருக்காங்க. அதனால, நாங்க இந்த இடத்துக்குள்ளயே ஒரு பன்முகத் திறன் கொண்ட மையத்தை ஆரம்பிக்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கோம்.

ஏன்னா, அரசுத் தேர்வுக்குப் படிக்கிறவங்க ஒருபக்கம் படிக்கட்டும். இன்னொரு பக்கம் படிக்காத திருநங்கைகள் தையல் வகுப்பு படிக்கலாம்னு ஆர்வமா இருக்காங்க. ஒரு தையல் சென்டரும், கொஞ்சம் படிச்சவங்களுக்கு கம்ப்யூட்டர் மையமும் வைக்கலாம்னு எதிர்கால ஐடியா இருக்கு...’’ நிறைவுடன் சொல்கிறார் கிரேஸ் பானு.

பேராச்சி கண்ணன்